பெரியார் சென்னைப் பிரசங்கம்

 

பெருமை மிக்க தலைவரவர்களே! தாய்மார்களே! தோழர்களே! இன்றைய கூட்டத்தை, நாளை நான் எனது அருமை நண்பர் ஆச்சாரியாரின் விருந்தினராகப் போகப் போகின்றேனெனக் கருதி, என்னை உங்கள் எல்லோருக்கும் காட்டுவிக்க இவ்வளவு அவசரத்தில் கூட்டினார்கள் போலும். நானும் நாளை எனது சீட்டுக்கிழிந்து விடுமென்று கருதினேன். ஆனால், 1-ந் தேதி விசாரணை போட்ட பழைய சம்மன் ரத்தாகி 5-ந்தேதி வாய்தா போட்டு இன்று புதிய சம்மன் என்னிடம் கொடுக்கப்பட்டது. எனவே எனது வழக்கு நாளைக்கல்ல; 5-ந்தேதியாகும். நானும் அதற்குள் ஊருக்குச் சென்று வரவும், 4-ந்தேதி காரைக்குடியில் நடைபெறும் தமிழர் மகாநாட்டிற்குச் சென்று வரவும் ஏற்பாடு செய்துள்ளேன். தலைவரும் காரைக்குடிக்கு வருவார். எனவே மீண்டும் ஒன்றிரண்டு அல்லது மூன்று வருடங்களுக்குச் சென்னையில் இது எனது கடைசிப் பேச்சாக இருக்கலாம். மீண்டும் வருவேன் என்ற தைரியத்தில்தான் செல்லுகின்றேன்.

~subhead

கெமால் செய்த நன்மைகள்

~shend

உலகத்திற்கே-மனித சமூகத்திற்கே வழிகாட்டியாயிருந்த இரண்டு பெரியார்கட்கு இங்கு அனுதாபத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானங்களின் நோக்கம் அவர்களின் பெருமை பேசவல்ல. அவர்களை உதாரண புருஷர்களாகக் கொண்டு நீங்களும் நடக்க வேண்டுமென்பதற்காகவே. அவர்களைப் பற்றியும் அதிகம் கூற வேண்டுவதில்லை. கெமால் பாஷா அவர்கள் ஒரு பெரிய விஷயத்தை வழிகாட்டியாகக் காட்டிச் சென்றார். அதாவது தேச விடுதலை, மக்களின் சமூக சுதந்திரத்தைப் பொறுத்திருக்கின்றது என்பதை நன்றாகக் காட்டிச் சென்றார். அரசியலுடன் மதக் கொள்கைகளை கலக்கக்கூடாது என்றும் மதத்தைவிட மானம் பெரிது எனக் காட்ட வேலை செய்தார். ஆனால் ஒரு சிலர் நம்நாட்டில் அரசியலில் மதத்தைப் புகுத்தி, அதை வளர்ப்பதையே தேசிய விடுதலை என்று கூறி மக்களை ஏமாற்றி வருகின்றனர். ஆனால் வீரர் கெமால் அவர்கள் நாட்டின் விடுதலை தனியெனக் கருதி அதனின்றும் மதத்தைச் சடங்கை கத்தரித்தார். அரசியலில் மதம் குறுக்கிடக் கூடாது என்றார். 1921-ல் காங்கரஸ் கிலாபத் இயக்கத்துடன் ஒட்டியிருந்தது. அன்று முஸ்லிம்களைக் கிளப்பி அதனால் பயன்பெறக் கூப்பாடு போட்டனர். ஆனால் கெமால் அவர்கள் வந்தவுடன் அதுவேறு விஷயமென்று – தொட்டதற்கெல்லாம் மதம் என்பதைத் தனிப்படுத்தினார். மேலும், மதத்தில் பிரவேசித்துப் பல சீர்திருத்தங்கள் செய்தார். மத உணர்ச்சி மிகுந்துள்ள முஸ்லிம்கள் சிலர் இவரைக் குறை கூறினர். ஆனால் கெமால் அவர்கள் அவைகளைச் சிறிதும் லட்சியம் செய்யாது, அவர்களே பின்னால் உணர்வார்கள் என்று கருதி தன்னிஷ்டம் போல் சீர்த்திருத்தங்களைத் துணிந்து செய்தார். உலகத்தில் துருக்கி ஒரு நோயாளி நாடு என்று அழைக்கப்பட்டு வந்த பெயரை நீக்கினார். என்னைப் போலொத்தவன் சில சீர்திருத்தங்கள் செய்ய வேண்டுமென்று சொன்னால், உடனே ஒரு சிலர் கடவுள் போச்சு, மதம் போச்சு என்று கூச்சலிட்டு, வீட்டிலுள்ள கிழங்களை உசுப்படுத்தி விடுகின்றனர். அவர்களும் உண்மை அறியாது நம் வேலைகளில் குறுக்கிடுகின்றனர். அது கூடாதென்பதற்காகவே கெமால் அவர்களின் செய்கைகளை எடுத்துக் காட்டுகின்றேன். கெமால் துருக்கியில் படுதா முறையை ஒழித்தார். அதைப்பற்றிப் பலர் பல வித அபிப்பிராயங்கள் கூறுவர். என்னைப் பொறுத்த வரை நமது பெண்களுக்கு நாம் என்ன சுதந்தரம் கொடுத்திருக்கின்றோம் என்பதை கவனிக்காது முஸ்லிம்களின் படுதா முறையைக் குறை கூறமுடியாது என்பேன். நமது பெண்களுக்குச் சொத்துரிமை உண்டா? படிப்புச் சுதந்திரம் உண்டா? விதவை மணம் உண்டா? ஆனால் முஸ்லிம்கள் தங்கள் பெண்களுக்கு சொத்து, கல்வி, விதவை மணம் முதலிய சுதந்தரங்கள் கொடுத்திருக்கின்றனர். நாம் அந்த நிலைமைக்கு வந்த பிறகு படுதா முறையைப் பற்றி பேசலாம். இதேபோல் பலவிதக் குறைகள் நம்மிடத்திருக்கும்போது, அவர்களின் படுதா முறையைக் குறைகூறும் நிலைக்கு இன்னும் நாம் வந்துவிடவில்லை.

~subhead

அலி சகோதரர்கள் பெருமை

~shend

இரண்டாவதாக ஷவுக்கத் அலி அவர்களின் மரணத்திற்காக அனுதாபம் கூறப்பட்டது. அவரும் மக்களுக்கு ஒரு வழிகாட்டியாயிருந்தவர். இந்த நாட்டில் பார்ப்பனர்களால், எவனொருவன் உண்மையாளனாகவும் தனது சமூக நலனுக்காக எவ்வித துன்பத்தையும் அனுபவிக்கத் தயாரா யிருக்கின்றானோ அவன் உடனே ிதேசத் துரோகிீ என அழைக்கப்படுகிறான். எவன் தங்கள் சமூக உயர்வைக் குறித்து பேசுகிறானோ அவனும் தேசத்துரோகியாகின்றான். ஆனால் தேசத்துரோகப் பட்டத்தைச் சிறிதும் பொருட்படுத்தாது தனது மதம், கலை, பழக்கவழக்கம், நாகரிகமே முதலாவதானது; மற்றவை இரண்டாவது என்று கூறியவர் நமது ஷவுக்கத் அலி. நாட்டில் இன்று தங்கள் நாட்டு சமூக முன்னோர் பெருமை தனது வகுப்பு மானம் இவைகளைக் கருதுபவன் தேசத் தலைவர் பட்டத்தைவிட்டு வெளியே வரவேண்டும். ஒருசமயம் காந்தியாரிடத்து ஷவுக்கத் அலி அவர்கள் முதலில் நான் ஒரு முஸ்லிம், இரண்டாவதும் முஸ்லிம் மூன்றாவதே இந்தியன் எனக் கூறினார். ஆனால் இன்று தமிழனை ஒருவன் நீ யாரென்று கேட்டால் ்நான் முதலில் தேச பக்தன், இரண்டாவது தேசியவாதி, மூன்றாவது தமிழனோ என்னமோ அதை எங்கள் ஐயாவை (அப்பாவை)க் கேட்டுத்தான் சொல்ல வேண்டும்” என்பார். இத்தகைய அடிமை மனப்பான்மையும், சுயநல எண்ணமும், பொறுப்பற்ற தன்மையும்தான் நமது அடிமைத்தனத்திற்குக் காரணம். அலி சகோதரர்கட்கு இந்துக்களும், காந்தியாரும், மற்றவர்களும் கொடுத்த பெருமை எவ்வளவு என்பது உங்களுக்குத் தெரியும். அலி சகோதரர்கள் இருவரையும் இரண்டு சிங்கங்களாகப் போட்டு நடுவில் காந்தியை நிறுத்தி சிங்கங்களின் கழுத்திலுள்ள சங்கிலிகளைக் காந்தியார் கையில் கொடுத்துப் படம் போட்டுப் புகழ்ந்தனர். அதாவது அலி சகோதரர்கள் இருவரும் சிங்கங்களென்றும், அவர் பிரிட்டிஷ்காரர் மீது பாய்ந்து விடாது காந்தியார் உத்தரவை எதிர்நோக்கி நிற்கின்றனர் என்றும் காந்தியார் சங்கிலியை விட்டால் வெள்ளையர் மீது பாய்ந்து கிழித்து விடுவார்கள் என்றும் விளம்பரம் செய்து தேசிய வியாபாரம் செய்து வந்தனர். அவர்களும் காந்தியாரை பாபுஜீ – தந்தையே என அழைத்து உண்மையுடன் காந்தியார் கொள்கை நாட்டில் பரவ, இரு தூண்கள் போல் இருந்து வேலை செய்து வந்தனர். சிறிது நாட்களுக்கெல்லாம் உள்ளேயிருந்த மர்மம் சுயராஜ்யப் புரட்டு (நேரு திட்டப்புரட்டு) தெரிந்தவுடன் நாங்கள் முதல், இரண்டாவது முஸ்லிம், மூன்றாவதுதான் இந்தியன் எனக் காந்தியாரிடம் கூறி வெளியே வந்தார்கள். ஒருவனுக்கு எவ்வளவுதான் தேசபக்தியிருந்தாலும் தனது சமூக விஷயத்தில் ஏமாந்து விடக்கூடாது. சமூகப் பிரிவு, மதப்பிரிவு ஒழிந்து விட்டால் பிறகு பார்ப்போம். இதுவரை இரு பெரியார்களின் சரித்திரத்தையும் பெருமைக்காகக் கூறவில்லை. அவர்களை நாமும் பின்பற்றி நமது உண்மை சமய சமூக முன்னேற்றத்திற்காகப் பாடுபட வேண்டுமென்பதை எடுத்துக்காட்டவேயாகும்.

~subhead

ஜஸ்டிஸ் கட்சித் தலைமைப் பதவி

~shend

இவை கிடக்க சென்ற வாரம் முதல் காங்கரஸ் பத்திரிகைகளிடையே ஒரு பெரிய பிரசாரம் நடந்து வருகின்றது. அடுத்த டிசம்பர் கடைசி வாரத்தில் சென்னையில் நடைபெறும் ஜஸ்டிஸ் மகாநாட்டிற்கு நான் தலைமை வகிக்க வேண்டுமென்று பல தோழர்கள் முயற்சி செய்து வருகின்றதாகத் தெரிகிறது. நான் அத்தலைமைப் பதவிக்குத் தகுதியுடையவனல்ல. ஆனால் தகுதியுடையவனாக்க தோழர்கள் முயலுகின்றார்கள் போலும். இதைக் கேட்டவுடனேயே எதிரிகள் ஜஸ்டிஸ் கட்சி 500 கஜ ஆழத்தில் புதைக்கப்பட்டுவிட்டது, அதற்குச் சமாதியும் கட்டியாய்விட்டது என்று கூறி வந்தவர்களுக்கு இப்பொழுது ஒரு மகாநாடு நடப்பதையும் அதற்கு ஒரு தலைவராகப் போடுவதையும் பார்த்தால் சிறிது நடுக்கமாகத்தான் இருக்கும். ஆதலால் அவர்கள் கொஞ்ச நஞ்சம் மீதியிருக்கும் கட்சியை ஒரு நாஸ்திகனைத் தலைவனாகப் போட்டு ஒழிக்கப் போகின்றார்கள் என்று கூறி ஏளனம் செய்வதில் அதிசயமில்லை. நம்மவர்களும் அவர்கள் பேச்சை நம்பி ஏமாந்துவிடுவார்கள் என்று எண்ணக்கூடும். சாமி அருணகிரிநாதர் கூறியதுபோல் ஒண்ட வந்தவர்கள் நம்மைத் துரத்தத்தானே நினைப்பார்கள். மதப்பூச்சாண்டி காட்டி ஏய்க்கின்றனர். அப்பூச்சாண்டியைத் திருப்பிக் கேட்க நம் மக்கள் துணிவதில்லை. ஆனால் ராஷ்ட்ரபதியென்றும் தேசிய வீரரென்றும் கூறப்படும் தோழர் ஜவஹர்லால் எல்லா இந்திய காங்கரஸின் பல வருஷ தலைவராயிருக்கும் போதே கோர்ட்டில் சத்தியப் பிரமாணம் கூறுவதை மறுத்தும், தனக்குக் கடவுள் நம்பிக்கையில்லை என்றும் கூறினார். அன்று தேசீயப் பத்திரிகைகளெல்லாம் அவர் வீரத்தைப் புகழ்ந்தனவே! அதற்காக அவர்மீது யார் கோபிப்பது? எந்த காந்தி தபஸ் செய்யச் சென்றார்? எந்த ஆஸ்திக வீரர் காங்கரசை விட்டு ராஜினாமாச் செய்தார்?

~subhead

குறைகூறக் காரணம் என்ன?

~shend

நமது சமூகம் சிறிதும் தலையெடுக்கவிடாது செய்யவே இவ்வாறு அவர்கள் யாரையும் குறைகூறி கட்டுப்பாடாக வேலை செய்கின்றனர். எப்படி இருந்தாலும் ஜஸ்டிஸ் மகாநாடு நடைபெறும் வரை நான் வெளியில் இருக்கமாட்டேன் என்றே கருதுகின்றேன். நான் தலைமை வகிக்க நேராது என்றே கருதுகிறேன். என் வழக்கில் நான் வாதாட சட்டமிருக்கலாம். காரண காரியங்களிருக்கலாம். ஆனால் இந்தக் காங்கரஸ் அரசாங்கத்தில் அது செல்லுமா என்பதுதான் கேள்வி. எனவே வழக்கில் நான் எதிர்வாதம் செய்யப்போவதில்லை. சீக்கிரம் முடியுங்கள் என்றே கூறுவேன். முடிந்துவிடுமென்றே கருதுகின்றேன். ஆதலால் நான் தலைமை வகித்து விடுவேன் என்கின்ற கவலை அவர்களுக்கு வேண்டியதில்லை.

எனவே, நான் வெளியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் நீங்கள் பார்ப்பனரல்லாத அந்த இயக்கத்துக்கு வேண்டிய உதவி செய்து பெருவாரியாக மெம்பர்கள் சேர்ந்து மகாநாட்டைச் சிறப்பாக நடத்தி தென்னிந்திய நல உரிமைச் சங்கம் இன்னும் உயிருடன் இருக்கிறது என்பதை எதிரிகளுக்கு அறிவியுங்கள். முன்னிலும் அதிக ஒற்றுமையாக ஊக்கமாக வலுவாக இருக்கிறது என்பதை உணர்த்துங்கள். ிஜஸ்டிஸ்ீ என்ற பத்திரிகையின் பெயர் பின்னர் கட்சிக்கே வந்துவிட்டது. தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்பதே இதன் பெயராகும். தென்னிந்திய மக்களின் நலத்திற்காக உரிமைக்காகப் பாடுபடும் கட்சி இக்கட்சி பார்ப்பனரல்லாதார் நன்மைக்காகவே ஏற்பட்டதாகும். ஆதியில் பார்ப்பனர்களைச் சேர்த்துக் கொள்ளக்கூடாது என்ற விதியிருந்தது. பின்னர் இக்கட்சிக் கொள்கையை பின்பற்றும் – தென்னிந்திய மக்கள் நன்மையை நாடும் பார்ப்பனரையும் சேர்த்துக் கொள்ளலாம் எனத் திருத்தப்பட்டது. ஆனால் இவ்வியக்கத்தில் எல்லாப் பார்ப்பனர்க்கும் இடமில்லை.

~subhead

நாம் இந்நிலைக்கு ஏன் வந்தோம்?

~shend

பார்ப்பனர்கள் இக்கட்சியை தேசத்துரோகக் கட்சி வெள்ளையனுக்குக் காட்டிக் கொடுக்கும் கட்சி எனக் கூறினர். இரண்டையும் கேட்டு ஒரு முடிவுக்கு வரத் தகுந்த பலமில்லா உள்ளமுடையவர்களாய் நம் தமிழர்களிலிருந்ததால்தான் நாம் இந்நிலைக்கு வர நேர்ந்தது. நமது பார்ப்பனரல்லாத மக்கள் சென்ற தேர்தலில் மிகுந்த கஷ்டப்பட்டனர். இன்று தங்கள் தவறையுணர்ந்து குறைகளை நீக்க நினைக்கையில் நம்மிலிருந்து விலகிய பலர் அனுதாபம் காட்டுகின்றனர். அதன் நுனியைப் பற்றி மேலே செல்வோமேயானால் இழந்தவைகளை மீண்டும் பெறலாம். எனவே இதில் எல்லோரும் பூரண பங்கு கொள்ளவேண்டும். தகுந்த திட்டங்கள் வகுத்துத் தொண்டு செய்வதன் மூலம் தமிழனாக வாழ முற்படுங்கள்.

நான் ஒன்று சொல்லுகின்றேன் கோபிக்காதீர்கள் . காலஞ் சென்ற அறிஞர் பா.வே. மாணிக்க நாயகர் அவர்கள் ஒரு சமயத்தில் நம்மை நாய்கள் என்றும், பார்ப்பனர்களைப் பூனைகள் என்றும் கூறினார் . தமிழர்களை இழிவாகக் கருதி நாய் என்று கூறவில்லை. நாய் செய்நன்றி உடையது. அன்பு விசுவாசம் உடையது. பூனையோ திருட்டுப் புத்தி உள்ளது. (கைத்தட்டல்) ஆனால் நாய்க்கு இன்னொரு குணமுண்டு. அதாவது தன்னினத்துடன் ஒற்றுமையாக இருப்பதில்லை. தமிழர்களும் மற்றவரிடத்து நம்பிக்கைக்குப் பாத்திரமாகவும், அன்பு, பக்தி, விசுவாசம் பாதுகாப்பாளராக இருப்பார்கள். தங்களுக்குள் ஒற்றுமையாக மட்டுமிருப்பதில்லை. நம்மிடத்தோ அந்தப் பூனை திருட்டுக் குணம் மட்டும் கிடையாது. நம்மில் – ஒருவருக்கொருவர் பகையை விட வேண்டும். பொறாமையை விட வேண்டும். தன்னலம் விடவேண்டும். பார்ப்பனரிடத்து நாய்க்குணம் கிடையாது. காரியம் வருமானால் தங்களுக்குள்ளிருக்கும் சொந்தப் பகையை மறந்து ஒன்றுபட்டு தங்களுக்கு வேலை செய்வார்கள். எனவே நமது வேற்றுமைகள் நீங்கி எல்லோரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் என்று கருதித் தன்மானத்துடன் வாழத் தொடங்கும் அன்றுதான் நாம் தமிழ் வீரராவோம். தமிழ் மன்னருமாவோம். (கைதட்டல்) ஒருவன் செல்வாக்காக வாழ்வதைப் பார்த்துப் பொறாமை கொள்பவன் தமிழ்நாடு தமிழருக்கே என்று எவ்வாறு கூற முடியும்? தமிழ்நாடு பார்ப்பனருக்கே என்றுதான் அவன் கூறவேண்டும்.

1938 -ம் வருட தென்னிந்திய நல உரிமைச் சங்க மகாநாட்டிற்குப் பிறகு சென்னை மாகாணம் தமிழ்நாடு பெருமை பெற்றதென்றால் அது தமிழர்களின் ஒற்றுமையால் என்றிருக்கவேண்டும். மானத்தைக் கருதுங்கள். சுயநலம், பெருமை, பதவி ஆசை முதலியவைகளைக் கைவிடுங்கள்.

~subhead

இன்று இவர்கள் செய்வது என்ன?

~shend

ஜஸ்டிஸ் மந்திரிகள் ஆட்சி காலத்துப் பார்ப்பனர்கள் எவ்வளவு குறை கூறினார்கள்? ஜஸ்டிஸ் ஆட்சியைவிட வெள்ளையர் ஆட்சியே மேலென்று வெள்ளையரைச் சொந்தம் பாராட்டினர். ஆம், உண்மைதான். நம்மை எப்படி அவர்கள் சொந்தம் பாராட்ட முடியும்? வெள்ளையராட்சிதான் மேலென்று ஆச்சாரியார் 10 தடவை கூறினார். பிரகாசம் 100 முறை கூறினார். சத்தியமூர்த்தியோ 1000 முறை கூறினார். அன்று நம்மை அவர்கள் எவ்வளவு இழிவாகப் பேசி வந்தாலும் இன்று பதவி வகிக்கும் அவர்களால் என்ன செய்ய முடிந்தது? அன்று மங்களூரில் ஒரு வெள்ளை நீதிபதி அபராதம் கட்ட வகையில்லை என்று கூறிய பெண்ணிடம் தாலியின் நிலையை அறியாது கழுத்தில் அதோ தங்கமிருக்கின்றதே என்று கூறியது தான் தாமதம், உடனே பார்ப்பனர்கள் தாலி அறுத்துவிட்டான் என்று கூச்சலிட ஆரம்பித்தனர். அந்நீதிபதியின் வெறும் வாய்வார்த்தையால் ஜஸ்டிஸ் கட்சி தாலியறுத்தது என்ற வரை சென்று கடைசியில் ஸர்.ஏ.ராமசாமி முதலியார் தாலி அறுத்தார் என்றாகிவிட்டது. ராமசாமி முதலியார் தேர்தலில் தாலியறுத்தவருக்கு ஓட்டா என்று சில தாலி கட்டிய அம்மாமார்கள் கூறிச் சத்தியமூர்த்திக்கு ஓட்டுக்கேட்டனர். அத்தகையவர்கள் இன்று என்ன செய்தார்கள் தெரியுமா? 75 வயது பாட்டியைச் சிறையிலிட்டனர். அந்த அம்மையார் பள்ளிக்கூடத்தின் முன் நின்றதும், ஒரு சப்இன்ஸ்பெக்டர் முன்வந்து “அம்மா உங்களை அரஸ்டு செய்திருக்கிறேன்” என்றாராம். உடனே ்வாடா என் கண்மணியே, இதற்குத்தானே நெடுநாளாக காத்திருந்தேன்!” என்று கூறி கைசடக்கெடுத்து திருஷ்டி கழித்தாராம் அந்த மூதாட்டியார். இதை ஒரு நண்பர் சொன்னார். இதற்குப் பிரதிப் பிரயோஜனம் சிறைதானா? எந்த அரசியல் – தேசியவாதியாகிலும் என்னிடம் முன் வந்து ஆம் என்று கூறட்டுமே பார்ப்போம்.

~subhead

பேச்சுரிமை எங்கே?

~shend

லண்டனில் பெண்கள் சட்டசபை மெம்பர்களின் வீட்டுக் கண்ணாடிச் சன்னல்களை உடைப்பார்கள், வின்சென்ட் சர்ச்சிலை ஒரு அம்மையார் ஒரு சமயம் சவுக்கால் (சாட்டை) அடித்தார். அதற்காக சர்க்கார் ஏதாவது நடவடிக்கை எடுத்துக் கொண்டார்களா? கொஞ்சநாளைக்கு முன்பு வைக்கத்தில் பெண்கள் 6- மாதம் தொடர்ந்து சத்தியாக்கிரகம் செய்தனர். அதனால் பலநாள் கோயில் பூசைகள் தடைபட்டன. அதற்காக அப்பெண்களை ஒரு போலீஸார் கூடத் தொடவில்லை. தண்டிக்கவும் இல்லை. இது ஒரு அற்ப காரியம். இந்தி ஒழிக என்றார்களாம். இதற்கா சிறைவாசம். யார் ஜெயிப்பது பார்ப்போம் என்று வெட்கமில்லாது கூறுகின்றாய். (வெட்கம், கூச்சல்) அதை எண்ணிடத்துச் சொல். அல்லது மீசையிருக்கும் தலைவரிடத்தில் சவால் போடு. அப்பொழுது உண்மையில் உனக்கு ஆண்மையுண்டென எண்ணுவேன். அதைவிட்டு அன்புப் பெண்ணிடத்தா உன்வீரம் காட்டுவது? 75 வயது பாட்டி இடத்தா? எங்களைச் சிறையிலடைத்துச் செக்கிழுக்கவும், இரும்பு உலக்கை பிடித்து நெல்குத்தவும் சொல். பெண்ணையா இவ்வாறு துன்பத்திற்காளாக்குவது? அவர்கள் என்னதான் குற்றம் செய்தார்கள்? இந்தி வேண்டாம் தமிழ்தான் வேண்டுமென்றனர். இதைச் சொல்ல ஒரு பெண்ணிற்கு இந்நாட்டில் உரிமையில்லையா? எங்கே நீங்கள் கூறிய பேச்சுரிமைகள்? 5 ஆயிற்று 8 ஆயிற்று. இந்த வாரம் 4 பெண்கள் சிறை சென்றனர். அடுத்த வாரமும் இதோ இங்கிருக்கும் அம்மையாருடன் இன்னும் சிலபேர் சிறைக்கு வரத் தயாராக விருக்கின்றனராம்.

அதுதான் போகட்டும். இக்காங்கரஸ்காரர் எல்லா இந்திய காங்கரசின் தீர்மானத்திற்காவது மதிப்புக் கொடுத்தார்களா? இந்திப் பிரச்சனை வகுப்புக் கலவரத்தை உண்டாக்குகின்றது. அபிப்பிராய பேதங்களைத் திருத்துங்கள் என்று கூறினார்களே அதைக் கவனித்தார்களா?

காங்கரஸ் மந்திரிகள் இந்நிலையில் மேலும் சிறையிலடைப்போ மென்றால் நான் ஆச்சாரியார் மேல் குறை கூறுவதா? அல்லது உங்கள் மேல் குறை கூறுவதா? நீங்கள் அன்றே சரியாக நடந்திருந்தால் இந்த நிலைமை வந்திருக்காதல்லவா?

்ஆனந்த விகடன்” சென்ற வாரத்திற்கு முதல் வாரத்தில் ஆச்சாரியார் பிடிவாதக்காரரல்ல பொது மக்கள் அபிப்பிராயத்திற்கு மதிப்புக் கொடுப்பவரே. அதற்காகத் தன்னுடைய கருத்தை மாற்றிக் கொள்ளவும் பின்வாங்க மாட்டார். தேசீயக் கொடியைக் கைவிடவில்லையா? பப்ளிக் பிராஸிகூடர் தீர்மானத்தைக் கைவிடவில்லையா? ரோட்டுப் பெயர் மாற்றத்தைக் கைவிடவில்லையா? தாழ்த்தப்பட்டோர் ஸ்காலர்ஷிப் பிடித்தத்தைக் கைவிடவில்லையா? (இன்னும் இதுபோன்ற 20 விஷயங்களை காட்டுகிறது) இந்திக் கட்டாய பாட விஷயத்தில் மட்டும் ஆச்சாரியார் ஏன் அவ்வளவு பிடிவாதம் காட்டவேண்டும்? இந்தியைப் பலரும் வரவேற்கின்றனர். ஒருசிலர்தான் மறுக்கின்றனர் என்று கருதித் தானே” என எழுதுகின்றது. ஆதலால் இக்கிளர்ச்சி – இந்தி எதிர்ப்பு பொதுமக்கள் கிளர்ச்சிதான் என்பதை நீங்கள் ஆச்சாரியாருக்குக் காட்ட வேண்டும். ஆனால் சென்ற வாரம் சென்னை தேசியப் பத்திரிகைகள் இந்த எதிர்ப்புக்காரரை காலிகள் என்றும், துரோகிகள் என்றும் எழுதியிருந்தன. அதே பத்திரிகைகள் இந்தி எதிர்ப்புக் கூட்டத்திற்கு 30000 பேர் வந்திருந்தனரென எழுதியிருந்தன. உத்தியோகத்தைப் பற்றிக் கவலையில்லை. இதைக் கண்டு நான் மிகுந்த ஆச்சரியப்பட்டேன். ஏனெனில் 30000 பேர் காலிகளில் 3 பேர் நல்லவர்களாக அவர்கள் கண்களுக்குப்பட்டன போலும். ஒரு மூட்டைக் கல்லில் 3 அரிசியிருந்தால் அரிசியைத் தானே வெளியில் எடுத்து எறிய வேண்டும். நமது ஒற்றுமையின்மையை அப்பத்திரிகைகள் நன்றாக அறிந்திருக்கின்றன. அதனால்தான் வாய்கூசாது அவ்வாறு கூறுகின்றன. உத்தியோகத்தைப் பற்றி – மந்திரி பதவியைப் பற்றி நமக்குக் கவலை வேண்டாம். அவர்களே ஆளட்டும் அல்லது வெள்ளையரோ வேறுயாரோ ஆளட்டும். ராமன் காலத்தைப் போல 1 ஜதை செருப்பு வேண்டுமானாலும் நாட்டை ஆளட்டும். (கைதட்டல்) இஷ்டப்பட்டவர்கள் ஆட்சியை நடத்தட்டும். நாம் ஒழுங்காக அவர்களிடம் வேலை வாங்குவோம். எங்களால்தான் அக்குதிரை மீது சவாரி செய்ய முடியும், அவ்வண்டியை நாங்கள் தான் ஓட்டமுடியும் என்று ஆச்சாரியார் கூறுகின்றார். ஆனால் வண்டியைக் குடையடிக்கவிடாது பார்க்க வேண்டிய பொறுப்பு நம்மைச் சேர்ந்தது. அந்தப் பாத்தியம் நமக்குத்தான். சரியாகக் குடையடிக்காது ஓட்ட முடியவில்லையென்றால் கீழே இறங்கி ஓட்டட்டும். நாம் வண்டி ஓட்ட வேண்டாம். வண்டியைக் கவிழ்க்காது சந்து பொந்தில் ஓட்டிச் சென்று நம்மைக் கொள்ளையடிக்காது பார்த்துக் கொள்ள வேண்டாமா? யோக்கியமாக வேலை வாங்க வேண்டாமா? நாம் மந்திரி பதவியைப் பெற விரும்புகிறோமென்று ஆச்சாரியார் கூறுவார். வண்டியினுள் இருக்கும் நான்கு பேரும் நான்கு பக்கமாக திரும்பிக் கொண்டால் நிச்சயம் வண்டியைக் குடையடித்து விடுவார்.

~subhead

அன்று நடந்தது என்ன?

~shend

நான் சிறைக்குப் போவதற்கு முன்பு முதலில் மோசம் செய்தது சென்னை என்றே கூறுவேன். பெரியார் தியாகராயச் செட்டியாரையும், டாக்டர் நாயரையும் அந்தக்காலத்து என்ன பாடு படுத்தினர்! தொண்டர்கள் தங்கள் வீட்டுப்பெண்களை வைதனர் என்றதற்குக்கூட ஆச்சாரியார் ஆத்திரம் பொங்காது இன்று தாய்மார்களைப் பச்சிளங் குழந்தைகளுடன் சிறையிட்டாரே! உங்களுக்குத் தெரியுமா? அன்று அவர்கள் என்ன செய்தார்களென்று என்னை விட சென்னையிலுள்ள நீங்கள் அதிகம் தெரிந்திருக்கலாம். தமிழர் நன்மைக்கு உழைத்த பாபத்திற்காக தியாகராயச் செட்டியாரின் வீட்டுக்கண்ணாடி ஜன்னல்களை உடைத்தனர். கதவைத் தட்டினர். பலவாறு பலாத்காரம் செய்ய முனைந்தனர். வீட்டிலிருந்த தியாகராயரின் மனைவி தனது கணவனை உள்ளே வைத்துக் கதவைச் சாத்திவிட்டு வெளியில் வந்து அங்கு நின்று கலகம் செய்தவர்களிடம் முந்தானை ஏந்தி மாங்கல்யப்பிச்சை கேட்கவில்லையா? டாக்டர் நாயரின் மண்டை உடையவில்லையா? அன்று அதிகாரம் அவர்களிடத்திலிருந்தும் அவர்கள் யாரைச் சிறையிலிட்டனர்? எந்த அம்மாமாரைச் சிறை பிடித்தனர். இத்தகைய பலாத்காரச் செயல்கள் செய்வது தவறுதான். அவைகளை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். எனது சிறுவயதில் பற்றி யெரியும் ஒரு வீட்டை அணைப்பவரை கோபிப்பேன்! வலியச் சண்டைக்குப் போவேன். அடிப்பேன். அடியும் படுவேன். ஆனால் நான் என்று பொதுவாழ்வில் நுழைந்தேனோ அன்றே பலாத்காரம், வசவு இவைகள் செய்வது தவறெனக் கருதினேன்.

~subhead

பலாத்காரம் கூடவே கூடாது

~shend

அன்று முதல் இதை ஒவ்வொரு கூட்டத்திலும் கூறி வருகிறேன். சிறிது துடி துடிப்புள்ள தோழர்களுக்குக் கூறுகின்றேன். ஒருவரை வைவதாலோ, அடிப்பதாலோ நமது லட்சியம் கைகூடாது. அதை ஒருவர் விரும்பினால் வங்காளத்திலுள்ளதுபோல் நம்மிலிருந்து பிரிந்து தனிச் சங்கம் பலாத்காரத்திற்கென்று ஒன்று வைத்துக்கொள்ளட்டும். அவர்களுக்கு இங்கு – இத்தமிழரியக்கத்தில் வேலையில்லை. இவ்வொரு கொள்கை ஒழுங்காக நடைபெற்றால்தான் நானும் தலைவரும் மற்றவர்களும் இதிலிருப்போம். சற்று ஒழுங்குக்கு மாறாக நடக்கிறதென்று கண்ட உடனே விலகியே தீருவோம். நமக்கென்ன அறிவில்லையா? திறமை யில்லையா? பார்ப்பனர்கள் எப்படி முன்னுக்கு வந்தார்கள்? உச்சிக் குடுமியைக் கத்தரித்தா? ஒருவரை அடித்தா? சென்ற வாரம் சென்னையில் நடந்ததாகப் பார்ப்பனப் பத்திரிகைகளால் கூறப்படும் சம்பவம் உண்மையில் நடந்திருக்குமென்று நான் கருதவில்லை. அது இந்தி எதிர்ப்பை உடைக்க – அமுக்க வேண்டுமென்றே செய்த சூழ்ச்சியாகும். யாரோ ிதினமணிீ ிஆனந்த விகடன்ீ காரியாலயங்களில் கல்லெறி என்றார். பத்திரிகைகளைக் கூர்ந்து கவனிக்கும் போது இது இட்டுக் கட்டிக் கூறியதென்றே தெரிகிறது. எனது அருமை நண்பர் பாசுதேவ் ிதினமணிீக் காரியாலயத்தார் ஈயத் துண்டுகளை எறிந்ததைப் பார்த்தேன் என்று கூறுகின்றார்.

~subhead

சூழ்ச்சிகளுக்கு அஞ்சேல்

~shend

நேற்று ிதினமணிீ ஈயத்துண்டு விலையுள்ளதல்லவா? அதை எப்படி எறிந்திருக்க முடியும் என்று கேட்கின்றது. விலை கோடி ரூபாய் இருக்கட்டுமே! ஆத்திரம் கொண்டு எறிபவன் அதன் விலையையா பார்ப்பான்? மேலும் அழுக்குத் தண்ணீரையும் எச்சலையும் துப்பினால் எவனாவது சும்மாயிருப்பானா? அன்றே நினைத்தேன் எனக்கு சர்க்கார் அழைப்பு வருமென்று. நான் ஆதி முதல் அஹிம்சை வேண்டும், பலாத்காரம் கூடாதென்று கூறி வருகின்றேனாதலால் எவ்வளவு சூழ்ச்சிகள் செய்யப்பட்டாலும் சிறிதும் அஞ்ச வேண்டாம் என்று கூறுகின்றேன்.

நிற்க, சூலையில் நடைபெற்ற சம்பவத்தை எடுத்துக்கொள்ளுங்கள். இந்தி எதிர்ப்பாளர் கூட்டம் நடத்த அனுமதி பெற்றிருந்த பார்க்கில் அதே நேரத்தில் காங்கரஸ்காரர் உள்ளே புகுந்து கொள்வதா? பார்க்கில் கூட்டம் நடத்த இந்தி எதிர்ப்பாளர்க்குத்தான் உரிமையுண்டு எனக் கூறவில்லை. இவர் அனுமதிபெற்ற நேரத்திற்கு முன்போ பின்போ நடத்தட்டுமே. அதைவிட்டு அதே நேரத்தில் முன்னாடியே உள்ளே புகுந்து கொண்டால் என்ன அர்த்தம்? மேலும் கல்லை வாரி யிறைக்கவும் தலைவர்கள் மீது எச்சில் துப்பவும், பெண்களை வையவும் என்ன காரணம்? இதை நாங்கள் சொல்லவில்லை. காலித்தனம் செய்தது யாரென்று சர்க்கார் ரிகார்டில் பாருங்கள். போலீசாரால் அடி வாங்கினவரைப் பாருங்கள். இதைக் கண்டு நாம் ஓடுவதா?

~subhead

காங்கரஸ் ஆட்சி ஒஸ்தியா?

~shend

ஜஸ்டிஸ் கட்சியின் 15 வருட ஆட்சியை விட காங்கரஸ்காரர்களின் இன்றைய ஆட்சி எந்த விதத்தில் சிறந்தது? அவர்கள் ஆட்சி எந்தவிடத்தில் தவறானது என்பதை எந்த தேச பக்தனாவது என் முன் வந்து ஆதாரத்துடன் கூறினால் இன்றையிலிருந்து எனது பிரசாரத்தை விட்டுவிடுகின்றேன். எந்த தேதியில் வேண்டுமானாலும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் கூறட்டும். ஜஸ்டிஸ் கட்சியார் என்ன தப்பு செய்தார்கள்? காங்கரஸ்காரர்கள் என்ன நன்மை செய்தார்கள்?

~subhead

ஜஸ்டிஸ் கட்சி செய்த நன்மைகள்

~shend

ஜஸ்டிஸ் மந்திரிகள் ஆட்சியிலிருக்கும் முன் சென்னை அரசாங்கம் கல்விக்காகச் செலவிட்டது ஒரு கோடியே நாற்பது லட்சம். அந்த ரூபாய்கள் பெரும்பாலும் பார்ப்பன மாணவர்கட்கும், பார்ப்பன அதிகாரிகட்கும், பார்ப்பன ஆசிரியர்கட்கும் பயன்பட்டு வந்தன. அப்பொழுது பார்ப்பனரல்லாத பிள்ளைகள் படிப்பு மிகக் குறைவாகவிருந்தது. ஜஸ்டிஸ் கட்சியார் ஆட்சிக்கு வந்த பின்னர் 2 கோடியே 25 லட்சம் ரூபாய் கல்விக்காகச் செலவிட்டனர் இது 1936 ம் வருடக் கணக்காகும். முன்பிருந்ததைவிட ஜஸ்டிஸ் ஆட்சியில் 2 பங்கு உயர்த்தப்பட்டது. இதனால் 100 க்கு 200 பேர் பார்ப்பனரல்லாத மக்களும், 100க்கு 300 பேர் தாழ்த்தப்பட்ட பிள்ளைகளும் படிக்க வசதி கிடைத்தது. அதனால்தான் இன்று பார்ப்பனரல்லாதாரிலும் சிலர் படிப்பாளிகள் என்று கூறிக் கொள்ளுகின்றனர். 100க்கு 100 கல்விக்காகச் செலவிடுவோம் என்று கூறி 100க்கு 100 ஓட்டு வாங்கிவிட்டதாகப் பீத்திக் கொண்ட காங்கரஸ்காரர்கள், கல்விக்கு எவ்வளவு மான்யம் ஒதுக்கினார்கள் தெரியுமா? வடாற்காட்டில் 240 பள்ளிகளையும், கோவையில் 50 பள்ளிகளையும், மலையாளத்தில் 200 பள்ளிகளையும் மூடிவிட்டனர். நான் பொய் சொல்லவில்லை. சர்க்கார் கணக்கு கூறுகின்றது. இதனால் எத்துணை பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்படும் என்பதை நீங்களே யோசித்துப் பாருங்கள்.

~subhead

யார் வீட்டுப் பணம்?

~shend

ஆச்சாரியாரிடம் இவைகட்குப் பணம் கேட்டால் பணமில்லையே எங்கிருந்து கொடுக்கிறது என்று கேட்கிறார். இவர் அப்பா வீட்டிலிருந்தா கொடுக்கிறார்? அன்று ிஅதிக வரிீ ிகொள்ளை போகிறதுீ என்று கூச்சலிட்டனர். ஆனால் இவர்கள் இடைக்கால மந்திரிகள் நிரந்தரமாக குறைத்த 75 லக்ஷத்தைக் கூட அமுலுக்குக் கொண்டு வரமுடியவில்லை. அவர்களெல்லாம் ஒன்றும் தெரியாதா செய்தார்கள். ஒரு மாஜி கவர்னரை வைத்தல்லவோ வரி குறைப்புத் திட்டம் வகுக்கப்பட்டது. வரவு செலவில் மீதி கூட வைத்துக்கொள்கிறார்களே. அதைக் கேன்சல் செய்துவிட்டு இன்று 1லீ கோடி 1லு கோடி 1லீ கோடி என 4லு கோடி எதற்காக கடன் வாங்க வேண்டும்?

~subhead

ஆச்சாரியார் ஆட்சிப்பலன்

~shend

ிதம்பி தலையெடுத்துத் தறிமுதலும் பாழாயிற்றுீ என்பது போல ஒரு காசு மீதியில்லை. எவ்வளவு கடன். என்ன ஆகாய விமானம் பறக்கிறதா! போக்குவரத்திற்கு அதிகச் செலவா! சுகாதார வசதிக்கா? படிப்புக்கா? எதற்கு? அதிலும் கெளரவ டாக்டர்கள் வேறு. அவர்கள் நோயாளிகளின் கையைப் பார்ப்பார்களா? அல்லது மடியைப் பார்ப்பார்களா? (கைத்தட்டல்) பள்ளிக்கோ, ரோட்டிற்கோ, ஸ்தல ஸ்தாபனங்கட்கோ ஒருவித உதவித் தொகையுமில்லை. இதில் என்ன சவாரி? ஒரு சாண் முன்னே போனால் 2 கஜம் பின்னால் தள்ளுகிறது. இதைப் பற்றி ஒருவன் குண்டூரில் கேட்டால் ்எனக்கு நிர்வாகப் பழக்கமில்லை. எனக்கு வக்கீல் வாதாடத்தான் தெரியும். அதுவும் ஒரு கட்சிக்காக” என்று கூறுகிறார் ஆச்சாரியார். சென்னை மாகாணத்தில் காங்கரஸ்காரர்கள் கைப்பற்றிய எந்த முனிசிபல், ஜில்லா போர்டு, பஞ்சாயத்து ஆகியவைகளில் கலவரமில்லை. கண்டராக்ட் லஞ்சத்தை ஒழிப்பதாகக் கூறிச் சென்றவர்கள் தாங்களே – மந்திரிகளே லஞ்சத்தில் தலையிடுகின்றனர். அதுவும் 1 ரூபாயா 2 ரூபாயா? 5 லக்ஷத்தில் மந்திரிகளுக்கு என்ன வேலை?

~subhead

என் வேண்டுகோள்

~shend

எனவே நீங்கள் அனைவரும் கட்டுப்பாடாக ஒற்றுமையுடன் இவைகளை ஒழிக்க வேலை செய்யவேண்டும். இதில் தாய்மார்கள் உதவியில்லாது ஒன்றும் செய்ய முடியாது. தெருக்கள் தோறும் தாய்மார் படை செல்ல வேண்டும். இழந்த மானத்தை மீண்டும் பெற்றுத்தர வேண்டும். இவைகளை இங்கே வந்துள்ள தாய்மார்கட்கு மட்டும் கூறவில்லை. நீங்கள் வீட்டில் பூட்டி வைத்து வந்திருக்கும் அத் தாய்மார்கட்கும் கூறுகின்றேன். ்நாங்கள் ஊரானுக்கு அடிமையானோம். நீங்கள் சென்று அடிமையை நீக்குங்கள்” எனக் கூறி அவர்களை வெளியே அனுப்புங்கள்.

எனது அருமை நண்பர் ஆச்சாரியார் தயவால் குறைந்தது 1 வருடமாவது சிறையில் ஓய்வு கிடைக்கும். ஏனெனில் எனது 4, 5 வருடத்திய அலைச்சல் – கஷ்டம் அவருக்குத் தெரியும். ஒரு வருடத்திற் காவது ஓய்வளித்து உடலைத் தேற்றி அனுப்ப வேண்டும் என்று அவர் கருதியுள்ளார். நான் சிறைக்குள்ளிருக்கும் காலத்து எனக்கு எனது தாய்மார்கள்தான் உதவி செய்யவேண்டும்.

~subhead

தொழிலாளருக்கு ஒரு வார்த்தை

~shend

கடைசியாகத் தொழிலாளர்களைப் பற்றி ஒரு வார்த்தை. சென்ற ஆண்டு ஒரு நண்பர் என்னிடம் நான் தொழிலாளர்களைப் பற்றிக் கவனிப்பதில்லை என்றார். தொழிலாளர்களிடத்து நான் நல்ல பாடம் கற்றுக் கொண்டேன். முன்பு நாகைத் தொழிலாளர் வேலைநிறுத்தத்தில் நான் ஈடுபட்டிருந்தபோது தொழிலாளர்கள் என்னை ஒரு சாமியாரைப் போல் கருதி – எனக்கு நல்ல மதிப்புக் கொடுத்தார்கள். 50, 60 ஆயிரம் ரூபாய் தொழிலாளர் சங்கத்திலிருந்தது. 5000 தொழிலாளருக்கு மேலிருந்தனர். அக்காலத்து பார்ப்பனர்களே தலைவர், காரியதரிசியாகத் தங்களை ஆக்கிக் கொண்டு எங்களை மோசம் செய்தனர். நான் வேலை நிறுத்தம் கூடாதென்றேன். அவர்கள் தொழிலாளர்களைத் தூண்டிவிட்டு வேலை நிறுத்தம் செய்யச் செய்து பத்திரிகைகாரர்களிடமிருந்தும், ரயில்வேக்காரர் களிடமிருந்தும் லஞ்சம் வாங்கிக் கொண்டு தொழிலாளர்களுக்குத் துரோகம் செய்தனர். அப்பொழுது வேலைநிறுத்தம் கூடாதென்று தொழிலாளர் நன்மைக்காகப் பாடுபட்ட என்னையும், தோழர் சிங்காரவேலுச் செட்டியாரையும் சர்க்கார் கைது செய்தார்கள். ஏதோ காரணத்தால் அன்று மந்திரியாயிருந்த பனகல் அரசர் எங்களுக்காக கவர்னரிடம் பரிந்து பேசி என்னையும் சில நண்பர்களையும் விடுதலை செய்தனர். என்மீது கொண்டு வந்த வழக்கையும் சர்க்கார் வாபீஸ் வாங்கிக் கொண்டனர். அன்று தொழிலாளர்க்காக எந்தப் பத்திரிகையாவது சிறிது அனுதாபம் காட்டிற்றா? தொழிலாளர்களைக் காட்டிக் கொடுத்து லாபமடைந்தனர் ஒருசிலர். 50 ஆயிரம் ரூபாய்க்கு மேற்பட்ட நிதியையும் ஒழித்தனர்.

~subhead

போலித் தலைவர்களை நம்பாதீர்

~shend

ஆனால் இன்றும் பொன்மலை போன்ற இடங்களில் அவர்கள் சூழ்ச்சிக்ககப்படாத தொழிலாளர்களிருக்கின்றனர். என்னை அழைக்கும் தொழிலாளர்களிடத்துப் போக அதிலிருந்து பயப்படுகின்றேன். வீணே தொழிலாளர்களிடையே கலகத்தை ஏற்படுத்திப் பிறர்போல் லாபமடைய, வியாபாரம் செய்ய நான் விரும்பவில்லை. நான் தொழிலாளரை விட்டு விலகவுமில்லை. காலம் வரும்போது தொழிலாளர்கள் இன்று தங்கள் தலைவர்கள் என்று யாரை நினைத்து கொண்டிருக்கின்றார்களோ அவர்கள் யோக்கியதையைக் கூடிய சீக்கிரம் உணரப்போகின்றார்கள். நாங்கள் தொழிலாளர்களை மறக்கவில்லை; விலக்கவுமில்லை. எங்கள் ஒவ்வொரு மூச்சும் அவர்களால் அவர்களுக்காகத்தானிருக்கிறது. தமிழ்நாடு தமிழனுக்காக – தமிழ்நாடு மானத்துடன் வாழ தொழிலாளர்கள் தான் உதவப் போகிறார்கள். எனவே, எனது தொழிலாள நண்பர்களே! போலித் தலைவர்களை நம்பி ஏமாற வேண்டாம். நாங்கள் தொழிலாளர்களை விலைக்கு வாங்கி அவர்களுக்குள் சண்டை உண்டாக்கி அதன் பேரால் வாழ விரும்பவில்லை. காங்கரஸ் யோக்கியதையும் அதன் பேரால் தொழிலாளர் தலைவர்களானவர் யோக்கியதையும் விளங்கி வருகிறது. பசுமலை, சென்னை, கோவை, பம்பாய் ஆகிய இடங்களில் நடைபெற்ற சம்பவங்களே இதற்குச் சான்று. தென்னிந்திய நல உரிமைச்சங்க மகாநாட்டிற்குப் பிறகு தமிழர்கள் தொழிலாளர்களையே நம்பியிருக்கின்றார்கள். அவர்களும் எதனால் நன்மை என்பதை அறியப் போகின்றார்கள்.

~subhead

போய் வருகிறேன்

~shend

நான் இறுதியாக விடைபெற்றுக் கொள்கிறேன். நீங்கள் அனைவரும் தென்னிந்திய நலவுரிமைச் சங்கத்தின் அங்கத்தினர்களாகச் சேர்ந்து அதன் மேம்பாட்டிற்கு ஆதரவளித்து, உங்கள் பின் சந்ததிகள் சுகமாக வாழ உதவி செய்யுங்கள். அன்று ஜஸ்டிஸ் மந்திரிகளைச் சரிகைக் குல்லாயென்றும், ஜமீன்தார்களென்றும், தேசத்தைக் காட்டிக் கொடுத்துக் கொள்ளையடிக் கிறார்களென்றும் கூறினர். எனது அருமைத் தலைவர் பன்னீர்செல்வம் 3-வருடம் மாதம் 5000 ரூபாய் வாங்கினார்.

இன்று அவரிடம் என்ன மீதமிருக்கின்றது? பொப்பிலி ராஜா உங்களைக் காட்டிக் கொடுத்து என்ன காரியத்தை பெற்றார்? ஆனால் சர். உஸ்மானைப் பற்றி அன்று எவ்வளவு குறை கூறினார்கள். தடியடிப் பிரயோகம் செய்தார் என்றும் அவர் பேரைக் கூறி ஜஸ்டிஸ் இயக்கத்தையே குறை கூறினர். அவரால் ஜஸ்டிஸ் இயக்கத்திற்கு இழிவே தவிர ஒரு நன்மையுமில்லை. அதே உஸ்மானுடன் தான் இன்று ஆச்சாரியார் கட்டிப் புரளுகிறார். ஆச்சாரியார் வாக்கு உஸ்மானுக்கு மதக் கட்டளையாகவும் உஸ்மான் பேச்சு ஆச்சாரியாருக்குக் கவசமாகமிருக்கிறது. அன்று தடியடி செய்தவர் உஸ்மானானால் இன்று ஆச்சாரியார் அவரை உண்மைத் தோழராகக் கொள்வாரா? நாளை நாங்களும் 4 அணா கொடுத்து காங்கரசில் மெம்பராகச் சேர்ந்தோ அன்றி ஆச்சாரியார் செய்வது சரி என்று கூறி விட்டால் எங்களையும் குரு என்று கூறிவிடமாட்டாரா? அவர்கள் செய்கை தவறு என்றால் எல்லாப் பழிகளும் நம்மீது; தவறில்லை சரி என்று கூறிவிட்டால் வானமளாவப் புகழ்வார்கள்.

~subhead

உங்கள் கடமை

~shend

இன்று இவர்கள் ஆட்சிக்கு வந்து என்ன புதிய காரியங்களைச் செய்து தமிழ்நாட்டைப் பொன்னாடாகச் செய்துவிட்டனர். இதை எண்ணி நீங்கள் தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தை உயிர்பித்தால்தான் முன்னேற முடியும். அவர்கள் கூறியது போல் இக்கட்சி ஜமீன்தார் கட்சியோ, பணக்காரர் கட்சியோ அல்ல. ஜமீன்தார்களும் பணக்காரர்களும் பிடிக்கப் பிடிக்க ஓடுகிறார்கள். நமக்கு இந்தப் பார்ப்பனத் துவேஷம் வேண்டாமென்று ஏழைகளின் நன்மைக்காக ஏற்பட்ட கட்சியாகும் இது. எனவே இவைகளை நீங்கள் நன்றாக ஆலோசித்து இக்கட்சியை உயிர்ப்பித்தால் தான் அது தமிழர் முற்போக்கடைவதற்காகச் செய்யும் வழி என்று கூறுவேன்.

நாட்டில் இந்த நிலையை நீங்கள் உண்டாக்கினால்தான் ஆச்சாரியாரும் காந்தியாரும் தங்களால் வண்டியை ஓட்ட முடியவில்லை என்று ஓடுவர். நாமும் இல்லை, இல்லை நீங்களே ஓட்டுங்கள் என்று கூறலாம். எனவே, தமிழர்களே! ஒன்றுபட்டுழையுங்கள். இந்த அருமையான சந்தர்ப்பத்தை எனக்கு அளித்த உங்கள் எல்லோருக்கும் எனது மனமார்ந்த நன்றியைக் கூறி எனது பேச்சை முடித்துக்கொள்ளுகின்றேன்.

குறிப்பு: சென்னை கடற்கரையில் 30.11.1938 இல் ஸர்.ஏ.டி.பன்னீர்செல்வம் தலைமையில் சென்னைப் பொதுமக்கள் சார்பாக நடைபெற்ற தமிழர் கூட்டத்தில் ஆற்றிய உரை.

குடி அரசு – சொற்பொழிவு – 11.12.1938

You may also like...