மந்திரிகள் வேலைத் திட்டம்

சென்னை மாகாண மந்திரிகள் தங்கள் வேலைத் திட்டத்தில் வெற்றி பெற்று விட்டதாகத் தெரிகிறது. அதாவது நிலவரியில் மொத்தத்தில் 100-க்கு 25 வீதம் – ரூபாய்க்கு கால் ரூ. வீதம் குறைத்து விட திட்டம் போட்டு வரவு செலவு கணக்கு சரிகட்டிக் காண்பித்து கவர்னரிடம் சம்மதம் பெற்று விட்டதாகச் சேதி வெளியாகி இருக்கிறது. இது ஒரு நல்ல காரியம்தான்.

இதன் மூலம் குடியானவர்களுக்கு அதாவது பூமி உடையவர்களுக்கு இந்த மாகாணத்தைப் பொறுத்த வரை M 1-க்கு 75 லக்ஷ ரூபாய் லாபம் ஏற்படலாம்.

இது தவிர குடியானவர்களின் கடன்களைத் தீர்க்க ஒரு கோடி ரூபாய் ஒதுக்கிவைக்கத் தீர்மானித்து அதற்கும் சம்மதம் பெற்று விட்டதாகத் தெரிகிறது. இதுவும் ஒரு நல்ல காரியம்தான். ஏனெனில் குடியானவர்கள் வரிக்கொடுமையை விட கடன் கொடுமையிலேயே வட்டிக் கொடுமையிலேயே அதிக கஷ்டப்படுவதோடு பொது செல்வமும் பாழாகின்றது என்பதோடு கோர்ட்டுகள் நிலைக்கவும் பார்ப்பன வக்கீல்கள் பிழைக்கவும் பார்ப்பன குமாஸ்தாக்கள் கொள்ளை அடிக்கவுமான காரியங்களுக்கு ஆக விவசாயக்காரர்கள் பாப்பர் ஆக வேண்டி ஏற்பட்டு விடுகின்றது. ஆதலால் பல வழிகளிலும் இது சிறந்ததேயாகும்.

கிராமங்கள் தோறும் கட்டாய இலவசக்கல்வி கற்பிக்க திட்டம் போட்டிருக்கிறதாகவும் தெரிகிறது. இதுவும் நடைபெற்று விட்டால் இந்த மந்திரிகள் நிலையற்ற அனாமத் மந்திரிகளானாலும், என்றென்றும் மக்கள் உள்ளத்தில் நிலையாக நிலைத்திருக்கும் மந்திரிகளாக ஆகிவிடுவார்கள் என்பதில் ஐயமில்லை.

இந்த வேலைத் திட்டம் வெளியான நிமிட முதல் காங்கிரஸ்காரர் களுக்கு பேதி – வயிற்றுப்போக்கு கண்டு விட்டது. காரணம் என்னவென்றால் தாங்கள் மந்திரி பதவி பெற்று மக்களுக்கு ஏதாவது செய்து காட்டுவதற்கு ஒன்றும் இல்லாமல் போய்விட்டதே என்றும், மறுபடியும் சட்டசபையில் காலித்தனம் செய்துவிட்டு சீக்கிரத்தில் வெளியேற வேண்டிய நிலைமைதான் நல்லதாக முடியுமே ஒழிய அதிகாரம் செலுத்த வழியில்லையே என்றும் கருதி வேதனையால் மடிகின்றார்கள். தோழர் ஆச்சாரியாருக்கு சீக்கிரத்தில் ஹார்ட் பெயிலியர் – மாரடைப்புகண்டு விடும்போல் காணப்படுகிறது.

இதுவரை இரட்டை ஆட்சி இருந்த காரணத்தாலும் பணம் – பொக்கிஷ பொறுப்பும் நிர்வாகமும் மந்திரிகள் கையில் இல்லாததாலும் பெரிய திட்டங்கள் அதாவது பணத்தைப் பொருத்த திட்டங்கள் எதுவும் போட முடியாமல் பல சட்ட திட்டங்கள் நிறைவேற்றுவதிலும், சமூக சீர்திருத்தம் செய்வதிலும், கூடியவரை நன்மை செய்வதிலுமே கருத்தாய் இருந்துவந்தார்கள். இந்நிலைமையில் காங்கிரஸ்காரர்கள் சர்க்கார் செய்த தப்பிதங்களையும் சர்க்கார் நன்மை செய்யாத குறைகளையும் ஜஸ்டிஸ்காரர்கள் மீது சுமத்தி மக்களை ஏமாற்றி அக்கò மீது வெறுப்பு ஏற்படும்படி விஷமப் பிரசாரம் செய்து வந்தார்கள். இப்போது அக்குறைகள் நீங்கி விட்டதால் அதனால் ஏற்படும் பயனை தாங்கள் அனுபவிக்க கருதினார்கள். ஆனால் ஆணவத்தால் – வாய்க்கொழுப்பால் அது கவிழ்ந்து விட்டது.

இப்போது வேறு ஒருவருக்கு அனாமத் நபர்களுக்கு அப்பெருமை எதிர்பாராமல் விரும்பாமல் காலடியில் வந்து விழுந்து அப்பயனை – அப்பெருமையை அவர்கள் அடைந்து வருகிறார்கள். இதனாலேயேதான் காங்கிரஸ்காரர்களோ ஆச்சாரியாரோ மந்திரிகளின் நிர்வாகத்தில் எவ்வித தப்பிதமும் காணமுடியாமல் மந்திரி வேலை ஒப்புக்கொண்டதைப்பற்றிய ஆத்திரத்தையும் பொறாமையையுமே காட்டி வருகிறார்கள். இந்தப் பூச்சாண்டிக்கு அதாவது “சலசலப்புக்கு பனங்காட்டு நரி பயப்படாது” என்பது போல் – மந்திரிகள் சிறிதும் பயப்படாமலும் லòயம் செய்யாமலும் காங்கிரஸ் கூப்பாடுகளையும் வெறியர்கள் போல் உளறும் உளறுதல்களையும் கால்பூட்சு தூசிக்கு சமமாய் மதித்து திட்டத்தின்மேல் திட்டம் நன்மையின்மேல் நன்மை செய்வதிலேயே கருத்தாய் இருக்கிறார்கள்.

ஆனால் நாம் இவ்வித திட்டங்களினால் எல்லாம் திருப்தி அடைந்து விடவில்லை. இது இன்றைய நிலைமையில் சாதாரண வேலை என்று கூறுவோம். காங்கிரஸ்காரர்கள் வந்தாலும் இதைத்தான் செய்யக்கூடும். மற்றபடி இன்றைய மந்திரிகள் செய்ய வேண்டிய வேலை என்னவென்றால் உத்தியோகம் பிரதிநிதித்துவம் ஆகியவைகளில் சகல வகுப்புகளுக்கும் சம நியாயம் செய்யவேண்டும் என்பதும் இன்று 100 உத்தியோகங்களில் பார்ப்பனர்களுக்கு 16 உத்தியோகங்கள் கொடுக்கப்படுகிற அநியாயத்தை – அக்கிரமத்தை – ஒழித்து அவர்களது ஜனத்தொகைக்கு தகுந்தபடி 100க்கு 3 வீதம் கொடுத்துவிட்டு பாக்கியை மற்ற வகுப்பாருக்கு விகிதாச்சாரம் கொடுக்கும்படியாக ஒரு திட்டம் போட்டு அமுலுக்குக் கொண்டு வர வேண்டும் என்பதும் இந்த விகிதம் வரும்வரை பார்ப்பனர்களுக்கு உத்தியோகங்கள் கொடுக்காமல் நிறுத்தி வைக்கவேண்டும் என்பதுமே. அது செய்தால் ஒழிய இந்த அனாமத் மந்திரிகள் ஜஸ்டிஸ், சுயமரியாதைக் கட்சியாருடைய பாராட்டுதலுக்கு உரியவர்கள் ஆகிவிடமாட்டார்கள் என்பதைக் கண்டிப்பாய்த் தெரிவித்துக்கொள்ளுகிறோம்.

குடி அரசு – கட்டுரை – 09.05.1937

You may also like...