பதின்மூன்றாவது ஆண்டு

நம் குடி அரசு பத்திரிகை சென்ற இதழோடு 12-வது ஆண்டு முடிந்து இன்று பதின்மூன்றாவது ஆண்டில் பிரவேசிக்கிறது.

பத்திரிகை நடத்துவதில் உள்ள கஷ்டங்கள் அறிஞர்கள் உணர்ந்ததே யாகும். சுயநலமற்று சுதந்தரத்தோடு குறிப்பிட்ட ஒரு தனிக்கொள்கைக்கு என்று ஒரு பத்திரிகை நடப்பது என்றால் அது சுலபத்தில் முடியாத காரியமேயாகும்.

அப்படி இருந்தும் “குடி அரசு” ஆரம்பித்த காலம் முதல் எந்தக் கொள்கைக்காக ஆரம்பிக்கப்பட்டதோ அதே கொள்கையை உள்ளும்புறமும் உறுதியாய்க் கொண்டு எவ்வித கஷ்ட நஷ்டங்களுக்கும் யாருடைய விருப்பு வெறுப்பு தயவு தாக்ஷண்யங்களுக்கும் அஞ்சாமல் ஒரே போக்கில் தன்னிஷ்டப்படி நடைபெற்று வந்திருக்கின்றது.

அரசாங்கத்தார் தொல்லை ஒரு புறமும், மதவாதிகள் தொல்லை மற்றொரு புறமும், பார்ப்பனர்கள் தொல்லையும் சூழ்ச்சியும் எல்லாப் புறமும், “குடி அரசி”ன் மூலம் வாழ்க்கை நடத்தவும் வயிறுவளர்க்கவும் விளம்பரம் பெறவும் வந்து சேர்ந்து ஏமாற்றமடைந்த தோழர்களின் தொல்லை மற்றொரு பக்கமுமாக பல வழிகளில் துன்பமும், தொல்லையும், நஷ்டமும் அனுபவித்துக் கொண்டே “குடி அரசு” தனது வளர்ச்சியிலும் கொள்கையிலும் சிறிதும் பின்னடையாமல் இது வரை உயிர் வாழ்ந்து வந்து இன்று பதின்மூன்றாவது வயதில் புகுவதைக் குறித்து அதன் உண்மை ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடையாமல் இருக்கமாட்டார்கள்.

“குடி அரசை” நடுமத்தியில் ஆதரிக்க வந்த தோழர்களில் சிலர் “குடி அரசு” மீது இரண்டு குற்றங்கள் சாட்டுகிறார்கள்.

ஒன்று – “குடி அரசு பொது உடமைப் பிரசாரத்தை கைவிட்டு விட்டது” என்பதாகும்.

இரண்டு – “குடி அரசு ஜஸ்டிஸ் கட்சியை ஆதரிக்கிறது” என்பதாகும்.

“குடி அரசு” ஆரம்பத்தில் “பொது உடமை”க் கொள்கைக்கு ஆக என்று ஆரம்பிக்கப்பட்டதல்ல என்பதையும் “குடி அரசு” ஆரம்பித்ததிலிருந்தே ஜஸ்டிஸ் கட்சியை ஆதரித்தும் தன்னாலான உதவி புரிந்தும் ஜஸ்டிஸ் கட்சி பிரமுகர்கள், தலைவர்கள் ஆகியவர்களுடன் ஒத்துழைத்தும் அவர்களது ஒத்துழைப்புப் பெற்றும் நடந்து வந்திருக்கிறது என்பதையும் எல்லாத் தோழர்களுக்குமே வலியுறுத்திக் கூறுகிறோம். இதை யார் மறுப்பதானாலும் தைரியமாய் முன் வரவேண்டுகிறோம்.

“குடி அரசு” ஆரம்பத்தில் “பொது உடமைக்” கொள்கையோடு ஆரம்பிக்கவில்லை என்றாலும் இன்று “குடி அரசு” உண்மையான பொது உடமைக் கொள்கைகளை கைவிட்டு விட வில்லை. பொது உடமைப் பிரசாரம் என்பதை சட்டம் அனுமதிக்காததால் பொது உடமைப் பிரசாரம் என்பதின் பேரால் பொது உடமைக் கொள்கைகளை எடுத்துச் சொல்லுவதை விட்டு வைத்திருந்தது. ஆனால் உண்மையில் உலக சமாதானமும் சாந்தியும் ஏற்படுவதற்கு உண்மையான பொது உடமைத் தத்துவம் தான் ஏற்ற மருந்து என்கின்ற எண்ணத்திலிருந்து “குடிஅரசு” சிறிதும் மாற்ற மடைய வில்லை. இன்றும் அதற்கு ஆக முக்கியமாய் செய்யவேண்டிய தொண்டிலிருந்து “குடி அரசு” ஒரு நிமிஷமும் ஓய்ந்திருக்கவில்லை.

தோழர் எம்.என்.ராய் அவர்கள் தெரிவித்தபடி “இந்தியாவில் பொது உடமைத் தத்துவம் ஏற்படவேண்டுமானால் அதற்கு ஆக முயற்சிகள் செய்யப்படவேண்டுமானால் முதலில் சமூகத் துறையில் ஒரு மாறுதலை ஏற்படுத்தி ஆக வேண்டும்” என்கிற கருத்தையே “குடி அரசு” வெகு நாளைக்கு முன்பே கைக்கொண்டு அதற்கு ஆக சுமார் 10 வருஷ காலமாக விடாமல் தொடர்ந்து உழைத்து வருகிறது. “குடி அரசி”ன் தொண்டினால் சமூகத்துறையிலும் ஒரு அளவுக்கு தக்க மாறுதலும் ஏற்பட்டு வந்திருக்கிறது என்பதாக “குடி அரசு” உண்மையாக நம்பி இருக்கிறது.

ஆனால் “குடி அரசு” பொது உடமைக் கொள்கையை விட்டு விட்டது என்று கூறிக்கொண்டு வெளியேறி “குடி அரசை” வைதுகொண்டு திரியும் சில தோழர்கள் இன்று என்ன செய்கிறார்கள் என்று பார்த்தால் பொது உடமைக்கு உலைவைக்க நடந்துவரும் ஸ்தாபனத்தில் இருந்து கொண்டு பொது உடமைக் கொள்கையை ஒழிப்பதே தங்கள் முக்கிய கவலையாகக் கொண்ட தலைவர்களுக்கு ஜே போட்டுக்கொண்டு – அத்தலைவர்கள் வெற்றி பெற அவர்கள் வாலைப் பிடித்துக்கொண்டு திரிகிறார்கள். ஆகவே இவர்களது கூற்றில் எவ்வளவு உண்மை இருக்கும் என்பதை வாசகர்களே உணர்ந்து கொள்ளுமாறு விட்டு விடுகிறோம்.

மற்றும் தோழர் காந்தியார் “உப்பு சத்தியாக்கிரகம்” ஆரம்பித்த காலத்தில் அதற்கு காரணம் சர்க்காருக்கு சொல்லும்போது “நாட்டில் பொது உடமை உணர்ச்சி வலுத்துவருகிறது. இந்த உப்புக்காச்சும் சத்தியாக்கிரகமும், சட்டம் மீறும் கிளர்ச்சியும் ஆரம்பிக்காவிட்டால் இந்நாட்டு வாலிபர்கள் உணர்ச்சி அதில் பதிந்து விடும். ஆதலால் நான் இதை ஆரம்பித்தேன்” என்று சொன்னார்.

இதை அநேக தடவை அப்போதே “குடி அரசு” குறிப்பிட்டு கண்டித்து இருக்கிறது. அது மாத்திரமல்லாமல் காங்கரசின் பிரதம உண்மையான செல்வாக்குள்ள தலைவர்களான தோழர்கள் ராஜேந்திரப் பிரசாத், வல்லபபாய் பட்டேல், ஜம்னாலால் பஜாஜ், ராஜகோபாலாச்சாரியார் ஆகியவர்களும் பிரசாரத்துக்கு பயன்படுத்திக் கொள்ளும் முக்கிய வாயாடிகளான தோழர் சத்தியமூர்த்தி முதலியவர்களும் பொது உடமை தேசத்துக்கு கெடுதியை விளைவிப்பதென்றும் அதை ஒழிக்கவே காங்கரஸ் பாடுபடுகிறது என்றும் சொன்னதோடு சொல்வதோடு பொது உடமைப் பிரசாரம் கூடாது என்று சொல்லுவதையும் மற்றும் பொது உடமைக்காரர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களுக்கு உண்மையிலேயே காங்கரசில் செல்வாக்கும் மதிப்பும் சுயமரியாதையும் இல்லாமல் உதைத்து விரட்டி அடித்து வருவதும் அறியாதவர்கள் யாராவது இருக்க முடியுமா? என்று கேட்கின்றோம்.

பொது உடமை வீரர் என்று போலி விளம்பரம் பெற்ற தோழர் ஜவஹர்லால் தானாகட்டும், தான் பொது உடமைத் தத்துவத்தை காங்கரசில் புகுத்துவதில்லை என்று வாக்குக் கொடுத்து காங்கரஸ் தலைவர் பதவியை வியாபார முறையில் பெற்றதும் அவர் மேடையில் பேசும் போது உம்முடைய பொது உடமைக் கொள்கை என்ன? அதை எப்படி வெற்றி பெறச் செய்வீர்கள்? என்று பல பொது உடமை வாதிகள் கேட்ட கேள்விகளுக்கு “என்னிடத்தில் இப்போது எவ்வித திட்டமும் இல்லை, அதற்கு என்று இங்கு தனியாகச் செய்யக்கூடியதும் ஒன்றுமில்லை. உலகப்புரட்சி ஏதாவது ஏற்பட்டால் அப்போது நாம் (அதாவது பொது உடமைக்காரர்கள்) அதனோடு ஒத்துழைக்க தயாராக வேண்டியதுதான்” என்று பதில் சொல்லி இருக்கிறார். ஆகவே காங்கரசின் பொது உடமைக் கொள்கையையும் காங்கரஸ் தலைவர்களின் பொது உடமைக் கொள்கை ஆதரிப்பும் “பொது உடமை வீரர்” ஜவஹர்லால் நேருவின் பொதுஉடமை ஞானமும் முயற்சியும் உண்மையாய் உணர்ந்தவர்கள் “குடி அரசு” பொது உடமைக் கொள்கையை கைவிட்டது என்றோ காங்கரசில் பொது உடமைக் கொள்கை இருக்கிறது என்றோ நாணயமாகச் சொல்ல முன்வரமாட்டார்கள்.

கடைசியாக ஒரு விஷயத்தை வாசகர்களின் ஞாபகத்துக்கு கொண்டு வந்து இந்த பிரச்சினையை முடித்துக் கொண்டு அடுத்த பிரச்சினைக்கு போகிறோம். அதாவது தோழர் ஈ.வெ.ரா. ராஜத்துவேஷத்துக்காகவும் வகுப்புத் துவேஷத்துக்காகவும் என்று சர்க்காரால் 1934-ம் வருஷம் தண்டிக்கப்பட்டபோதும் கோர்டில் கொடுத்த தனது ஸ்டேட்மெண்டில் “குடி அரசி”ன் கொள்கை பொது உடமைத்தத்துவம் என்றும் அதைப் பிரசாரம் செய்வதற்கு ஆகவே சர்க்கார் அதற்கு ஆக நடவடிக்கை எடுத்துக் கொள்ள தைரியமில்லாமல் இம்மாதிரி ராஜத்துவேஷ கேசு எடுத்திருப்பதால் இதில் தனக்கு நியாயம் கிடைக்காதென்றும் அதனால் தனக்கு எதிர்வாதம் செய்ய இஷ்டமில்லை என்றும் ஸ்டேட்மெண்ட் கொடுத்தது. இதை இன்றைய முதல் மந்திரிதான் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துக் கொடுத்தவர்கள். இது “இந்து” “மெயில்” முதலிய பத்திரிகை களிலும் வெளி வந்தது யாரும் அறியார்களா என்று கேட்கின்றோம்.

மற்றும் ஜெயிலில் ஈ.வெ.ராவுக்கு சர்க்கார் “ஏ” கிளாஸ் கொடுத்தும் அதை மறுத்து விட்டு “சி” கிளாசில் இருந்து வந்ததும் ஜெயிலில் இருந்து வந்த பிறகும் வேறு பல கேசுகள் மூலம் பலவித தொந்தரவுகள் கொடுத்து பலவித ஜாமீன் கேட்ட பிறகும் “குடி அரசு” பொது உடமைப் பிரசாரத்தை நிறுத்தாததால் “பொது உடமைப் பிரசாரம் சட்ட விரோதமானது” என்று தீர்மானம் செய்த பிறகு மாத்திரமே “குடி அரசு” பொது உடமைப் பிரசாரம் செய்யாதென்றும் ஆனால் பொருளாதார சமத்துவத்துக்கு – சமதர்மத்துக்கு சலியாது பாடுபடும் என்றும் “குடி அரசு” அறிக்கை வெளியிட்டதும் வாசகர்கள் அறியாததல்ல.

மற்றும் இந்த மாதிரி அறிக்கை வெளியான பிறகும் தோழர் ஈ.வெ. ராமசாமி ஜஸ்டிஸ் கட்சிக்கு சில திட்டங்கள் கொடுத்து அதை அக்கட்சியில் ஒப்புக்கொள்ளச் செய்த உடன் தோழர்கள் சி.ராஜகோபாலாச்சாரியார், சத்தியமூர்த்தி ஆகியவர்கள் அத்திட்டங்களை பொது உடமைத் திட்டம் என்றும் அவற்றை ஜஸ்டிஸ் கட்சியார் ஒப்புக்கொண்டு விட்டார்கள் என்றும் இந்து பத்திரிகையில் எழுதி சர்க்காருக்கு சாடி சொன்னதும் வாசகர்கள் அறிந்ததேயாகும்.

நிற்க, ஜஸ்டிஸ் கட்சிக்கு “குடி அரசு” ஆதரவளித்ததால் “குடி அரசு”ம் ராமசாமியும் ஜஸ்டிஸ் கட்சியில் சேர்க்கப்பட்டதாலேயே ஜஸ்டிஸ் கட்சிக்கு சர்க்கார் எதிரியானார்கள் என்று ஜஸ்டிஸ் கட்சி பிரமுகர்களில் பலர் இன்றும் சொல்லுகிறார்கள். ஜஸ்டிஸ் கòயிலிருந்து தோழர் ராமசாமியை விரட்டவும் “குடி அர”சை ஒழிக்கவும் ஜஸ்டிஸ் கட்சி பிரமுகர்கள் சிலர் எவ்வளவோ பாடு பட்டார்கள்.

ஒரு உதாரணம் காட்டுகிறோம். அதாவது தோழர் ஈ.வெ.ரா. தனது திட்டங்கள் சிலவற்றை ஜஸ்டிஸ் கட்சி மகாநாட்டில் வலியுறுத்தப் போவதாக “குடி அரசில்” வெளிப்படுத்தியவுடன் சென்னையில் கடைசியாக நடந்த ஜஸ்டிஸ் கட்சி மாகாண மகாநாட்டுக்கு ஈ.வெ.ராவுக்கு பிரதிநிதி டிக்கட் கொடுக்க மறுத்து விட்டார்கள். தோழர்கள் சி.டி. நாயகம், டி.ஏ.வி. நாதன் முதலியவர்கள் பாடு பட்டும் வரவேற்பு கமிட்டியார் மறுத்து விட்டார்கள். கடைசியாக செட்டி நாடு குமார ராஜா அவர்கள் தகவலுக்கு இவ்விஷயம் கொண்டு போகப்பட்டு அவரது சிபார்சின் மீது மகாநாட்டு பிரதிநிதி டிக்கட் கிடைத்தது என்றால் ஜஸ்டிஸ் கட்சியால் ராமசாமியோ “குடி அரசோ” எந்த விதத்தில் தனது கொள்கையை விட்டுக் கொடுத்து விட்டதாகச் சொல்ல முடியும்? அன்றியும் அக்கட்சியை ஆதரித்ததால் இன்ன சுயநலம் பெற்று விட்டது என்று தான் சொல்ல முடியுமா?

உண்மையை சொல்ல வேண்டுமானால் ஜஸ்டிஸ் கட்சி தலைவர் தோழர் பொப்பிலிராஜா அவர்கள் சமதர்மக்கொள்கையை கட்சியில் புகுத்தி அவரது தலைமையில் பல சட்டங்கள் செய்திருக்கிறார்கள்.

அவற்றை காங்கரஸ் எதிர்த்து வந்திருப்பதோடு இப்போதும் அழிக்கப் புறப்பட்டு விட்டது. ஆகவே இந்த இரண்டு காரியங்களால் “குடி அரசு” எவ்விதத்திலும் கொள்கை மாற்றம் அடைந்து விட்டதா என்பதை பொதுமக்கள் யோசித்துப் பார்க்கட்டும்.

“குடி அரசு” எப்படியோ பன்னிரண்டு வருஷம் பிழைத்து விட்டது. இன்று பதின்மூன்றாவது வருஷத்தில் பிரவேசிக்கிறது. இது வரை நடந்து வந்தது போலவே இனியும் நடந்து வரும். வாசகர்கள் இது வரை அபிமானித்தது போலவே இனியும் அபிமானித்துவர வேண்டுகிறோம்.

சமீபகாலத்தில் “குடி அரசு”க்கு 12 வருஷம் முடிந்த ஒரு ஆண்டு விழா நடத்த உத்தேசித்து இருக்கிறோம். அதுபோது அபிமானிகளின் ஆதரவை முன்னிலும் அதிகமாக “குடி அரசு” எதிர்பார்க்கும்.

குடி அரசு – தலையங்கம் – 15.08.1937

You may also like...