இனி செய்ய வேண்டியதென்ன?

 

உலகிலே நாம் எத்திசையை நோக்கினும், எந்நாட்டை நோக்கினும் சுதந்திரத் தீ மூண்டு கொண்டிருப்பதையும், சுவாலை விட்டு எரிந்து கொண்டிருப்பதையும் பார்க்கிறோம். ஒவ்வொருவரும் சுதந்திரத்தோடு வாழ விரும்புகின்றனர். ஒவ்வொரு ஆணும், ஒவ்வொரு பெண்ணும் சுதந்தரமாக வாழ விரும்புகின்றனர். எத்தகைய பழக்கவழக்கத்தையும் கட்டுத் திட்டத்தையும் உடைத்தெரிந்துவிட்டு சுதந்திரத்தோடு, மனிதாபிமானத்தோடு வாழ ஆசைப்படுகின்றனர். ஒரு நாட்டார் மற்றொரு நாட்டாரின் அடிமையிலிருந்து விடுதலை அடைய ஆர்வங் கொண்டுழைக்கின்றனர். ஒரு சமூகம் மற்றொரு சமூகத்தின் ஆதிக்கத்திலிருந்து விடுதலை அடையப் போராடி வருகிறது. சமத்துவமாக, சம உரிமையோடு, சம அந்தஸ்தோடு விளங்க வேண்டுமென்று ஒவ்வொரு சமூகமும் பல வருடங்களாக போராடி வருகிறது. இதை எவரும் மறுக்கத் துணிவு கொள்ளார்.

ஒரு சமூகமோ, ஒரு நாடோ, ஒரு வகுப்போ, மற்றொரு சமூகத்திலிருந்தோ, நாட்டாரிடமிருந்தோ, வகுப்பாரிடமிருந்தோ விடுதலையடைய வேண்டுமானால் அவர்களால் தங்களுக்கு நேர்ந்த இடுக்கண்களையும், அவமானத்தையும், தாங்கள் அடைந்த நிலைமையையும் எடுத்துரைத்தல் நியாயமா அல்லவா? அதற்கு உரிமையிருக்க வேண்டியது அவசியமா அல்லவா? அப்படி எடுத்துரைப்பதால், அடிமையாக வைத்திருந்த நாட்டாருக்கோ, சமூகத்தாருக்கோ, வகுப்பாருக்கோ மனச் சஞ்சலம் நேருவதும் சகஜமே. இதனால் துவேஷத்தை உண்டு பண்ணுவது என்று கூறுவது எப்படிப் பொருந்தும்? வாஸ்தவத்திலே ஒரு சமூகம் மற்றொரு சமூகத்தினிடமிருந்து விடுதலையடைவதற்காக தாங்கள் அடைந்த இழிநிலைமைக்குக் காரணத்தை எடுத்துரைப்பது துவேஷமானால் – குற்றமானால் இந்திய சமூகத்திற்கு பிரிட்டிஷ் சமூகத்தின் மீது வெறுப்பையும், துவேஷத்தையும் கற்பித்து வந்தது எப்படி நியாயமாகும்? அதற்கு மட்டும் பிரிட்டிஷ் சட்டம் இடங்கொடுத்தது. ஆனால் இந்தியாவிலே ஒரு சமூகம் மற்றொரு சமூகத்தின் ஆதிக்கத்தினின்று விடுதலையடைய போராடுவதற்கு மட்டும் பிரிட்டிஷ் சட்டம் இடங் கொடுக்கவில்லையா?

பிரிட்டிஷ் மன்னர் பிரான் ஆட்சியில் வெள்ளையரும் இந்தியரும் மன்னர் பிரான் பிரஜைகள் என்றே நாம் கருதுகின்றோம். ஆகவே மன்னர் பிரான் பிரஜைகளுக்குள் வெள்ளையரை வெறுக்க, விரட்டியடிக்க, மூட்டை முடிச்சுகளுடன் கப்பலேற்ற இடங்கொடுக்கும் சட்டம் ஒரு சமூகம் தன்னை அடிமை வாழ்விலே வைத்திருக்கும் மற்றொரு சமூகத்தை விரட்டியடிக்க இடம் கொடுக்கவில்லையென்றால் எப்படி ஒப்புக்கொள்ள முடியும்?

இனி வகுப்பு துவேஷிகள் என்பவர்கள் யார் என்பதை சிறிது ஆராய்வோம்.

வகுப்புகளை என்றென்றும் நிலைத்திருக்க வேண்டுமென்று திட்டம் வகுத்து வேலை செய்கின்றவர்களா? அல்லது அது ஒழிய வேண்டுமென்று வேலை செய்பவர்களா?

வகுப்பு என்பது யாரால் ஏற்பட்டது? வகுப்புக்கு வகுப்பு பேதமும், மேல் கீழ் தன்மையும் யாரால் ஏற்பட்டது?

கீழ் வகுப்பார் என்பவர்களைக் கொடுமை செய்து வருபவர்கள் யார்?

பெருங்குடி மக்களை சூத்திரன் என்றும், 4-வது வகுப்பான் என்றும் சொல்லுகிறவர்கள் யார்?

பிராமணனுக்கு வேறு இடம், சூத்திரனுக்கு வேறு இடம் என்று சொல்லி எழுதிக் கட்டியிருப்பவர்கள் யார்?

பஞ்சமருக்கு இடமில்லை என்று எழுதி வைத்திருப்பவர்கள் யார்?

பார்ப்பனர்களுக்கு மாத்திரம் என்று விளம்பரம் செய்தவர்கள் யார்?

மக்களைப் ்பிறப்பித்த கடவுளை” ஆராதிக்க வேண்டுமானால் எங்கள் மூலம்தான் ஆராதிக்க முடியும். ஐந்தாவது வகுப்பானுக்கு அந்த உரிமையும் இல்லை என்றும் அவன் கோவிலுக்குள் குளத்துக்குள் வரக்கூடாதென்றும் தடுக்கிறவர்கள் யார்? அதுவும் சட்டபூர்வமாகவும் சாஸ்திர மூலமாகவும் தடுத்து வருகிறவர்கள் யார்? இவர்கள் எல்லாம் வகுப்புவாதிகள் அல்லாதவர்களா? வகுப்புத்துவேஷக்காரர்கள் அல்லாதவர்களா?

வகுப்பு அபிமானிகளா? வகுப்பு அன்பர்களா? என்று கேட்கின்றோம்.

எவ்வாறு இந்தியாவில் இந்தியர் அல்லாத மற்றவர்கள் அன்னியர்களோ அவர்களுக்கு உரிமையில்லையோ அது போலவே தமிழ்நாட்டில் தமிழர் அல்லாத ஏனையோர் அன்னியர்தானே? அவர்களுக்குத் தமிழ்நாட்டில் எப்படி உரிமையிருக்க முடியும்?

தவிர, காங்கரசிலே பாஷா வாரியாக மாகாணம் பிரிக்க வேண்டு மென்றும் பிரிப்பதற்கு அவரவர்களுக்கு உரிமையுண்டென்றும் காங்கரஸ் தீர்மானித்திருக்கையில் தமிழர் தமிழ்நாட்டின் விடுதலைக்காக, தமிழர் உரிமைக்காக போராடுவது எப்படி தவறாகும். தமிழர் ஒற்றுமையை பலப்படுத்த செய்யப்படும் காரியம் எப்படி வகுப்புத் துவேஷமாகும்?

ஏதோ தங்கள் கையில் அதிகாரம் இருக்கிறதென்ற மமதையால் – ஆணவத்தால் – நியாயமாகப் போராடுகிறவர்கள் எத்தகையோராயிருந்தாலும், எவ்வளவு செல்வாக்கு படைத்தோர்களாயிருந்தாலும், பிரிட்டிஷ் அடக்குமுறை சட்டத்தைக் கொண்டு அடக்கிவிடலாமென்று இன்று கருதுவார்களேயானால் பிற்காலத்தில் இவர்கள் நிலைமை எவ்வளவு பயங்கரமாக முடியுமென்று நாம் சொல்லத் தேவையில்லை. சரித்திரங்களே சொல்லும். உலகத்தின் பற்பல தேச சரித்திரங்களை ஒருமுறை உற்று நோக்கியிருந்த எவரும் அந்நிலை நேரும் என்பது துர்லபம் என்று நினைக்கமாட்டார்கள். உதாரணமாக இங்கிலாந்து தேச சரித்திரத்தையே எடுத்துக்கொள்ளுங்கள். 17-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் 8-ம் ஹென்றிற்குப்பின் அரசாட்சியை நடத்திய இரண்டு அரசுகளின் ஆட்சியில் நடந்த மாறுதலை புரட்சியைக் கண்டுமா சந்தேகம் என்று கேட்கின்றோம். அந்தவிதமான நிலைமை நமது நாட்டிலும் வரக்கூடா தென்பதுதான் நமது ஆசை. ஆனால் காங்கரஸ்காரர்கள் போக்கைப் பார்த்தால் எதிர்கால நிலைமையைக் குறித்து கண்ணீர் விட வேண்டியதிருக்கிறது. நகர சபைகளையும், ஜில்லா போர்டுகளையும், சட்டசபைகளையும் கைப்பற்றிய காங்கரஸ்காரர்கள் நடந்து கொள்ளும் போக்கைப் பார்த்தால் அவர்களே அந்நிலைமையை விலை கொடுத்து வாங்குகிறார்கள் என்று சொல்ல வேண்டியிருக்கிறது.

தமிழன் சுதந்தரத்தோடு, மானத்தோடு, ஒரு மனிதனாக விளக்க வேண்டுமானால் வெள்ளையினிடமிருந்து விடுதலைப் பெற்றால் மட்டும் போதாது. பார்ப்பனீயத்திலிருந்தும் விடுதலையடைய வேண்டும். ஆகவே பார்ப்பனீயத்தையும் அதன் கொடுமையையும் எடுத்துரைப்பது சட்ட விரோதமானால் தமிழன் என்று விடுதலையடைவது என்று கேட்கின்றோம். வெள்ளையர் ஆதிக்கத்திலிருந்து விடுதலையடைந்த தமிழன் பார்ப்பனீயத்துக்கு அடிமையாக வாழ வேண்டியதுதானா? நம்மைப் பொறுத்தவரை பார்ப்பனீய ஆதிக்கத்தின் மானங்கெட்ட வாழ்வைவிட வெள்ளையர் ஆதிக்கத்தின் வாழ்வு எவ்வளவோ மடங்கு மேலேன்று கூறுவோம்.

கடைசியாக ஒரு வார்த்தை சொல்லிக் கொள்ள பிரியப்படுகிறோம். அதாவது இன்றைய பார்ப்பனர் ஆட்சி, தமிழர்கள் விழித்துக் கொண்டார்கள், இதுவரை அவர்கள் துடையில் கயிறு திரித்து வந்தது போல இனிமேல் முடியாது, இதுவரை அவர்களை ஏமாற்றி வயிறு வளர்த்து வந்த சோம்பேறி வாழ்க்கை செல்லாது, அந்த காலம் மலையேறிவிட்டது, இனி நாம் பேசாது இருந்தால் தங்களது பழைய கால சூழ்ச்சிகள் வெளிப்பட்டு தாங்கள் பழையபடி கூடாரம் தூக்கி தேச தேசமாக சஞ்சாரம் செய்ய வேண்டிய காலம் நேரிடும் என்று எண்ணி பிரிட்டிஷ் சர்க்கார் ிசாத்தான்ீ சர்க்கார் அடக்குமுறை சட்டங்களை – வாய்ப்பூட்டுச் சட்டங்களை – சுதந்தரத்தை ஒடுக்க ஏற்பட்ட சட்டங்களைக் கொண்டு தமிழர்களை அடக்கியாள முற்பட்டுவிட்டது.

அத்தகைய அடக்குமுறைக்கு முதல் முதலாக இரையானது “விடுதலை” ஆசிரியரும் பத்திராதிபரும் என்று சொன்னால் மிகையாகாது. ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான கிறிஸ்தவ, முஸ்லீம், பார்ப்பனரல்லாத மக்களின் வாக்காக சர்க்காருடன் போரிட்டு வந்த ிவிடுதலைீ இன்று வாய் மூடி மெளனியாக வெளிவர வேண்டியிருக்கிறது.

அதன் வாயை திறப்பதற்கு சாவி தமிழர்கள் கையில்தான் இருக்கிறது. அந்தச் சாவிதான் ஒற்றுமை. தமிழர்களாகிய பார்ப்பனரல்லாதாரும், கிருஸ்தவர்களும், முஸ்லிம்களும் ஒற்றுமையாகிய அந்த சாவியைக் கொண்டு திறந்தால் ிவிடுதலைீயின் வாய் திறக்கப்படுவது பெரிய காரியமல்ல.

ஆகவே சுதந்தரத்தோடு தமிழன் வாழ விரும்பினால் மானாபிமானத்தோடு வாழ வேண்டுமானால் தனக்கு நேர்ந்திருக்கும் அவமானத்திலிருந்து ிவிடுதலைீயடைய வேண்டுமானால், சுத்தத் தமிழனாக வாழ வேண்டுமானால் தமிழர்கள் தங்களுக்குள்ளிருக்கும் பேதா பேதத்தை ஒழித்துவிட்டு ஒற்றுமைப்பட்டு, ஒருமனப்பட்டு கட்டுப்பாடுடன் ஒரு தலைவரின் கீழ் போராட வேண்டுமென்று ஆசைப்படுகிறோம். இதுதான் இனி தமிழர்கள் செய்ய வேண்டிய பொறுப்பும், கடமையுமாகும்.

– மா.வா.

குடி அரசு – தலையங்கம் – 16.10.1938

You may also like...