கங்கை கொண்ட (காங்கரஸ்) சாக்கடை
காங்கரசானது கங்கைக்குச் சமமாக ஒப்பிடப்படுவதுண்டு. கங்கைப் புனித நதியெனப் பெயர் பெறும். காங்கரசும் தேசீயம், சுயராஜ்யம் ஆகிய விஷயங்களில் நாட்டினுக்கும் மக்களுக்கும் அளப்பறிய நன்மை செய்யும் ஸ்தாபனமாகக் கருதப்படுகிறதன் காரணமாகக் கங்கைக்கு உவமானங் கூறப்படுகிறது. கங்கையிலும் சாக்கடைகள் கலக்கின்றன. காங்கரஸ், கங்கையிலும் சாக்கடைகள் கலக்கின்றன, கங்கையில் கலக்கும் சாக்கடைக் கங்கையுடன் ஐக்யமாகிப் புனிதமாகி விடுகிறது. காங்கரஸ் கங்கையில் கலக்கும் சாக்கடைகளோ தாம் புனிதமடைதல் ஒரு புறமிருக்கக் காங்கரஸ் கங்கையையே அசுத்தப்படுத்திவிட்டன.
தேசீயம் வேண்டும் சபையில், சுயராஜ்யம் வேண்டும் சபையில், நாட்டினடிமையொழிய விரும்பும் சபையில், நாட்டின் க்ஷேமாபிவிர்த்தியை கோரும் சபையில் இன்று நர்த்தனமிடுபவை எவை எனக் கூர்ந்து நோக்கின் உண்மை வெளியாகும். காங்கரஸ் மகாசபையில் கூடியிருப்போர் அத்தனைபேரும், ஏன் 30 லக்ஷ மக்களும் சுயராஜ்யத் தாகங் கொண்டுதான், தேசீயப் பற்றுக் கொண்டுதான் சேர்ந்து இருக்கின்றனரா என்பதனைச் சிறிது ஆராய்ந்தால் உண்மை புலனாகும்.
காங்கரஸ் மகாசபையில் இன்று வகுப்பு வாதிகள், பதவி வேட்டைக்காரர்கள், சர்வாதிகாரிகள், சுயநலமிகள், பழமை விரும்பிகள், பணக்காரர்கள், மனுவாட்சி மக்கள், அடிமை வளர்ப்பவர்கள், அறிவு வளர்ச்சிக்கு அணைகோலுபவர்கள், வருணாச்சிரப் பித்துக்கொண்ட வைதீகப் பிடுங்கல்கள், ஜாதிசமயப் பூசல்கொண்ட ஜடங்கள், தாந்தோன்றிகளாகியவர்களே மலிந்து கிடக்கின்றனர். ஆதியில் காங்கரஸ் ஆரம்பிக்கப்பட்ட நோக்குக்கும் இன்று காங்கரஸ் அடைந்த நிலைமைக்கும் அல்லது இன்றைய காங்கரஸ் நோக்குக்கும் ஏணி வைத்துப் பார்க்கவேண்டியிருக்கின்றது.
காலபேத வர்த்தமானங்களுக்கொப்ப, உலக நடைமுறைகளுக்கொப்ப நாட்டினைத் திருத்தியமைக்க முற்படுங் கட்சிகளுக்கு முரண்பட்டவர்களும், அக்கட்சிகளை அடக்குவதற்கெனவே சர்வாதிகாரத்துவஞ் செய்பவர்களும்; மக்கள் எவ்வளவுக் கெவ்வளவு மடமையாக இருக்கின்றனரோ அவ்வளவுக்கவ்வளவு தமது மதிப்புப் பெருகுகின்றதென எண்ணுவோரும், வகுப்புவாதம் வளர்ந்தால் வயிறு கழுவ வகையறியாதவர்களும், பாட்டாளி மக்கள், உழைத்து உழைத்து ஓய்ந்த மக்கள் உறுப்பசிக்கானப் பங்கு கேட்டால் கொடாது அவர்களை யடக்கியாளுதற்கெனப் பணக்காரக் கும்பல்களும் காங்கரசில் நுழைந்து கொண்டு இன்று அதை நடத்த முற்பட்டிருக்கின்றன.
இவர்கள் வகுப்பதுதான் வழி. வோட்டு சேகரிக்கும் காலத்துத் தாங்கள் ஏழை மக்களுக்காகத்தான் பாடுபடப் போகிறோம். பணக்கார ஆட்சியைப் பாதாளத்திலாழ்த்தப் போகிறோம் என்பது. ஓட்டுப் பெற்றுச் சென்ற பின் நாங்கள் என்றும் சமதருமக் கட்சியிலிருந்ததில்லையே. இன்று பணக்கார வர்க்கத்தினிடம்தான் அகப்பட்டுத் தவிக்க நேரிட்டது. ஆகவே அவர்கள் இழுத்த வழிதான் செல்லவேண்டும் என்கின்றனர். கட்டாயக் கல்வி வேண்டுமென்றுக் கரைந்தவர்கள் கட்டாயக் கல்விக்குப் பணம் ஒதுக்க மறுதளித்ததுடன் கவைக்குதவாக் கல்வித்திட்டம் (வார்தா) ஒன்றைக் கையில் வைத்துக்கொண்டு அழகு பார்த்துக் கொண்டிருக்கின்றனர். எந்தப் போலீசையும் ஸி.ஐ.டி.யையும் எடுக்கவேண்டும் என்று காங்கரஸ்காரர்கள் விழைந்தார்களோ அவர்களே இன்று மேற்படி இலாக்காக்களினது சேவைகளைப் பெரிதும் புகழவும் மானியம் ஒதுக்க மகாத்மியம் பாட வேண்டியதாகிவிட்டது. ஹிந்தியென்னும் எவரும் வேண்டாப் பாஷையொன்று இந்தியா முழுவதுக்கும் ஏற்புடைத்தானப் பாஷை என எப்படி எப்படியோ விளக்கிக்கூற முற்படுகின்றனர். கல்வி விஷயத்தில் கட்டுப்பாடு ஏற்படுத்தினால் தங்கள் மக்கள் தாராளமாய் உத்தியோகம் வகிக்கலாம் என்பதே இப்பாஷையைப் புகுத்துவதின் நோக்கம். இதைக் காட்டிக்கொள்ள மறுத்த ஏதேதோ காரணங்களைக் கூறுகின்றனர். ஹிந்தியைக் கற்ற வாலிபர்கள் இம்மாகாணத்தில் ஹிந்தியில் நாலைந்து வார்த்தைகள் கூட பேசச் சக்தியற்றவர்களா யிருக்கின்றனர் என்றும், எந்தப் பாஷையைக் கற்றிருந்தபோதிலும் வடநாட்டினரைத் தென்னாட்டினர் வாயார வாழ்த்தி வரவேற்றுபசரிப்பதே போல் தென்னாட்டினரை வடநாட்டினர் உபசரிப்பதில்லை. அதற்குப் பதிலாகத் தென்னாட்டினரைச் சந்தேகக் கண்கொண்டுதான் பார்க்கின்றனர். இந்நிலையில் ஹிந்தியைப் படித்து உத்தியோகம் பெறுவதென்பதெங்ஙனம்? தென்னாட்டினர் ஹிந்தி பயின்று வடநாட்டில் பேசுவதாயினும் மிக்க சுலபமாக இருக்கின்றதாவெனின் அஃதுமில்லை. குஜராத் சென்றால் குஜராத்தியும், வங்காளஞ் சென்றால் வங்காள பாஷையும், பஞ்சாப் சென்றால் பஞ்சாபியும், உருதுவும் தேவையாக இருக்கின்றதால் ஹிந்திப் பயின்ற ஒருவன் இங்கிலீஷ் என்பதே யறியாதிருப்பின் என்ன கதியையடைவான் என்பதனை ஹிந்திக்கு வியாக்கியானங் கூறுவோர் சிந்திக்கட்டும். தானளித்த வாக்குறுதியை நிறைவேற்றவோ, தனது வகுப்பினர் குற்றச் சலுகையளிக்கவோ, தனது வகுப்பினர் உயர்வுற்று விளங்கவோ ஒரு பாஷையை பல பாஷாபிமானங் கொண்ட மக்களிடம் அவர்களனுமதி பெராமலே தமது அதிகார வெறியில் புகுத்தியே தீருவேனென்று பேசுவோர் இன்றைய காங்கரஸை நடத்துபவராயின் எல்லாருடைய கலைகளுக்கும், பாஷைகளுக்கும் பாதுகாப்பளிக்கப்படும் என்னும் அன்றையக் காங்கரஸின் புனிதக் கொள்கையாண்டு சென்றது. ஓர் அந்நிய பாஷை ஓர் தாய்பாஷை வழங்கப்படும் நாட்டில் கட்டாயமாகவோ, இஷ்டமாகவோ புகுத்தப்பட்டால் அந்நாட்டுத் தாய்க் கல்வியழிவுறும் என்ற அற்றை நாள் கூக்குரல் யாண்டுசென்றது? தங்கள் நாட்டின் மதத்தை விஞ்ஞான ரீதியாய் பதில் சொல்வதர்க்கேற்ப செய்து வருவதாய் மேனாட்டுப் பெரியார் ஒருவர் இந்திய சுற்றுப்பிரயாணக் காலத்து சமீபத்தில் கூறிச் சென்றார். இந்திய நாட்டு மதம் காலநிலைச் சொத்து அழிவுறுவதாயிருந்தாலும் அழிவுருதுத் தடைசெய்யக் கராச்சித் திட்டத்தின் காப்பாற்றுதலும் இருக்கின்றது. இந்திய மதங்களேயன்றி இந்தியாவை இயக்குஞ் சட்டங்களும், விஞ்ஞான ரீதியாய் பதிலளிக்கச் சக்தியற்றுப் புராண ரீதிக்குப் புகலிடமாக்கக் குல்லூகப் பட்டர்கள் குவிந்திருக்கும் குகைக் காங்கரஸே.
ஆகவே காங்கரசானது இன்னுஞ் சிலரது கைவசத்திலகப்பட்டு உழலுகிறது. காங்கரசின் புனிதக் கொள்கை ஆரம்ப லòயம் மேற் கூறியவர்களது சேர்க்கையினால் ஆட்டங்கொடுத்துவிட்டது. எவன் ஒருவன் சூது மார்க்கமாய் ஒரு சமூகத்தையோ, ஒரு நாட்டின் மக்களையோ மெளடிகத்திலாழ்த்தி மதிப்புப் பெற விரும்புகிறானோ அவனும், எவன் ஒருவன் மந்திரோச்சடனம்போல் மகாத்மா, பாரத மாதா, வந்தேமாதரமாகியவற்றைச் சொல்லி மக்களை மயக்கி அதன் பேரில் தனது வாழ்க்கையந்தஸ்தை நிலைக்கச் செய்து கொள்ளுகிறானோ அவனும் அவன் போன்றவர்களுமே இன்று காங்கரசால் போற்றப் படுகின்றனர். உண்மையில் நாட்டின் உயர்வில், நாட்டின் விடுதலையில், மக்களடிமைப் போக்கில், நாட்டின் க்ஷேமாபிவிர்த்தியில் கருத்துக்கொண்டவன் ஒருவனையும் இன்றையக் காங்கரசில் காணுதல் அரிது. பதவி வெறுத்த காங்கரசை பதவி மோகத்துக்குள்படுத்திவிட்டனர். பட்டந்துறந்த காங்கரசை பட்டமளிக்கவும், பட்டம் பெறவுஞ் செய்துவிட்டனர். வகுப்பு வாதத்தை வெறுத்த சபையை உண்மை வகுப்புவாதச் சபையாக்கி விட்டனர். ஏழ்மைக்கிரங்க வேண்டிய சபையை ஏழையை ஏய்க்குஞ் சபையாகிவிட்டது. சுறுங்கக் கூறின் இன்றைய காங்கரஸ் நாட்டின் நல்லறிவியக்கங்களை நசுக்கும் நாசக்காரக் கும்பல்கள் சேர்ந்ததோர் நாகரிகச் சபை என்றுதான் சொல்ல வேண்டும். இந்தக் கும்பல்கள் கூண்டோடு ஒழியும்வரை காங்கரஸ் கங்கையை சாக்கடைக் கொண்டு விட்டதாகத்தான் கொள்ளப்படும்.
குடி அரசு – கட்டுரை – 10.04.1938