கஷ்டமான பிரச்சினை – சித்திரபுத்திரன்

 

மதங்கள் யாரால் உண்டாக்கப்பட்டவை

ஆ-ன்: மதங்கள் கடவுள்களால் உண்டாக்கப்பட்டவை.

ப-தி: அல்ல அவை மனிதர்களால் உண்டாக்கியவை.

ஆ-ன்: ஏன் அப்படிச் சொல்லுகிறாய்.

ப-தி: மதங்கள் எத்தனை உண்டு?

ஆ-ன்: பல மதங்கள் உண்டு.

ப-தி: உதாரணமாக சிலது சொல்லும்.

ஆ-ன்: எடுத்துக்காட்டாக இந்து மதம், புத்த மதம், கிறிஸ்து மதம், முகமது மதம், சீக்மதம், பார்சி மதம், ஜொராஷ்ட்டிர மதம் முதலியவைகளும் இவற்றில் பல உட்பிரிவுகளும் உண்டு.

ப-தி: கடவுள்கள் எத்தனை உண்டு.

ஆ-ன்: ஒரே கடவுள்தான் உண்டு.

ப-தி: இவ்வளவு மதங்களும் யாருக்காக உண்டாக்கப்பட்டவை.

ஆஸ்திகன்: மனித வர்க்கத்துக்காகத்தான்.

ப-தி: மதத்தால் ஏற்படும் பயன் என்ன!

ஆ-ன்: மனிதன், கடவுளை அறியவும், கடவுளுக்கும், தனக்கும் சம்மந்தம் ஏற்படுத்திக் கொள்ளவும், ஆத்ம ஞானம் பெறவும் கடவுள் கருணைக்கு பாத்திரனாகவும் பயன்படுவதாகும்.

ப-தி: அப்படியானால் ஒரே கடவுள் மனித வர்க்கத்துக்கு இத்தனை மதங்களை ஏற்படுத்துவானேன்.

ஆ-ன்: அது மிகவும் சிரமமான கேள்வியாக இருக்கிறது. பெரியார்களைக் கண்டு பேசி பிறகு பதில் சொல்லுகிறேன்.

மதவிபரம்

ப-தி: அதுதான் போகட்டும் இந்து மதம் என்பது என்ன? அது கடவுளால் எப்படி ஏற்படுத்தப்பட்டது.

ஆ-ன்: ஹிந்து மதம் என்றால் வேதமதம் என்று பெயர்.

ப-தி: வேதம் என்றால் என்ன?

ஆ-ன்: கிருக்கு, எஜசு, சாமம், அதர்வணம் என 4 வேதம் உண்டு. அவ்வேத முறைதான் ஹிந்துமதம் என்பது.

ப-தி: இவ்வேதங்கள் யாரால் ஏற்படுத்தப்பட்டவை.

ஆ-ன்: வேதம் கடவுளால் ஏற்படுத்தப்பட்டவை.

ப-தி: வேதம் கடவுளால் ஏற்படுத்தப்பட்டவை என்று யார் சொன்னார்கள்?

ஆ-ன்: வேதம் கடவுளால் ஏற்படுத்தப்பட்டவை என்று வேதம் சொல்லுகிறது. வேதம் கடவுள் வாக்கு என்று வேதம் சொல்லுகிறது.

ப-தி: இதற்கு ஏதாவது சாட்சியோ ஆதாரமோ உண்டா?

ஆ-ன்: வேதத்துக்கும், கடவுள் வாக்குக்கும் ஆதாரமோ சாட்சியோ கேட்பது என்றால் அது பாவமான காரியமே யாகும்.

ப-தி: அது பாவமாக இருக்கலாம். ஆனால் ஆதாரம், ரூஜú இல்லாமல் ஒன்றை ஒருவன் நம்புவது என்றால் அது குற்றமாகாதா?

ஆ-ன்: இதுவும் கஷ்டமான பிரச்சினையாகத்தான் இருக்கிறது. பெரியவர்களைக் கேட்டுப் பார்க்க வேண்டும்.

ப-தி: சரி புத்தமதம் என்றால் என்ன?

ஆ-ன்: புத்த மதம் என்பது புத்தர் என்கிறவருடைய கொள்கை.

ப-தி: அது யாரால் ஏற்பட்டது?

ஆ-ன்: புத்தர் என்கிறவர் காலத்தில் ஏற்பட்டது.

ப-தி: அதற்கு என்ன ஆதாரம்?

ஆ-ன்: புத்தர் என்கிறவர் சொன்னதாக சொல்லப்படும் வாக்குகள்தான்.

ப-தி: புத்தர்தான் சொன்னார் என்பதற்கு ஆதாரம் என்ன?

ஆ-ன்: புத்தர் சங்கதி சரித்திரத்தில் பட்டதாய் இருக்கிறது. அன்றியும் அதில் இன்றைய நிலையில் மற்ற மதங்களைப் போல் கடவுள், கடவுள் வாக்கு, பல அற்புதங்கள் முதலியவை இல்லை என்பதோடு ஆலோசனைக்கும், அறிவுக்கும் பொருத்தமானதை எடுத்துக் கொண்டு மற்றவைகளைத் தள்ளி விடுவதில் பாவமோ, குற்றமோ, கடவுள் தண்டனையோ இல்லை. ஆகையால் அதற்கு ஆதாரம் தேடிக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை.

ப-தி: சரி, ரொம்ப நல்ல மாதிரி சமாதானம் சொன்னீர்கள். அப்படியானால் அம்மதத்தைப் பற்றி நமக்குக் கவலை இல்லை.

ப-தி: கிறிஸ்து மதம் என்பது என்ன?

ஆ-ன்: கிறிஸ்த்தவ மதம் என்பது கிறிஸ்துவால் சொல்லப்பட்ட கொள்கை.

ப-தி: அது எது?

ஆ-ன்: பைபிள்.

ப-தி: கிறிஸ்து என்பவர் யார்?

ஆ-ன்: கிறிஸ்து கடவுள் குமாரர்.

ப-தி: அப்படி என்று யார் சொன்னார்.

ஆ-ன்: கிறிஸ்து சொல்லியிருக்கிறார்.

ப-தி: ஒருவர் தன்னை இன்னான் என்று ரூபிக்க அவரது வாக்குமூலமே போதுமா?

ஆ-ன்: ஏன் போதாது.

ப-தி: அப்படியானால் இப்போது ஒருவன் வந்து உம்மிடம் தான் தான் கடவுள் என்று சொன்னால் ஒப்புக் கொள்ளுவீரா?

ஆ-ன்: இதுவும் கஷ்டமானப் பிரச்சினைதான். பெரியவர்களைக் கேழ்க்க வேண்டும்.

முகம்மதிய மதம்

ப-தி: முகமதிய மதம் என்றால் என்ன?

ஆ-ன்: முகம்மது நபி என்பவரால் சொல்லப்பட்ட கொள்கைகள்.

ப-தி: அதற்கு என்ன ஆதாரம்?

ஆ-ன்: குரான் என்னும் வாக்கியம்.

ப-தி: அது யாரால் சொல்லப்பட்டது?

ஆ-ன்: கடவுளால் மகமது நபி அவர்கள் மூலம் வெளியாக்கப்பட்டது.

ப-தி: அப்படி என்று யார் சொன்னார்?

ஆ-ன்: நபி அவர்கள் சொன்னார்.

ப-தி: அப்படி என்று யார் சொன்னார்?

ஆ-ன்: குரான் வாக்கியங்களில் இருக்கிறதுடன், வேறு பல சாòயங்களுமிருக்கின்றன.

ப-தி: வேறு பல சாòயங்கள் என்பது எவை.

ஆ-ன்: அந்தக் காலத்தில் நபி அவர்களுடன் இருந்த பல பெரியவர்கள் வாக்கு இருக்கிறது.

ப-தி: அவை உண்மை என்பதற்கு ஆதாரம் என்ன?

ஆ-ன்: அந்தப்படி இருக்கும் ஆதாரங்களை நம்ப வேண்டியது தான்.

ப-தி: மற்ற மதங்களும் இதுபோல் தானே?

ஆ-கன்: ஆம்.

ப-தி: அனேகமான கடவுள் வாக்கு, கடவுளால் அனுப்பப்பட்டவர்கள், கடவுள் அவதாரங்கள் என்பவர்கள், அவர்களது வாக்குகள், சம்மந்தப்பட்ட மதங்களின் தத்துவம், பலவித கடவுள் தன்மை பெற்றவர்கள் ஆகிய எல்லோரையும், ஒரே கடவுள் சொன்னார், சிருஷ்டித்தார் என்பதும் நியாயமாகுமா? ஆதலால் இம்மாதிரி மதம் என்பது வியாபாரம் மத கர்த்தர், வேதம், புராணம் என்பவைகள் வியாபாரச் சரக்குகள் என்பது பகுத்தறிவுக்காரர்களுக்கும் படும் விஷயம். இது ஒரு சமயம் தப்பாக இருந்தாலும் இருக்கலாம்.

ஆ-ன்: ஆம் எல்லாம் இப்படிப்பட்டதுதான்.

ப-தி: அப்படி இருக்க இவ்வளவு மதங்களையும் ஒரே கடவுள் உண்டாக்கி இருப்பார் என்று நீரே நம்புகிறீரா? அதனால்தான் இவைகள் ஒவ்வொரு சீர்திருத்தக்காரர்களால் அறிவாளிகளால் முன்பின் ஆராய்ந்து பார்த்து மனித சமூகத்துக்கு நன்மை செய்யவேண்டும் என்ற கவலை கொண்டவர்களால் (மனிதர்களால்) உண்டாக்கப்பட்டது என்று எண்ண வேண்டியிருக்கிறது. அப்படிக்கில்லாமல் ஒரே கடவுள் இருந்து அவரே இவ்வளவு மதத்துக்கும், மத கர்த்தருக்கும் ஆதார புருஷர் என்றால் அப்போது கடவுளின் மேன்மைக் குணம் பாதிக்கப்படவில்லையா? யாரோ சில மனிதர்களுக்கு மேன்மை கொடுப்பதற்காக கடவுளை முட்டாளாக்குவதும் பல கடவுள்களை சிருஷ்டிப்பதும் பல வேதங்களை சிருஷ்டிப்பதும் சரியா?

நாம் இருவரும் இவ்விஷயங்களில் ஒரே கருத்துடையவர்களாகி இவைகள் எல்லாம் சற்று நேரத்துக்கு உண்மை என்றே ஒப்புக் கொள்வோம். அதாவது இந்து மதம் கடவுளால் உண்டாக்கப்பட்டது என்பதையும், வேதம் கடவுள் வாக்கு என்பதையும், கிறிஸ்து கடவுள் அவதாரம் என்பதையும், முகம்மது நபி கடவுளால் அனுப்பப்பட்டவர் என்பதையும் குறானையும், மற்ற மதத்தையும் ஒப்புக் கொள்வோம். ஆனால் அவைகள் எல்லாம் இன்று ஒன்றாய் இல்லாமல் வேறு அபிப்பிராயங்களாகவும், சில முரணானவைகளாகவும் ஒரு மதத்துக்கும், ஒரு மததத்துவத்துக்கும் மற்ற மத தத்துவத்துக்கும் மற்ற தலைவருக்கும் மாறாக இருப்பானேன்? ஒன்றுக்கொன்று இன்றைய அனுபவத்தில் அதிர்ப்தி, வெறுப்பு, துவேஷம் உடையவைகளாக இருப்பானேன்?

ஆ-ன்: இதுவும் சிரமமான பிரச்சினையாகத்தான் இருக்கிறது. பெரியவர்களைக் கேட்க வேண்டும்.

ப-தி: சாவகாசமாய் பெரியவர்களைக் கேட்டு தெரிந்து கொள்ளலாம். ஆனால் இன்று நாம் எதை நம்பி எப்படி நடந்து கொள்வது?

ஆ-ன்: இவைகள் எல்லாம் உண்மை என்றோ, அல்லது உண்மை அல்ல என்றோ எப்படியோ இருக்கட்டும். அதற்கு ஆக நாம் கவலைப்படவேண்டாம். உலகில் மனிதன் உயிருள்ளவரை நல்லது எண்ணு, நல்லது செய் அவ்வளவுதான்.

ப-தி: நல்லது எது? தீயது எது என்பதற்கு அளவு கருவி என்ன?

ஆ-ன்: இது மிகவும் கஷ்டமான பிரச்சினையாகத்தான் இருக்கிறது. ஆனாலும் பெரியவர்கள் நடந்து காட்டியது, சொல்லி இருப்பது இவைகளைக் கண்டு தெரிந்து கொள்ள வேண்டியதுதான்.

ப-தி: பெரியவர் யார் என்பதற்கு அளவு கருவி என்ன? ஒருவர் ஒருவரை பெரியவர் என்றால் மற்றொருவர் அவரை ஒப்புக்கொள்வதில்லை. அவருக்கு மாறாக அல்லது வேறொன்றைச் சொன்னவர்களை பெரியவர் என்கிறான். இதற்கு ஒரு பரீஷை குறிப்பு வேண்டுமே?

ஆ-ன்: இதுவும் கடினமான பிரச்சினையாகத்தான் இருக்கிறது. இதற்கெல்லாம் உம்முடைய சமாதானம்தான் என்ன சொல்லும் பார்ப்போம்.

ப-தி: என் சமாதானம் என்ன? நான் தான் மதத்துவேஷி, பார்ப்பனத் துவேஷி, நாஸ்த்திகன், சுயமரியாதைக்காரர்கள் என்றெல்லாம் பெயர் வாங்கினவனாய் விட்டேனே, என்பேச்சை யார் கேட்பார்கள். நீர் ஆஸ்திகராயிற்றே உமக்கு தெரியுமென்றும், தெரியாவிட்டாலும் உம்முடைய உள்ளத்தில் சதா குடிகொண்டிருக்கிற கடவுள் உணர்த்துவார் என்றும் கருதி உண்மையான சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ளுவதற்காகக் கேட்டேன். நல்ல வேளையாக நீர் பதில் சொல்லாவிட்டாலும் என்னை வையாமல் பெரியவர்களைக் கேட்டுச் சொல்லுகிறேன் என்று சொன்னீரே அதுவே எனக்கு ரொம்ப திருப்தி. ஆஸ்த்திகர்களில் இப்படிப்பட்டவர்கள் அருமை, மிக அருமை. சந்தேகம் கேட்டால் அடி, உதை, நாஸ்திகன், பிராமண துவேஷி, ஆரிய துவேஷி… என்றெல்லாம் வெறிபிடித்தவர்கள் போல் ஆடுவார்கள். ஆதலால் உம்மைப்பற்றிக்கூட எனக்கு சந்தேகம்தான்.

ஆ-ன்: என்ன சந்தேகம்?

ப-தி: நீர் ஆஸ்திகரோ என்னமோ என்று.

ஆ-ன்: நான் உண்மையில் ஆஸ்திகன். அதாவது ஒரு கடவுள் இருப்பார் என்று நம்புகிறவன்.

ஆனால் இத்தனை மதங்களையும், மத கர்த்தாக்களையும் அந்தந்த மத வேதங்களையும் அவையெல்லாம் கடவுளால் சொல்லப்பட்டவை என்பதிலும் அவ்வேதக் கதைகள், புராணங்கள் ஆகியவை உண்மை என்பவைகளையும் பற்றி அவநம்பிக்கை கொண்டவன்தான் .

ப-தி: அப்படியானால் நீர் இருப்பர் என்ற கடவுள் நம்பிக்கையை யார் எந்த ஆஸ்திகர் லட்சியம் செய்வார். ஒரு குறிப்பிட்ட கடவுள், அல்லது ஒரு குறிப்பிட்ட மதகர்த்தர், அல்லது ஒரு குறிப்பிட்ட மதம் என்பவைகளை ஏற்றுக் கொளாதவர், நம்பாதவர் எல்லோரும் மற்ற மதக்காரனுக்கு நாஸ்திகனே – நம்பிக்கையற்றவனே யாவான். நாஸ்திகம் என்பதும் நம்பிக்கை யற்றது என்பதாக எல்லா ஆஸ்திகர்களுக்கு ஒரே பொருள்தான்.

ஆ-ன்: யாரோ எப்படியோ போகட்டும் எனக்கென்ன என் புத்திக்கு சரி என்று பட்டதை செய்து விட்டு செத்துப்போகிறேன்.

ப-தி: ஏன் சாகிறீர். உயிருடன் தான் இருமே உமக்கு சரி என்று படாதைத்தான் செய்யுமே, எனக்கென்ன கவலை? எப்படி இருந்தாலும் ஆஸ்திகர்கள் வைது கொண்டுதானிருப்பார்கள்.

குடி அரசு – உரையாடல் – 20.03.1938

~cstart

நெருக்கடி

சர்வகட்சி தமிழர் மகாநாடு

~cmatter

தமிழ்நாட்டில் இது சமயம் நல்ல ஒரு நெருக்கடி ஏற்பட்டு விட்டது. தமிழ் மக்களுக்கு அதை சமாளிக்க சக்தி இல்லாமல் போய்விட்டது. நாம் எவ்வளவு சொல்லியும் மக்கள் அலட்சியமாக இருந்ததாலேயே இக்கதி ஏற்பட்டது. அலட்சியமாய் இருந்து விட்ட மக்கள் அதன் பயனை அனுபவிக்க வேண்டியதுதான். ஒரு பெரியார் நம்மை “துக்கம்” விசாரிக்க வந்தவர் “வைசிராய் கடன் நிவாரணச் சட்டத்திற்கு அனுமதி அளிக்க மாட்டார்கள் என்று இருந்தேன். அளித்து விட்டாரே” என்று சொல்லி அது சம்மந்தமான துக்கம் விசாரித்தார். வைசிராய் பிரபு செய்ததில் ஒன்றும் தவறு இல்லை. நமது யோக்கியதைக்கு உண்டான பயனை நாம் அடைவதில் சங்கடப்படுவானேன் என்று வெறுப்போடு சமாதானம் கூறினோம் என்றாலும் தமிழ் மக்களின் கேவல நிலை இவ்வளவு மோசமாக இருந்ததை நாம் இதுவரை கண்டதில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

கடன் நிவாரண சட்டம் தமிழ் மக்களுக்கு செய்யப் போகும் கொடுமை இவ்வளவு அவ்வளவு என்று இப்போது யாருக்கும் புலப்படாது. பின்னால் அதன் பயனை அனுபவிக்கும் போது தான் தெரியப் போகிறது. சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் அச்சட்டம் விவசாய முன்னேற்றத்தை அடியோடு பாழ்படுத்துவதோடு சிறிய விவசாயிகளை கூட்டோடு அழித்துவிட்ட பெரிய மிராசுதார்களை – ஏன் நாளடைவில் ஒரு சில ஜமீன்தாரர்கள், காட்டுராஜாக்கள் என்பவர்களைத் தவிர மற்ற கிராம வாசிகளையெல்லாம் தஞ்சை ஜில்லாவிலுள்ள ஆதி திராவிடர்களைப் போல் பரம்பரை அடிமை குடும்பங்களாக ஆக்கப்படபோகின்றது. அப்போதுதான் நம் நாட்டில் இருந்து இன்னும் ஏராளமான மக்கள் வெளிநாடுகளுக்கு கூலிகளாகப் போகப் போகிறார்கள். ஒன்று இரண்டு குடும்பம் சமாளித்துக் கொண்டு இங்கு இருக்க ஆசைப்பட்டால் அவையும் பிரவி அடிமைக் குடும்பங்களாகத்தான் இருக்க முடியும்.

இது ஒரு புரமிருக்க இச்சட்டத்தால் பூமியை பெருவாரியாக வாரிக்கட்டி அணைத்துக்கொள்ளும் பெரிய ஜமீன்தாரனாவது ஒழுங்காக வாழ முடியுமா என்றால் அவனும் திண்டாடி தெருவில் நின்று தன் செல்வம் முழுவதையும், உத்தியோகப் பார்ப்பானுக்கும், வக்கீல் பார்ப்பானுக்கும், வைத்தியப் பார்ப்பானுக்கும், புரோகிதப் பார்ப்பானுக்கும் மற்றும் மந்திரி பார்ப்பானுக்கும், மாமா பார்ப்பானுக்கும் அழுதுவிட்டு வருணாச்சிரபடிப் பிரகாரம் 4ம் படிக்கு இரங்கி விட வேண்டியதுதான் என்பதைத் தவிர வேறுநிலை ஏற்படப் போவதில்லை. சுமார் 200 வருஷகாலமாக முன்னேறி விடுதலை பெற்று வந்த நம் நாட்டு மனித சமூகம் மனு ஆட்சிக்குப் போக தள்ளப்பட்டு விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

எந்தக் கடன்காரனுக்கு இச்சட்டத்தால் கடன்பாகை ஒழிந்ததாக மனப்பால் குடிக்கிறோமோ அந்தக் கடன்காரனுக்கு ஒரு காசும் லாபம் ஏற்படப் போவதில்லை. கையில் ஒரு காசும் நிலைக்கப் போவதில்லை. ஒரு சிறு விவசாயியானவன் சற்று பெரிய விவசாயி அல்லது மிராசுதாரன் இடம் வாங்கியிருந்த கடன் இல்லை என்று ஆகப் போகிறது. ஆனால் இதனால் சிறு விவசாயிக்கு லாபம் என்ன? என்றால் ஒன்றும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். சிறு விவசாயி கையில் காசு இருந்தால் முன்னமேயே கொடுத்துக் கடன் தீர்த்து இருப்பான். கையில் இல்லாததால் பாடுபட்டு கிடைக்கும் பலனில் ஒரு பங்கு தான் எடுத்துக் கொண்டு ஒரு பங்கு பூமிக்காரனுக்கோ, கடன் கொடுத்தவனுக்கோ கொடுத்துக் கொண்டு அப்படியே காலம் கழித்து வருவான். கடன் கொடுத்தவனும் பூமிக்காரனும் விளைந்ததில் கஷ்டக் கூட்டு மாதிரி ஒரு பங்கு விவசாயிக்குக் கொடுத்துவிட்டு தன் பூமி பொருமானத்துக்கு நூத்துக்கு 4 அணா, 6 அணா வட்டி கட்டும்படியோ அல்லது தான் கொடுத்த பணத்துக்கு 8 அணா, 12 அணா வட்டி கட்டும்படியோ எப்படியாவது வசூல் செய்து கொண்டு வருவான். இப்படிப்பட்ட இந்த லேவாதேவிக்காரனும், பூமி உடையவனும் மற்றொரு பெரிய லேவாதேவிக்காரனிடம் முன் வட்டி கொடுத்தோ, அல்லது மாதா மாதமோ மூன்று மாதத்துக்கு ஒரு முறையோ வட்டி கட்டிக் கொண்டு வந்தோ ஒரு அளவுக்கு வருஷம் 200, 300 ரூபாய் சம்பாதனை மீதக்காரனாகவோ அல்லது குடும்ப செலவு மாத்திரம் தாட்டிக் கொள்ளக் கூடியவனாகவோ வாழ்ந்து வருவான். இந்த சட்டமானது இவ்வளவு காரியத்தையும் தடைப்படுத்தி ஒரு 10 ரூபாய் கடன் வேண்டுமானால் 100 ரூபாய் பூமியையோ, 50 ரூபாய் மாட்டையோ விலை பேசினால் ஒழிய ரூபாய் கிடைக்காத மாதிரியும் ஒரு 100, அல்லது 200 ரூபாய் கடன் வேண்டியிருந்தால் 500 ரூபாய் 1000 ரூபாய் பூமியை விலைக் கிறையம் செய்தால் ஒழிய கிடைக்காத மாதிரியும் செய்து விட்டது.

கடன் அல்லது லேவாதேவி என்று சொல்லுவது ஒரு பாபமான காரியமோ, அல்லது மோசடியான காரியமோ என்று சொல்லி விட முடியாது. பொது உடமை தேசமாய் இருந்து மக்களுக்கு சுதந்திரமாய் தொழில் , வியாபாரம், விவசாயம் செய்து சம்பாதிக்க இடம் இல்லாத நிலையில் சவுகரியம் சட்டம் செய்து வைக்கப்பட்டிருக்கும் நாட்டில் கடனும், லேவாதேவியும் குற்றமான காரியம் என்று சொல்லலாம். நம் நாட்டையும் அப்படி ஆக்குவதானால் இரு கையேந்தி வரவேற்கலாம். ஆனால் நம் நாடு அப்படி இல்லை.

விவசாயி ஆனாலும் சரி, பெருமித பூமி உடையவரானாலும் சரி, சதா சர்வகாலம் வெருங்கையனாய் இருந்து அன்னியர் கை பார்த்தே பணம் பெற்று விளைவு வந்தபின் கொடுப்பதும், விளையாவிட்டால் கடன் சொல்லி புதிய கடன் வாங்குவதுமான நிலையில் இருந்து வருகிறார்கள். இவர்களுக்கு பணம் இல்லாமல் தடுத்து விட்டால் விவசாயத் தொழில் முறை எப்படி நடக்கும் என்று கேழ்க்கிறோம்.

இந்த சட்டம் செய்ததைப் பற்றி விவரமரியாதவர்களும், பார்ப்பனர்களின் கூலிகளும், அடிமைகளும் புகழ்ந்து கூறி பாமர மக்களை ஏமாற்றலாம். ஆனால் இதன் பலன் என்ன என்றால் பார்ப்பனீயத்திற்கு ஆதரவளிப்பதும், வருணாச்சிரம வாழ்க்கை முறையை ஏற்படுத்துவதும் என்பதைத் தவிர வேறு ஒன்றும் காணமுடியாது என்பதே நமதபிப்பிராயம். உண்மையில் சிறு விவசாயியும், பெரு விவசாயியும் அழிந்து போவார்கள். இவர்களுக்கு விவசாயத்துக்கு பணம் கிடைக்கும்படி சட்டத்தில் ஒரு மார்க்கமும் செய்யப்படவில்லை. அவசர காரியத்துக்கும் திடீர் என்று ஏற்படும் செலவுகளுக்கும் பணம் கிடைக்க சட்டத்தில் ஒரு மார்க்கமும் செய்யவில்லை. இதனால் கிரமமான முறையில்லாமல் நிமித்திய மாத்திரம் என்றும் அவசரத்துக்கு என்றும் பெரும் நிபந்தனைகளை விவசாயிகள் ஏற்றுக்கொண்டு கிரயம் எழுதிக் கொடுக்கவும், அதிக தொகைக்கு எழுதிக் கொடுக்கவுமான காரியங்கள் தாராளமாக நடந்து வர இடமேற்படும். இதன் முடிவு என்ன ஆகும் என்று பார்ப்போமானால் பெரும்பாகமான வரவு செலவுகள் கோர்ட்டுக்குப் போய் வக்கீல்கள் பிழைக்கவே கொடுத்தவன், வாங்கினவன் ஆகிய இருவர் சொத்தும் பாழாய்விடப் போகிறது.

இவை தவிர இச் சட்டத்தால் இன்னும் பல தொல்லைகளும் விளையப் போகின்றன. இவற்றைப் பற்றி தமிழ் மக்கள் ஆத்திரப் பட்டார்களே ஒழிய சரியாக முயற்சி ஒன்றும் எடுத்துக் கொள்ளவில்லை. தக்க எதிர்ப்பு இருப்பதாகக் காட்டிக் கொண்டிருந்தால் வைசிராய் பிரபு இதற்கு அனுமதி அளித்திருக்க மாட்டார் என்றுதான் கருதுகிறோம்.

இப்படிப்பட்ட விஷயங்களில் பார்ப்பனர்களுக்கும், நமக்கும் ஒரு பெரிய வித்தியாசமிருப்பதை நாம் மறைப்பதில் பயனில்லை. விவசாரம் ஒழிப்பு, தேவதாசி ஒழிப்பு முதலிய ஒரு சிறு சட்டமானாலும் பார்ப்பனர்களுக்கும் அவர்கள் வரும்படிக்கும், சோம்பேரிப் பிழைப்புக்கும் கெடுதி தரத்தக்கது என்று உணர்ந்தால் உடனே அவர்கள் அத்தனை பேரும் கூப்பாடு போடுவார்கள். சகல பெரிய மனிதர் என்பவர்களும் அபிப்பிராயம் கூறி வைசிராயையும், இந்தியா மந்திரியையும், பிரிட்டிஷ் பிரதம மந்திரியையும் தொல்லை படும்படி செய்வார்கள். நேரில் போய் பார்த்து விட்டும் வருவார்கள். உதாரணமாக தேவஸ்த்தான சீர்திருத்த சட்டம், இனாம் பூமி சட்டம் முதலியவைகளில் எவ்வளவு தொல்லை கொடுத்தார்கள்? எத்தனை தடவை திரும்பி வரும்படி செய்தார்கள்? அப்படியெல்லாம் இருக்க மனித சமூகத்தின் ஒரு பெரும் சமூகமாகிய விவசாயிகளை அடியோடு அழித்து அடிமைகளாக்கும் இக்கொடிய சட்டம் வெகு சுலபமாக நிறைவேற்றப்பட்டு விட்டது என்றால் தமிழ் மக்கள் கேவல நிலைக்கு இதை விட வேறு என்ன உதாரணம் வேண்டும்?

பொருளாதாரத் துரையில் நம்மவர்களுக்கு ஏற்பட்ட இப்படிப்பட்ட கொடுமை ஒருபுரமிருக்க இனி கல்வித் துரையிலும் அறிவுத் துரையிலும் நமக்கு ஹிந்தியாலும், காந்தி கல்வித் திட்டத்தாலும் வரப்போகும் கேட்டிற்கு அளவு கூற முடியாது. இவற்றை பொதுமக்கள் கூட்டோடு எதிர்க்கிறார்கள் என்றாலும் எதிர்ப்பை சரியானபடி நடத்தி கிளர்ச்சி செய்ய நாதி இல்லாமல் போய்விட்டது. திருடனைத் தடம் கேழ்ப்பது போல் நமது பிரதிநிதிகளாகச் சட்டசபையில் உள்ள தலைவர்கள் எதிரிகளின் ஒற்றர்களாக அமைந்து விட்டார்கள். நம்மைக் காட்டிக் கொடுப்பதற்கே அவர்கள் சட்ட சபையில் இருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது. அவர்களது ஆதரவுகளை நமது எதிரிகளான பார்ப்பனர்கள் பெற்றுவிட்டதாலேயே எதிரிகளின் காரியங்களுக்குப் பொதுமக்கள் ஆதரவு இருப்பதாக சர்க்காரும் கருதி வருவதாக தெரிகிறது. வெளியில் உள்ள கட்சித் தலைவர்களும் இது விஷயத்தில் எவ்வித முயற்சியும் எடுத்துக் கொண்டதாகவோ, எடுத்துக் கொள்வதாகவோ தெரியவில்லை.

ஆதலால் கடன் நிவாரணச் சட்டம் ஒழியவும், ஹிந்தி முயற்சி அழியவும், காந்தி கல்வித் திட்டம் கைவிடும்படி செய்யவும் தமிழ் மக்கள் பெரியதொரு முயற்சி செய்ய வேண்டியது மிகவும் அவசரமும், அவசியமுமான காரியமாய் இருந்து வருகிறது. பொருளைப் பற்றியாவது எப்படியாவது சரிப்படுத்திக் கொள்ளலாம் என்றாலும் சரியான பொறுப்பும், நம்பிக்கையும் உள்ள தலைவர்கள் யார் என்பது கடினமான பிரச்சினையாக இருந்து வருகிறது. யார் எப்படி இருந்த போதிலும் இந்த விஷயங்களையும் மற்றும் சில அரசியல் விஷயங்களையும் பற்றி ஆலோசித்து முடிவு செய்ய ஏப்ரல் மாதத்தில் ஒரு சர்வ கò தமிழர்கள் மகாநாடு கூட்டி யோசிக்க வேண்டியது அவசியம் என்பதையும் அதிலிருந்து தக்கதொரு கிளர்ச்சி செய்து ஒரு முடிவுக்கு வரவேண்டும் என்பதையும் மிக்க கவலையோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

குடி அரசு – தலையங்கம் – 20.03.1938

You may also like...