காங்கரஸ் கொடி  தேசீயக்கொடி அல்ல

காங்கரஸ்காரர் மெஜாரட்டி பெற்று பதவியேற்றதும் சென்னைக் கோட்டையில் தேசீயக்கொடி யேற்றுவதாக பாமர மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை ஓரளவிலாவது நிறைவேற்றி வைத்துச் சமாளித்து விடவேண்டுமென்ற நோக்கத்தினால் சென்னை முதன் மந்திரி கனம் ராஜகோபாலாச்சாரியார், விருப்பமுடைய ஸ்தல ஸ்தாபனங்கள் தேசீயக்கொடியை (காங்கரஸ் கொடியை)த் தமது கட்டிடங்களில் விசேஷ காலங்களில் பறக்கவிடலாம் என ஒரு அறிக்கை தயார் செய்து சென்னை கவர்னர் பிரபுவின் ஆசீர்வாதம் பெறச் சென்றதாகவும் காங்கரஸ் கொடியை தேசீயக் கொடியென ஒப்புக்கொள்ள முடியாதென்று கவர்னர் கூறியதாயும் அப்பால் காங்கரஸ் மூவர்ணக் கொடியே என கனம் ஆச்சாரியார் திருத்தி அறிக்கை வெளியிட்டதாகவும் தெரியவருகிறது. எனினும் காங்கரஸ் சர்க்கார் வெளியிட்ட அறிக்கையில் காங்கரஸ் மூவர்ணக் கொடி எனப் பிரத்தியேகம் குறிப்பிடப்பட்டிருந்தும் காங்கரஸ் மந்திரிகளும் ஏனைய காங்கரஸ்காரரும் காங்கரஸ் பத்திரிகைகளும் காங்கரஸ் கொடியை தேசீயக் கொடியென புரளிசெய்து பொது ஜனங்களை ஏமாற்றும் வழக்கம் நிற்கவில்லை. நீலகிரி ஜில்லா போர்டு கட்டிடத்தில் காங்கரஸ் கொடியைப் பறக்கவிடவேண்டுமென்று ஒரு காங்கரஸ் மெம்பர் தீர்மானம் கொண்டு வந்ததையும் அது பற்றித் தகராறு ஏற்பட்டதையும் கடைசியில் காங்கரஸ் கொடி தேசீயக் கொடியாகுமா என்பது பற்றி சென்னை சர்க்கார் அபிப்பிராயம் அறிய வேண்டுமென்று நீலகிரி ஜில்லா போர்டார் தீர்மானம் செய்து சர்க்கார் அபிப்பிராயம் கேட்டிருந்ததையும் நாம் ஏற்கனவே “விடுதலை”யில் குறிப்பிட்டிருக்கிறோம். வேறு பலரும் இதுபற்றி அபிப்பிராயம் கேட்டிருப்பதினால் சென்னை சர்க்கார் – அதாவது கனம் ஆச்சாரியாரை பிரதம மந்திரியாகக் கொண்ட காங்கரஸ் சர்க்கார் – இப்பொழுது வேறொரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள். அது வேறிடத்து வெளிவருகிறது. காங்கரஸ் கொடி தேசீயக் கொடி அல்லவென்றும் ஸ்தல ஸ்தாபனங்கள் விரும்பினால் ஸ்தல ஸ்தாபனக் கட்டிடங்களில் காங்கரஸ் கொடியைப் பறக்க விடலாமென்றும் எந்தச் சந்தர்ப்பத்திலும் காங்கரஸ் கொடியையும் யூனியன் ஜாக்கு கொடியையும் ஏக காலத்தில் பறக்கவிடக் கூடாதென்றும் தெளிவாக விளக்கப்பட்டிருக்கிறது. இந்த அறிக்கைப்படி யூனியன் ஜாக்கே தேசீயக்கொடி என்றும் சர்க்கார் கட்டிடங்களில் அந்த யூனியன் ஜாக்குக் கொடியைத்தான் பறக்க விடலா மென்றும் காங்கரஸ் கொடி தேசீயக்கொடி ஆகாதென்றும் ஸ்தல ஸ்தாபனங்கள் விரும்பினால் தமது காரியாலயங்களில் விசேஷ காலங்களில் காங்கரஸ் கொடியைப் பறக்க விடலாமென்றும் தெளிவாகிவிட்டது. இனியாவது காங்கரஸ் கொடியை தேசீயக்கொடியென அழைக்கும் பித்தலாட்டம் ஒழியுமா? காங்கரஸ் மந்திரி சபையார் முதலில் வெளியிட்ட அறிக்கையினாலேயே காங்கரஸ் கொடி தேசீயக் கொடியாகாதெனத் தெளிவுபட்டிருந்தும் காங்கரஸ் மந்திரிகள், கூட்டங்களில் பேசும்போது காங்கரஸ் கொடியை தேசீயக்கொடியெனக் கட்டுப்பாடாக விளம்பரம் செய்து வருவது மிகவும் பித்தலாட்டமான தென்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

குடி அரசு – கட்டுரை – 09.01.1938

You may also like...