பெரியார் திருநாள்

 

தமிழரியக்கத் தந்தையாரான ஈ.வெ.ராமசாமிப் பெரியாரின் 60 வது பிறந்தநாள் கொண்டாட்டம் தமிழ்நாட்டிலும், தெலுங்கு நாட்டிலும் மலையாள நாட்டிலும் வெகு விமரிசையாகச் சென்ற டிசம்பர் 18-ந்தேதி கொண்டாடப்பட்டது. தமிழரியக்கத் தந்தையாரின் பிறந்தநாள் மலையாள நாட்டிலும் தெலுங்கு நாட்டிலும் கொண்டாடப்பட்டது பலருக்கு விநோதமாகத் தோன்றலாம். தமிழர் இயக்கத் தந்தையார் தமிழர் விடுதலைக்காக மட்டும் உழைக்கவில்லை, திராவிட மக்கள் அனைவருடையவும் விடுதலைக்காகவே உழைக்கின்றார். தமிழர் விடுதலையின் பயனாக மலையாளரும் தெலுங்கரும் விடுதலை பெறுவது உறுதி. அதனாலேயே மலையாளரும் தெலுங்கரும் மிக உற்சாகத்துடன் கொண்டாடியிருக்கின்றனர். மற்றும் சுயமரியாதை இயக்கத் தோழர்களுக்கு 60-வது பிறந்த நாள் கொண்டாட்டம் புதுமையாகத் தோன்றலாம். பெரியார் வெளியிலிருந்திருந்தால் இத்திருநாள் கொண்டாட சம்மதித்திருக்கவுமாட்டார். திருநாள், பெருநாள் போன்ற ஆடம்பரங்களிலும் ஆர்ப்பாட்டங்களிலும் அவருக்குப் பெரிய வெறுப்பு. பாராட்டுகளும் உபசாரங்களும் அவருக்கு வேப்பங்காய். ஆனால் இந்த அறுபதாவது பிறந்தநாள் ஒரு மதச்சடங்காகவோ சமுதாய மரியாதைச் சடங்காகவோ கொண்டாடப்படவில்லை. பெரியார் சிறைபுகுந்த காரணத்தினால் தமிழரியக்கம் தளர்ச்சியடையாமலிருக்கவும் அவரது லôயங்களும் கொள்கைகளும் பொதுமக்கள் மனத்திலிருந்து மறையாமலிருக்கவுமே 60-வது ஆண்டுவிழாக் கொண்டாடப்பட்டது. டிசம்பர் 6-ந் தேதி பெரியார் சிறைபுகுந்தார். டிசம்பர் 18-ந்தேதி வரும் அவரது 60-வது பிறந்த நாளை தமிழ் மக்கள் எல்லாம் விமரிசையாகக் கொண்டாட வேண்டுமென்று தோழர் திருச்சி விசுவநாதம் டிசம்பர் 10-ந்தேதி, ்விடுதலை”யில் ஒரு அறிக்கை வெளியிட்டார் . பிறந்தநாள் தினத்துக்கும் அவர் அறிக்கை வெளியிட்ட தினத்துக்கும் இடையில் 7 நாட்கள். அப்படியிருந்தும் சென்னை மாநகரம் முதல் திருநெல்வேலி ஜில்லாவின் தெற்கு கோடியிலுள்ள கிராமங்கள் வரை பெரியார் பிறந்தநாள் கொண்டாட்டம் வெகு ஆடம்பரமாகவும் சிறப்பாகவும் கொண்டாடப்படவேண்டுமானால் பெரியாரிடம் தமிழ் மக்களுக்குள்ள அன்புக்கும் மதிப்புக்கும் எல்லை வகுக்க முடியுமா?

~subhead

பெரியார் மாட்சி

~shend

மதப் புரட்டர்கள் இந்தப் பொதுஜன மதிப்பை சுயநலத்துக்காக பயன்படுத்தி திரண்ட பொருள் தேடிக்கொள்வர். ஆனால் பெரியாரோ இந்த அபார மதிப்பை ஒரு பொழுதும் சுயநலவிருத்திக்காகப் பயன்படுத்தவே இல்லை. தனது சுக துக்கங்களை லôயம் செய்யாமல் தமிழர் முன்னேற்றத்துக்காக அல்லும் பகலும் பாடுபட்டு வரும் ஒரு தியாகிக்கு – இல்லறத் துறவிக்கு அத்தகைய இழிவான ஆசை எங்ஙன முண்டாகும்? பொதுஜன சேவையையே தமது ஜீவித லôயமாகக் கொண்ட ஒரு புனிதருக்கு சுயநல விருத்தியில் விருப்பமேற்படுமா? சுயநலமே அவருக்கு பிரதானமாகத் தோன்றியிருந்தால் காங்கரஸ் பித்தலாட்டங்களை சகித்துக்கொண்டு காங்கிரஸ்காரர் ஆதரவினால் ஒரு பரமாத்மா பட்டம் பெற்றிருக்க மாட்டாரா? மந்திரி பதவி பெற்றிருக்க மாட்டாரா? அல்லது பொறுப்பு வாய்ந்த காங்கரஸ் பதவி பெற்றிருக்க மாட்டாரா? கையிலிருந்த காங்கரஸ் பதவியைக் களைந்திருப்பாரா? அவருக்குத் தமிழர் முன்னேற்றமே முக்கியம். தமிழர் சுயமதிப்புடன் வாழ வேண்டுமென்பதே அவரது ஓயாக் கவலை. ஆகவே தமிழர் முன்னேற்றதுக்குத் தடையாக விருக்கும் காங்கரசிலிருந்து வெளியேறினார். காங்கரஸ் கொடுமைகளை வன்மையாக எதிர்க்கத் தொடங்கினார். காங்கரஸ் துணை கொண்டு தமிழரை அடக்கி ஒடுக்கி, நசுக்கி வரும் பார்ப்பனர்களையும் எதிர்க்கத் தொடங்கினார். அந்த எதிர்ப்புப் போரில் அவர் தீவிரமாக ஈடுபட்டபோது பார்ப்பனர் ஆதிக்கத்துக்கும் செல்வாக்குக்கும் பார்ப்பன மதம் துணையாயிருப்பதை உணர்ந்தார். மதம் காரணமாக பார்ப்பனரல்லாதார் பார்ப்பனர்களுக்கு அடிமைப்பட்டிருப்பதையும் பார்ப்பனர்களுக்கு அஞ்சுவதையும் கண்டு கொண்டார். ஆகவே பார்ப்பன மதப்புரட்டை விளக்கி தமிழர்களுக்கு நல்லறிவுச்சுடர் கொளுத்த முயன்றார். அதுவே மதங்களை எதிர்ப்பதற்கும் காரணம். மதங்களை எதிர்த்தால் கடவுள்களையும் எதிர்க்காமல் முடியுமா? கடவுள்களே மதங்களுக்கு அடிப்படை. அடிப்படையைத் தகர்த்தெரியாமல் கட்டிடத்தை தகர்த்தெரிய முடியுமா? ஆகவே கடவுள்களையும் எதிர்த்தார். எதிர்க்கவே மதப்பற்றுடைய பார்ப்பனரல்லாதாருக்கும் பகைவரானார். பார்ப்பனர்களும் வைதீகப் பார்ப்பனரல்லாதாரும் சேர்ந்து கொண்டு பெரியாரை நாஸ்திகர் எனப் பழிக்கத் தொடங்கினர்; தூற்றத் தொடங்கினர்; திட்டத் தொடங்கினர். ஆனால் பெரியார் எதற்கும் அஞ்சவில்லை. தமிழர் முன்னேற்றம் என்னும் தமது லôயத்தை முன்நிறுத்தி அவர் போக்கில் தொண்டாற்றிக் கொண்டே இருந்தார். எனினும் இந்த கடவுள் பக்தர்களாலும் மத வெறியர்களாலும் அவருக்கு நேர்ந்த தொல்லைகள் அற்ப சொற்பமல்ல. அவர் மீதும் அவரது தமையனார் மீதும் பொய் வழக்குகள் தொடுக்குமாறு பலரைத் தூண்டிவிட்டு துன்புறுத்தினர். அவ்வழக்குகளிலும் பெரியார் வெற்றியடைந்தார். பொய் வழக்குத் தொடுத்தவர்கள் வெட்கித் தலைகுனிந்து ஓடினர்.

~subhead

தமிழர்கள் விழிப்பு

~shend

கடைசியாக கட்டாய இந்திச் சனியன் வந்தபோதுதான் பெரியாரின் உண்மையான, உழைப்பைத் தமிழர்கள் உணர்ந்தனர். ஆரிய நாகரீக பீடையிலிருந்து – மதப்பீடையிலிருந்து விடுதலை பெறாவிட்டால் தமக்கு வாழ்வில்லையெனத் தமிழர்கள் எல்லாம் ஒரு முகமாக உணர்ந்தனர். ஆகவே பெரியாரின் இந்தி எதிர்ப்புக் கொடியின் கீழ் இன்று வைஷ்ணவரும், சைவரும், காங்கரஸ் வாதிகளும், கிறிஸ்தவரும், முஸ்லிம்களும், சமணரும், மதப்பற்றற்றவர்களும் ஐக்கியப்பட்டு நிற்கின்றனர். பெரியாரும் தமிழரியக்கத் தலைவராக விளங்குகிறார். தமிழ்நாட்டின் தனிப்பெரும் தலைவராய் விளங்குகிறார். அவரைச் சிறைப்படுத்தியல்லாமல் இந்தி எதிர்ப்பு இயக்கத்தை ஒழிக்க முடியாதென எண்ணி காங்கரஸ் சர்க்காரும் அவரைச் சிறையில் அடைத்துவிட்டனர். 60-வது வயது ஆரம்பத்தில் பெரியார் சிறையிலிருப்பது அவரது பழைய நண்பரும் காங்கரஸ் வாதியுமான தோழர் திரு.வி.கலியாணசுந்தர முதலியாருக்கு உள்ளக் கொதிப்பை உண்டு பண்ணியிருக்கிறது.

~subhead

ஆச்சாரியார் அதிகார வெறி

~shend

ஆகவே பெரியாரை 60-வது பிறந்தநாளுக்கு முன்விடுதலை செய்ய வேண்டுமென்று அவரது பழைய நண்பரான சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியாரை தோழர் முதலியார் கேட்டுக்கொண்டார். ஆனால் ஆச்சாரியார் பழைய ஆச்சாரியாரல்ல. காந்தியாரின் மனச்சாட்சிப் பொக்கிஷக் காப்பாளரான ஆச்சாரியாரல்ல.கண்ணன் காட்டிய வழி கண்ட ஆச்சாரியாரல்ல. பகவத்கீதை பாராயணத்தில் பொழுது போக்கிய ஆச்சாரியாரல்ல. இப்பொழுது அவர் கனந்தங்கிய ஆச்சாரியாராயிருக்கிறார். சென்னை மாகாண முதன் மந்திரி பதவி தாங்கும் ஆச்சாரியாராயிருக்கிறார். அதிகார பதவி வகிப்பவர்களுக்கு பொதுவாக அதிகார வெறி தலைக்கு ஏறுவது இயல்புதானே. அந்த மரபுப்படி கனம் ஆச்சாரியாருக்கு அதிகார வெறி தலைக்கு ஏறி இருக்கிறது. தம்மை எதிர்ப்பவர்களை நசுக்கி விடுவதென்று . முடிவு கட்டி இருக்கிறார். இந்தி எதிர்ப்பாளரைக் கையில் கிடைத்த ஆயுதங்களைக் கொண்டு தாக்குவேன் என பகிரங்கமாக மார்தட்டி கூறுகிறார். ஒரு காலத்திலே அவரும் அவருடைய சம்பந்தியாரும் அவருடைய சகாக்களும் வெறுத்த – கண்டித்த – அடக்குமுறைச் சட்டத்தை இந்தி எதிர்ப்பாளர் மீது கூசாமல் பிரயோகம் செய்கிறார். நண்பர்களையும் பழைய தோழர்களையும் கூட அவர் லôயம் செய்யவில்லை.

~subhead

இறுமாப்புக்குக் காரணம்

~shend

இவ்வளவு இறுமாப்பு அவருக்கு உண்டாகக் காரணமென்ன? சென்ற தேர்தலில் தமிழர்கள் காங்கரஸ்காரருக்கு அளித்த ஆதரவே அவரது இறுமாப்புகளுக்கும் அட்டகாசங்களுக்கும் காரணம். காங்கரஸ்காரர்களின் பொய்ப்பிரசாரங்களினால் மயங்கி, காங்கரஸ்காரர் பதவியேற்றால் இந்த மண்ணுலகம் பொன்னுலகமாகிவிடுமென எண்ணி தமிழர்கள் எல்லாம் சென்ற பொதுத் தேர்தலில் காங்கரஸ்காரரைப் பெருவாரியாக சட்டசபைக்கு அனுப்பினார்கள். அந்த மெஜாரிட்டி பலமே கனம் ஆச்சாரியாரின் அறிவை மழுக்கிவிட்டது. அறிவு மயங்கினால் அப்புறம் கேட்கவா வேண்டும்? மக்கள் செய்வதெல்லாம் தலைகீழ் தர்பாராகவே இருக்கும். தமது கையில் சிக்கியிருக்கும் அதிகாரத்தின் தன்மையை உணராமல் சாசுவதமென எண்ணிக்கொண்டு தமிழர் வேண்டாத இந்தியை இந்துஸ்தானி என்னும் கபடப் பேரால் தமிழர்கள் தலைமீது வலுக்கட்டாயமாகச் சுமத்தி விட்டார். எதிர்ப்பவர்களை வகுப்புவாதிகள் ராஜத்துரோகிகள் என குற்றம் சாட்டிச் சிறைக்கு அனுப்புகிறார். ஆச்சாரியார் போகும் போக்கைப் பார்த்தால் அவரது உத்தியோக காலத்தில் அவரது போக்கை மாற்றிக்கொள்ளமாட்டார் என்றே தோற்றுகிறது. மாற்ற வேண்டுமானால் தமிழர்கள் பெரிய மனது வைக்க வேண்டும். இந்தி எதிர்ப்பு இயக்கத்துக்கு பொது ஜன ஆதரவில்லாததினாலே ஆச்சாரியார் லôயம் செய்யவில்லையென்று ஆச்சாரியார் புகழ்பாடும் பத்திரிகை ஒன்று கூறுகிறது.

~subhead

தமிழர் கடமை

~shend

ஆகவே இந்தி எதிர்ப்புக்கு தமிழர்களின் பேராதரவு இருப்பதாக தமிழர்கள் காட்ட வேண்டியது மிகவும் அவசியம். தமிழர்கள் எல்லாம் கட்டாய இந்தியை எதிர்ப்பதாக அறியவேண்டியவர்கள் அறியும்படி செய்துவிட்டால் பெரியாரும் வெளிவருவார், கட்டாய இந்தியும் ஒழியும்; ஆச்சாரியார் ஆணவமும் அடங்கும். ஆகவே கனம் ஆச்சாரியாரின் அதிகார வெறிக்குச் சரியான மருந்து தமிழர்கள் கையிலேயே இருக்கிறது. சென்ற ஞாயிற்றுக்கிழமை பெரியார் திருநாளை மிக விமரிசையாகக் கொண்டாடியவர்கள் எல்லாம் அந்த உணர்ச்சியை இந்தி எதிர்ப்பு விஷயத்திலும் காட்டிவிட்டால் நமக்கு வெற்றியும் ஆச்சாரியாரியாருக்குத் தோல்வியும் நிச்சயம். தமிழர்களே! என்ன செய்யப்போகிறீர்கள்? நீங்கள் சட்டங்களை மீற வேண்டாம்; சிறை புக வேண்டாம்; எவருக்கும் தீங்கிழைக்க வேண்டாம், கட்டாய இந்தி எதிர்ப்பு இயக்கத்தை மனப்பூர்வமாக – ஒரு முகமாக ஆதரிப்பதாய் சட்டபூர்வமான முறைகளினால் காட்டிக் கொண்டால் போதுமானது.

~subhead

செய்யவேண்டுவன

~shend

முதன் முதலில் இந்தி கட்டாய பாடமுள்ள பள்ளிக் கூடங்களுக்கு உங்கள் குழந்தைகளை அனுப்பக்கூடாது; உங்கள் நண்பர்களும் தத்தம் குழந்தைகளுக்கு இந்தி கட்டாய பாடமுள்ள பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இந்தி கட்டாய பாட அபிமானிகளுடன், நீங்கள் எத்தகைய சம்பந்தமும் வைத்துக்கொள்ளக் கூடாது. சாத்வீக முறையில் நீங்கள் அவர்களை முற்றிலும் பகிஷ்கரிக்க வேண்டும். உங்கள் ஊர்களில் இந்தி எதிர்ப்புச் சங்கங்கள் ஸ்தாபித்து தமிழர்களை எல்லாம் அச் சங்கங்களில் மெம்பர்களாகச் சேர்க்க வேண்டும். கட்டாய இந்தியினால் வரக்கூடிய தீமைகளை தமிழ் மக்கள் எல்லாம் உணரும்படி செய்ய வேண்டும். ிதமிழ்நாடு தமிழருக்கேீ என்ற உணர்ச்சி தமிழராய் பிறந்தோர் உள்ளத்தெல்லாம் தோன்றி விருத்தியடையுமாறு தூண்டவேண்டும். இவை யாவற்றிற்கும் மேலாக இந்தி எதிர்ப்பு நிதிக்கு ஏராளமாகப் பொருள் உதவ வேண்டும். இவைகளே நீங்கள் பெரியாருக்குச் செய்யும் கைம்மாறு. இவைகளையே பெரியாரும் எதிர்பார்க்கிறார். தமிழ்நாடும் எதிர்பார்க்கிறது. தமிழ்த்தாயும் எதிர்பார்க்கிறாள்.

குடி அரசு – தலையங்கம் – 25.12.1938

You may also like...