தர்மபுரி ஜில்லா போர்டு நம்பிக்கை இல்லாத் தீர்மான நாடகம்

 

காங்கரஸ் சரணாகதி மந்திரிகள் பதவிக்கு வந்தவுடன் ஸ்தல ஸ்தாபனங்களில் எங்கெங்கு காங்கரஸ் அல்லாத கட்சியார் தலைமைப் பதவி வகித்து வந்தார்களோ அவைகளை எப்படியாவது அழித்து பார்ப்பன ராஜ்யம் ஆக்கிக்கொள்ள முயற்சித்து வருகிறார்கள் என்பது யாரும் அறிந்ததேயாகும்.

இதற்காக மந்திரிமார்களும் காங்கரஸ்காரர்களும் எவ்வளவு இழிவாகவும், கேவலமாகவும் நடந்து கொள்கிறார்கள் என்பதை பொது ஜனங்கள் உணர வேண்டியது அவசியமாகும்.

உதாரணமாக தர்மபுரி ஜில்லா போர்டு இதுவரை காங்கரஸ்காரர் ஆதிக்கத்தில் இருக்கவில்லை. தர்மபுரி ஜில்லா போர்டு தலைவரும் உபதலைவரும் சுயமரியாதைக்காரர்கள் ஆனதால் அவர்களை ஒழிக்கக் காங்கரஸ்காரர்கள் சிறப்பாகப் பார்ப்பனர்கள் கங்கணம் கட்டிக்கொண்டு பார்ப்பனரல்லாத மெம்பர்களைக் கொண்டே மகா பிரயத்தனங்கள் செய்து வந்து வெற்றி பெற்றுவிட்டார்கள். அதாவது தர்மபுரி ஜில்லா போர்டு பிரசிடெண்ட் தோழர் மிட்டாதார் ஈ. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் மீதும், வைஸ் பிரசிடெண்ட் தோழர் M.N. நஞ்சய்யா அவர்கள் மீதும் நம்பிக்கையில்லாத் தீர்மானமும் கொண்டு வந்து, தீர்மானமும் பாஸாகிவிட்டதாகச் சேதி வந்துவிட்டது. அந்த நாடகம் மற்றொரு பக்கம் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது.

~subhead

கிருஷ்ணமூர்த்தி, நஞ்சய்யா நிலைமை

~shend

தோழர்கள் கிருஷ்ணமூர்த்தியும் நஞ்சய்யாவும் சுயநல உணர்ச்சி அற்ற இளங்காளைகள், உண்மையாளர்கள் மிக மிக நேர்மையாளர்கள். வயிற்றுப் பிழைப்புக்காக மானத்தை விற்கவோ, கொள்கைகளை விற்கவோ, அதிகாரத்தை பதவியை நடத்தவோ வேண்டிய அவசியமில்லாத செல்வவான்கள். அவர்களது பெற்றோர்களும் மிக்க நீதியான – தர்ம நியாயமான என்று சொல்லப்படும் முறைகளில் பொருளை ஈட்டி வாழ்க்கை நடத்துபவர்கள். இவர்கள் மீது உள்ள குற்றமெல்லாம் ஆரிய அந்நியருக்கு அடிமைகளாக சம்மதிக்காததேயாகும். அவர்கள் மாத்திரம் பார்ப்பனீயத்தை ஏற்றுக்கொண்டு பார்ப்பனர்களுக்கு அடிமைகளாய் இருந்து வாழ ஆசைப்பட்டிருப்பார்களேயானால் தோழர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தோழர் சுப்பராயனுக்கு மேல் ஒருபடி உயரத்தில் இருக்கும்படியான பதவியை பெற்று இருப்பார். பணமும் ஏராளமாய் சம்பாதித்துக் கொண்டிருப்பார். அப்படிக்கு பதவியும் பணமும் பெற பேராசை இல்லாததாலும் சுயமரியாதை உணர்ச்சி உடையவர்களாய் இருப்பதாலும் அவ்விருவர்களும் பார்ப்பனர்களுக்கு அடிமையாக காங்கரசில் மெம்பராக முடியாதென்று – கண்டிப்பாய் முடியாதென்று – ஜில்லாபோர்டு தலைவர் உபதலைவர் பதவி மாத்திரமல்லாமல் வேறு எப்பதவி போனாலும் எவ்வளவு கஷ்ட நஷ்டமேற்பட்டாலும் ஒரு நாளும் முடியாதென வீர கர்ஜனையுடன் கூறி விட்டார்கள்.

அதன் பேரில் இவர்கள் மீது பார்ப்பனர்கள் பார்ப்பனரல்லாத ஆட்களைப் பிடித்தே நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரச் செய்தார்கள்.

~subhead

எதிரிகள் யோக்கியதை

~shend

இத்தீர்மானத்தை தயார் செய்தவர்கள் பார்ப்பனர்கள் ஆனாலும் பிரேரேபித்தவர்களும் ஆதரித்தவர்களும் கோடாரிக் காம்புகளான விபீஷணனும் அனுமாரும் போன்ற சகோதரத் துரோகியும் குலத் துரோகியுமான தோழர்கள் பாரிஸ்டர் எஸ்.வி.ராமசாமி அவர்களும் ஒரு குப்புசாமி நாயுடு அவர்களுமான பார்ப்பனரல்லாதார்களே யாவார்கள். இத் தீர்மானம் நிறைவேற்ற பல மெம்பர்களை விலைக்கு வாங்க சுமார் 4000 ரூபாய்க்கு மேல் 5000 ரூபாய் வரை செலவு செய்தவரும் ஒரு பார்ப்பனரல்லாதாரேயாகும்.

இதில் தோழர் எஸ்.வி. ராமசாமியைப்பற்றி நாம் நம் வாசகர்களுக்கு எடுத்துக்காட்ட வேண்டியதில்லை. அவர்தான் தன் தகப்பனுக்கு மந்திரி வேலையோ மந்திரி காரியதரிசி வேலையோ கொடுக்காததற்கு ஆக காங்கரஸ் கட்சி தலைவரான, பிரதம மந்திரியான தோழர் கனம் ராஜகோபாலாச்சாரியை பார்ப்பன பிளேக்கு என்பதாக கூறினார் என்று குற்றம் சாட்டப்பட்டு காங்கரசில் இருந்து விலக்கி காங்கரசின் பேரால் பெற்ற ஜில்லா போர்டு பதவியையும் ராஜிநாமாச் செய்யும்படியும் இனி காங்கரசில் அவருக்கு எவ்வித உரிமையும் கிடையாது என்றும் தண்டிக்கப்பட்டவர். பின்பு தனது வாழ்வுக்கு வேறு வகையின்றி மன்னிப்பு கேட்டுக் கொண்டவர் என்றும் சொல்லப்படுகிறவர்.

ஆகவே இப்படியானவர் தான் இந்த “புண்ணிய கைங்கரியத்தை ஏற்றுக்கொண்டார். ஏற்றுக்கொண்ட அவர் தோழர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் மீது சாட்டிய குற்றங்கள் என்னவென்றால் “மெஜாரிட்டி மெம்பர்களால் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வில்லை” என்பது முதல் குற்றமாம். இதற்கு கிருஷ்ணமூர்த்தி அவர்கள் சரியான பதிலளித்திருக்கிறார். அதாவது,

~subhead

தலைவர் உண்மை விளக்கம்

~shend

ஜில்லா போர்டு மெம்பர்கள் எலக்ஷனில் தனக்கு ஏற்கனவே மெஜாரிட்டி மெம்பர்கள் கிடைத்திருந்ததென்றும், மெஜாரிட்டி மெம்பர்கள் கையெழுத்துக்களை சர்க்காருக்கு காட்டியே நாமிநேஷன் பெற்றதாகவும், நாமிநேஷன் இல்லாதிருந்தாலும் கூட அந்த சமயத்தில் தனக்கு மெஜாரிட்டி இருந்ததென்றும் கூறியிருக்கிறார். விபரம் என்னவென்றால் தர்மபுரி ஜில்லா போர்டு மெம்பர் தேர்தலில் வெற்றி பெற்ற மொத்தம் 25 மெம்பர்களில் காங்கரஸ் பேரால் நிறுத்தப்பட்டவர்கள் உள்பட தன்னை பிரசிடெண்டாக நிற்கும்படியும் ஆதரிப்பதாக வாக்களித்தும் கையொப்பமிட்ட வேண்டுகோள் அனுப்பினவர்கள் 13 பேர்கள் என்றும் அதை அரசாங்கத்தார் நேரில் பார்த்த பிறகே 7 நாமிநேஷன்கள் கொடுத்தார்கள் என்றும், இந்த இருபது பேர்களில் காங்கரஸ்காரர்கள் சிலரை விலைக்கு வாங்கிக்கொண்ட பிறகும் கூடத் தனக்கு 16 ஓட்டுகள் கிடைத்ததென்றும் புள்ளிவிபரம் காட்டியிருக்கிறார்.

மற்றும் “ஜனநாயகத்தில் நாமிநேஷன் கூடாது” என்பதற்கும் அவர் கூறியதாவது:- “காங்கரஸ் பதவிக்கு வந்தவுடன் கோ ஆப்ஷன் அதாவது மெம்பர்களே நாமிநேஷன் செய்துகொள்ள அனுமதி கொடுக்கவில்லையா? அது நாமிநேஷன் ஆகாதா? மெம்பர்கள் நியமித்தால் என்ன? பொது ஜன ஓட்டுகளால் வெற்றிபெற்று பொதுஜன பிரதிநிதிகளால் மந்திரியான மந்திரி நியமித்தால் என்ன? இந்த இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? ஏன் இந்த இரண்டு ஸ்தானங்களை எலக்ஷனுக்கு விட்டிருக்கக்கூடாது? தேர்தல் நடத்தி இருந்தால் என்னை பொது ஜனங்கள் ஆதரிக்கிறார்கள் என்பதும் காங்கரஸை ஜனங்கள் ஆதரிக்கவில்லை என்பதும் விளங்கிவிடும் என்கின்ற பயம்தானே” என்று பளீரென்று பதில் அறைந்திருக்கிறார்.

~subhead

சவுக்கடி

~shend

மற்றொரு குற்றச்சாட்டான “அரசியல் சட்டத்தை வெறுக்கும் நாளில் பள்ளிக்கூடத்தை மூடவில்லை” என்கிற குற்றச்சாட்டுக்கு பதில் கூறுகையில் “நம் அரசியல் சட்டத்தை வெறுப்பதற்கு அறிகுறியாக பள்ளிக்கூடம் மூடவேண்டுமென்ற தீர்மானம் நீங்கள் கொண்டு வந்தது பித்தலாட்ட தீர்மானம். காங்கரஸ்காரர்கள் சரணாகதி அடைந்து அரசியல் சட்டத்தை நடத்திக்கொடுக்கப் போகின்றீர்கள் என்பதை மற்ற மெம்பர்கள் உணர்ந்தே அந்தத் தீர்மானத்தை தோற்கடித்துவிட்டார்கள். அதற்கு நான் என்ன செய்வது? நிறைவேறின தீர்மானப்படி நடப்பதா? தோல்வி அடைந்த தீர்மானப்படி நடப்பதா? அப்படியாவது உங்கள் தீர்மானப்படி அரசியல் சட்டத்தை தள்ளிவிட்டீர்களா? உடைத்து விட்டீர்களா? என்று தலையில் சாணியை கரைத்து ஊற்றின மாதிரி பதில் சொல்லி இருக்கிறார்.

மற்றும் ஜில்லா போர்டு சிப்பந்திகள் விஷயமாய் காங்கரஸ்காரருக்கு உள்ள வெறுப்பு விருப்புக்கு தன்னை பிணையாக்குவது பற்றியும் காங்கரஸ்காரர்களுக்கு புத்தி வரும்படி பதில் சொல்லியிருக்கிறார்.

~subhead

நன்றி கெட்ட காங்கரஸ்காரர்

~shend

மற்றும் காங்கரஸ்காரர்களுக்கு தனித்தனி முறையில் நன்மை செய்யவில்லை என்கின்ற ஆத்திரத்தைக் காட்டிக் கொண்டதற்கும் காங்கரசுக்காரர் சிபார்சுப்படி நடந்திருப்பதையும் அவர்கள் சொந்தக்காரர்களுக்கு அவர்கள் சிபார்சுப்படி வேலை கொடுத்ததையும் தனது நியமனங்கள் சர்க்கார் சட்டத்தையும் ஆமோதிப்பதையும் தகுதி அனுபவம் ஆகியவைகளையும் ஆதாரமாகக் கொண்டதென்றும் மூடனுக்கும் புரியும்படி விளக்கி காட்டி இருக்கிறார். மொத்தத்தில் காங்கரஸ் கட்சியைச் சேர்ந்த மெம்பர்களுக்கே அதிக சலுகை காட்டி வந்திருப்பதை எடுத்துக்காட்டி காங்கரஸ்காரர்களின் நன்றி கெட்ட விசுவாசமற்ற குணத்தை சூரிய வெளிச்சம்போல் கண் (மானம்) கூசும்படி விளக்கி இருக்கிறார்.

இந்தப்படியே காங்கரஸ்காரர்களின் சகல பொய்ப்பழிகளுக்கும் விஷமத்தனமான குறைகளுக்கும் சமாதானம் சொல்லி விட்டுக் கடைசியில் தனது நிலைமையையும் விளக்கி விட்டார்.

~subhead

உலகம் அறியட்டுமே

~shend

அதாவது உங்கள் “மந்திரிகள் செய்த சூழ்ச்சியின் பயனாகவும், உங்களுடைய நாணயமற்ற காரியத்தாலும் உங்களுக்கு மெஜாரிட்டி பலம் ஏற்படுத்திக்கொண்டதைக் கொண்டும் நீங்கள் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை யோக்கியமாய் நிறைவேற்றிக் கொண்டு போகாமல் பொய்யும் புளுகும் பேசி வீண்பழி சுமத்தி மக்களை ஏமாற்றப் பார்ப்பது யோக்கியமா?” என்றும் “நம்பிக்கை இல்லாத் தீர்மானத்துக்கு நாங்கள் பயப்படவில்லை” என்றும் “உங்கள் யோக்கியதையும் நீங்கள் எங்கள் மீது சுமத்தும் குற்றம் என்ன என்பதையும் உலகத்துக்கு அறிவித்து எங்கள் யோக்கியதையையும், உங்கள் யோக்கியதையையும் உலகம் அறியட்டும் என்பதற்காகவே நாங்கள் காங்கரஸ் அக்கிரம ஆட்சி ஏற்பட்டவுடன் ராஜிநாமா செய்யாமல் இருந்தோம்” என்றும் வெகு அழகாக எடுத்துச் சொல்லி இருக்கிறார்.

மற்றும் வைஸ் பிரசிடெண்ட் மீது வந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானத்திலும் இது போலவே பொருத்தமும், யோக்கியதையும், நாணயமும், அறிவும் அற்ற குறைகள் சொல்லப்பட்டவைகளுக்கு அவரும் தகுந்த பதில் சொல்லி இருக்கிறார்.

ஆகவே இந்த இரு தோழர்கள் மீதும் நிறைவேற்றப்பட்ட நம்பிக்கை இல்லாத் தீர்மானம் அவர்களுக்கு ஒரு ஒப்பற்ற பெருமையையும், கீர்த்தியையும் கொடுப்பதற்கு ஒரு அவசியமான முதற் சம்பவம் என்பதே நமதபிப்பிராயம். ஏனெனில் இதனால் இத் தோழர்கள் இதுவரை செய்து வந்த சேவையையும் இனி காங்கரஸ்காரர்கள் செய்யப்போகும் சேவையையும் பொது ஜனங்கள் உணர ஒரு நல்ல சந்தர்ப்பம் ஏற்படும் என்பது நமது அபிப்பிராயம்.

~subhead

விபீஷணர்கள் சூழ்ச்சி

~shend

மற்றும் இந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானம் நிறைவேற்றிக் கொள்ளவும் அதன் பிறகு பிரசிடெண்டு ஸ்தானத்துக்கு வரவும் ஆசைப்பட்ட தோழருக்கு இது விஷயத்தில் சுமார் 4000 ரூ. க்கு மேல் 5000 ரூ. வரை செலவுக்காகவும் ஜில்லாபோர்டு மெம்பர்கள் பலரை விலைக்கு வாங்கி (எணி ச்ண் தூணித ணீடூஞுச்ண்ஞு) “கோ ஆஸ் யூ பிளிஸ்” டிக்கட் வாங்கிக்கொடுத்து ஒவ்வொருவருக்கு ஒரு ஆள் காவல் போட்டு சதா சர்வ காலம் அவர்களுடைய சகலவிதமான ஆசைகளையும் திருப்திசெய்து வந்து எலெக்ஷன் சமயத்தில் மாத்திரம் அழைத்து வந்து ஓட்டுப் பெற்றார்களாம். இந்த காலத்தில் அதுவும் இந்த ஆட்சியில் இது சகஜமே ஒழிய இதற்காக யாரும் அத்தீர்மானம் செல்லுபடி அற்றதென்று தீர்ப்புப்பெற்று விட முடியாது. ஆனால் இதில் பகுதி தொகை செலவழிக்க தோழர் கிருஷ்ணமூர்த்தியோ, தோழர் நஞ்சையாவோ சம்மதித்திருப்பாரானால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்காது என்றும் தெரியவருகிறது.

எப்படி இருந்த போதிலும் தோழர்கள் கிருஷ்ணமூர்த்திக்கும், நஞ்சையாவுக்கும் காங்கரஸ் தொல்லையிலும், காலித்தனத்திலும் இருந்து விடுபட சந்தர்ப்பம் கிடைத்ததை நாம் ஒரு பெரிய சொத்து ஆகவே கருதுகிறோம். ஏனெனில் இனி அவர்களது (தினம்) 24 மணி நேரமும் சுயமரியாதை இயக்கத் தொண்டுகளுக்கே பயன்படக் கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டு விட்டதேயாகும்.

மற்றபடி இந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தால் காங்கரஸ் யோக்கியதையும் ஆட்சி நிர்வாக நாணயமும் வெளியாகித் தீரும். ஆகவே இவர்கள் வெளி வந்ததை வரவேற்கிறோம்.

குடி அரசு – தலையங்கம் – 16.01.1938

~cstart

You may also like...