ஈரோடு தமிழர் பெருங்கூட்டம்
கோவை ஜில்லா போர்டில் காங்கரஸ் ஆதிக்கமும் கட்டுப்பாட்டுப் புரட்டும் வெளியாகிவிட்டது குறித்தும் காங்கரஸ் ஒழுங்கையும் மீறி காங்கரஸ் அபேட்சகர் வெள்ளியங்கிரிக் கவுண்டரையே ஒரு காங்கரஸ் எம்.எல்.ஏ.வான தோழர் வேணுடையாக்கவுண்டர் (சங்கரண்டாம்பாளையம் பட்டக்காரர்) முறியடித்ததை மக்கள் ஆரவாரத்திற்கிடையே எடுத்துக் கூறினார்.
அவர் மேலும் பேசுகையில் முன்னால் பேசிய தலைவர்கள் தம்மை மிகைப்பட புகழ்ந்து கூறியதற்கு தாம் அருகதையுடையவரல்லவென்றும் அவர்கள் தம்மைப் பொதுத் தொண்டில் தீவிரமாக ஈடுபடவே அவ்வாறு உற்சாக மூட்டினர் எனக் கருதுவதாகவும் கூறிவிட்டு சர்.பன்னீர்செல்வமும் மற்ற தலைவர்களும் ஆதிகால முதற்கொண்டு பார்ப்பனரல்லாத மக்களுக்கும் பெரிதும் தமிழர்களுக்கும் செய்த சேவைகளைப் புகழ்ந்துவிட்டு குறிப்பாக சர். பன்னீர்செல்வத்தைப் பாராட்டிப் பேசினார்.
சென்னைச் சம்பவங்கள்
சென்ற 21-11-38-ந் தேதி சென்னையில் நடைபெற்றதாகச் சொல்லப்படும் ஆர்ப்பாட்டங்களைப்பற்றி பெரியார் பிரஸ்தாபித்துத் தொடர்ந்து பேசுகையில் இந்தி எதிர்ப்பியக்கத்தை எவ்வழியிலேனும் – அவ்வழிகள் எவ்வளவு கேவலமாயிருந்த போதிலும் – அவற்றின் மூலம் ஒழித்துவிடவேண்டுமென்று கங்கணம் பூண்ட ஒரு கோஷ்டியார் கட்டுப்பாடாக வெறும் புரளிகளைக் கிளப்பி விட்டு பயங்கர நிலைமை ஏற்பட்டு விட்டதாக பயங்காட்டி தமது சார்பான காங்கரஸ் சர்க்காருக்கு இந்தி எதிர்ப்பியக்கத்தை அடக்க வழி தேடிக்கொடுக்கவே இவ்வளவு பிரமாத பொய் விளம்பரம் செய்கிறார்கள் என்றும் தாம் இவ்வண்ணம் புரளிகள் உண்டாகும் என்பதையும் முன்னாகவே அறிந்திருப்பதாகவும் எவ்வித உண்மையான இயக்கத்திற்கும் அதன் எதிரிகளால் இது போன்ற இடையூறுகள் ஏற்படுவது சகஜமென்றும், உண்மையிலேயே அச்சம்பவங்கள் சென்னையில் நடந்திருக்குமானால் தாம் வெட்கமடைவதுடன் அவ்வாறு ஆர்ப்பாட்டம் செய்தவர்களுக்காக மன்னிப்புக் கேட்கவும் தயார் என்றும் ஆனால் அது பெரிதும் கட்டுக்கதை என்றும் ஆதாரங்களோடு கூறினார். இச்சம்பவத்தைப் பற்றி ஜனவானி பத்திரிகையின் செய்தியையும் தோழர் பாசுதேவ் அறிக்கையையும் குறிப்பிட்டுக் காட்டி அப்புரளிகள் எவ்வளவு அபாண்டமானது என்பதையும் விளக்கினார்.
முடிவாக இந்தி எதிர்ப்பு இயக்கத்தை இந்தி ஒழியும்வரை தொடர்ந்து நடத்தி இடையறா பாடுபடவும் அதனால் எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் ஏற்கவும் தமிழர்களை வேண்டிக்கொண்டார்.
குறிப்பு: 22.11.1938 ஆம் நாள் ஈரோடு தியாகராய கட்டடத்தில் நடைபெற்ற தமிழர் கூட்டத்தில் ஆற்றிய உரை.
குடி அரசு – சொற்பொழிவு – 04.12.1938