வைத்திய உதவிக்கு ஆபத்து

 

சரணாகதி மந்திரி சபையின் வைத்திய இலாகா மந்திரியான கனம் டாக்டர் ராஜன் அவர்கள் சர்க்கார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் விஷயமாய் வெளிப்படுத்தி இருக்கும் அபிப்பிராயங்களும் உத்திரவுகளும் பல பத்திரிகைகளில் வெளியாய் இருப்பதை நமது வாசகர்கள் கவனித்திருக்கலாம். அவ்வுத்திரவினுடைய முக்கிய கருத்தானது சர்க்கார் ஆஸ்பத்திரிகளுக்கு டாக்டர்களை நியமிப்பதில் சம்பளமில்லாமல் வேலை செய்யும்படி கவுரவ டாக்டர்களை நியமிக்க வேண்டும் என்பதாகும்.

இதற்குச் சரணாகதி மந்திரிகள் சொல்லும் முக்கிய காரணம் என்ன வென்றால், சேலம் ஜில்லாவில் மதுவிலக்கு ஏற்படுத்தியதால் சர்க்காருக்கு வருஷம் 1க்கு சுமார் 30 லக்ஷ ரூபாய் வரையில் வரும்படி குறைந்துவிட்டதால், அந்த நஷ்டத்தை சரிகட்ட வேண்டுமானால் வைத்திய இலாகாவில் உள்ள சம்பள டாக்டர்கள் பலரை எடுத்துவிட்டு, படித்துவிட்டு வரும்படி இல்லாமல் திரியும் பல டாக்டர்களை கவுரவ – சம்பளமில்லாமல் கவுரவ டாக்டர்களாக நியமித்து விடுவதன் மூலமும், சில பள்ளிக் கூடங்களை எடுத்து விடுவதன் மூலமும் கல்வி சுகாதார இலாகாவில் சில சிக்கனம் செய்து விடுவதன் மூலமும் சரிப்படுத்தியாக வேண்டும் என்பதாகும்.

பாமர மக்கள் மதுவருந்தக் காரணம் போதிய கல்வி அறிவும், சுகாதார ஞானமும் இல்லாததோடு சில இடங்களில் சரீர சுகமின்மையும் மத அனுமதியுமேயாகும். இந்தக் காரியங்களைச் சரிப்படுத்திவிட்டால், மதுபானத்தால் ஏற்படும் கெடுதிகள் அடியோடு ஒழிந்தே போகும். சரணாகதி மந்திரிகளுக்கு இது தெரியாதென்று சொல்லிவிட முடியாது. ஆனால் சரணாகதி மந்திரிகள் பிரிட்டிஷ் ஆதிக்கத்தை ஒழித்து பார்ப்பன ஆதிக்கத்துக்குப் பாடுபடும் சூழ்ச்சித்திறன் மந்திரிகளானதால் அவர்கள் தங்களுக்கு கீழ்ப்பட்ட அடிமைகளை சகாவாக வைத்துக்கொண்டு எந்தெந்த வழிகளில் பார்ப்பனரல்லாத மக்களை அடக்கி ஒடுக்கி வைத்து எந்தெந்த வழிகளில் பார்ப்பனர்களை உயர்த்தி அவர்கள் வசம் ஆதிக்கம் இருக்கும்படி செய்யலாம் என்கின்ற கருத்துடனேயே இந்த சூழ்ச்சிகரமான மதுவிலக்கின் பேரால் பல தந்திர வேலைகள் செய்பவர் களாய் இருப்பதால் இக்காரியங்கள் செய்யத் துணிந்து விட்டார்கள்.

வைத்திய இலாகாவென்பது மிகவும் பொறுப்புள்ள இலாகாவாகும். அது பெரிதும் சரீரத்தையும் உயிரையும் பொருத்ததாகும்.

காயலாவில் சாகப்போகும் ஒரு மனிதனை பிழைக்க வைக்க எப்படி வைத்திய இலாகா உதவக் கூடுமோ அது போலவே காயலாவிலிருந்து பிழைக்கப் போகும் ஒரு மனிதனை சாகடிக்கவும் பயன்படலாம். இப்படிப்பட்ட முக்கியமான உயிரைப் பொறுத்த ஒரு இலாகாவில் கவுரவ வைத்தியர்களை – சம்பளமில்லாத ஆட்களை வைத்தால் மக்கள் எப்படி காப்பாற்றப்படக்கூடும்? எப்படி நம்பிக்கையோடு வைத்திய வசதி பெறக்கூடும்? சர்க்கார் தவிர வேறு தர்ம ஆஸ்பத்திரிகள் தவிர மற்றபடி எந்த டாக்டர்களும் வைத்தியர்களும் இலவசமாய் வைத்தியம் பார்ப்பதே கிடையாது. அந்தப்படி இலவசமாய் வைத்தியம் பார்த்தால் டாக்டர்களுக்கு ஜீவனம் எப்படி நடைபெறும் என்பது யோசிக்கத்தக்கதாகும். வைத்திய இலாக்காவில் உள்ள சம்பளக் கொள்ளையால் இப்போது அநேகம் பேர் டாக்டர் வேலைக்கு படித்துவிட்டு வேலை இல்லாமல் திண்டாடுகிறார்கள் என்பது உண்மைதான். இவைகளில் 100க்கு 75 பேர்கள் பார்ப்பனர்களாய் இருக்கிறார்கள் என்பதினாலேயே இப் பார்ப்பனர்களுக்கு இடம் கொடுக்க இந்தத் தந்திரம் செய்யப்படுகிறது. ஆனால் வரி கொடுக்கும் பொது ஜனங்கள் இந்த மாதிரி சம்பளமில்லாத டாக்டர்களை நம்பி வைத்தியம் செய்து கொள்ளக்கூடுமா? என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும். சம்பளம் வாங்கும் டாக்டர்களே சிலர் ஒழுக்கயீனமாய் நடந்து கொண்டு பணம் சம்பாதிப்பதை அடிக்கடி பார்த்து வருகிறோம். அப்படியிருக்க சம்பளமில்லாத டாக்டர்கள் நியமிக்கப்பட்டு விடுவார் களேயானால் ஒழுக்கயீனமான காரியங்களுக்கு லைசென்ஸ் கொடுத்தது போல் தானே முடியும் என்று பயப்படுகிறோம். மற்றும் இந்த வைத்தியர்களுக்கு தனியாய் பணம் கொடுக்காவிட்டால் அவர்கள் மனம் எப்படி குளிரும்? ஆகவே பொதுஜனங்கள் வரி கொடுப்பதல்லாமல் வைத்தியர்களுக்கு வேறு அழுக வேண்டிவிடும். இது இந்த மந்திரிகளால் போடப்பட்ட புது வரி அல்லவா? என்று கேட்கிறோம்.

தவிரவும் வைத்திய முறைகளும் வைத்திய வசதிகளும் பெருகி அவற்றுள் அநேக புதுமைகள் ஏற்பட்டு மனிதன் நோயுற்று சாகாமல் வெகுகாலம் இருக்கலாம் என்கின்ற நிலை ஏற்பட்டு வருகிற இக்காலத்தில் வைத்திய இலாகாவை கவுரவ உத்தியோகஸ்தர்கள் கையில் ஒப்புவித்து விட்டால் அது உருப்படுமா? முன்னேற்றமடையுமா? என்று கேட்கின்றோம்.

இப்பொழுதே நமது நாட்டில் ஒவ்வொரு ஊரிலும் இருந்துவரும் அரசியல் சமுதாய இயல் கட்சி பிரதி கட்சிகளுக்கும் ஒற்றுமை இன்மைக்கும் கலவரங்களுக்கும் இந்த கவுரவ டாக்டர்கள் ஆகப் போகும் டாக்டர்களே பெரிதும் காரணமாய் இருந்து வருவது யாவரும் அறிந்ததேயாகும். அதிலும் 100-க்கு 99 இடங்களில் பார்ப்பன டாக்டர்களின் தொல்லையேயாகும். இந்த நிலையில் இவர்கள் வசம் ஆஸ்பத்திரிகளையும், மருந்து பாட்டல்களையும், சர்டிபிகேட்டு கொடுக்கும் அதிகாரங்களையும் ஜெயில் மேற்பார்வைகளையும் ஒப்படைத்து விட்டால் பார்ப்பனரல்லாத மக்கள் என்ன கதி அடைவது என்பது விளங்கவில்லை. வரி செலுத்துவோர் பணத்தில் வாங்கி இவர்கள் வசம் ஒப்புவிக்கப்படும் மருந்துகளின் கதி என்ன ஆகும் என்பதும் யோசிக்கத் தகுந்ததாகும்.

வைத்திய பரீøை பாஸ் பண்ணி விட்டதினாலேயே மனிதர்கள் எப்படிப்பட்டவர்களாய் இருந்தாலும் யோக்கியர்களாய் விடுவார்கள் என்று கருதவேண்டுமானால் சட்ட பரீøை செய்துவிட்டு வீட்டு வாடகைக்கு வழியில்லாமல் ஆந்தைகள் போல் பகலில் ஒளிந்துகொண்டு இருந்து ராத்திரியில் இரை தேடும் வக்கீல்களை முன்சீப், சப் ஜட்ஜி, ஜில்லா ஜட்ஜி ஆகிய உத்தியோகங்களுக்கு கவுரவ ஜட்ஜிகளாய் நியமித்து விடலாமல்லவா? இதற்காக ஏன் 500, 1000, 2000 ரூபாய்கள் வீதம் சம்பளம் கொடுக்க வேண்டும் என்று கேட்கிறோம்.

நமது நாட்டு ஆனரரி கவுரவ உத்தியோகங்களின் யோக்கியதை யார் அறியாதது? காங்கரஸ்காரர்கள் பதவி ஏற்ற ஸ்தாபனங்கள் ஸ்தல ஸ்தாபனங்கள் உள்பட இன்று எது யோக்கியமாயும் நாணயமாயும் நடப்பதாகச் சொல்ல இடமிருக்கிறது? சென்னை கார்ப்பரேஷன் முதல் திருநெல்வேலி ஜில்லா போர்டு வரை காங்கிரஸ் மெம்பர்களின் யோக்கியதை எப்படி நடந்து வருகிறது என்பது காங்கரஸ் பத்திரிகைகள் என்று சொல்லப்படும் பத்திரிகைகளிலேயே நாற்றமெடுக்கவில்லையா? என்று கேட்கிறோம். காங்கிரஸ் ஆட்சியில் ஸ்தல ஸ்தாபன நிர்வாகம் பாழாய் போனது போதாமல் வைத்திய இலாக்கா உதவியும் கல்வியும் குட்டிச் சுவராக்கப்படவேண்டுமா என்று கேட்கின்றோம். மற்றும் யாரோ பல பார்ப்பனர்கள் டாக்டர் பரீøை பாஸ் செய்துவிட்டு வேலை இல்லாமல் பட்டினி கிடப்பதற்கு ஆக பொது ஜனங்களின் உயிரைப்பற்றிய வைத்தியத் துறையே பாழாக்கப்படுவதா? என்றும் கேட்கின்றோம்.

இதற்கு காரணம் சர்க்காரில் பணமில்லை என்று சொல்லப்படு மானால் இந்த மந்திரிகள் அரசியல் நிர்வாகத்தில் இருக்க யோக்கியதை அற்றவர்கள் என்றுதான் சொல்லவேண்டும். மக்கள் தாங்க முடியாத அளவில் வசூலிக்கப்பட்ட வரிப்பணத்தில் வைத்தியத்துக்கும் கல்விக்கும் கூட பணம் இல்லை என்று சொல்லப்படுமானால் மற்று வேறு எதற்குத்தான் இந்த வரி பயன்படுகிறது என்பது நமக்கு விளங்கவில்லை.

ஆகவே இந்த மந்திரிகளுக்கு சிறிதாவது பொறுப்போ, சுயமரியாதையோ இருக்குமானால் மரியாதையாய் வெளியில் வந்து அரசியல் ஞானமுள்ளவர்களிடத்தில் பதவியை ஒப்படைத்துவிட வேண்டியது அவசியமாகும். “வரியைக் குறைக்கிறோம்; ஜனங்களுக்கு அதிக சவுகரியம் செய்கிறோம்; தற்குறித் தன்மையையும் நோயையும் இந்தியாவை விட்டே விரட்டி அடித்து விடுகிறோம்” என்றெல்லாம் சொன்ன பார்ப்பனர்கள் இன்று பதவி பெற்றதும் கல்வி இவ்வளவு வேண்டியதில்லை, வைத்தியம் இவ்வளவு வேண்டியதில்லை என்று சொல்லத்தக்க மாதிரிப் பள்ளிக்கூடங்களை குறைக்கவும் டாக்டர்கள் பொறுப்பையும் தகுதியையும் குறைக்கவும் முற்பட்டு விட்டார்கள் என்றால் இதன் சூழ்ச்சி விளங்கவில்லையா என்றும் கேட்கின்றோம்.

இன்றுள்ள வைத்திய வசதியும் கல்வி வசதியும் ஜஸ்டிஸ் மந்திரிகள் பதவிக்கு வந்த பின்பு எவ்வளவோ கஷ்டப்பட்டு செய்த காரியமாகும். அதனாலேயே பார்ப்பனரல்லாத மக்கள் பல வகுப்பாரின் கல்விக்கு 100க்கு 100 ஆக பெருகி இருக்கிறது.

வைத்திய விஷயத்திலும் அநேக தொத்து வியாதிகள் 100க்கு 90 பாகம் மறைந்ததுடன் சாவு எண்ணிக்கையும் குறைந்து விட்டது. வைத்திய வசதியும் கிராமங்களுக்கெல்லாம் கிடைக்கும்படியாக இருந்து வருகிறது. எல்லா வகுப்பிலும் டாக்டர்கள் ஏற்படவும் யாரும் வைத்திய பரீøைக்கு படிக்கவும் சவுகரியம் ஏற்பட்டது.

இன்று பார்ப்பன ஆட்சி ஏற்படவும் முதல் எடுப்பில் இந்த கல்வியிலும் வைத்தியத்திலேயும் கை வைக்கப்படுவதைப் பார்க்கும்போது மனம் பதறுகிறது. வயிறு எரிகிறது. இதை ஏன் என்று கேட்க சட்டசபையில் ஆள் இல்லாத நிலையில் நமது அரசியல் பிரதிநிதித்துவம் இருந்து வருகிறது என்றால் வெளியிலும் ஆள் இல்லை. எனவே இம் மாதிரியான ஒரு நெருக்கடியான காலம் பார்ப்பனரல்லாத மக்களுக்கு இதுவரை வந்திருக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டி இருக்கிறது.

குடி அரசு – தலையங்கம் – 09.01.1938

You may also like...