கோவை தமிழர் படை பவானியில் மாபெருங் கூட்டம் காங்கரஸ் காலித்தனம்

 

இன்று இங்கு தமிழர் படை வந்திருக்கிறது என்றும், அந்தப்படை வரவேற்புக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கே தான் வந்திருப்பதாகவும், இந்த ஊருக்கு தான் 10, 12 வருடத்திற்கு முன் வந்து பேசி இருப்பதாகவும், இன்று தமிழர் படை செல்வதின் நோக்கத்தைப்பற்றிப் பேசப்போவதாகக் கூறினார்.

இது சமயம் பார்ப்பனரால் தூண்டப்பட்ட ஒரு பார்ப்பனரல்லாத கூலி “வந்தே மாதரம்” என்று கூறினார். அதற்குத் தோழர் ஈ.வெ.ரா. அவர்கள் “இப்போது வந்துதான் ஏமாற்றுகிறீர்களே இன்னுமா ஏமாற்ற வேண்டும்?” என்று கூறிவிட்டு தான் கூறுவதில் ஏதாவது ஆட்சேபணை இருந்தால் நாளைக் கூட்டம் போட்டு பதில் கூறுங்கள். இல்லாவிட்டால் பேசுவதில் ஏதாவது சந்தேகமேற்பட்டால் சந்தேகங்களை தலைவர் மூலம் எழுதிக்கொடுத்தால் பதில் சொல்வதாகவும், வீணில் கூட்டத்தில் கலகம் செய்து காலித்தனம் செய்தால் நான் பயந்து விட்டு ஓடி விடப்போவதில்லை யென்றும், தான் இந்த ஊரில் பழகினவரென்றும் தன்னை பயமுறுத்தினால் பயந்து விட மாட்டாரென்றும், இவர்கள் கலகம் செய்வதால் இவர்கள் சூழ்ச்சிகளை வெளியிலெடுத்துக் கூறத் தனக்கு நல்ல சந்தர்ப்பம் ஏற்பட்டு விட்டதென்றும் கூறி பேச்சு சுதந்திரம் வேண்டும் என்று கூறும் இவர்கள், ஒருவர் தனது அபிப்பிராயத்தைக் கூற விடாமல் விஷமத்தனம் செய்தால் ஜனங்கள் இவர்கள் வண்டவாளத்தை அறிந்து கொள்ளுவார்களென்ற அச்சமா என்றும் காங்கரஸ்காரர்கள் சட்டசபைக்குப் போவதற்கு ஓட்டு கேட்கும் போது புதிய சீர்திருத்தத்தை உடைக்கப் போவதாகவும், வரி குறைக்கப் போவதாகவும் ஓட்டுக் கேட்டார்கள் என்றும், இன்று மாதிரி அந்த புதிய சீர்திருத்தத்தை உடைத்தார்களா? வரியைக் குறைத்தார்களா? எந்தச் சட்டத்தை உடைக்கிறேன் என்று கூறினார்களோ அந்த சட்டத்தின் கீழே இன்று அரசாட்சி செய்கிறார்கள் என்றும், வரியைக் குறைப்போம் என்றவர்கள் இன்று புதிய வரிகளைப் போடுகிறார்கள் என்றும், நாங்கள் வந்தால் வெள்ளைக்காரனைத் துரத்துவோம் என்றவர்கள் இன்று வெள்ளைக்காரனை ரோஜாப்புச் செடியென்றும், அவர்கள் ஞானாசிரியர் களென்றும் கூறி அவர்கள் காலில் விழுந்து கொண்டிருக்கிறார் களென்றும் தான் காங்கரசை பார்ப்பன சபை என்று கூறி வருவதாகவும் அதனால் தன்னை வகுப்புவாதி என்று சில பார்ப்பனக் கூலிகளும், பார்ப்பனர்களும் கூறுகிறார்கள் என்றும் குறிப்பிட்டார்.

மேலும் குறிப்பிட்டதாவது:-

இன்று சட்டசபையில் பாமர மக்களை ஏமாற்றி மெஜாரட்டியாக காங்கரஸ்காரர்கள் வந்தார்கள். வந்ததும் பத்து மந்திரிகளில் 4லீ மந்திரிகள் பார்ப்பனர்கள். அதில் பொறுப்பான உத்தியோகம் பார்ப்பனர்களுக்கே கொடுக்கப்பட்டிருக்கிற தென்றும், உபயோகமில்லாத உத்தியோகங்களே பார்ப்பனரல்லாதார்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறதென்றும், முதல்மந்திரி பதவியும் ஒரு பார்ப்பனருக்கே கொடுக்கப்பட்டிருக்கிறதாகவும், அதுவும் போலீசும், பண இலாகாவும் அவருக்கே கொடுக்கப்பட்டிருக்கிறதென்றும் பேசிக் கொண்டு வரும்போது பார்ப்பனர்களால் தூண்டப்பட்ட சிலர் கீழ்க்கண்ட கேள்விகளைக் கேட்டார்கள். தோழர் ஈ.வெ.ரா. அவர்கள் ஆணித்தரமான பதில் கூறினார்.

அவை வருமாறு:-

கேள்விகள்

  1. உங்களுடைய ஜஸ்டிஸ் கட்சியாரின் 20 வருட ஆட்சியில் ஏன் சமஸ்கிருத பாஷையை எடுக்கக்கூடாது? அது பார்ப்பனருடைய ஆட்சிக்கு ஆதரவா?
  2. 1914-ம் வருடம் ஹிந்தி வேண்டுமென்று பேசினது உண்டா இல்லையா?
  3. தாங்கள் காங்கரசில் சேர்ந்து உழைத்தது உண்டா இல்லையா?
  4. தங்களால் ்விடுதலை”யில் புகழப்பட்ட ஸ்டாலின் ஜகதீசனின் நிலைமை என்ன? அவர் இப்போது எங்கே இருக்கிறார்?
  5. தாங்கள் ஏன் காங்கரசை விட்டு விலகி விட்டீர்?
  6. தமிழை ஆதரிக்கும் தங்கள் “விடுதலை”ப் பத்திரிகை ஏன் ்விடுதலை” என்று இந்த ிலைீ போட வேண்டும்?
  7. ஆரியர்கள் யார்? இவர்கள் விருந்தாந்தம் என்ன? தாங்கள் அந்த வர்க்கத்தைச் சேர்ந்தவரா அல்லவா?

ஈ.வெ.ரா. பதில்

  1. ஜஸ்டிஸ் கட்சியார் ஆட்சியிலிருக்கும்போது அந்தச் சட்டப்படி அவர்கள் ஒன்றும் செய்யமுடியா தென்றும், அவர்கள் கவர்னர் சொல்லுகின்றபடிதான் நிர்வாகம் நடத்த முடியும் என்றும், அப்பொழுதும் தங்களால் ஆனதை மக்களுக்கு செய்தார்களென்றும் கூறிவிட்டு இன்று அரசாட்சி செய்யும் காங்கரஸ் மந்திரிகள் அவர்கள் வெறுத்த புதிய சட்டத்தின் கீழ் அரசாட்சி செய்கிறார்களென்றும் அவர்களுக்கு முன்னிருந்ததைவிட, எவ்வளவோ அதிகாரம் இருக்கிறது என்றும் இந்தக் கேள்வி கேட்டதிலிருந்து கேட்டவருக்கோ கேட்கும்படி தூண்டியவர்களுக்கோ அரசியல் ஞானம் இல்லை என்று தெரிகிறது.
  2. 1914 M எனக்கும் அரசியலுக்கும் சம்மந்தமில்லை. இருந்தாலும் இஷ்டமுள்ளவர்கள் எந்த மொழியையும் படிக்கட்டும். அதை விட்டுவிட்டு கட்டாயம் என்று சொல்லி சிறுவர்களைக் கெடுப்பதையே எதிர்க்கிறேன்.
  3. ஆம்.
  4. தோழர் ஸ்டாலின் ஜெகதீசனை இப்போதைய சர்க்கார் விலைக்கு வாங்கிக் கொண்டார்கள். அதனால் தான் அவனை விட்டி அடிக்கப்பட்டு விட்டது. இப்பொழுது கல்லு பிள்ளையார் போல் தமது சொந்த ஊரில் சுகவாசியாக இருக்கிறார்.
  5. காங்கரசில் அயோக்கியர்களும், புரட்டர்களும், ஏமாற்றுக்காரர்களும், சூழ்ச்சிக்காரர்களும் இருந்து கொண்டு மக்களை ஏமாற்றி வருவதால் அதை விட்டு விலகினேன்.
  6. அது மாணவர்கள் நன்மைக்கும், தமிழ்ப் பண்டிதர்கள் செளகரியத்திற்குமே தான்.
  7. ஆரியர்கள் என்பவர்கள் ஆடு மாடு மேய்த்துக் கொண்டிருப்பவர் களென்றும், அவர்கள் மத்திய ஆசியாவிலிருந்து இங்கு பிழைக்க வந்தவர்களென்றும் பல சரித்திரங்களிலிருக்கிறது. அதுதவிர இது பற்றிப் பள்ளியில் மாணவர்களுக்கும் பாடப் புத்தகங்கள் இருக்கின்றன.

குறிப்பு: பவானியில் 06.09.1938 ஆம் நாள் கோவை ஜில்லா தமிழர் படையை வரவேற்று ஆற்றிய உரை.

குடி அரசு – சொற்பொழிவு – 11.09.1938

You may also like...