காங்கரஸ் நாணயம் விளக்கம்

 

தலைவரவர்களே! தோழர்களே!

நம்முடைய எதிரிகள் வெற்றிக் கொண்டாட்டம் கொண்டாடிவிட்டார்கள். எதிரிகளின் விஷமப் பிரசாரம் அளவுக்கு மீறி வெற்றியடைந்து விட்டது. அது மட்டுமா? ஜஸ்டிஸ் கட்சியை சாக அடித்து கருமாதி செய்ததாகவும் சொன்னார்கள். 5000 அடி ஆழத்தில் அவர்கள் புதைத்து விட்டதாகவும் சொன்னார்கள். அதுபோலவே முஸ்லீம் லீக்கும், சுயமரியாதைக் கட்சியும் செத்தே போய்விட்டதென்றும் கூறினார்கள். ஆனால் 5000 அடி ஆழத்தில் புதை குழியிலிருந்து செத்துப் போனவர்களாகிய நாங்கள் உங்கள் முன்னால் கிறிஸ்திவநாதர் கதை போல் வந்து நிற்கிறோம். நாம் செத்துப் போய் விட்டோமா? இல்லை. ஜஸ்டிஸ் கட்சிதான் செத்துப் போய்விட்டதா? இல்லை. லீக்தான் செத்துப் போய்விட்டதா? இல்லை. ஏன் அப்படி சொல்கிறேன். செத்துப் போனவர்களாயிருந்தால், இந்த கட்சிகள் எல்லாம் 5000 கஜ ஆழத்தில் புதைக்கப்பட்டிருந்தால் உங்கள் முன் இப்போது இவ்வளவு பெரிய கூட்டத்தின் முன் நாங்கள் இதே கட்சியின் பெயரால் எப்படி நிற்க முடியும்? செத்தவர்களை பார்க்க போகுமிடங்களில் 10 ஆயிரக்கணக்கான மக்கள் இவ்வளவு உற்சாகமாக வரமுடியுமா? வாஸ்தவமென்னவென்றால் நாங்கள் செத்துப் போகவில்லை. ஆனால் முன்னிலும் 100 மடங்கு பலத்துடன் உங்கள் முன் வந்திருக்கிறோம். முன்னே நாங்கள் பேசியதைவிட 100 பங்கு அதிகமாக பேச ஆதாரத்துடன் வந்திருக்கிறோம்.

இதற்கு முன் இதே இடத்தில் கொஞ்ச நாள் முன்பு அரசியலின் பேரால் ஒரு கூட்டத்தார் உங்கள் முன்வந்து பல அபிப்பிராயங்களை உங்களுக்கும் புரியாமல், அவர்களுக்கும் புரியாமல், “காந்தி செய்கிறார், காந்தி ஆணை, காங்கரஸ் திட்டம், சுயராஜ்யம், மோட்சம், சமதர்மம், வெள்ளையரை விரட்டல், அரசியலை உடைத்தல்” என்றெல்லாம் சொல்லியிருப்பார்கள். நீங்களும் கேட்டிருப்பீர்கள். ஆனால் நான் என்ன செய்கிறேன் என்பதையும், என்ன சொல்லப் போகிறேன் என்பதையும் நீங்கள் தயவு செய்து கேட்டு, முன்னால் அவர்கள் சொன்னதையும் நன்றாக உங்கள் சொந்த பகுத்தறிவு மூலமாக ஆராய்ந்து பாருங்கள். எது சரி, எது தப்பு என்பதை நீங்களே உணர்ந்து கொள்ளுங்கள். நான் பேசிவருவது என் சொந்த அபிப்பிராயமே தவிர, அவர் சொன்னார். இவர் சொன்னார் என்று கண்மூடித்தனமாக நம்பச் சொல்லவில்லை.

~subhead

காங்கரஸ் நாணயம்

~shend

காங்கரஸ்காரர் சொன்ன வாக்குறுதிகளில், பிரசாரம் செய்யும்போது மக்களிடம் சொன்னதில், அவர்களுடைய முதல் திட்டமாக “எல்லோருக்கும் அபிப்பிராய சுதந்திரம், பேச்சுச் சுதந்திரம் கொடுக்கப்படும்” என்று சொன்னார்கள். இதுதான் காங்கரஸ் திட்டத்தின் முதல் வரி. அது மட்டுமல்ல. காங்கரஸ் அல்லாதவர்கள் நிர்வாகம் நடத்தியபோது அப்போது இது சம்பந்தமான மேலதிகாரம் அவர்களிடம் இல்லாதபோதும் இதே காங்கரஸ் வீரர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா? “பிற்போக்கானவர்களின் நிர்வாகத்தில் பேச்சுரிமை இல்லை. மற்றும் சுதந்திர உரிமை இல்லை. காங்கரஸார் ஆட்சியில் இப்படியெல்லாம் இருக்காது” என்றதோடு நிற்காமல் அவர்களை அதாவது இடைக்காலத்தில் பதவி ஏற்றவர்களை கழுதை, நாய் என்றும் இன்னும் சொல்ல முடியாத வார்த்தைகளால் திட்டினார்கள். இப்போது அதே வார்த்தையை அவர்கள் மேல் திருப்புவதற்கு எங்களுக்கு நிரம்ப செளகரியம் ஏற்பட்டு விட்டதே? அப்படியிருந்தும் நாங்கள் யாரையாகிலும் இப்படி திட்டுகிறோமா? யாரையாகிலும் குறித்து அவர்கள் அப்படி இவர்கள் இப்படி என்று சொல்கிறோமா? மந்திரிகளைத்தான் ஏதாகிலும் சொல்கிறோமா? அதுதான் எங்கள் வேலையா? யாராகிலும் நம்ம ஆள் கோபித்துக் கொண்டால் தோழர் ராமநாதனை வேண்டுமானால் கோபித்துக் கொள்ளலாம். அதுவும் நான் கோபித்துக் கொள்கிறேனா என்றால் அதுவுமில்லை. எப்படியோ ஒரு விதத்தில் அவருக்கு நல்ல நிலைமை கிடைத்ததைப் பற்றி இரட்டை சந்தோஷம். எப்படியோ ஒரு விதத்தில் நல்ல செளகரியம் கிடைத்திருப்பது பற்றி திருப்திதான். அப்படித்தான் ஆச்சாரியார் விஷயமும். இப்போதும் சரிதான் அவர் என்னை நேரில் கண்டுவிட்டார் என்றும் மட்டற்ற மகிழ்ச்சியில் தழுவிக் கொள்வார். அவர் மாத்திரம் அல்ல அவரைப் போல் இன்னும் மற்ற மந்திரி நண்பர்களும் இருக்கிறார்கள். எனக்கு நன்றாய் தெரியும். இப்பவும் நானும் மற்ற பார்ப்பனரல்லாத காங்கரஸ்காரர்களும் நேரில் சந்தித்தோமானால் “நீ இப்படி காங்கரஸை விட்டு போயிட்டேயே நீ மாத்திரம் காங்கரசில் இருந்தாயானால் கண்டிப்பாய் பார்ப்பனர்களை விரட்டியிருப்பேன்” என்று சொல்கிறார்களே தவிர மற்றபடி வேறு எவ்வித துவேஷத்தையும் அவர்கள் என்னிடம் கற்பிக்கவில்லை. அழுது கொண்டிருக்கிற தோழர்கள் நாடிமுத்து, ராமலிங்கம், வெள்ளியங்கிரி, தேவர்கள் போன்றவர்களெல்லாம் நம்மைக் கண்டவுடன் “வா! வா!! நீயும் காங்கரசுக்குள் வந்து தான் இதையெல்லாம் சொல்லிப் போடேன்” என்கிறார்களே தவிர வேறு எவ்வித குற்றத்தையும் எம்மீது இதுவரை சொல்லவில்லை. அன்னக்காவடிகள் வயிறு வளர்க்க வேண்டியவர்கள் சொல்லுகிறதைப்பற்றி காதில் போட்டுக் கொள்ளாதீர்கள்.

~subhead

என் நிலைமை

~shend

காங்கரஸில் சேருவதற்கு முந்தியும், சேர்ந்த பிறகும், இப்போதும், நாளைக்கும் சரிதான் பொதுவாழ்வினால் வயிறு வளர்க்க வேண்டிய அவசியமெனக்கில்லை. அப்படி வயிறு வளர்க்க வேண்டிய அவசியமிருந்தால் இம்மாதிரி அதாவது நீங்கள் உயர்வாகவும், மிகவும் விசேஷமாகவும், உயிராகவும் கருதியிருப்பவைகளையெல்லாம் அது தப்பு, சூழ்ச்சி, இது கொடுமை என்றெல்லாம் சொல்வதைப் போன்ற ஒரு எதிர்நீச்சு வேலையிலே இறங்கியிருப்பேனா? என்று யோசித்துப் பாருங்கள். சுலபமாக “தென்னாட்டு மகாத்மா” ஆக, எனக்கு வழி தெரியுமே. “வந்தே மாதரம்! அல்லாஹú அக்பர்!! பாரதத்தாய் அலறுகிறாள்!!! வெள்ளைக்காரன் சுரண்டுகின்றான். சுயராஜ்யம் வேண்டாமா?” என்றெல்லாம் சொன்னால், நான் பெரிய தேசீயவாதியாக ஆகிவிடுவேன். நீங்களும் எனக்கு காணிக்கை கொடுத்து, ஓட் கூட போடுவீர்களே. ஆனால் அந்த மாதிரி தேசீய வேலையில் நாங்கள் பட்டபாடு பார்த்துவிட்டோம். எவ்வளவோ கஷ்ட நஷ்டமடைந்தும் பார்த்தோம். அதில் எனக்கு மாத்திரம் பெருமை ஏற்பட்டு விட்டது. பயன் ஒன்றும் ஏற்படவில்லை. எதிரிகள் ஆதிக்கம் செலுத்த இடமேற்பட்டது.

~subhead

எனது காங்கரஸ் தொண்டு

~shend

ஒரு சமயம் மன்னார்குடிக்கு லஜபதிராய் வாசக சாலை திறக்க என்னை அழைத்தார்கள். அது சமயம் குறிப்பிட்ட நேரத்திற்குப் போய் சேர வழியில்லாமல் 7, 8 மைல் நடந்தே சென்றோம். போகிற கூட்டங்களுக்கு ராட்டினத்தோடே சென்றோம். எங்கள் வீட்டிலும் சகலரையும் நூற்கச் செய்தேன். தறியும் என் வீட்டிலேயே இருந்தது. நமக்கு வேண்டியவர்கள் குடும்பத்திலுள்ளவர்கள் சகலரையும் கதர் கட்டச் செய்தோம். இப்போது தோழர் நாடிமுத்து கதர் கட்டுவதைப்பற்றி பிரமாதப் படுத்தப்படுகிறது. அவர்தான் கூட்டத்துக்கு வரும் போதாகிலும் கட்டித் தொலைக்கிறார். அவர்கள் வீட்டிலேயிருக்கிற அவர் சம்சாரம் சங்கதி என்ன? அந்தம்மாளும் கதர் கட்டுகிறார்களா? (சிரிப்பு) அல்லது தோழர் ராமலிங்கம் செட்டியார், சுப்பராயன், வெள்ளியங்கிரி கவுண்டர் போன்றவர்கள் வீட்டில் உள்ளவர்களெல்லாம் கதர் கட்டுகிறார்களா? (பலத்த சிரிப்பு) (கூட்டத்திலொருவர் பார்ப்பனரையும் சொல்லுங்கள்) நம்ம தோழர்களை மாத்திரம் சொல்லுகிறேன். ஏனென்றால் அவர்கள் என்மீது கோபித்துக் கொள்ளமாட்டார்கள். ஏன் இவ்விஷயங்களை எல்லாம் சொல்கிறோம். நாங்கள் தியாகம் செய்தது பதவிக்காக வல்ல. 2-வருஷம் தலைவர் பதவி வகித்தேன். 2 வருஷம் காரியதரிசி பதவி வகித்தேன் என்றாலும் அதுவும் இப்போதிருக்கிற ஆச்சாரியார் போன்றவர்கள் தான் காரண பூதர்கள். அவர்கள் இஷ்டப்படி ஆட சம்மதித்ததால் கிடைத்தது. மற்றபடி நான் ஒன்றும் துரோகியல்ல.

~subhead

ஒரு கதை

~shend

இன்னும் ஜெயிலுக்கு போகிற இப்போதைய யோக்கியதையை சொல்லுவதானாலும் அதுவும் நான் 6,7 தடவை ஜெயிலுக்குப் போயிருக்கிறேன். அந்த காலமோ மூத்திரச் சட்டியில் சாப்பிட்டு, கோணிச்சாக்கில் படுத்திருந்து, கல்லுகளை உடைத்த காலம். அப்போது ஜெயிலுக்கு போவதற்கு மிகவும் பயந்த காலம். அப்போது நாங்கள் பிறருக்கு ஜெயிலுக்கு போவதற்கு வழிகாட்டிய காலம். உதாரணமாக ஒன்று சொல்லுகிறேன். யாரும் கோபித்துக்கொள்ள மாட்டீர்களென்று கருதுகிறேன். வேலூரில் (ஙிணிணூடுடிணஞ் இணிட்ட்டிttஞுஞு) வேலைத்திட்டக் கமிட்டி நடந்த சமயம் நம் தோழர்கள் கல்யாணசுந்தர முதலியார், ஆதிநாராயண செட்டியார், சி.ராஜகோபாலச்சாரியார், டி.எஸ்.எஸ்.ராஜன் முதலியோர்களும் இன்னும் பலரும் வந்திருந்தார்கள். 144 உத்திரவுகளை மேற்சொன்னவர்கள் எல்லோருக்கும் சார்வு செய்யப்பட்டது. இதை வாங்கியவுடனே இப்போது இம்மாகாணத்திற்கு பிரதம மந்திரியாய் இருக்கிற தோழர் ராஜகோபாலாச்சாரியாரும் கொல்லைப்புற வழியாக வந்திருக்கும் ராஜனும் ஆளுக்கொரு சொம்பு ஜலத்துடன் புறக்கடைக்குப்போய் வரவேண்டியவர்களானார்கள் (பலத்த கரகோஷம்) வெளிக்கும் போய்விட்டு வந்தார்கள். “அவரவர்கள் ஊரில் போய் மீறுவதைப் பற்றி யோசிக்கலாம்” என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். தோழர். திரு.வி.க.வும் செய்வது இன்னது என தெரியாமல் திகைத்துப்போனார். நான் அப்போதே மீறவேண்டும் என்று எவ்வளவோ எடுத்துச்சொல்லி பிறகு தைரியப்படுத்திக் கொண்டார்கள். ஆனால் இப்போது ஜெயிலுக்குப் போவதோ கஷ்டமேயில்லாத காரியம்.

~subhead

தற்கால சிறைவாழ்வு

~shend

ஏன்? அதிகாரிகள் தொந்தரவு இல்லை. ஜெயில் சூப்பரிண்டெண்டு தொந்தரவு இல்லை. ஏன்? இன்றைக்கு ஜயிலிலிருப்பவன் நாளைக்கே மந்திரியாக வந்து நம்மை தண்டித்தால் என்ன செய்வது என்கின்ற பயத்தாலே அவர்களும் மூழ்கி, அவர்கள் வீட்டு பலகாரங்கள் அப்படியே சிலருக்கும் ஜெயிலில் தாராளமாக வினியோகிக்கப்படுகிறது. நானும் என் தங்கையாரும் சமீபத்தில் ஏ.கிளாஸில் போடப்பட்டோம். அங்கிருந்த வசதி வீட்டில் கூட எனக்கில்லை. போதா குறைக்கு ஜெயிலிலே என் பக்கத்து அறைக்கு இப்போதைய பிரதம மந்திரி சி. ராஜகோபாலாச்சாரியார் இருக்க நேர்ந்தது. ஜெயிலிலே அக்காரவடிசல், ததியோதனம் வகையறாகவே எனக்கு அவர் கொடுத்தார். அதற்கு இப்போதும் நன்றியுடையவனாக இருக்கிறேன். ஆகவே இப்போதைய ஜெயில் வாழ்க்கை மிகவும் செளகரியமானது. இதற்கு நான் பயப்படப்போகிறேனா? அதெல்லாம் ஒன்றுமில்லை.

(தொடர்ச்சி 06.02.1938 குடி அரசு “காங்கரஸ் புரட்டு விளக்கம்”)

குறிப்பு: 16.01.1938 நீடாமங்கலம் பொதுக்கூட்ட சொற்பொழிவு.

குடி அரசு – சொற்பொழிவு – 23.01.1938

You may also like...