வரவேற்கிறோம் கொலையை வரவேற்கிறோம்

 

சென்னை காங்கரஸ் கூலி கேடிப் பத்திரிகை ஒன்று தனது மார்ச் 10-ந் தேதி பத்திரிகையில் சுயமரியாதைக் கட்சியின் மீது அபாண்டமாக முழுப்பொய்யான விஷயங்களைக் கற்பித்து எழுதி அதை ஒரு சாக்காக பயன்படுத்திக் கொண்டு “தற்காப்புக்காக கொலை செய்யலாம் அது குற்றமாகாது” என்று மக்களைக் கொலை செய்யத் தூண்டிவிட்டு மக்களுக்கு மேலும் தைரியம் வரும்படியாக “கொலை செய்தவர்கள் சர்க்காரால் விடுவிக்கப்பட்டு விட்டார்கள்” என்று ஏதோ ஒரு கோர்ட் ஜட்ஜிமெண்டையும் எடுத்துக்காட்டி தூண்டிவிட்டிருக்கிறது.

இதைப்பற்றி சிறிதும் நாம் கவலைப்படவில்லை. உண்மையிலேயே அப்படிப்பட்ட நிலைமையை வரவேற்கிறோம். இந்த நாட்டில் உள்ள சுயமரியாதைக்காரர்களில் 10 பேர்களோ, அல்லது 20 பேர்களோ அல்லது 100 பேர்களோ தான் இந்த தூண்டுதலால் கொல்லப்பட்டு விட்டார்கள் என்றே வைத்துக்கொண்டாலும் இதனால் சுயமரியாதைக்காரர்கள் எண்ணிக்கை குறைந்து விடுமென்றோ, சுயமரியாதைக்காரர்களது உணர்ச்சி மாறி தங்கள் தொண்டில் அடங்கிவிடுவார்கள் என்றோ நாம் சிறிதும் கருதவில்லை.

மற்றும் அப்படிப்பட்ட ஒரு நிலை ஏற்படுவது எது வெற்றி பெறுகிறது, எது நிலை நிற்கிறது, எது பொக்கி கோழைக்கூட்டம் என்பது புலனாவதற்கு ஒரு சரியான பரீøையுமாகும்.

~subhead

கூத்தி மகன் வீரம்

~shend

காங்கரஸ் இதுவரை ஏதோ ஒரு மகத்தான பொறுமையுடன் இருந்து “அஹிம்சா தர்மம்” என்பதைக் கடைபிடித்து வந்திருப்பதாகவும் அதில் அது தோற்றுவிட்டதாகவும் ஆதலால் தற்காப்பு என்று பெயர் வைத்துக் கொண்டு ஹிம்சை முறையில் அதுவும் கொலை செய்யும் துறையில் இறங்க வேண்டும் என்றும், கூத்தி மகன் வீரம் பேசுவது போன்ற அயோக்கியத்தனமான பேச்சு வேறு இல்லை என்றே சொல்லுவோம்.

காங்கரசின் “பொறுமையும்” “அஹிம்சா தர்மமும்” யாரையும் விட நமக்கு நன்றாய்த் தெரியும். காங்கரசின் சரித்திரத்தில் அஹிம்சை என்ற பேச்சு வந்து புகுந்தது முதல் நாளது வரை எந்த சந்தர்ப்பத்தில் தங்களுக்கு திருப்பி அடிக்கச் சக்தியிருந்த காலத்தில் அஹிம்சை தர்மத்தைக் காட்டிவந்தது என்று ஏதாவது ஒரு சிறு உதாரணத்தை எடுத்துக்காட்டுமா? என்று கேட்கின்றோம். சண்டித்தனத்துக்கு உதை விழுந்தால் நிமிர்ந்து பார்க்கக்கூட திறமில்லாத காலத்தில் கண்ணை மூடிக்கொண்டு எந்த சந்தர்ப்பத்தில் சக்தியிருக்க பொருமை காட்டப்பட்டிருக்கிறது என்று மறுபடியும் கேட்கின்றோம்.

~subhead

காங்கரஸ் காலித்தனம் செய்யாத கூட்டமுண்டா?

~shend

இதுவரை சுயமரியாதைக்காரர்கள் சுமார் 3000, 4000 பொதுக் கூட்டங்கள் கூட்டி 500 முதல் 20000 ஜனங்கள் கொண்ட கூட்டம் வரையில் பேசியிருக்கலாம். இவற்றுள் காங்கரஸ்காரர்கள் வந்து காலித்தனம் செய்யாத, செய்ய முயற்சித்துப் பார்க்காத செய்து பார்க்கலாமா என்று எண்ணாத கூட்டங்கள் ஒரு 10 அல்லது 20 கூட இருக்காது என்று சொல்லலாம். மற்றபடி காலித்தனங்கள் செய்ய நேர்ந்த ஒவ்வொரு கூட்டத்திலும் கல்லு, மண்ணு, கோழி முட்டை, சாணி எறியப்பட்டதும், குடிகாரர்களுக்கு கள்ளு வாங்கிக் கொடுத்து கூப்பாடு போடச் செய்ததும் சிறு பிள்ளைகளை விட்டு ஜே! போடச் செய்து கலவரம் செய்தும் அனாவசியமான கேள்விகள் – தாடி யேன் வளர்க்கப்படுகிறது? மீசையேன் நரைத்துப் போச்சுது? நீ ஏன் கல்யாணம் செய்து கொள்ளவில்லை என்பன போன்ற அசட்டுக் கேள்விகள் கேட்டு காலித்தனம் செய்வதும், சு.ம. கூட்டம் நடக்குமிடத்தில் பக்கத்தில் வேறு கூட்டம் போட்டு கூப்பாடு போடுவதும் பக்கத்தில் தப்பட்டை மேளம் அடித்து தொல்லை விளைவிப்பது சமீபத்தில் நின்று கொண்டு ஜனங்களை கூட்டத்துக்கு வரவொட்டாமல் தடுத்து திருப்பி அனுப்புவதும் துண்டு நோட்டீசுகளை கொண்டுவந்து கூட்டங்களில் வினியோகித்து கலாட்டா செய்வதுமான மற்றும் பல அற்பதனமான காரியங்களும் எப்படிப்பட்ட இழிமகனும் செய்யத் துணியாத கேவல செய்கைகளும் செய்துதான் வந்திருக்கிறார்கள் என்றாலும் இந்த 3000, 4000 கூட்டங்களில் ஒரு கூட்டமாவது கலவரத்தினால் கலைக்கப்பட்டு விட்டதென்றோ, பேச்சுக்கள் முடிந்து தலைவர் முடிவுரை நடந்து தலைவருக்கும் கூட்டத்துக்கும் வந்தனோபசாரம் சொல்லி முடிக்கப்படாத கூட்டம் ஏதாவது ஒன்றை ருஜüவு செய்தால் ரூ.1000 சன்மானம் கொடுக்கிறோம் என்று விளம்பரம் செய்கின்றோம். வேண்டுமானால் ஒரு உதாரணம், பட்டி வீரம்பட்டிக்கு அடுத்த அய்யம்பாளையத்தில் போலீஸ்காரர் கூட்டம் கூட்டப்படாது என்று ஆரம்பத்தில் தடுத்து நிறுத்திவிட்டார்கள். அதுவும் அன்றே அங்கேயே தோழர் ராமசாமி சொன்னதுபோல் இந்த 15-வருட காலத்துக்கு ஒரே ஒரு கூட்டம்தான் அதுவும் போலீசாரால் நிறுத்தப்பட்டது என்பதாகும். மற்றபடி எவ்வளவு பெரிய காலித்தனமானாலும் கடைசி வரை நின்று பேசி கூட்டத்தை நடத்தி விட்டுத்தான் சென்று இருக்கிறார்கள்.

முன்சொன்னபடி சு.ம. கூட்டங்களில் எவ்வளவு காலித்தனமும் கலாட்டாவும் நடந்திருந்தாலும் சு.ம.காரர்கள் ஒரு ஆளையாவது ஒரு சிறு பையனையாவது அடித்தார்கள் கையால் தொட்டு தள்ளினார்கள் என்றாவது ரூபித்துவிட முடியாது. ஏனெனில் தோழர் ஈ.வெ.ரா. இருக்கும் கூட்டங்களில் எல்லாம் தோழர் ஈ.வெ.ரா. எவ்வளவு தொல்லைகள் ஏற்பட்டாலும் சமாளித்து சு.ம. காரர்களையே கண்டிப்பதின் மூலம் எதிரிகள் வெட்கப்படும்படி செய்து அடக்கி காரியம் முடித்து வரப்பட்டிருக்கிறது.

~subhead

சில உதாரணங்கள்

~shend

உதாரணமாக இந்த ஒரு மாத காலத்தில் 3, 4 இடங்களில் சு.ம. கூட்டங்களில் காங்கரஸ் காலிகள் கலகம் நடத்தி இருக்கிறார்கள். அவைகள் காங்கரஸ் பத்திரிகைகளிலேயே வந்திருக்கின்றன. காஞ்சீபுரத்தில் தோழர்கள் ஈ.வெ.ரா., அண்ணாத்துறை ஆகியவர்கள் பேசும்போது காங்கரஸ்காரர்கள் காலித்தனம் செய்தார்கள். போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் பக்கத்திலேயே இருந்தார். அவரிடம் சொன்னதற்கு அவர் பிராமணாளை குறை கூறினால் ஜனங்கள் பார்த்துக் கொண்டிருப்பார்களா என்று நம்மவர்களுக்கு சமாதானம் சொன்னாரே தவிர காலித்தனத்தை அடக்கவில்லை. அப்புறம் ஒரு சாயபு இன்ஸ்பெக்டர் வந்து சப்-இன்ஸ்பெக்டரை ஒரு ஏத்து ஏத்தினார். பிறகு காலித்தனம் அடங்கிற்று. தெரிந்தோ என்னமோ காங்கரஸ் ராஜ்யம் அந்த சாயபை உடனே மாற்றிவிட்டு அவருக்குப் பதிலாக ஒரு அய்யரையே போட்டிருக்கிறது. காஞ்சீபுரம் மகா நாட்டின் போதும் காங்கரஸ் காலிகள் கொட்டகைக்கு வெளியில் இருந்து கூப்பாடு போட்டு ஜனங்கள் நடவடிக்கைகளைக் கவனிக்காமல் இருக்கச் செய்தார்கள். போலீசார் சரியாக கவனிக்கவில்லை. இதன் மீது தோழர் கே.ஏ.பி. விஸ்வநாதம் அவர்கள் போலீசாரை அறை கூவியழைத்தார். அதாவது உங்களால் காலிகளை அடக்கமுடியுமா முடியாதா? அல்லது நாங்கள் அடக்கலாமா என்றார், உடனே போலீஸ் ஓடிற்று. காலிகள் பரந்தார்கள்.

~subhead

தஞ்சாவூரில் காலித்தனம்

~shend

தஞ்சாவூர் மகாநாட்டின் போதும் போடப்பட்ட பொதுக்கூட்டத்தில் ஈ.வெ.ரா. பேசும்போது காங்கரஸ்காரர்கள் பலருக்குக் கள்ளை வாங்கி ஊற்றிக் கலவரம் செய்யச் செய்தார்கள். கைகலக்கும்படியான நிலைமை ஏற்பட்டது. உடனே தோழர் ஈ.வெ.ரா. சு.ம.காரர்களை கோபித்துக் கொண்டதால் காங்கரஸ் காலிகள் தங்கள் இஷ்டம் போல் கூப்பாடு போட்டு அவர்கள் வாய் வலித்ததால் தானாக அடங்கினார்கள். அன்று அது காரணமாய் இரவு 10 மணி வரை கூட்டம் நடந்தது. மாயவரம் மகாநாட்டின் போதும் கும்பகோணம் காந்திபார்க்கில் தோழர் ஈ.வெ.ரா. பேசும்போதும் காங்கரஸ் காலிகள் கலவரம் செய்தார்கள். மழை பெய்தும் கூட்டம் கலையாமல் கிரமப்படி முடிவு பெற்றது. போனமாதம் 13-ந் தேதி தூத்துக்குடி நாகம்மாள் வாசகசாலை ஆண்டு விழாவின்போது நடந்த பொதுக்கூட்டத்தில் 10000 ஜனங்கள் உள்ள கூட்டத்தில் தோழர் ஈ.வெ.ராவும் ஜனாப் கலீபுல்லா சாயபும் பேசுகையில் காங்கரஸ் காலிகள் மண்ணை வாரிப்போட்டு கற்கள் எறிந்து ஜே! கூப்பாடு போட்டு மிருகங்கள் போல் கத்திச் செய்த தொல்லைகள் போலீசார் வந்த பிறகே அடங்கிற்று. அந்த சமயம் சு.ம. காரர்களை ஈ.வெ.ரா. கண்டிக்காமலும் சு.ம.காரர்கள் பேசாமல் இருக்கவிட்டால்தான் கூட்டத்தில் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு ஓடிப்போவேன் என்றும் மிரட்டியதால் சு.ம. காரர்கள் சும்மா இருந்தார்கள். அப்புறம் தோழர்கள் ஈ.வெ.ரா., கலீபுல்லா சாயபு, விஸ்வநாதம் ஆகியவர்கள் பேசி 11 லீக்கு கூட்டம் கிரமப்படி முடிவு பெற்றது. அப்படி இருந்தும் கல் விழுந்தது, செருப்பு விழுந்தது. ராமசாமியை மடக்கிக் கொண்டார்கள்; கேள்விக்கு பதில் சொல்லாமல் ஓடிவிட்டார் என்று காங்கரஸ் பத்திரிகைகள் மற்றவர்களையும் இது போல் கலகம் செய்ய தூண்டிவிட்டன. அதில் ஒரு பத்திரிகையின் புளுகுக்கும் அதன் நிருபர் வேண்டுமென்றே செய்த அயோக்கிய தனத்துக்கும் ஒரு உதாரணம் கூட கூறுகிறோம். அதாவது அன்றைய கூட்டத்தில் “தோழர் அண்ணாத்துரை ஹிந்தியை கண்டித்து பேசினார்.” அதனால் கூட்டம் கோவித்துக்கொண்டது என்பதாக எழுதி இருந்தது. உண்மையில் தோழர் அண்ணாத்துரை அவர்கள் அன்று தூத்துக்குடிக்கே வரவில்லை. இப்படியாக காங்கரஸ் பத்திரிகைகள் என்பவைகளும், பார்ப்பன நிரூபர்கள், பார்ப்பன பத்திராதிபர்கள் என்பவர்களும் பொய்யும் புளுகும் அயோக்கியத்தனமான தூண்டுதலும் செய்வதன் மூலமே காங்கரஸ் காலிகள் காலித்தனத்துக்கு தூண்டப்பட்டு விடுகிறார்கள்.

~subhead

காங்கரஸ் யோக்கியதை

~shend

காங்கரஸ்காரர்களுக்கு முதலாவது அரசியல் ஞானம் கிடையாது என்பதோடு ஒழுக்கமும், நாணயமும் இல்லாமல் இருப்பதோடு சர்வம் சூழ்ச்சிமயமாய் கூலிக்கு கூப்பாடு போடும் மயமாய் இருப்பதால் ஒரு கூலி போர்ட்டர் கேட்கும் கேள்விக்கும் பதில் சொல்லாத திறமையற்று ஓடி ஒழிந்து கொள்ள வேண்டியவர்களாகி விடுகிறார்கள். இந்த லக்ஷணத்தில் அவரவர்கள் நாக்கை அடக்குவதில்லை – இதற்கு யார் என்ன செய்யமுடியும்.

~subhead

காஞ்சியில் நடந்ததென்ன?

~shend

உதாரணமாக சென்ற வாரம் காஞ்சிக்குப் போன காங்கரஸ்காரர்கள் மகாநாடு நடந்து 4வது நாளையில் அங்கு போய் ஏன் அயோக்கியத்தனமாய் பேச வேண்டும். காஞ்சீபுரம் பொதுமக்கள் 3000 ரூபாய் வசூல் செய்து 4000 ஹிந்தி எதிர்ப்பு மகாநாட்டுக்கு செலவழித்திருக்கிறார்கள். அப்படி இருக்க, அவர்கள் 3000 வசூல் செய்து 2000 ரூபாய் மீத்திக் கொண்டார்கள் என்று முட்டாள்தனமாகவும், அயோக்கியத்தனமாகவும் பேசினதால் ஒருவர் மறுக்க வேண்டியதாயிற்று. அவரும் அவ்வூர் பெரிய மனிதர்களில் முக்கியமானவரே ஒழிய முனிசிபல் கவுன்சிலராயிருந்து லஞ்சம் வாங்கிப் பிழைப்பவரோ அல்லது சட்டசபை மெம்பராயிருந்து சர்வத்தையும் 75-ரூபாய்க்கு தியாகம் பண்ணி எச்சிலைக் கூலியாய் இருப்பவரோ அல்ல. அப்படிப்பட்டவரை பொய்யாக்க வேண்டுமென்று போக்கிரித்தனமாய் பேசினால் கலவரம் உண்டாகாதா என்று கேட்க்கின்றோம். இந்த கோபத்தால் தான் தலைமை வகித்த “தினமணி” ஆசிரியர் ஊருக்கு போனவுடன் கொலை செய்யத் தூண்டி விட்டார் போலும். இந்த விபரம் மெயில் பத்திரிகையில் இருக்கிறது. இதை “தினமணி” கோழைத்தனமாய் மறைத்து விட்டது. இந்த கோழை தான் கொலை செய்யத் தூண்டுகிறது. “அடி உதை கொலை செய்” என்று எப்படிப்பட்டவன் சொன்னாலும், எழுதினாலும் அவர்களை பக்கா கோழைகள் என்று பொது ஜனங்கள் கருதிக் கொள்ள வேண்டியது அவசியமாகும். இது நமது 50 வருஷ அனுபவம். அடிக்கும், உதைக்கும், கொலைக்கும் மற்றவர்களை தூண்டப் பயப்படுபவன் எப்பொழுதும் வீரனாவான் என்பதோடு சந்தர்ப்பம் நேர்ந்தால் முதல் அணியிலும் நிற்பான் என்பதையும் அனுபவத்தில் கூறுகிறோம். நிற்க,

~subhead

கும்பகோணம் யோக்கியதை

~shend

கும்பகோணம் கலவரத்தைப் பற்றியும் சிறிது கூறுகிறோம். இது விஷயமாய் வாசகர்கள் “ஹிந்து” பத்திரிகையைப் பார்க்க விரும்புகிறோம். அதாவது, 11 தேதி மெயிலில் கும்பகோணம் காங்கரஸ் கமிட்டி காரியதரிசி ஒரு சுயமரியாதைக்காரன் அடிபடுவதைத் தடுப்பதற்காக ஓடினார். பொது ஜனங்கள் அந்தக் காரியதரிசியை சந்தேகித்து அடித்துவிட்டார்கள் என்று எழுதி இருக்கிறது. எனவே சுயமரியாதைக்காரர்களை யார் அடிக்க முயற்சித்து இருக்க முடியும்? பொது ஜனங்கள் காங்கரஸ் காரியதரிசியை யாராய் நினைத்து அடித்து இருக்க முடியும்? என்பதை கவனித்தால் காங்கரஸ்காரர்களால் பலாத்காரம் நடந்திருக்கிறதா சுயமரியாதைக்காரர்களால் நடந்திருக்கிறதா என்பது விளங்கும்.

~subhead

“தினமணி” புளுகு

~shend

மற்றும் கும்பகோணம் கலவரத்தைப் பற்றி தினமணி 8-ந் தேதி பத்திரிகையில் “சுயமரியாதை காலிகளும் இன்னும் பலரும் காங்கரஸ்காரர் களையும் பொது ஜனங்களையும் உதைக்க ஆரம்பித்துவிட்டார்கள்” என்று எழுதி இருக்கிறது. “இன்னும் பலர்” என்றால் அவர்கள் யாராய் இருக்க முடியும்? “பொது ஜனங்களையும் உதைக்க ஆரம்பித்தார்கள்” என்றால் பொது ஜனங்களை உதைக்கக் காரணம் என்ன? என்பவைகளைக் கவனித்தால் காங்கரஸ்காரர்கள் யோக்கியதையும் அங்கு நடந்த காரியமும் அவர்கள் மீது பொது ஜனங்களுக்கு உள்ள எண்ணமும் நன்றாய் விளங்கும். வாஸ்தவம் சொல்ல வேண்டுமானால் அக்கலவரம் காங்கரஸ்காரருக்கும், சமதர்மக்காரருக்கும் ஏற்பட்ட கலவரமாகும். இதை உள்ளபடி வெளியிட தினமணிக்கு யோக்கியதையும், தைரியமும், நாணயமும் இல்லாததால் இம்மாதிரி அயோக்கியத்தனமாக மொட்டத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுகிறது.

நிற்க தூத்துக்குடி கலவரத்தைப்பற்றி சிறிது கவனிப்போம்.

~subhead

தூத்துக்குடி காங்கரஸ் யோக்கியதை

~shend

தூத்துக்குடியில் காங்கரசுக்காரர்களுக்குள் இரண்டுக் கட்சி. அது காங்கரஸ் கமிட்டி தலைவர் தோழர் வீரவாகுப்பிள்ளைக்கும், காங்கரஸ் கமிட்டி காரியதரிசி தோழர் கந்தசாமி பிள்ளைக்கும் ஏற்பட்ட கட்சியாகும். முன்னவர் சமதர்மக்காரர், பின்னவர் வருணாச்சிரமதர்மி. இருவருக்கும் பலமான கட்சி பிரதிக்கட்சியும் பின்பற்றுபவர்களும் கொஞ்ச காலமாகவே இருந்து வருகிறது. பத்திரிகையில் எழுதி இருக்கிறார். அதைக் கண்டித்து மற்றொரு கட்சியார் கூட்டம் போட்டு மறுக்கட்சி மீது அதாவது காங்கரஸ் காரியதரிசி மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்திருக்கிறார்கள். இந்த கலவரத்தை தினமணியே ஒப்புக்கொண்டு 10-தேதி பத்திரிகையில் மேலால் எழுதிவிட்டு கீழாக வம்பில் காரணகாரியமில்லாமல் சு.ம. காரர்களை இழுத்து போட்டு “அவர்கள் இந்த பிளவை உபயோகித்துக் கொண்டு கேள்வி கேட்டார்கள்” என்று எழுதி இருப்பதுடன் இந்த காலித்தனத்துக்கு பயந்து ” காரியதரிசியும் மற்றொருவரும் ஓடி ஒழிந்து கொண்டார்கள்” என்று எழுதியிருக்கிறது. மற்றும் காலிகள் விளக்கை உடைத்ததாகவும் சு.ம. பேர்வழிகள் கொடியைப் பிடித்து கிழித்துவிட்டதாகவும் எழுதி இருக்கிறது. ஆனால் அதே தேதி அதே சேதிக்குக் கீழாக “நமது நிருபர்” என்னும் பேரால் தூத்துக்குடி காங்கரஸ் கமிட்டி காரியதரிசி கந்தசாமிப்பிள்ளை அவர்கள் “அந்த (குறிப்பிட்ட) கலகத்துக்கு காரணமானவர்கள் காங்கரஸ் கமிட்டித் தலைவர்களான தோழர்கள் வி.எஸ். சுப்பய்யர், ஜெ.பி.ரோட்ரிக்ஸ், யம்.சி.வீரவாகு பிள்ளை மற்றும் 26 காங்கரஸ் தொண்டர்கள்” என்று போலீசில் பிராது கொடுத்திருப்பதாய் தினமணி நிருபரே அனுப்பிய சேதி பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. போலீசில் சு.ம. காரர்கள் பெயர் குறிப்பிடவே இல்லை. ஆகவே தினமணி ஆசிரியர் புத்தி கோளாறாக ஆகிவிட்டதென்று தான் நினைக்க வேண்டி இருக்கிறது. பார்ப்பனர் வலையில் சிக்கி பார்ப்பன கூலியான அவர் இனி கூடிய சிக்கிரத்தில் பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்குப் போகவேண்டிய நிலையடைந்துவிட்டார் என்பதல்லாமல் மற்றபடி அவரை ஒரு அறிவுள்ள, சுதந்திரமுள்ள மனிதனாக கருதி விவகரிப்பது மெனக்கெட்ட வேலை என்றே தோன்றுகிறது.

குடி அரசு – தலையங்கம் – 13.03.1938

You may also like...