நமது லòயம்

 

சுயமரியாதை இயக்கம் இதுவரை சமூக முன்னேற்ற இயக்கமாக இருந்ததுமாறி இப்போது பொருளாதாரத்திலும், அரசியலிலும் பிரவேசித்துவிட்டதாகவும் இதனால் இயக்கம் ஆதரவற்று அரசாங்க அடக்குமுறைக்கு ஆளாகி நசித்துப்போகுமென்றும் சொல்லுகிறார்கள். சிலர் தாங்கள் அரசாங்க ஆக்கினைக்கு தயாராயில்லை என்றும் ஆதலால் இதில் கலந்துகொள்ள முடியாது என்றும் சொல்லுகிறார்கள்.

இக்கூட்டத்தார் எல்லோருக்குள்ளும் மகிழ்ச்சி யடையத்தக்க ஒரு விஷயமிருக்கிறது. அதென்னவென்றால் அரசாங்க அடக்குமுறைக்கு ஆளாக முடியாது என்கின்ற காரணம் மாத்திரமே அல்லாமல், இக்கொள்கை விஷயத்தில் ஆட்சேபனை யிருப்பதாகக் காணப்படவில்லை என்பதேயாகும். இது எப்படியிருந்தபோதிலும் விஷயத்தை சற்று கவனித்துப் பார்ப்போம்.

~subhead

சமூக முன்னேற்றம்

~shend

சமூக முன்னேற்றமென்றால் என்ன? எந்த சமூக முன்னேற்றம்? என்பதை நாம் கவனிக்க வேண்டும். மனித சமூக முன்னேற்றம் என்பது மனிதர்கள் குளிப்பது, மதக்குறி இடுவது, புராணங்கள் படிப்பது, கோவில்களுக்கு யாத்திரை உற்சவம் செய்வது முதலாகிய இவைகள் தானா? அல்லது ஜாதி வித்தியாசம் ஒழிப்பது, சத்திரம் சாவடி கட்டுவது, பள்ளிக் கூடம் வைப்பது முதலியவைகள் தானா? இந்த மாதிரியான சமூக முன்னேற்றம் பல ஆயிர வருஷகாலமாக நடந்து வந்திருப்பதை சரித்திர வாயிலாக அறிகிறோம். இதற்காக ஆயிரக்கணக்கான மகாத்மாக்களும், முனிவர்களும், ரிஷிகளும், கடவுள் தூதர்களும் அவதாரங்களும், கடவுள் அம்சங்களும் தோன்றி ஞானோபதேசம் செய்து வண்டி வண்டியான ஆதாரங்கள் ஏற்பட்டிருப்பதும் அவைகள் கடவுள்கள் பேரால் வெளியானவை என்று சொல்லி அதில் கண்டபடி கட்டுப்பாடுகள் செய்து வைத்திருப்பதும் நாம் பார்க்கிறோம். இவற்றிற்காக உலகத்தையும், உலக மக்களையும், தேசமென்றும், மதம் என்றும், ஜாதி என்றும், வகுப்பு என்றும் பிரித்து இவற்றின் பேரால் பல ஸ்தாபனங்களையும் ஏற்படுத்தி 10-லட்சக்கணக்கான மக்கள் மதாச்சாரியார், உபதேசியார், மடாதிபதிகள் முதலிய பெயர்களால் வாழ்ந்து வருவதையும் பார்க்கின்றோம். இவ்வளவெல்லாம் இருந்தும் மனித சமூக முன்னேற்றத்திற்கு என்ன பலன் ஏற்பட்டது என்று சொல்லுங்கள் பார்க்கலாம்.

சுமார் 2000, 3000 வருஷத்திற்கு முந்திய மக்கள் சமூக நிலையை எடுத்துக்கொண்டால் அதில் இன்று என்ன மாறுதல், என்ன முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது? அந்தக்காலத்தில் இருந்த கொடுமை, ஏழ்மை, உழைப்பு, கஷ்டம், மனக்கவலை, அடிமைத்தனம் முதலிய எல்லாம் இன்றும் இருந்துதான் வருகின்றது. ராமர் காலத்தில், அரிச்சந்திரன் காலத்தில் இருந்து வந்த மேல்ஜாதி, கீழ்ஜாதி, பெண்ணடிமை, பிரபு – கூலிக்காரன், பிராணன் – சண்டாளன், அடிமை – எஜமான் முதலிய கொடுமைகள் இன்றும் இருந்துதான் வருகின்றன. பெண்களுக்கு உரை போட்டு தம்பூர் போலும், தலையணை போலும் வைத்திருக்கும் கொடுமை இன்று இல்லையா? பெண்களை விற்கும் கொடுமையும், அடிமைகொள்ளும் கொடுமையும் இன்று இல்லையா? ஆணுக்கு ஒரு நீதி பெண்ணுக்கு ஒரு நீதி இன்று இல்லையா? மக்களைத் தெருவில் நடக்கவிடாமை, தொட முடியாமை, கண்ணால் பார்க்க முடியாமை ஆகிய மூர்க்க குணங்கள் இன்று இல்லையா? யாதொரு பாடும் படாமல் ஒரு நாளைக்கு நாலு வேளை, ஆறுவேளை சாப்பிடுகின்ற மக்களும், ஒரு நாளைக்கு 10-மணி நேரம் 12-மணி நேரம் பாடுபட்டும் அவர்கள் பெண்டுபிள்ளைகள் இரண்டுநாளைக்கு ஒரு தரங்கூட சமயல் செய்ய யோக்கிதை இல்லாத மக்களும் இல்லையா? இவைகள் எல்லாம் மதக் கட்டளை, கடவுள் சித்தம், அரசாங்க விதி என்பவைகளின் மீதே நடந்து வருகின்றனவா இல்லையா? இவைகளை யோசித்துப்பாருங்கள்.

மனித சமூக முன்னேற்றம் என்பதில் நாணையமாயும், யோக்கியமாயும் பாடுபடுவதாய் இருந்தால் மேற்கண்ட கொடுமைகளை யெல்லாம் ஒழிக்கவேண்டுமா வேண்டாமா என்று யோசித்துப் பாருங்கள். மனித சமூகம் என்றால் இதில் எந்த தேசத்தானாவது, எந்த மதத்தானாவது, எந்த சமயத்தானாவது, எந்த ஜாதியானாவது விலக்கப்பட முடியுமா என்று யோசித்துப் பாருங்கள். எல்லா தேசத்திலும், எல்லா மதத்திலும், எல்லா ஜாதியிலும், எல்லா அரசாங்கத்திலும் இந்தக் கொடுமைகளைப் பார்க்கின்றோம். சிலர் “எங்கள் மதத்தில் தீண்டாமை, பார்க்காமை முதலியவை இல்லை” என்று சொல்லக்கூடும். தீண்டாமை, பார்க்காமை என்பது ஒரு மதத்தையே அடிப்படையாகக் கொண்டதல்ல என்பதே எனது அபிப்பிராயம். தீண்டாமை என்பது ஒரு கொள்கையை அடிப்படையாகக் கொண்டது. அதென்ன வென்றால் ஒருவன் பாடுபட வேண்டும், ஒருவன் பாடுபடாமல் ஊரார் உழைப்பில் வாழவேண்டும் என்ற கொள்கையை அடிப்படையாகக் கொண்டது.

உதாரணமாக பறையன் என்றால் என்ன? அவன் சதா கஷ்டமான வேலையைச் செய்ய வேண்டியவன் என்பதே. பார்ப்பான் என்றால் என்ன? அவன் சரீரத்தால் வேலைசெய்யக் கூடாதவன் என்பதே. எங்காவது பார்ப்பனன் போர்ட்டர் வேலை, மண்வெட்டி வேலை, வீதி கூட்டும் வேலை, கக்கூஸ் எடுக்கும் வேலை, வண்டி இழுக்கும் வேலை, பியூன் வேலை முதலிய கஷ்டமான வேலை செய்கிறானா? பார்ப்பனப் பெண்களாவது காட்டு வேலை, தோட்ட வேலை, வீட்டுக் கூலி வேலை முதலியவைகள் செய்கின்றார்களா? இதற்காகத் தான் ஜாதி பிரிக்கப் பட்டிருக்கிறது. இந்தக் கொள்கைகள் – அதாவது இந்த மாதிரி ஒரு ஜாதி (பல ஜனங்கள்) கஷ்டப்படுவதும், ஒரு ஜாதி (சில ஜனங்கள்) சுகப்படுவதுமான நிலை எந்த தேசத்தில் எந்த மதத்தில் எந்த ராஜரிகத்தில் இல்லை என்று யோசித்துப் பாருங்கள். இதைச் சீர்படுத்த வேண்டுமானால் எந்தவிதமான சமூக முற்போக்குடன் வேலை செய்வது?

பொருளாதாரத் துறையிலும், அரசியல் துறையிலும் வேலை செய்யாமல் சமூக முற்போக்கு எப்படி ஏற்படும்? ஒரு சமூகத்துக்குப் பொருளாதாரமும் அரசியலும் அவசியமானதா அல்லவா? இந்த இரண்டையும் விட்டுவிட்டு செய்யும் முற்போக்குக்காக நமது சுயமரியாதை இயக்கம் தேவையே இல்லை. சும்மா அலங்காரமாக, வேடிக்கையாக புராண முட்டாள் தனத்தையும், பார்ப்பனச் சூழ்ச்சியையும் பேசிக் காலங் கழிப்பது மாத்திரமே சுயமரியாதை இயக்கம் என்றால் அது அழிந்து போவதே மேலான காரியம் என்று சொல்லுவேன்.

அரசியலைப் பற்றியும், பொருளாதாரக் கொடுமையைப் பற்றியும் பேசுவதே குற்றமான காரியம் என்று சில தோழர்கள் கருதி இருப்பதாகத் தெரிகின்றது. அது வீண் பயங்காளித்தனமேயாகும். இந்த மாதிரி பயங்காளித்தனம் கொண்ட மனிதனால் ஒரு காரியமும் செய்யமுடியாது. அரசியலுக்காகவும், பொருளாதாரத்துக்காகவும், நாம் யாரையும் அடிக்கவோ, குத்தவோ, கொல்லவோ, சுடவோ, வெடிகுண்டு எறியவோ அல்லது எவ்வித பலாத்காரத்தை உபயோகிக்கவோ வேண்டுமென்று நான் சொல்ல வரவில்லை. ஜாதிவித்தியாசம் ஒழியவேண்டும் என்பதற்கு நாம் எத்தனை பேரைக் கொன்றுவிட்டோம்? யாரைச் சுட்டோம்?யார் மீது வெடிகுண்டு போட்டோம்? வெறும் நமது வாய்க்கிளர்ச்சியின் பயனாகவே – நமது அபிப்பிராயத்தை தயவு தாட்சண்யம் இல்லாமல் வெளியிட்டதின் பயனாகவே மனித சமூகத்திற்குள் ஒரு உணர்ச்சியை உண்டாக்கி விடவில்லையா? “சுயராஜ்யம் கிடைத்த பின் தீண்டாமையை விலக்கிக் கொள்ளலாம்” என்று சொன்ன தோழர் காந்தி இரண்டு வருஷத்திற்குள் இன்று “தீண்டாமை ஒழிய 21 நாள் பட்டினி கிடக்கிறேன்” என்று சொல்லவும், “இந்தப் பட்டினி வெகு நாளைக்கு முன்னதாகவே இருந்திருக்க வேண்டும்” என்று சொல்லவும் கூட நாம் செய்து விட்டோமா இல்லையா? என்று யோசித்துப்பாருங்கள். நமது பயமற்ற, தாக்ஷண்ணியமற்ற உண்மைப் பிரசாரத்தால் பார்ப்பன ஆதிக்கம் இந்த 4, 5, வருஷத்தில் எவ்வளவு தூரம் அடக்கப்பட்டது. ஆனால் அப்பொழுதே பணக்கார ஆதிக்கத்தையும் நாம் சரியானபடி கண்டிக்காததால் பணக்கார ஆதிக்கம் தலைதூக்க ஆரம்பித்துவிட்டது. இப்போது அது பார்ப்பன ஆதிக்கத்துக்கு உதவி புரிகின்றது. ஆதலால் பொருளாதாரத் துறையில் இரங்கித் தைரியமாய் தாக்ஷண்ணியமில்லாமல் அக்கொடுமையை வெளியாக்கினால் கண்டிப்பாய் பணக்கார ஆதிக்கத்துக்கு சாவுமணி அடிப்பதோடு பொருளாதாரக் கொடுமையும் சற்றாவது குறையும்.

பொருளாதார உயர்வு தாழ்வைப் பற்றியும், கொடுமையைப் பற்றியும், அது சம்மந்தமான அரசியலமைப்பைப் பற்றியும், நாம் பேசும்போது பயங்காளிகளுக்கும், சுயநலக்காரர்களுக்கும், ரஷியா ஞாபகம் வந்துவிடுகின்றது. இது பைத்தியக்காரத்தனமேயாகும்.

“அன்னிய அரசாங்கம் வேண்டியதில்லை; எங்கள் தேசத்தை எங்களிடம் ஒப்புவித்துவிட்டு வெளிநாட்டார் வெளியாகிவிடவேண்டும்” என்று சொல்லும் தேசியவாதிகளின் அரசியலைவிட நம்முடைய அரசியல் கொடுமையானதுமல்ல; முட்டாள்தனமானதுமல்ல.

~subhead

நாம் என்ன சொல்லுகின்றோம்?

~shend

அன்னியன் என்பதற்காக யாரையும் நாட்டைவிட்டுப் போகும்படி சொல்லுவதில்லை. அன்னியர் ஆட்சி என்பதற்காக எந்த ஆட்சியையும் நாம் அழிக்க வேண்டும் என்று சொல்வதில்லை.

ஆனால் நாம் என்ன சொல்லுகிறோம்? முதலாளி தத்துவ முறைகொண்ட ஆட்சி வேண்டாம், பாடுபடும் மக்கள் அதன் பயனை அடையும்படியான முறைகொண்ட ஆட்சி வேண்டும் என்றுதான் சொல்லுகிறோம். ஏனெனில் உலகத்தில் பாடுபடும் மக்கள், 100-க்கு 90 பேர்கள் இருக்கிறார்கள். சோம்பேறிகள் பாடுபடாமல் ஊரார் உழைப்பில் வாழுகின்றவர்கள் 100-க்கு 10 பேர்கள் தான் இருப்பார்கள். ஆதலால் 100-க்கு 90 பேருக்கு அனுகூலமான ஆட்சி, அவர்களுடைய நலனுக்காக அவர்களாலேயே ஆட்சி புரியக்கூடிய ஆட்சியாக இருக்கவேண்டும் என்கின்றோம். இதனால் என்ன தப்பு? இது ஏன் முடியாத காரியமாக வேண்டும்? இதை ராஜத்துவேஷம் என்றோ, வகுப்புத் துவேஷம் என்றோ சொன்னால் அதற்காக பயந்துவிடுவதா என்று கேட்கிறேன். அப்படியானால் வருவதுதான் வரட்டுமே. என்ன முழுகிப் போய்விடும்? சதா சர்வகாலம் உழைத்து சோம்பேறிகளுக்கும் போட்டுவிட்டு பட்டினியாகவே ஒரு சமூகம் உலகில் உயிர் வாழவேண்டுமானால் அந்த சமூகம் பூண்டற்றுப் போவதில் யாருக்கு என்ன சங்கடம்? சோம்பேரிகள் தானே இதற்காக வருத்தப்படவேண்டும். கசாப்புக் கடைக்காரனுக்காகவே ஆட்டுச் சமூகம் இருக்கின்றது என்றால், அந்த ஆட்டுச் சமூகம் உலகில் அற்றுப் போவது ஆடுகளுக்கு நஷ்டமா என்று யோசித்துப்பாருங்கள்.

உதாரணமாக தஞ்சாவூர் ஜில்லாவை எடுத்துக்கொள்ளுங்கள். காவேரி ஆற்று பாசனம் முழுவதும் அங்குதான் பயன்படுகின்றது. எத்தனை ஆறுகள் ஓடுகின்றன? கொல்லைக்கு போகக்கூட இடமில்லாமல் ஜில்லாவின் பெரும்பாகம் நஞ்சையாக இருக்கிறது. ஜில்லா போர்டு, தாலூகா போர்டு, முனிசிபாலிட்டி எல்லாம் “பொது ஜனங்கள்” கையிலேயே இருக்கிறது. இருந்தும் என்ன லாபம்? சிலர் கொள்ளை அடிக்கிறார்கள், சிலர் 1000 ஏக்கரா, 5000 ஏக்கரா, 10000 ஏக்கரா என்பதாக வைத்துக் கொண்டிருக்கிறார்கள். மனிதர்கள் மாத்திரமல்லாமல் கோயில், மடம் முதலியவைகளுக்கும் இதுபோலவே லட்சக்கணக்கான ஏக்கராவும், செல்வமும் இருக்கிறது.

அங்குள்ள சுவாமிகளுக்கும், மடாதிபதிகளுக்கும் உற்சவம், திருக்கல்யாணம், சோபணம் ஆகியவைகளுக்குக் கணக்கு வழக்கிலடங்காத பொருள் செலவழிக்கப்படுகின்றது. இவ்வளவும் இருந்து பயன் என்ன?

சிங்கப்பூர், பினாங்கு, மலேரியா, மோரிசு பிஜி, கண்டி முதலிய இடங்களில் இருக்கும் கூலிகளில் அதிகமான விகிதாச்சாரம் தஞ்சாவூர் ஜில்லாக்காரர்களாகவே இருந்து வருகிறார்கள். தஞ்சாவூரில் அன்ன சத்திரங்களுக்கும், சமஸ்கிருத காலேஜúகளுக்கும் குறைவில்லை என்றால் இதன் கருத்து என்ன என்று யோசித்துப் பாருங்கள். பாடுபடும் மக்கள் பறையனாய், பள்ளனாய், குடும்பனாய், சாம்பனாய் கஞ்சிக்கு வகையில்லாமல் நாட்டைவிட்டு வேறு நாட்டுக்கு போய் நாயிலும், கழுதையிலும் கடையாய் பாடுபடுவதும், பாடுபடாத சோம்பேறிகள் அன்னச்சத்திரத்தில் சாப்பிட்டு சமஸ்கிருத காலேஜில் வாசிப்பதும், அங்குள்ள மிராசுதாரர்கள் தினம் தினம் நிலாவிருந்தும், சதிரும், பாட்டுக் கச்சேரியும், ஜலக்கிரீடையும் அனுபவிப்பதும், அங்குள்ள மடாதிபதிகள் ராஜபோகம் அனுபவித்துக்கொண்டிருப்பதும் சகிக்கக்கூடிய காரியமா என்று யோசித்துப்பாருங்கள்.

இதுபோலவே இன்னமும் எத்தனை ஜில்லாக்கள், எத்தனை மாகாணங்கள், எத்தனை தேசங்கள் இருந்து வருகின்றன? இன்னும் “நமது சுதேச” ராஜாக்களை எடுத்துக்கொண்டால் அவர்களின் யோக்கியதையை சொல்லவேண்டுமா? அனேக ராஜாக்கள் தங்கள் தேசத்தினுடைய மொத்த வருமானத்தில் 100-75 விகிதம் தேவடியாளுக்கும், குதிரைப் பந்தயத்துக்கும், விருந்துக்கும், மோட்டாருக்கும், வசந்தோற்சவத்திற்கும் பாழாக்குகிறார்கள்.

~subhead

படிப்பு விஷயத்தில்

~shend

நமது நாட்டில் இவ்வளவு கொடுமைக்கும், அக்கிரமங்களுக்கும், அயோக்கியத்தனத்திற்கும் பணம் இருந்தும், படிப்பு விஷயத்தில் 100-க்கு 8 பேர்களே அதுவும் பார்ப்பனர்களும், பணக்காரர்களும் மாத்திரமே படிக்க முடிந்தது என்றால் இந்த ஆட்சியைப் பற்றியோ, அரசாங்கத்தைப் பற்றியோ எப்படிப் பேசாமல் இருப்பது என்று யோசித்துப்பாருங்கள். நாம் உண்மையான மனித சமூகத்திற்குப் பாடுபடுபவர்களாயிருந்தால் மேல்கண்ட அக்கிரமங்களுக்கும், கொடுமைகளுக்கும் காரண பூதங்களா யிருப்பவைகளை அழித்தே ஆகவேண்டும். அது கடவுளானாலும், மதமானாலும், அரசாங்கமானாலும் எல்லாம் ஒழிக்கப்பட வேண்டியதேதான். கடவுள் பக்தர்களும் மத பக்தர்களும் எங்கள் மீது பாய்வதில் பயனில்லை. தங்கள் தங்கள் கடவுள் மீதும், மதத்தின் மீதும் பாய்ந்து அவைகளுக்குப் புத்திவரும்படி செய்யுங்கள். நாங்கள் கடவுளும், மதமும் மேல்கண்ட அயோக்கியத் தனங்களுக்காக சோம்பேறிகளால், சுயநலச் சூட்சிக்காரர்களால், மூடர்களால் கற்பிக்கப்பட்ட தென்றே கருதுகின்றோம். ஆதலால் நாங்கள் அதைப்பற்றி லட்சியம் செய்வதில்லை. இன்றைய அரசியலையும், சோம்பேறிகளுக்கும் பணக்காரர்களுக்கும் காப்பளிக்க ஏற்பட்ட கவசம் என்றே கருதுகிறோம்.

ஆகையால் அவைகளையும் அடியோடு மாற்றி பாடுபடுபவர்களுக்கும் ஏழைகளுக்கும் காப்பளிக்கக்கூடியதான ஒரு ஆட்சியை நமது அரசாங்கத்தாரைக்கொண்டே அமைக்க வேண்டும் என்று கருதுகிறோம்.

இப்படிக் கருதுவதால் ஆபத்து வந்துவிடும் என்று கருதுகிறவர்கள் எங்களையே இந்த ஆபத்துக்குள்ளாக்கிவிட்டு மரியாதையாய் விலகி தப்பித்துக்கொள்ளட்டும். அதைப்பற்றி எங்களுக்குப் பயமில்லை. ஆனால் எங்களுக்கு முட்டுகட்டைப் போடவேண்டாம். உள்ளே இருந்து துரோகம் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளுகிறோம். இவைகளை எல்லாம் பலாத்காரம் அடிதடி, குத்து வெட்டு, ரத்தக்களரி இல்லாமல் அஹிம்சை முறையிலேயே சட்டங்கள் செய்வதின் மூலமே சாதித்துக்கொள்ள தாராளமாய் இடமிருக்கிறது என்று நாங்கள் கருதுகிறோம். எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. இதை ஒப்புக்கொள்ளுகிற எந்த ஸ்தாபனத்துடனும் கலந்து வேலை செய்யத் தயாராய் இருக்கிறோம். நாங்கள் காங்கரசுக்கு எதிரிகள் என்று இந்த ஊரில் சிலர் கருதியிருப்பதாகக் கேள்விப்பட்டோம். இந்தக்கொள்கைகள் காங்கரசுடைய கொள்கைகளாய் இருந்தால் நாங்கள் காங்கரஸ்காரர்கள்தான். வருணாச்சிரமம் இருக்க வேண்டும், ஜாதி இருக்க வேண்டும் ராஜாக்கள் இருக்கவேண்டும், முதலாளிகள் இருக்க வேண்டும், மதம் வேண்டும், வேதம் புராணம் இதிகாசம் இருக்கவேண்டும், இன்றைக்கு இருக்கிறதெல்லாம் இருக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டு இவைகளையெல்லாம் பலப்படுத்த – நிலைக்க வைக்கவேண்டி – “வெள்ளைக்காரன் மாத்திரம் போக வேண்டும்” என்கின்ற காங்கரசோ, சுயராஜ்யமோ, தேசீயமோ, காந்தீயமோ சுயமரியாதை இயக்கத்திற்கு வைரியேயாகும். சுயமரியாதை இயக்கத்தார்களால் அழிக்கப்பட வேண்டியவைகளில் இந்த காங்கரசும், காந்தீயமும் ஒன்றாகும். சுயமரியாதை இயக்கம் தமிழ் நாட்டில் மாத்திரம் இருப்பதாய்க் கருதுகிறீர்கள். அது தவறு. உலகில் எங்கும், எந்த மூலை முடுக்குகளிலும் இருக்கின்றது. இந்தியாவில் மலையாளம், ஆந்திரம், வங்காளம், பம்பாய், பஞ்சாப், ஐக்கிய மாகாணம் முதலிய அனேக மாகாணங்களில் இருக்கிறது. அவைகளைப் பார்க்கும்போது நமது சு.ம. இயக்கம் மிகவும் வேகமற்ற சக்திகுறைவான தன்மையில் இருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். நாம் யாரையும் பார்த்து காப்பி அடிக்கிறவர்கள் அல்ல. நமது தகுதிக்கு நிலைமைக்கு ஏற்ற அளவில் இருக்கிறோம். பலாத்காரத் தன்மையையோ இரகசிய முறையையோ நாம் அடியோடு வெறுக்கிறோம். நமது கொள்கை நியாயமும், நேர்மையும் ஆனதால் நமக்கு பலாத்காரமும், ரகசியமும் வேண்டாம்.

தோழர்களே நாம் தைரியமாயும், நேர்மையாயும், ஒற்றுமையாயும், கவலையாயும் வேலை செய்தோமேயானால் நம் ஆயுளிலேயே நமது இச்சை பூர்த்தியாவதைக் காணலாம்.

பகுத்தறிவு (மா.இ) – கட்டுரை – டிசம்பர் 1938

You may also like...