சாக்கடைக்கு பதில் எச்சிலை

சேலம் அதி தீவிர தேசபக்தர் (பார்ப்பன பக்தர்) வைதிக காங்கரஸ் வாதி (ஜஸ்டிஸ் கட்சியை சதா வைதவர்) குடும்பத்தோடு பார்ப்பன, காங்கரஸ் ஆரம்பித்த காலம் முதல் – வினா தெரிந்த நாள் முதல் காங்கரஸ்காரராய் இருந்த தோழர் எஸ். வெங்கிட்டப்ப செட்டியார் அவர்களுக்கும் அவரது திருக்குமாரருக்கும் பார்ப்பனக் கும்பலும் பார்ப்பன குலாமும் பார்ப்பன எச்சிலைப் பத்திரிக்கைகளும் இவ்வளவு சீக்கிரத்திலேயே நல்லதொரு “நற்சாட்சி பத்திர”மளித்து விட்டன. எடுத்துக்காட்டாக சென்னையில் இருந்து வெளியாகும் ஒரு எச்சிலைப் பத்திரிகையானது சேலம் பாரிஸ்டர் எஸ்.வி. ராமசாமி அவர்கள் சரணாகதி மந்திரி கனம் ஆச்சாரியாருக்கு அளித்த வெடிகுண்டுக்கு பதிலளிக்கிறதாக சாக்கு வைத்துக்கொண்டு மிக்க ஆணவமாகவும் யோக்கியமற்ற முறையிலும் என்னென்னவோ ஆபாசமாக எழுதி இருக்கின்றது. தோழர் எஸ்.வி. ராமசாமி ஆச்சாரியாருக்கு அறைந்த ஆப்புகளை பிடுங்கவோ அசைக்கவோ அவ்வெச்சிலை பத்திரிகை களுக்கு சக்தி இல்லையானால் மரியாதையாகத் தலை குனிவதையோ மெளனமாகத் தலையை மறைத்துக் கொள்ளுவதையோ விட்டு விட்டு அவ்வாப்புகளை வெளியாக்கின பத்திரிக்கையை “சாக்கடைப் பத்திரிக்கை” என்று எழுதுவது அயோக்கியத்தனமும் அற்பத்தனமும் ஒரு கை கூழுக்கு பார்ப்பான் காலை கழுவிவிடும் காரியம் போன்ற இழி குணமும் ஆகும் என்பதை தெரிவிக்க வருத்தப்படுகிறோம்.

தேசீயப் பத்திரிகைகள் யோக்கியதை

தோழர் சேலம் ராமசாமி அவர்கள் விடுதலை பத்திரிக்கைக்கு அனுப்பிய சேதியை வெளியிடும்படி “விடுதலை” ஆசிரியரை கேட்டுக் கொண்ட தனிக் கடிதத்தில், இந்நாட்டு தேசியப் பத்திரிகை, காங்கரஸ் பத்திரிகை, பார்ப்பனப் பத்திரிக்கை என்பனவாகியவைகளின் யோக்கியதைகளை தெள்ளத் தெளிய எடுத்துக்காட்டியே பிரசுரிக்கும்படி கேட்டுக் கொண்டார். அதில் அவர் குறிப்பிட்டதாவது:-

“தேசீயப் பத்திரிகைகள் என்பவைகள் எல்லாம் பார்ப்பனப் பத்திரிகைகளாக மாறிவிட்டன. அவை பொஜனப் பத்திரிகைகளாக இல்லை. பார்ப்பனர்களின் அபிப்பிராயத்துக்கு சிறிது மாறுபாடாய் இருந்தாலும் எவ்வளவு முக்கியமான விஷயங்களையும் பிரசுரிக்க மறுத்தும் மறைத்தும் விடுகின்றன………………” என்று எழுதி இருக்கிறார். அதை சென்னை எச்சிலைப் பத்திரிக்கை நன்றாய் மெய்ப்பித்துவிட்டது. அதாவது,

“விடுதலை”யை சாக்கடைப் பத்திரிகை என்று சொன்ன சென்னை எச்சிலைப் பத்திரிகைக்கு சிறிதாவது மானமோ நாணயமோ இருக்கு மானால் பாரிஸ்டர் ராமசாமி அனுப்பிய விஷயம் அல்லது எழுதிய விஷயங் களை பிரசுரம் செய்து விட்டு, ஆண்மையும் ரோஷமும் இருந்தால் வரி வரியாய் எழுத்து எழுத்தாய் கண்டித்து பிச்சுப் பிடிங்கித்தள்ளி இருக்கலாம். அதை விட்டு விட்டு அச்செய்தியை வெளியிட்ட பத்திரிகையை அற்பத் தனமாய் – அயோக்கியத்தனமாய் – இழி தன்மையாய் எழுதுவது மனிதத் தன்மையா? கேவலமான மிருகத்தன்மையா? என்பதை யோசித்துப் பார்க்கும்படி வாசகர்களை வேண்டிக்கொள்ளுகிறோம்.

மேலும் அவ்வெச்சிலைப் பத்திரிகை சேலம் ராமசாமி வெளியிட்ட சேதிக்கு சமாதானம் சொல்லுவதாக நடித்துக்கொண்டு “159 பேர் சென்னை அசெம்பளியில் இருக்கும்போது, மந்திரிகள் 9, காரிய தரிசிகள் 10, தலைவர் 1, உப தலைவர் 1, ஆக 21 போக பாக்கி 138 பேருக்கும் மந்திரி வேலை கிடையாமல் போனதுக்கு தங்கள் சமூக ஏமாற்றமென்று ஆர்ப்பாட்டம் செய்வது கோரமாகும்”

என்று சமாதானம் சொல்லுகிறது. மந்திரி வேலை வினியோகித்ததில் மற்ற சமூகங்களை ஏமாற்றி விடலாம் என்கின்ற எண்ணமில்லாமல் நியாயமான புத்தியோடு மந்திரி பதவிகள் வினியோகிக்கப்பட்டு இருக்குமானால் பூவிலே பூ சாயபு, அதிலும் நல்ல பூ பூளைப் பூ என்பது போல் காங்கரசில் இல்லாத வரும் காங்கரசுக்கு துரோகியுமான திருச்சி டாக்டர் செளந்திரராஜன் அய்யங்காரை கார் விட்டனுப்பி கூட்டி வந்து மந்திரி வேலை கொடுப்பானேன்?

ராஜன் செலாவணிக்குக் காரணம்

ராஜன் அய்யங்கார் அவர்கள் காங்கரசுக்கு ஒரு காலத்திலாவது ஒரு காசும் உதவி இருக்க மாட்டார்.

காங்கரசில் சேர்ந்து ஜெயிலுக்குப் போனவர் என்றால், அவரது தொழிலானது அவர் ஒவ்வொரு தடவை ஜெயிலுக்குப் போனபோதும் திரும்பிவந்தவுடன் N 300, 400 ரூ. வீதம் அதிக வரும்படி வரும் படியாகத்தான் செய்ததே தவிர அவரது வரும்படி ஒரு தம்பிடி கூட குறைந்து விடவில்லை. N 100 ரூபாய்க்கும் கஷ்டத்தில் இருந்த அவரது ஆரம்ப வைத்திய நிலை அவர் ஒரு பெரிய டாக்டராக விளம்பரமாவதற்கும் N 1000 கணக்கில் பணம் சம்பாதிக்கும் பொய் டாக்டர் என்று விளம்பரப் படுத்தப்பட்டு ஒரு கேசுக்கு 500, 1000 என்று பில் பண்ணும்படியான தைரியமும் செலாவணியும் ஏற்படவும் இடம் கிடைத்ததற்கும் காங்கரசில் சேர்ந்ததும் ஜெயிலுக்கு போவதும் தவிர வேறு எது முக்கிய காரணம் என்று கேட்கின்றோம்.

ஜெயில் “கஷ்டம்”

அவர் ஜெயிலுக்கு போய் அங்கு கஷ்டப்பட்டார் என்றாவது சொல்லு வதற்கு யோக்கியமான காரணங்கள் இருக்கின்றனவா என்று கேட்கின்றோம்.

ஜெயிலும் எ கிளாஸ் பசும்பால், பருப்பு, நெய், தயிர், காப்பி, ரொட்டி, மாம்சம், பழவர்க்கம், சொந்த சமையலில் அக்கார வடிசல், சித்திரான்னம், பேணி ஆகிய “பத்திய” பதார்த்தங்கள் கொண்ட ஆகாரம், கட்டில், மெத்தை, மேஜை, நாற்காலி, எலக்டிரிக் விளக்கு கம்மோடு ஷவர் பாத் ஆகிய உபகரணம் இவைகளோடு ஜெயில் அதிகாரிகளையும் மிரட்டிக் கொண்டும் மற்றும் சில சொந்த சவுகரியங்களுடனும் ஓய்வெடுத்துக் கொண்டும் உட்கார்ந்திருப்பது கஷ்டமான காரியமா? பெரிய தியாகமா? என்று கேட்கின்றோம்.

டாக்டர் ராஜன் அவர்கள் தியாகத்தை அறிய வேண்டியவர்களுக்கு ஒரு சுருக்கமான வழி காண்பிக்கின்றோம். அதாவது அவர் காங்கரசில் சேராததற்கு முன் அவரது சொத்து வரி, பூமி வரி, இன்கம் (டாக்ஸ்) வரி எவ்வளவு? இப்போது எவ்வளவு? என்று கணக்குப் பார்க்கும்படி வேண்டுகிறோம்.

ஆகவே அப்படிப்பட்ட ஒருவரை தேடிப்பிடித்துக் கொண்டு வந்து பட்டம் கட்டும்போது அந்தப்பட்டத்தை அடையப் பெறாத – அவரைவிட எந்த விதத்திலும் கட்டுப்பாட்டிலும் நாணயத்திலும் பின் வாங்காத சமுகத்தாருக்கு அது கிடைக்கவில்லை என்றால் அது உண்மையிலேயே ஏமாற்றமல்லவா? வஞ்சகமல்லவா? துரோகமல்லவா? வகுப்பு ஆதிக்க சூழ்ச்சியல்லவா? என்று நல்ல புத்தியும் நடுநிலைச் சிந்தனையும் நாணயமும் சுதந்தர உணர்ச்சியும் உள்ள தோழர்கள் யோசித்துப் பார்க்கும்படி வேண்டுகிறோம்.

இழிவில்லாத காரணம் எது?

“தோழர் ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் டாக்டர் சுப்பராயன் அவர்களுக்கு மந்திரி பதவி கொடுத்ததற்கு காரணம் அவர் தமையனார் கனம் டாக்டர் சுப்பராயன் எஸ்டேட் மேனேஜராய் இருப்பதால் என்று பாரிஸ்டர் ராமசாமி” எழுதியதை இழிவான வியாக்கியானம் என்கின்றது சென்னை எச்சிலைப் பத்திரிகை. அவ்வியாக்கியானம் இழிவானதா மேன்மையானதா என்ற விவாதத்தை நாம் இப்போது மேற்போட்டுக் கொள்ள விரும்பவில்லை. ஆனால் கனம் டாக்டர் சுப்பராயன் அவர்களுக்கு கனம் ஆச்சாரியார் மந்திரி பதவி கொடுத்ததற்கு “இழிவில்லாத” மேலான வியாக்கியானம் வேறு எதையும் சென்னை எச்சிலைப் பத்திரிகை சொல்லவில்லையே. இப்பொழுதாவது சொல்லட்டுமே பார்ப்போம்.

ராஜன் – ராயன் துரோகம்

கனம் டாக்டர் சுப்பராயன் ஜெயிலுக்குப் போனவர் அல்ல. கனம் டாக்டர் ராஜன் செய்த “காங்கரஸ் துரோகத்துக்கு” கடுகளவு எடையும் குறையாத “மா பெரும் துரோகம்” காங்கரசுக்கு செய்தவர் என்று கனம் ஆச்சாரியார் முதல் சர்வ பார்ப்பனர்களும், மற்றும் “ஹிந்து” “மித்திரன்” முதலாகிய பார்ப்பனப் பத்திரிகைகளும் இன்றைய ஆந்திர தேசத்து காங்கரஸ் “மணி”களும் தேசபக்த இரத்தினங்களும் கூப்பாடு போட்டதும் போடுவதும் பொய்யா என்று கேட்கிறோம்.

நமக்கு கனம் டாக்டர் சுப்பராயனிடம் வெறுப்பு இல்லை. அவர் முதன் மந்திரியாயிருந்த காலத்தில் செய்ததற்கு இப்போதும் நன்றி செலுத்து கிறோம். ஆனால் காங்கரசும், ஆச்சாரியாரும் அவருக்கு மந்திரி வேலை கொடுத்ததற்கு சென்னை எச்சிலைப் பத்திரிகை என்ன நாணயமான யோக்கியமான சமாதானம் சொல்லிற்று – சொல்லப் போகிறது என்று தான் கேட்கின்றோம்.

தவிர “தோழர் வெங்கிட்டப்ப செட்டியார் காங்கரசுக்கு ஆக எவ்வளவு தூரம் பாடுபட்டார் என்பதை எல்லோரும் அறிந்ததுதான்” என்று அவ்வெச்சிலைப் பத்திரிகை பரிகாசமாக எழுதுகிறது.

தோழர் வெங்கிட்டப்ப செட்டியாரும் அவரது குடும்பமும் காங்கரசுக்காகப் பாடுபட்டது எவ்வளவு என்பதைப்பற்றி நமது அபிப் பிராயத்தை வெளியிட வேண்டிய ஆத்திரம் இப்போது நமக்கு இல்லை.

வெங்கட்டப்பா செய்தது

ஆனால் தோழர் வெங்கிட்டப்ப செட்டியார் காங்கரசுக்கு செய்த தொண்டு எவ்வளவு என்பதாக அச் சென்னை எச்சிலைப் பத்திரிகையே இதற்கு முன் எழுதி வந்தவைகளையும் அதே தோழர் வெங்கிட்டப்ப செட்டியாருக்கு மற்றும் பார்ப்பனப் பத்திரிக்கைகளும் கனம் ஆச்சாரியார் உள்பட சேலம் பார்ப்பன குழாங்களும் நேற்று வரை பாடிய கவிகளையும் அர்ச்சித்த ஸஹத்திர நாமாவளியையும் படித்துப் பார்க்கும்படியும் நினைத்துப் பார்க்கும்படியும் வேண்டுகிறோம். சமீப காலத்தில் எம்.எல்.எ. தேர்தல் நடந்தபோது தோழர் வெங்கட்டப்ப செட்டியாரின் மாபெரும் தேசபக்தியையும், மகா மகா காங்கரஸ் தொண்டினையும் புகழ்ந்து புகழ்ந்து கூறியும் எழுதியும் வந்ததுமல்லாமல் காலிகளைப் பிடித்து கூலிகளைக் கொடுத்து ஜே கூப்பாடு போடச் சொன்னதையும் கவனித்து நினைவுறுத்திப் பார்க்கும்படி வேண்டுகிறோம்.

தேவாங்கர்களுக்கு துரோகம்

தோழர்கள் எல்லப்ப செட்டியாரையும் தம்மண்ண செட்டியாரையும் ஒழிக்கவும் தேவாங்கர் சமூகத்தில் கலவரத்தையும் பிளவுகளையும் உண்டாக்கி தேவாங்கர் ஆதிக்கம் சேலத்தில் தலைதூக்காமல் இருக்கச் செய்வதற்கும் தோழர் வெங்கட்டப்ப செட்டியாரையும் அவரது குடும்பத்தையும் பார்ப்பனர்கள் பயன்படுத்திக் கொண்ட காலத்தில் செட்டியாரின் சிறுநீர் பார்ப்பனர்கள் மடங்களிலும் தேசீய பத்திரிகை மண்டபங்களிலும் காங்கரசிலும் காங்கரஸ் தலைவர்களின் உச்சரிப்புகளிலும் நந்தா விளக்காய் எரிந்தது. ஆனால் இப்போது, சர். பி. தியாகராயர் செய்த “பாவத்துக்கு” ஆக அச்சமூகம் அரசியல் உலகில் சித்திரத்திலும் உருவமிருக்க முடியாத மாதிரி ஒழிந்து விட்டதுடன் “வெங்கிட்டப்ப செட்டியாரின் அரசியல் வாழ்க்கையின் சரித்திரம் யாவரும் அறிந்ததுதான்” என்று சென்னை எச்சிலைப் பத்திரிகையுங்கூட தைரியமாய் எழுதி விட்டது.

காங்கரசில் தோழர்கள் கனம் டாக்டர் சுப்பராயன், கனம் டாக்டர் ராஜன், கனம் ராமநாதன், கனம் யாகூப் ஹாசன் சாயபு, கனம் வி.ஐ. முனிசாமிப்பிள்ளை, கனம் டாக்டர் ராமராவ், கெ.வெங்கடசாமி நாயுடு, கனம் கோபால ரெட்டி ஆகியவர்கள் காங்கரசுக்கு செய்ததை விட எந்த விதத்தில் வெங்கட்டப்ப செட்டியார் குறைந்த தொண்டு ஆற்றி இருக்கிறார் அல்லது அதிக துரோக செய்துவிட்டார் என்று எச்சிலைப் பத்திரிகைக்கு வெளியிட முடியுமா?

அனுமத்துவம் ஆடியிருக்காவிட்டால்?

தோழர் வெங்கட்டப்ப செட்டியார் இந்தப் பார்ப்பனக் கூட்டத்திற்கு பின் தாளம் போடாமல் இருந்திருப்பாரானால் இன்று அரசியலில் சகல பதவிகளும் பெருமைகளும் அடைந்து அவர் குடும்பமும் தக்க உத்தியோகங்கள் பதவிகள் பெறுவதன் மூலம் உலகுக்கு நன்மை செய்யும் நிலை அடைந்து அநேக பார்ப்பனர்கள் போல் ஓய்வு எடுத்துக் கொள்ளக்கூடிய நிலை அடைந்திருப்பார். அதை விட்டு பார்ப்பனர் வால் பிடித்து அனுமத்துவ நாடகம் நடித்த பலன் “வெங்கடப்ப செட்டியாரின் காங்கரஸ் யோக்கியதை தெரியாதா” என்று பார்ப்பனக் கூலி எச்சிலைப் பத்திரிகை கேட்க வேண்டியதாய் விட்டது.

மற்றும் அவ்வெச்சிலைப் பத்திரிகை எழுதும்போது மெத்தப் போக்கிரித்தனமாகவும் அயோக்கியத்தனமாகவும் “காங்கரசில் சேருவதே பெரிய தியாகம் என்று சிலர் கருதுகிறார்கள்” என்று எழுதி இருக்கிறது. அப்படியானால் தோழர்கள் கே. வெங்கடசாமி நாயுடுவும், கனம் ராமநாதனும், கனம் டாக்டர் சுப்பராயனும் காங்கரசில் தேர்தலுக்கு முதல் நாள் சேர்ந்ததல்லாமல் வேறு என்ன தியாகம் செய்தார்கள்? மற்றும் பல பார்ப்பன மந்திரிகளும் காரியதரிசிகளும் சிலர் காங்கரசில் சேர்ந்ததோடு N 100, 200, 300 என்பதாக காங்கரஸ் பண்டில் வயிறு வளர்த்தது மாத்திரம் அல்லாமல் வேறு என்ன மகத்தான தியாகம் செய்தார்கள் என்று கேட்கின்றோம்.

ஆமாம் மெய்தான்

மற்றும் “மந்திரி வேலை கிடைக்காததற்கு ஆக சாக்கடைப் பத்திரிக் கைகளில் சாக்கடை பாஷைகளில் எழுத ஆரம்பித்து விடுகிறார்கள். இம்மாதிரி வகுப்புவாதப் புரளிகளைக் கண்டு ஏமாந்த காலம் மலை ஏறிவிட்டது” என்று அவ்வெச்சிலை பத்திரிகை எழுதி வீரம் பேசுகிறது. ஆம் வயிற்றுப் பிழைப்புக்கு வகையற்று மானத்தையும் நாணயத்தையும் சமூகத்தையும் விற்று வயிறு வளர்க்க வேண்டிய அவசியமுள்ள காலிகளுக்குக் கூலி கொடுத்து வாயிற்படியில் காவலுக்கு கட்டும் மிருகத்தைப் போல் கட்டி வைத்து வளர்க்க பார்ப்பனர்களுக்கு செளகரியமும் பார்ப்பனரல்லாத ஆள்களும் கிடைக்கும் போது வகுப்பு உரிமை மலையேறிவிடலாம்தான். பார்ப்பனர்களின் இச்சூழ்ச்சி வெளியாவதன் மூலமோ இக்காவல் உருப் படிகளுக்கு மானமும் ரோஷமும் ஏற்படுவதன் மூலமோ பார்ப்பன ரல்லாத பாமர மக்களுக்கு அறிவு வளர்ச்சி ஏற்படுவதன் மூலமோ மலையேறிவிட்டதாக மனப்பால் குடித்தோ அல்லது கூலிக்கு அழுதோ வகுப்புரிமை மாண்டு விட்டதாகக் கூறும் போலிவாதம் வெகு சீக்கிரத்தில் நன்றாய் தெரியப் போகிறது என்பதோடு இதை முடித்து விட்டு சென்னை எச்சிலைப் பத்திரிகையின் இன்னும் பல கூலிக் குரைப்புக்குப் பின்னால் சமாதானம் கூறுவோம்.

– 29.06.1937 “விடுதலை”

குடி அரசு – மறுபிரசுரம் – 08.08.1937

You may also like...