காங்கரஸ் கவுண்சிலர்கள் லஞ்சம் வாங்குவதில்லையாம்

 

நண்பர்களுக்கு கண்டிராக்ட் கொடுப்பதில்லையாம்

கண்டிராக்டில் பங்கில்லையாம்

உத்தியோகத்தை சுயநலத்துக்கு பயன்படுத்திக் கொள்வதில்லையாம்

இதற்கு ஆதாரம் ஒரு காங்கரஸ் கவுன்சிலர்

தோழர் எம்.எஸ். சுப்பிரமணியய்யர் ஒரு காங்கரஸ் வீரராம். தேசபக்தராம். அவர் சிறைக்குப் போனாரோ என்னவோ தெரியாது. ஆனால் பெரிய தேச பக்தர் நாடகம் ஆடி வருவது ஏதோ உண்மைதான். அவர் சென்னைக் கார்ப்பரேஷனிலே மெம்பராகவுமிருக்கிறார். பார்ப்பனர் நிறைந்த ஒரு தொகுதியால் அவர் இரண்டு முறை கார்ப்பரேஷன் மெம்பராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். “தினமணி” ஆசிரியர் தோழர் சொக்கலிங்கம் பிள்ளையின் பிரதம தனகர்த்தர். அவர் மூலம் வெளியான கார்ப்பரேஷன் ஊழல் நாடகத்தில் முக்கிய நடிகராயிருந்தவர் தோழர் எம்.எஸ். சுப்பிரமணியய்யரே. அவர் சென்னை கார்ப்பரேஷன் பள்ளிக்கூடப் புத்தக வியாபாரத்தில் பங்கு கேட்ட கதையை விளக்கும் அவருடைய கடிதம்* அடுத்த பத்திகளில் பார்க்கவும்.

கார்ப்பரேஷன் கவுன்சிலர் அதிலும் காங்கரஸ் கவுன்சிலர் மேற்கண்ட மாதிரி பங்கு கேட்ட விநோதத்தைப் பாருங்கள். சென்னை முனிசிபல் ஆக்ட் செக்ஷன் 53-கிளாஸ் (ஞீ) பிரகாரம் ஒரு கவுன்சிலர் நேர்முகமாகவோ அல்லது மறைமுகமாகவோ கார்ப்பரேஷனில் யாதொரு வியாபார சம்பந்தமோ பணம் சம்பாதித்தலோ கூடாது. அப்படி செய்பவரை கவுன்சிலர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும். இதைப்பற்றி சென்ற வருஷம் நடந்த விசாரணைக் கமிட்டிக்கு தெரிவித்திருந்தும் மேற்படி கடிதத்தை அனுப்பி இருந்தும் தோழர் முத்துரங்க முதலியார் அதை கவனிக்காமல் அவரையே சாட்சியாக வரவழைத்து அவர் வாக்கு மூலங்களை தெய்வ வாக்காக மதித்தாரென்றால் தோழர் முத்துரங்க முதலியாரை தலைவராகக் கொண்டு நடத்திய விசாரணைக் கமிட்டியார் எவ்வளவு பொறுப்பற்று நடந்து கொண்டுள்ளார்கள் என்பது நன்கு விளங்கும்.

“திருடனுக்குப் போடப்பா தேங்காய்ப்பால் சாதம்” என்றபடி ஊழல் நிறைந்த, யோக்கியதை இழந்த அந்தப் பிராமணரையே மறுபடியும் பிராமணர் நிறைந்த டிவிஷனில் அபேட்சகராகப் போட்டு வெற்றி அடையச் செய்தார்கள். இந்தப் பிராமணரும் இவருடைய “மாபெருந் தலைவர்” எனும் “தினமணி” சொக்கலிங்கம் 16-11-37ல் தோழர் எம்.எஸ். சுப்பிரமணிய அய்யர்… ஆகியோர் ஊழல்களைக் கண்டுபிடிப்பதில் புலிகள் என்று கூறுவேன். இவர்கள் ஜாக்கிரதை, சிரத்தை உதவியால் தான் அநேக ஊழல்களை விரட்டி அடிக்க முடிந்தது என்று கோகேல் மண்டபத்தில் கூடிய கூட்டத்தில் போற்றினாரென்றால் (17-11-37 “தினமணி”யில் பார்க்கவும்) அவர் எந்த மதியுடன் பேசினாரென்று தெரியவில்லை. தோழர் சுப்பிரமணிய அய்யர் “ஊழல்களைக் கண்டுபிடிப்பதில் புலியா” அல்லது “ஊழல் புலியா” என்பது பொது மக்கள் தீர்மானிக்க வேண்டியது. இவ்வாறான யோக்கியர்களுக்குத் தலைவரான தோழர் முத்துரங்க முதலியாரால் தலைமை வகித்து வரப்போகும் தேர்தலுக்கு அபேட்சகர்களைப் பொறுக்கி எடுத்திருக்கும் அட்ஹாக் கமிட்டியின் யோக்கியதையையும் நீங்களே பரிசீலனை செய்து கொள்ளலாம். உண்மை ஊழல் கோஷ்டியார் யார்? அவர்கள் யாருடைய தயவில் இருக்கிறார்கள் என்று சிந்தித்துப் பார்த்தால் அதுதான் “மஞ்சள் பெட்டியின் மர்மம்” என்று சொல்லாமல் விளங்கும். ஊழல்காரர்களுக்குத் தஞ்சம் அளிக்கும் பொறுப்பற்ற தலைவர்களை நம்பவேண்டாம். மஞ்சள் பெட்டியின் பெயரால் நம் நகரசபையில் நடைபெறும் அநீதிகள் பல உளன. அவை அடுத்தடுத்து வெளிப்படுத்தப்படும்.

ஆகையால் பொறுப்பு வாய்ந்த வாக்காளர்களே! ஏமாற வேண்டாம். “திருடனுக்குத் துணைபோன கைம்பெண்ணை”ப் போல் ஊழல்காரர்களைப் போற்றும் கங்காணிமார்களின் பசப்பு வார்த்தைகளை நம்பாதீர்கள். சென்னை நகரத்தில் ஊழலே உருக்கொண்டிருக்கும் காங்கரசின் சார்பாக, ஊழல் காரர்களை ஆதரிக்கும் மானங்கெட்ட அட்ஹாக் கமிட்டியால் தேர்ந்தெடுக்கப்பட்ட மஞ்சள் பெட்டி அபேட்சகர்களுக்குத்தான் வெட்கமில்லையென்றாலும் பொறுப்பு வாய்ந்த வாக்காளர்களாகிய நீங்களாவது தோழர் முத்துரங்க முதலியாருக்கும் அவரது ஊழல் கோஷ்டியாருக்கும் நன்கு புத்திபுகட்டி வரப்போகும் தேர்தலில் மஞ்சள் பெட்டியில் உமது ஓட்டைப் போடாமல் வெருட்டி அடிக்கவும்.

குடி அரசு – கட்டுரை – 18.09.1938

You may also like...