இந்தியை இன்று எதிர்க்கவில்லை 12 வருடங்களுக்கு முன்பிருந்தே எதிர்க்கிறோம்
சுயமரியாதை இயக்கம் ஆரம்பித்த அதாவது 1923-ம் வருடத்திலிருந்தே இந்தியைக் கண்டித்து வந்திருக்கிறது. அந்த இயக்கத்தின் சார்பில் கூடுகிற ஒவ்வொரு மகாநாடுகளிலும் இந்தியைக் கண்டித்து தீர்மானங்கள் நிறைவேற்றியும் பட்டிருக்கின்றன.
உதாரணமாக 1931 வருடம் ஜúன் மாதம் 7-ந் தேதி கூடிய நன்னிலம் தாலூகா சுயமரியாதை மகாநாட்டில் இந்தியை கண்டித்து ஒரு தீர்மானம் நிறைவேற்றப் பட்டிருக்கிறது.
அந்த தீர்மானத்தை தோழர் சாமி சிதம்பரனார் அவர்கள் பிரேரேபித்தார். தோழர் கு. ராமநாதன் (இப்பொழுது விளம்பர மந்திரியாக இருப்பவர்) அவர்கள் ஆமோதித்து அதனால் ஏற்படும் தீமைகளைப் பற்றிப்பேசி இருக்கிறார்.
அந்தத் தீர்மானத்தின் பேரில் 1931-ம் வருடம் ஜüன் மாதம் 14-ந் தேதி “குடி அரசு” பத்திரிகை ஒரு நீண்ட தலையங்கம் எழுதி இருக்கிறது. அந்தத் தலையங்கத்தில் பெரிதும், அந்தத் தீர்மானத்தை பிரேரேபித்தவரும் ஆமோதித்தவரும் பேசிய பேச்சுக்களையே குறிப்பிடப்பட்டிருக்கிறது. அது பின்னார் பிரசுரிக்கப்படும்.
அந்த மகாநாட்டில் நிறைவேறிய தீர்மானம் வருமாறு:-
“பழைய புராணக் கதைகளைச் சொல்லுவதைத் தவிர வேறு அறிவை வளர்க்கும் விஷயங்களுக்குதவாத சமஸ்கிருதம், ஹிந்தி முதலிய பாஷைகளை நமது மக்கள் படிக்கும்படி செய்வது பார்ப்பனீயத்திற்கு மறைமுகமாக ஆக்கந் தேடுவதாகுமென்று இம்மகாநாடு கருதுவதோடு, தற்கால விஞ்ஞான அறிவை நமது மக்களிடை பரப்பவும், நவீன தொழில் முறைகளை நமது நாட்டில் ஏற்படுத்தவும், மற்ற தேசங்களில் எழும்பியிருக்கும் சீர்திருத்த உணர்ச்சியை நமது மக்களிடை தோற்றுவிக்கவும், உலக பாஷையாக வழங்கிவரும் இங்கிலீஷ் பாஷையையே நமது வாலிபர்கள் கற்க வேண்டுமென்று இம்மகாநாடு தீர்மானிக்கிறது.”
பிரேரேபித்தவர்,
சாமி சிதம்பரனார்.
ஆமோதித்தவர்,
எஸ். இராமநாதன்.
குடி அரசு – கட்டுரை – 11.09.1938