சேலத்துக்கு என்ன பதில் இது என்ன கத்தரிக்காய் பட்டணமா?

 

இன்று பதவியில் உள்ள மந்திரிகள் சத்திய கீர்த்திகளாம், மகா யோக்கியர்களாம், தேசாபிமானத்துக்காகவும், மக்களுக்கு நன்மை செய்வதற்குமாகவே மந்திரி வேலை பார்க்கிறார்களாம். அவர்கள் தான் மக்களின் உண்மையான பிரதிநிதிகளாம். அதற்கு ஆதாரம் எலக்ஷனில் மெஜாரிட்டி ஓட்டுகளால் அவர்கள் வெற்றி பெற்றிருப்பதுதானாம். மற்றும் அவர்களுக்கு உதவியாய் அவர்களது கட்சியில் காங்கரசின் பேரால் இருக்கிற சட்டசபை மெம்பர்களும் காரியதரிசிகளும்கூட அவர்களைப் போலவே மகா யோக்கியர்களாம், உத்தமர்களாம், கண்ணியம் வாய்ந்த பெரிய மனிதர்களாம். ஆதலால் அவர்கள் செய்யும் காரியங்கள் எல்லாம் சரியானவைகளாம். அக்காரியங்களைப் பற்றி வேறு யாரும் ஆக்ஷேபணை சொல்லக்கூடாதாம். அப்படி மீறி யாராவது ஆக்ஷேபணையோ குறையோ சொல்லுகிறவர்கள் தேசபக்தர்கள் அல்லாதவர்களாம். தேசாபிமானம் இல்லாதவர்களாம். சுயநலக்காரர்களாம். அவ்வளவு மாத்திரம் அல்லாமல் யோக்கியர்கள் கூட அல்லவாம். கெட்ட எண்ணக்காரர்களாம். இவையும் இவை போன்றனவுமேதான் இன்றைய மந்திரிகள் முதல் அவர்களுடைய காரியதரிசிகள், கூலிகள், பத்திரிகைகள் முதலாகியவர்கள் வரை எல்லோர்களுடைய சகல செய்கைகளுக்கும் சமாதானமாக சொல்லப்பட்டு வருகின்றன.

~subhead

பழைய மந்திரிகள்

~shend

இந்த மந்திரிகள் பதவிக்கு வரும் காலம் வரையில், மந்திரி பதவி வைத்து வந்தவர்கள் எல்லோரும் பொது ஜன ஓட்டினாலும், மெஜாரிட்டி பலத்தினாலும் பொது ஜனப்பிரதிநிதி என்கின்ற உரிமையினாலும் மற்றும் தங்களுடைய உண்மையான யோக்கியதாம்ஸம் யோக்கியமான நடத்தை முதலியவைகளாலுமே மந்திரி பதவி வகித்து சட்டத்திற்கு உட்பட்டு தங்களால் கூடுமானதை செய்து வந்திருக்கிறார்கள். அது மாத்திரமல்ல, அவர்கள் பதவியிலிருந்த 17 வருஷங்களில் செய்த சகல காரியங்களுக்கும் அப்போது மாத்திரமல்ல இப்போதும் சமாதானம் சொல்லித் தாங்கள் செய்தது சட்டப்படியும் ஒழுங்கு ஒழுக்கம் ஆகிய குணங்கள் படிக்கும் மக்களுக்கு கொடுத்த வாக்குப்படிக்கும் நியாயமானது என்பதை ருஜúவு செய்யத் தயாராய் இருக்கிறார்கள்.

உதாரணமாக ஒன்று இரண்டு சம்பவங்களையும் எடுத்துக் காட்டுவோம்.

~subhead

ஜஸ்டிஸ் மந்திரிகள் செயல்

~shend

ஜஸ்டிஸ் மந்திரிகளை காங்கரஸ்காரர்கள் நிலவரி குறைக்கவில்லை என்று குற்றம் சொன்னார்கள். அதற்கு ஜஸ்டிஸ் மந்திரிகள் “பொருளாதார (பொக்கிஷ) இலாகா வரி இலாகா எங்கள் கையில் இல்லை. அவை சட்டப்படி சர்க்கார் மெம்பர் கையில் இருக்கிறது” என்று சொன்னதோடு தங்களால் கூடுமானவரை சர்க்காரை நெருக்கிக் கேட்டு வரி குறைக்கச் செய்கிறோம் என்று சொல்லி நிலவரியில் ரூபாய்க்கு 2 அணா சில இடங்களில் 3 அணா சில இடங்களில் 4 அணா வீதம் குறைக்கச் செய்தார்கள். இப்படிச் செய்ததும் கூட தங்களுக்கு அந்த அதிகாரமில்லாதபோது சர்க்காரை நெருக்கி வரி குறைக்கச் செய்தார்கள்.

அப்படிஇருந்தும் நமது காங்கரஸ் யோக்கியர்கள் இதையும் குற்றம் சொன்னார்கள். என்ன குற்றம் சொன்னார்கள் என்றால் “ஏன் 100க்கு 50 வீதம் குறைக்கவில்லை? முடியாவிட்டால் 33 வீதமாவது ஏன் குறைக்கக் கூடாது” என்று கேட்டார்கள்.

~subhead

காங்கரஸ்காரர்கள் குறும்பு

~shend

அதற்கு ஜஸ்டிஸ் மந்திரிகள் “எங்களால் இவ்வளவுதான் முடிந்தது. அதிகாரமில்லாத துறையில் நாங்கள் என்ன செய்ய முடியும்” என்று உண்மையைச் சொல்லிக் கொண்டார்கள். இதற்கு காங்கரஸ்காரர்கள் குறிப்பாக தமிழ்நாடு காங்கரஸ் கமிட்டித் தலைவராய் இருந்த தோழர் சத்தியமூர்த்தியாரும் மற்ற காங்கரஸ் தலைவர்களும் “அந்தப்படி குறைக்க உங்களுக்கு அதிகாரமில்லையானால் நீங்கள் குறைக்க வேண்டும் என்று சொன்னதை பொக்கிஷ மந்திரி ஏற்றுக் கொள்ளவில்லையானால் ஏன் உடனே ராஜிநாமா கொடுத்துவிட்டு வெளியில் வரவில்லை?” என்று கேட்டார்கள். அதற்கு ஜஸ்டிஸ் கட்சி மந்திரிகள் “எங்களுக்கு அதிகாரமில்லாததை செய்யச் சொல்லுவதும், செய்யாவிட்டால் ராஜிநாமா கொடுப்போம் என்பதும் சட்டத்திற்கும் ஒழுக்கத்திற்கும் முரணானது என்பதோடு, அம்மாதிரி செய்வது பொது ஜனங்களுக்கும் சர்க்காருக்கும் கொடுத்த வாக்குறுதிக்கும் விரோதமானது” என்றும் சொன்னார்கள். இந்த சமாதானத்தை வைத்துக் கொண்டு காங்கரஸ்காரர்கள் பொது ஜனங்களிடம் “ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள் சுயமரியாதை இழந்து மந்திரி பதவியில் ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள்” என்று விஷமப் பிரசாரம் செய்தார்கள். பாமர மக்களில் மடையர்களும் முட்டாள்களுமாய் இருந்த பல ஜனங்கள் இதை நம்பி மஞ்சள் பெட்டியை நிரப்பினார்கள்.

~subhead

இன்றைய மந்திரிகள்

~shend

இது போன்ற இன்னும் அனேக காரியங்களுக்குப் பல உதாரணங்கள் எடுத்துச் சொல்ல விஷயங்கள் இருக்கின்றன. என்றாலும் நாம் எடுத்துக் கொண்ட விஷயத்திற்கு போக வேண்டியது அவசரமாயிருக்கிறபடியால் அவ்விஷயங்களை விவரிப்போம். ஜஸ்டிஸ் மந்திரிகள் நிர்வாகத்தில் கண்ணியமும், நாணயமும் சிறிதும் சந்தேகப்படுவதற்கு இடமில்லாத மாதிரியிலும், அவர்களது சொந்த எதிரிகளோ அரசியல் எதிரிகளோ ஏமாற்றமடைந்த எதிரிகளோ கூட குறை கூறுவதற்கு இடமில்லாமலும் இதுவரை யாராலும் குறைகூறப்படாமலும் வாழ்ந்து வந்திருக்கிறார்கள் என்பதை நாம் எடுத்துக் காட்ட வேண்டியதில்லை. ஆனால் அப்படிப்பட்ட மந்திரிகளை வீழ்த்தி பதவிக்கு வந்த மகா உத்தமர்களும் நாணையஸ்தர்களும் சுயநலம் என்பதே சிறிதும் இல்லாதவர்களுமானவர்கள் என்று கூறிக் கொள்ளும் இன்றைய மந்திரிகள் வாழ்வு ஆரம்பமாகி இன்னும் ஒரு வருஷம் கூட ஆகவில்லையென்றாலும் அவர்கள் எவ்வளவு கேவல நிலைக்கும் இழி நிலைக்கும் வந்துவிட்டார்கள் என்பதை சிந்தித்துப் பார்க்கும்படி பொது மக்களை வேண்டிக் கொள்ளுகிறோம். இன்றைய மந்திரிகளின் சில நடவடிக்கைகளுக்கு சமாதானம் சொல்ல முடியாமல் இருப்பதோடு பொது ஜனங்களால் சந்தேகம் கொள்ளாமல் இருக்கும்படி கூட நடக்க முடியாமல் இருக்கிறார்கள் என்றால் இது இந்திய தேசீயத்துக்கே ஒரு மானக் கேடான சங்கதி என்று மிகமிக வருத்தத்தோடு கூற வேண்டியிருக்கிறது.

~subhead

கட்சிப் போட்டி

~shend

அரசியலில் மாத்திரம் அல்ல சகலத் துறைகளிலும் கட்சிப் பிரதிகட்சி போட்டி உண்டு என்பதையும் ஒருவரை ஒருவர் வெற்றி கொள்ள ஒவ்வொருவருக்கும் உரிமை கொடுக்கப்பட்டிருக்கின்றது என்றும் தாசிகள், வக்கீல்கள், வியாபாரிகள் முதலாகியவர்களுக்கு ஓர் அளவு நாணையக் குறைவுக்கும் ஒழுக்க ஈனத்துக்கும் சமுதாயம் இடம் கொடுத்திருப்பது போல் அரசியலுக்கும் கொடுத்திருக்கிறது என்றும் அப்படி கொடுக்கப்பட்டதாக பட்டாங்கமாய் இல்லாவிட்டாலும் பழக்கத்தில் பிரத்தியக்ஷ அனுபவத்தில் இருந்து அனுமதிக்கப்பட்டு வருகிறது என்றும் நாம் மனப்பூர்வமாய் ஒப்புக் கொள்ளுகிறோம்.

~subhead

தகராறைக் கிளப்பியவர்கள் யார்?

~shend

ஆனால் இன்றைய மந்திரிகளின் சில காரியங்கள் அவ்வெல்லை களையெல்லாம் மீறினவைகளாக இருக்கின்றன என்று கருதுவதால், அவற்றை பொதுநலத்தைக் கோரியும் அரசியல் வாழ்வு கூடியவரை சிறிதும் சந்தேகத்துக்கு கூட இடமில்லாமல் இருக்க வேண்டும் என்பதை உத்தேசித்தும், சேலம் தண்ணீர்க் குழாய் வேலைதிட்ட விஷயமாய் சென்னை அரசாங்கத்தின் நடத்தையை ரண சிகிச்சை (ஆப்பரேஷன்) செய்ய வேண்டியதாய் இருக்கிறது. ஏனெனில் சேலம் முனிசிபல் சேர்மென் வைஸ்சேர்மென் உள்பட 11 மெம்பர்கள் தங்கள் கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்து இருக்கிறார்கள். அரசாங்கத்தில் ஏன் என்று கேட்க ஆளில்லை. ராஜினாமா செய்தவர்கள் சர்க்கார் தலையீட்டினால் முனிசிபாலிட்டிக்கு ஒண்ணரை லக்ஷ ரூபாய் நஷ்டமாகிறது என்று புள்ளி விவரங்களோடு கணக்கு காட்டிவிட்டு ராஜினாமா செய்திருக்கிறார்கள். ராஜினாமா செய்தவர்கள் ஜஸ்டிஸ் கட்சியாருமல்ல, சுயமரியாதைக் கட்சியாருமல்ல. முதல் மந்திரியாரின் ஒப்பற்ற ஆயுதமாகிய ராமசாமிக்கு வேண்டியவர்கள் என்னும் கூட்டத்தைச் சேர்ந்தவர்களுமல்ல. சேலம் சேர்மென் முதலிய 11 கவுன்சிலர்கள் ராஜினாமா செய்வதற்கு காரண பூதமான காரியம் ராஜிநாமா செய்யப்பட்டவர்களால் மாத்திரம் கிளப்பப்பட்ட விஷயமுமல்ல. காங்கரஸ் தலைவர்களான காங்கரஸ் மெம்பர்களான காங்கரஸ் எம்.எல்.சி., எம்.எல்.ஏ., மெம்பர்களான தோழர்கள் வெங்கட்டப்ப செட்டியார், சடகோப முதலியார் போன்றவர்களால் கிளப்பப்பட்டவையாகும்.

~subhead

கத்திரிக்காய் பட்டணமா?

~shend

இப்படி இருக்க இக்குறையை நீக்கிக்கொள்ள இன்றைய அரசாங்கம் அல்லது காங்கரஸ் மந்திரிசபை அல்லது சம்மந்தப்பட்ட மந்திரிமார் என்ன முயற்சி எடுத்தார்கள், என்ன கவலை எடுத்தார்கள் என்பதை கவனிக்கும்போது விஷயமும் நிலைமையும் சிறிதும் சகிக்கக் கூடியது என்பதாக தோன்றவில்லை. சாதாரணமாக வேண்டுமென்றே குறும்புக்காக அயோக்கியத்தனத்துக்காக அதாவது தங்களுக்கு மெஜாரிட்டி இல்லையே, தங்கள் ஆள்கள் தலைவர்களாக வரமுடியவில்லையே என்கின்ற காரணத்துக்காக சற்று வெளியில் எழுந்து போய் தாழ்வாரத்தில் இருந்துவிட்டு உடனே உள்ளே வந்து உட்கார்ந்து கொண்ட பித்தலாட்ட நாடக காட்சிகளையெல்லாம் பிரமாதப்படுத்தி எதிரி மீது குற்றம் சாட்டி வந்த காங்கரஸ்காரர்களும் – காங்கரஸ் பத்திரிகாசிரியர்களும் கையும், களவுமாய் பிடித்த இந்த காரியத்துக்காக ஒரு பிரபல நகரசபையின், பிரபல தலைவர் உபதலைவர் மெம்பர்கள் 11 பேர் குற்றத்தைப் பொது ஜனங்கள் உணரும் பொருட்டு ராஜிநாமா கொடுத்த விஷயத்தை இவ்வளவு அலட்சியப்படுத்தி, மக்கள் கண்களில், வாயில் வயிற்றில் மண்போட முயற்சி செய்கிறார்கள் என்றால் இது என்ன கத்திரிக்காய் பட்டணமா என்று கேட்க வேண்டியதாகவே இருக்கிறது.

சேலம் விஷயத்தைப்பற்றி கவலைப்படுகிறவர்கள் அல்லது உண்மை அறிய வேண்டும் என்று ஆசைப்படுகிறவர்கள் முதலில் சில விஷயங்களை ஞாபகப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும். அதாவது மந்திரிகள் கண்ட்டிராக்ட் விஷயத்தில் ஏன் புகுந்தார்கள்? இதுவரை ஸ்தலஸ்தாபன காரியங்களில் மந்திரிகள், கண்டிறாக்ட் காரியங்களில் பிரவேசித்த வழக்கம் இருந்திருக்கிறதா என்பதை கவனிக்க வேண்டும்.

~subhead

கவனிக்க வேண்டிய விஷயங்கள்

~shend

  1. நிற்க, சேலம் தண்ணீர் குழாய் வேலைக்கு டெண்டர் கேட்டது சேலம் முனிசிபாலிட்டியார்.
  2. டெண்டர் போட்டவர்கள் 16 கம்பனிகள்.
  3. அவற்றில் சரியானபடி டெண்டர் நிபந்தனையின்படி போடப்பட்ட டெண்டர்கள் 3 தான்.
  4. அவற்றுள் குறைந்த ரேட்டு டெண்டரான ஹியூம் அண் கோ டெண்டரை குறிப்பிட்டு சிபார்சு செய்து சர்க்காருக்கு மற்ற டெண்டர்களுடன் அனுப்பப்பட்டது.
  5. அவற்றை பரிசோதனை செய்து மேற்குறிப்பிட்ட ஹியூம் கம்பெனி டெண்டரையே ஒப்புக் கொள்ளும்படி சர்க்கார் சேலம் நகர சபைக்கு சிபார்சு செய்து விட்டார்கள்.
  6. இதற்கு இடையில் கிறிஸ்துமஸ் விடுமுறை வந்து விட்டதால் டெண்டர்கள் முனிசிபாலிட்டியில் பைசல் செய்யப்படாமல் சற்றுத் தயங்கி இருந்தன.
  7. இந்தச் சந்தர்ப்பத்தில் திடீரென்று ஒழுங்குப்படி நிபந்தனைப் பிரசாரம் எழுதப்படாத சேலம் முனிசிபாலிட்டியாரால் சிபார்சு செய்யப்படாத ஒரு மைசூர் பத்திராவதி கம்பெனி டெண்டரை ஒப்புக்கொள்ளும்படி சர்க்கார் சேலம் முனிசிபாலிட்டிக்கு தந்தி கொடுத்தார்கள்.
  8. இந்த பத்ராவதி கம்பெனி டெண்டர் ஹியூம் கம்பெனி டெண்டரை விட ஒரு லக்ஷத்து இருபது ஆயிரம் ரூபாய் அதிகமான தொகை கொண்டதாகும்.
  9. அது மாத்திரமல்லாமல் இந்த பத்திராவதி கம்பெனி டெண்டரையும் வேலை முறையையும் சென்னை குழாய் இலாக்கா தலைமை அதிகாரியும் நிபுணருமான சானிட்டரி இஞ்சிநீயர் சிபார்சு செய்யவில்லை (தள்ளிவிட்டார்).
  10. ஒரு லக்ஷத்து இருபது ஆயிரம் ரூபாய் அதிக செலவாவதாலும் சானிட்டரி இஞ்சிநீயர் ஒப்புக்கொள்ளாததாலும் சேலம் முனிசிபாலிட்டியார் பத்திராவதி கம்பெனி டெண்டரை ஒப்புக்கொள்ள மறுத்துத் தீர்மானம் செய்துவிட்டார்கள்.
  11. இந்த மறுப்பு தீர்மானத்தை சேலம் முனிசிபல் கவுன்சிலில் பிரேரேபித்தவர் காங்கரஸ் கவுன்சிலரும் காங்கரஸ் சட்டசபை மெம்பருமான மாஜி சேர்மன் தோழர் எஸ்.வி.வெங்கட்டப்ப செட்டியாராவார்.
  12. இதை ஆதரித்தவரும் காங்கரஸ் கட்டளைப்படி சர்க்கார் உத்தியோகத்தை ராஜிநாமா செய்தவரும் சேலம் ஜில்லா காங்கரஸ் கமிட்டி தலைவராயிருந்தவரும், இன்றும் கதர்கட்டி வருபவருமான வைஸ்சேர்மென் தோழர் ராமச்சந்திர நாயுடு ஆவார்.
  13. இந்தத் தீர்மானம் சேலம் நகர சபையில் ஏகமனதாய் நிறைவேறி சர்க்காருக்கு அனுப்பப்பட்ட பிறகும் சர்க்கார் பத்ராவதி கம்பெனிக்குத்தான் கண்ட்ராக்ட் கொடுக்க வேண்டுமென்று கட்டாயப்படுத்தினார்கள். இதன் மீது சுயமரியாதையும் உண்மையான நாணையமும் கவலையும் நிர்வாக ஒழுங்கில் ஆர்வமுள்ளவர்கள் ராஜிநாமா கொடுக்காமல் வேறு என்ன செய்வது?

~subhead

சில ருசிகரமான விஷயங்கள்

~shend

சர்க்கார் பிரவேசமும் ராஜிநாமா காரணமும் இப்படி இருக்க, மற்றும் சில ருசிகரமான விஷயங்களை வாககர்கள் மனதில் பதியவைக்க வேண்டியவையாகும். அதாவது சேலம் தண்ணீர் குழாய் வேலைக்கு இரும்பு தண்டவாளக் குழாய் போடுவதா, சிமெண்டு குழாய் போடுவதா என்கின்ற விஷயம் ஏற்கனவே விவாதிக்கப்பட்டு இங்கிலாந்து முதலிய மேல்நாட்டு நிபுணர்களுடைய ஆராய்ச்சி அபிப்பிராயத்தையும் பல இடங்களில் பிரத்தியக்ஷ அனுபவத்தையும் முறையே கேட்டும் கண்டும் இரும்புக் குழாய் கூடாது என்றும் சிமெண்டு குழாய் போட வேண்டும் என்றும் இலாகாத் தலைவர்கள் அபிப்பிராயப்பட்டு, சிமிண்டு குழாய் டெண்டர் சிபார்சு செய்யப்பட்டிருக்கிறது. அப்படி இருக்க பத்திராவதி கம்பெனியாரின் இரும்பு குழாய் டெண்டரை அதுவும் பத்திராவதி கம்பெனியாராலேயே வேறு ஒருவருக்கு அந்தர் 5 ரூபாய் வீதம் கொடுப்பதாக ஒப்புக் கொண்டிருக்கும் போதும் மற்றவர்களும் குறைந்த ரேட்டுக்கு கொடுக்க தயாராய் இருக்கும் போதும் அந்தர் ஒன்றுக்கு 8ரூ வீதம் கொடுத்து பத்திராவதி கம்பெனியாரிடம் தான் வாங்க வேண்டும் என்று சேலம் முனிசிபாலிட்டியை மந்திரிசபை கட்டாயப்படுத்துவதென்றால் ஹியூம் கம்பெனி டெண்டரை ஒப்புக்கொள்ளும்படி சர்க்கார் செய்த உத்திரவுக்கும், பத்திராவதி கம்பெனி டெண்டரை ஒப்புக்கொள்ளும்படி சர்க்கார் செய்த உத்திரவுக்கும் மத்தியில் நாற்றம் – துர்வாடை அடிக்கின்றதா இல்லையா என்று நன்றாக மோப்பம் பிடித்துப் பார்க்கும்படி வாசகர்களை, பொது ஜனங்களை ராஜிநாமாக் கொடுத்த கவுன்சிலர்கள் கேட்டுக்கொள்கிறார்கள். நாமும் கேட்டுக் கொள்ளுகிறோம்.

~subhead

மற்றும் மூன்று காரியங்கள்

~shend

இந்த சந்தர்ப்பத்தில் வாசகர்கள் மற்றொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டியிருக்கிறது. அதாவது பத்திராவதி கம்பெனி சிப்பந்திகளுக்கும் ஒரு மந்திரிக்கும் நெருங்கிய பந்துத்துவம் இருக்கிறது என்கின்ற சேதி ஒன்று. ஒரு மந்திரி மைசூர் சென்றுவிட்டு வந்ததாலேயே இந்நிலை ஏற்பட்டது என்பது இரண்டு. இந்த பத்திராவதி டெண்டரை ஒப்புக்கொள்ளும்படி சேலம் கவுன்சிலர்களை வசப்படுத்த ஒரு மந்திரி மெனக்கெட்டு சேலம் வந்து பல கவுன்சிலர்களிடம் ரகசியமாய் பேச்சு வார்த்தை நடத்தும் அளவுக்கு முயற்சித்து இருக்கிறார் என்பது மூன்று. இன்னும் இப்படிப்பட்ட பல காரியங்களையும் சேர்த்து சேலம் நகரசபை தண்ணீர் குழாய்த்திட்ட டெண்டரையும் மந்திரிகள் நடத்தையும் பார்த்தால் ஊழை ஊழை நாற்றம் நாறுகின்றதா இல்லையா என்பதை கவனிக்க விரும்புகிறோம். நாம் ஏன் இதை எழுதுகிறோம் என்றால் இந்த மந்திரிகள் ஆட்சி எந்த விதத்தில் முன்னைய மந்திரிகள் ஆட்சியை விட நாணையமானது, சந்தேகத்துக்கு இடமில்லாதது என்றும் பொது மக்கள் அறிய வேண்டும் என்பதற்காகவே எழுதுகிறோம்.

பார்ப்பனக் கம்பெனிக்குப் பார்ப்பன மந்திரிசபை சலுகையா?

சேலம் நகரசபை பொது ஸ்தாபனம். அதன் தண்ணீர் குழாய் வேலைக்கு செலவாகும் பணம் பொதுப்பணம் சென்னை அரசாங்கம் பொது அரசாங்கம். இப்படி இருக்க ஒரு பார்ப்பன நிர்வாக ஆதிக்க கம்பெனிக்குப் பார்ப்பன ஆதிக்கமுள்ள மந்திரிசபை நியாய முறைக்கும் ஒழுங்கு முறைக்கும் ஒழுக்க முறைக்கும் மாறான லக்ஷக் கணக்கான ரூபாய் நஷ்டமேற்படும்படியான காரியத்தை செய்து விட்டு இது சகிக்க மாட்டாமல் ராஜினாமா கொடுத்த கவுன்சிலர்களை வைவதும் வேண்டுமென்றே பழிகூறுவதும் ராஜினாமா செய்த சேர்மெனும் உபசேர்மெனும் கவுன்சிலர்களும் வேறு ஏதோ கம்பெனிக்காரர்கள் இடம் வைத்துக்கொண்ட சம்மந்தத்தால் இம்மாதிரி கலவரம் செய்கிறார்கள் என்று காலிகளை விட்டு விஷமப் பிரசாரம் செய்வதும் யோக்கியமான காரியமா என்று கேட்கின்றோம். உண்மையிலேயே நடுநிலையில் இருந்து பார்த்தால் சர்க்காரின் காரியந்தான் நாணையக் குறைவானதாகவும் யாராவது ஒரு இலாக்கா தலைவரின் சுயநல உணர்ச்சி கொண்டதாக இருக்க வேண்டும் என்று பட்டாலும் படலாமே ஒழிய ஒரு விதத்திலும் ராஜினாமா செய்தவர்கள் மீது பழிசுமத்த இடமில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் சர்க்கார் காரியத்தை கண்டித்ததானது காங்கரஸ் மெம்பராகவும், காங்கரஸ் எம்.எல்.ஏ. ஆகவும் இருக்கிறவர்கள் என்பதேயாகும். ஆதலால் இன்றைய நமது மந்திரி சபை காங்கரஸ் ஆட்சி சத்தியமும், நீதியும் கொண்ட வழிகளில் சுயராஜ்ஜியம் சம்பாதிக்கும் ஸ்தாபனத்தில், யோக்கியம் எப்படிப்பட்டது என்பதை மக்கள் அறியவேண்டியும், சமீபத்தில் வரப்போகும் ஸ்தல ஸ்தாபன தேர்தல்களில் காங்கரஸ் கூலிகளும், காங்கரஸ் அபேட்சகர்களும் மற்ற அபேட்சகர்களை எப்படிக் குறைகூறக் கூடும் என்பதையும் எதற்காக காங்கரஸ்காரர்கள் ஸ்தல ஸ்தாபனங்களுக்கு வர ஆசைப்படுகின்றார்கள் என்பதையும் வாசகர்கள் உணர்வார்களாக.

குடி அரசு – தலையங்கம் – 03.04.1938

You may also like...