நமது வேண்டுகோள்
தேச விடுதலைக்காக காங்கரசில் சேர்ந்து உழைத்த அனுபவத்தினால் இந்திய விடுதலைக்கு வெள்ளைக்கார ஆட்சியைவிட பார்ப்பனீயக் கொடுமையே பெரிய தடையாக இருக்கிறதென்றும் காங்கரசில் இருந்து கொண்டு அந்தப் பார்ப்பனீயக் கொடுமையை ஒழிக்க முடியாதென்றும் உணர்ந்த தோழர் ஈ.வெ.ரா. காங்கரசிலிருந்து விலகி சுயமரியாதை இயக்கம் கண்டு அவரது சக்திக்கும் புத்திக்கும் இயன்றபடி உழைத்து வரவே பார்ப்பனீயத்துக்குப் பார்ப்பன மதமும் பார்ப்பனர் சிருஷ்டித்த கடவுள்களும் பெருந் துணையாயிருப்பதினால் பார்ப்பன மதமும் பார்ப்பனர் சிருஷ்டித்த கடவுள்களும் ஒழிந்தால்தான் பார்ப்பனீயம் அழியுமெனக் கண்டு பார்ப்பன மதத்தையும் பார்ப்பனர் சிருஷ்டித்த கடவுள்களையும் தாக்கி வரலானார். அதனால் தென்னாட்டுப் பார்ப்பன சமூகம் முழுதும் அவருக்கு எதிரியாயிற்று. எல்லாத்துறைகளிலும் பார்ப்பனர் ஆதிக்கமே இருந்து வந்ததினால் பலவழியிலும் தோழர் ஈ.வெ.ரா. ஹிம்சிக்கப்பட்டார். டாக்டர் வரதராஜúலு நாயுடு அவர்களை அரசியல் விதவையாக்கி மூலையில் உட்கார வைத்துவிட்டது போல்-தோழர் திரு.வி.கலியாணசுந்தர முதலியார் அவரது தமிழ் உணர்ச்சி முழுமையையும் அடக்கிக் கொண்டு மறைமுகமாகவாவது பார்ப்பனீயத்துக்கு ஆதரவளிக்கும்படி செய்துவிட்டதுபோல் – தோழர் ஈ.வெ.ராமசாமியை அரசியல் சமூக விதவையாக்கவும் அது சாத்தியமில்லையானால் பார்ப்பனீயத்துக்கு புகழ் பாடும்படி செய்யவும் தென்னாட்டு பார்ப்பன உலகம் பெரிதும் முயன்று பார்த்தது.
~subhead
ஈ.வெ.ரா. மீது பழி
~shend
தோழர் ஈ.வெ.ரா.வை நாஸ்திகன் என்றும் தேசத்துரோகியென்றும் பிராமணத் துரோகியென்றும், சர்க்கார் தாசன் என்றும் இகழ்ந்து கூறி அவர் மீது பொது ஜனங்களுக்கு-முக்கியமாக மத நம்பிக்கையுடையவர்களுக்கு வெறுப்பும் துவேஷமும் உண்டாகும்படி செய்து ஓரளவு வெற்றியும் பெற்றது. ஆனால் தோழர் ஈ.வெ.ரா. வெளியுதவியை நம்பாது தமது சுயபலத்தையும் நாணயத்தையும் நேர்மையையுமே முக்கியமாக நம்பியிருந்ததினால் அவரை எவராலும் அசைக்க முடியவில்லை. ஆகவே பெரிய நெருக்கடிக்கிடையில் – விபீஷணர்களான நம்மவர்களின் தொல்லைகளையும் ஒருவாறு தாங்கிக்கொண்டு கருமமே கண்ணாய் உழைத்துவரும் காலையில் ஏழு மாகாணங்களில் காங்கரஸ் ஆட்சி ஆரம்பமாயிற்று. அதிர்ஷ்டவசமாகவோ, துரதிர்ஷ்டமாகவோ சென்னை மாகாணத்துக்கு தோழர் ஈ.வெ.ரா.வின் பழைய நண்பரான தோழர் ராஜகோபாலாச்சாரியார் முதன் மந்திரியானார். “பாம்பறியும் பாம்பின் கால்” என்றபடி, தோழர் ஆச்சாரியாருடன் வெகுநாள் பழகிய தோழர் ஈ.வெ.ரா.வுக்கு ஆச்சாரியாரின் தனிக்குணம் நன்கு தெரியுமாகையினால் அவரது ஆட்சியிலே பார்ப்பனீயத்தை நிலைநாட்டவும் தமிழர்களை ஒடுக்கவும் அவரால் சாத்தியமான காரியங்களையெல்லாம் செய்து விடுவார் என உறுதியாக நம்பி அவரது ஆட்சிப் போக்கை வெகு நுட்பமாக கவனித்துக் கொண்டிருந்தார். ஆச்சாரியாரின் மதுவிலக்குத் திட்டமும் விவசாயிகள் கடன் நிவாரணச் சட்டமும் ஆச்சாரியாரின் அந்தரங்க நோக்கத்தை தோழர் ஈ.வெ.ரா.வுக்கு பளிச்சென்று காட்டிக் கொடுத்தது பார்ப்பனரல்லாதாரை அடி முட்டாளாக்குவதும் பார்ப்பன அடிமைகளாக்குவதுமே ஆச்சாரியாரின் அந்தச் சீர்திருத்தச் சட்டங்களின் அடிப்படையான நோக்கம் என்பதை உணர்ந்த தோழர் ஈ.வெ.ரா. அவ்விரண்டையும் கண்டித்து விடுதலையிலும் குடி அரசிலும் பத்தி பத்தியாய் எழுதத் தொடங்கினார். தென்னாடு முழுவதும் சுற்றுப் பிரயாணம் செய்து நூற்றுக்கணக்கான பொதுக் கூட்டங்களிலும் கண்டித்துப் பேசினார். தமிழ்மக்கள் ஆச்சாரியார் சூழ்ச்சிகளை ஓரளவு உணர்ந்து வரும்போது 125 பள்ளிக் கூடங்களில் இந்தி கட்டாயப் பாடத்தை புகுத்த தோழர் ஆச்சாரியார் ஏற்பாடு செய்தார். வருணாச்சிரமக் கொடுமைகளிலிருந்து தமிழர்களை மீட்பதற்கு சுமார் 1 வியாழ வட்ட காலமாக அரும்பாடுபட்டுவரும் தோழர் ஈ.வெ.ரா. தமிழர்களை மீண்டும் ஆரியத்துக்கு அடிமைப்படுத்த இந்தி கட்டாய பாடத்தின்பேரால் – தேசீயப் பொது மொழியின் பேரால் அடிகோலி வருவதைக் கண்டு தம் முழு சக்தியையும் பிரயோகித்து தோழர் ஆச்சாரியாரை எதிர்ப்பதென முடிவு செய்தார்.
இந்தி கட்டாயப் புரட்டை உணர்ந்தவர் தோழர் ஈ.வெ.ரா. மட்டுமல்ல. சிவமதவாதியான மறைமலையடிகளும், காங்கரஸ்வாதியான தோழர் சோமசுந்தர பாரதியாரும், ஜஸ்டிஸ்வாதியான ஸர்.கெ.வி. ரெட்டி நாயுடு, ஸர்.எம்.கிருஷ்ணன் நாயர், மிதவாதியான தோழர் டி.ஆர். வெங்கட்ராம சாஸ்திரியார், வர்ணாச்சிரம தர்மியான தோழர் சாரநாதய்யங்கார் போன்ற இன்னும் பற்பல தென்னாட்டுத் தலைவர்களும் உணர்ந்து தத்தம் அபிப்பிராயங்களை வெளியிடலாயினர்.
~subhead
இந்தி எதிர்ப்புக் கமிட்டி
~shend
அதன் பயனாக திருச்சியில் தமிழர் மகாநாடு கூட்டப்பட்டதையும் இந்தி எதிர்ப்புக் கமிட்டி ஸ்தாபிக்கப்பட்டதையும் அனைவரும் அறிவர். நாளடைவில் இந்தி எதிர்ப்பு இயக்கம் வலுப்பெற்று வருவதுகண்டு, திகைப்படைந்த தோழர் ஆச்சாரியார் இந்தி எதிர்ப்பு இயக்கத்தைத் தமிழர்கள் எல்லாம் ஆதரிக்கவில்லையென்றும் ஆரிய விரோதியான ஒரு நண்பருடையவும் காங்கரஸ் விரோதியான ஒரு நண்பருடையவும் சூழ்ச்சியே இந்தி எதிர்ப்பு புரளியென்றும் சட்டசபையிலும் பொதுக் கூட்டங்களிலும் பேசத் தொடங்கினார். அதைப் பார்த்து ஆத்திரமடைந்த தமிழர்கள் சிலர் இந்தியை எதிர்ப்பவர்கள் ஆரிய விரோதியும் காங்கரஸ் விரோதியும் அல்லவெனக் காட்ட நேரடியாக தமது எதிர்ப்பை காட்ட முன்வந்தனர். அதன் பயனாக இன்று வரை 310-பேர் சிறை புகுந்திருக் கின்றனர். பலர் வழக்கு விசாரணையிலிருந்து வருகிறது. காங்கரஸ்காரர் வெறுத்த கிரிமினல் திருத்தச் சட்டமும் சென்னை மாகாணத்திலேதான் தாண்டவமாடுகிறது. வடநாட்டு காங்கரஸ் பத்திரிகைகள் எல்லாம் கனம் ஆச்சாரியாரைத் தாக்குகின்றன. தென்னாட்டுக்கு விஜயம் செய்ய இருந்த காங்கரஸ் தலைவர் தோழர் சுபாஷ் சந்திரபோசும் தென்னாட்டில் தலைநீட்ட அஞ்சி தமது பிரயாணத்தை ஒத்திப் போட்டுக்கொண்டே இருக்கிறார். சென்னை மாநகரம் முழுதும் காங்கரஸை எதிர்த்து நிற்கின்றது. இந்தத் தொல்லைகளை எல்லாம் ஒழித்துத் தாம் நிம்மதியாகத் தூங்க வேண்டுமானால் தோழர் ஈ. வெ. ராவை சிறையில் போட்டாக வேண்டுமென்று ஆச்சாரியார் எண்ணி அவரை கைது செய்ய முடிவு செய்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. ஆகவே சிறை புகத் துணிந்து இன்று தோழர் ஈ.வெ.ரா. சென்னைக்குச் சென்றுவிட்டார்.
~subhead
தமிழர்கள் கடமை
~shend
மற்ற விஷயங்க எல்லாம் வேறிடத்து வெளிவரும் அவரது அறிக்கை விரித்துக் கூறும். இந்நிலையில் தமிழர்கள் கடமை என்ன? சுயமரியாதைக்காரர்கள் கடமை என்ன? தோழர் ஈ.வெ.ரா. அறிக்கையை கருத்திருத்திப் படித்துப் பார்ப்பவர்களுக்கெல்லாம் இந்த நெருக்கடியான சமயத்திலே அவர்கள் செய்ய வேண்டியது என்ன என்பது விளங்கா தொழியாது. பார்ப்பனரல்லாத தமிழர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் காங்கரஸ் கொள்கை பிடியாமல் விலகியவர்களுக்கும் காங்கரஸிலிருந்து விரட்டப்பட்டவர்களுக்கும் கருவியாக விடுதலை, குடி அரசு, பகுத்தறிவு ஆகிய மூன்று பத்திரிகைகளுமே இருந்து வருகின்றன. அம்மூன்று பத்திரிகைகளும் தென்னாட்டுக்கு ஆற்றிவரும் தொண்டை நாமே விரித்துக் கூறுவது தற்புகழ்ச்சியாக முடியுமென அஞ்சுகிறோம். தோழர் ஈ.வெ.ராவின் ஊழியத்துக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டவர்களுக்கு அவரது பத்திரிகைகள் தளர்ச்சியடையாமல் காப்பாற்றுவதைவிட நன்றி காட்டும் மார்க்கம் வேறே இல்லை. ஆகவே அவரது பத்திரிகைகளை ஆதரிப்பதுடன் மேற்கொண்டு அவர் அவ்வப்போது வெளியிடும் கட்டளைகளைச் சிரமேற்றாங்கி கடனாற்றவும் தமிழர்கள் சித்தமாக இருக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம்.
குடி அரசு – தலையங்கம் – 11.09.1938