காங்கரஸ் ஆட்சியில் போலீஸ் நீதி

 

தலைவர் அவர்களே! தோழர்களே! கோவை ஜில்லா இந்தி எதிர்ப்புத் தொண்டர் படையை வரவேற்கும் இந்த பெரிய கூட்டத்தில் போலீசார் சம்மந்தமான விஷயங்களை பேசவேண்டாம் என்று இருந்தேன். ஆனால் எனக்கு முன் பேசிய தோழர்கள் அந்த விஷயத்தை இழுத்துவிட்டுவிட்டதாலும், சற்று கடுமையாய் பேசினதாலும் நான் அதைப் பற்றி இரண்டொரு வார்த்தைகளாவது முதலில் பேசவேண்டி ஏற்பட்டுவிட்டது. தோழர் நடேசன் ஒரு சப் இன்ஸ்பெக்டர் மகன் ஆதலால் போலீசாரின் யோக்கியதையை நன்றாய் அறிந்தவராதலாலும் வாலிபரானதாலும் சற்று வீரமாகவே பேசினார். ஆனால் என்னால் அப்படிப் பேச முடியாது.

அதோடு போலீசாரால் ஏற்படும் நன்மை தீமை இரண்டைப் பற்றியும் பேசவேண்டும்.

போலீசார் உதவி

நமக்கு போலீசார் உதவி இல்லை என்று சொல்லிவிட முடியாது. எனது இந்த 15, 20 வருஷம் பொதுத் தொண்டு வாழ்வில் இம்மாகாணம் பூராவும் குறிப்பாக தமிழ்நாடு பூராவும் சுற்றிச்சுற்றி 100 முதல் ஒண்ணரை லக்ஷம் ஜனங்கள் வரை கொண்ட ஆயிரக்கணக்கான மீட்டிங்குகளில் பேசி இருக்கிறேன். அவைகளில் அனேகத்துக்கு போலீசார் உதவியும் பாதுகாப்பும் இருந்திருக்கிறது. அனேக இடங்களில் போலீசார் உண்மையான கவலை எடுத்து மீட்டிங்கை ஒழுங்காக நடத்திக் கொடுத்திருக்கிறார்கள். குறிப்பாக சொல்லவேண்டுமானால் நான் பேசிய ஆயிரக்கணக்கான மீட்டிங்குகளில் இந்த 20 வருஷ காலங்களில் இரண்டே இரண்டு மீட்டிங்குகள் பேசத் தொடங்காமல் பேச முடியாமல் நிறுத்திக் கொண்டுவர நேரிட்டிருக்கிறது.

முதலாவது பட்டிவீரன் பட்டிக்கு அடுத்த அய்யம்பாளையம் மீட்டிங்காகும். இரண்டாவதாக சென்னிமலை மீட்டிங்காகும். பட்டி வீரன்பட்டி மீட்டிங்கில் காலிகள் விஷமம் அடக்க போதிய போலீஸ் பந்தோபஸ்து இல்லையென்று ஒரு சப் இன்ஸ்பெக்டரே சொல்லி நிறுத்திவிடும்படியும் அடுத்தநாள் நடத்தும்படியும் கேட்டுக்கொண்டார். அதன்மீது நிறுத்திக்கொண்டேன். பிறகு அக்காலி கூட்டத்தை போலீசில் சார்ஜ் செய்து மன்னிப்புக் கேட்டுக்கொள்ளச் செய்து தொல்லைப்படுத்தி தேர்தல் காலம் முடிந்தபிறகு விட்டுவிட்டார்கள்.

இரண்டாவது நடத்த முடியாமல் நிறுத்தப்பட்ட கூட்டம் சென்னிமலை கூட்டமேயாகும்.

சென்னிமலை சம்பவம்

சென்னிமலை கூட்டத்தில் காலித்தனம் செய்தவர்கள் அவ்வளவு தைரியமுள்ள காலிகள் அல்ல. ஆனால் அவர்கள் போலீசின் உதவியால் அதிகமான காலிகளானார்கள். கல், மண் எடுத்து வாரி இறைத்து எங்களை சற்று இழிவாகவும் பேசினார்கள். அதை நாங்களோ எங்களை வரவழைத்து வரவேற்று உபசரித்தவர்களோ அடக்குவது என்பது சாத்தியப்படக் கூடியதாய் இருந்தாலும், நிலையான கலவரமும் பலாத்காரமும் அதிகமாக ஏற்பட்டுவிடும் என்று அறிந்தே நம்மவர்களை சமாதானம் சொல்லி அமைதிப்படுத்திவிட்டு 20-மைல் தூரத்திலுள்ள ஈரோடு போலீஸ் டிப்டி சூப்பரண்டெண்டுக்கு ஆள் அனுப்பப்பட்டது. போலீசு சூப்பரண்டெண்டவர்கள் ஏற்கனவே தனக்கு தெரிந்திருந்தால் தக்க பந்தோபஸ்தை அளித்திருக்க முடியுமேயென்று சொல்லி இன்ஸ்பெக்டருக்குச் சொல்லி அனுப்பினார். அவர் தனக்கு உடம்பு செளகரியமில்லையென்று சில கான்ஸ்டபிள்களை அனுப்பினார். அவர்கள் வந்த பிறகு கூட்டம் சற்று அமைதியாய் நடக்க இடமேற்பட்டது என்றாலும், போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் வெளிப்படையாகவே தான் ஒரு காங்கரஸ்காரனென்றும் கூச்சல் போடுவதற்கு அவர்களுக்கும் உரிமை உண்டு என்றும் அதைத் தடுக்க தன்னால் முடியாதென்றும் வெளிப்படையாய் சொன்னதால் காலிகளுக்கு சற்று உற்சாகம் அதிகமாகிவிட்டது. அதன் பேரில் முன்னிலும் அதிகமாக கூப்பாடு போட்டு வைதார்கள்.

இந்த விபரத்தை மறுபடியும் போலீசு டிப்டி சூப்பரண்டெண்டுக்கு சொல்லி அனுப்பப்பட்டது. அப்போது ஈரோடு சர்க்கிள் இன்ஸ்பெக்டரும் மற்றவர்களும் கலந்து ்மணி நடு இரவு 1 ஆகிவிட்டதால் இனி 20 மைல் போய் கூட்டம் நடக்கச் செய்வது பயனற்றது” என்றும் “அடுத்தநாள் கூட்டம் போட்டுக் கொண்டால் பக்கத்தில் இருந்து நடத்திக் கொடுப்போம்” என்றும் சொல்லி அனுப்பினார்கள். அந்த சேதி 2 மணிக்கு சென்னிமலைக்கு வந்தபிறகு கூட்டத்தை மறுநாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

மறுநாள் கூட்டம்

மறுநாள் கூட்டத்திற்கு நான் அழைக்கப்பட்டிருந்தேன். நான் சென்னிமலைக்கு புறப்படும் போது போலீஸ்காரர்கள் பலர் சென்னிமலைக்குப் போய் இருப்பதாயும், சர்க்கிளும் வருகிறார் என்றும் சொல்லப்பட்டது. நான் சென்னிமலைக்குப் போய் கூட்டம் ஆரம்பிக்கும்போது மற்றும் 4,5 கான்ஸ்டேபிள்கள் மாத்திரம் வந்தார்களே ஒழிய பொறுப்புள்ள அதிகாரிகள் யாரும் வரவில்லை. கூட்டம் ஆரம்பித்தவுடன் போலீசார் சுற்றி நின்று கொண்டார்கள். பேச ஆரம்பித்து ஒரு நிமிஷம் காலிகள் போலீசாருக்கு பயந்து சும்மா யிருந்தார்கள். சப்-இன்ஸ்பெக்டர் சற்று மறைந்துவிட்டு கூட்டத்துக்கு வந்தார். உடனே முன்தினம் போல் கூச்சல் ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. உடனே பேச்சை நிறுத்திக் கொள்ளும்படி சொல்லிவிட்டேன். பிறகு கூட்டத்தின் நிலைமையைப் பார்த்து மறுபடியும் ஈரோட்டிற்கு ஆள் அனுப்பி ஈரோடு சர்க்கிள் இன்ஸ்பெக்டர் (அய்யங்கார்) ்கலகமாகாமல் பார்த்துக் கொள்ளத்தான் முடியுமே ஒழிய கூச்சல் போடுகிறவர்களை அடக்க முடியாது” என்று சொல்லி மற்றும் சில போலீஸாருடன் ஈரோடு சப்-இன்ஸ்பெக்டரை அனுப்பினார். ஈரோட்டுக்கு 7 மணிக்கு அனுப்பிய ஆள் 12 மணி வரையும் சென்னிமலை வந்து சேரவில்லை.

காங்கரஸ் தொண்டர் மன்னிப்பு

இதன் மத்தியில் ஒரு காங்கரஸ் தொண்டர் தோழர் திருப்பூர் ராமசாமி என்பவர் இந்த விஷயங்களை எல்லாம் தெரிந்து வந்து தலைவர் அனுமதி கேட்டு மேடைமேலேறி காங்கரஸின் பேரால் செய்யப்பட்ட காலித்தனங்களைக் கண்டித்து விட்டு தோழர் நடேசனைப் பேசும்படி கேட்டுக்கொண்டார். தோழர் நடேசன் பேச ஆரம்பித்ததும் ஒரு 2 நிமிஷம் கூட்டம் அமைதியாய் இருந்தது. மறுபடியும் கூச்சல்காரர்களில் சிலர் சப் இன்ஸ்பெக்டர் முகத்தைப் பார்க்கும்போது அவர் தலை சற்று அசைந்தது. அவ்வளவுதான் தாமதம் உடனே பழயபடி குழப்பமேற்பட்டது. அக்குழப்பமேற்படும் முன் குழப்பத்துக்கு தலைவராக இருந்தவர் கூட்டத்தில் கற்களை போட்டதற்கும் மணலை வாரி இறைத்ததற்கு வருந்துவதாகவும் பெரியாரின் இருகாலையும் பிடித்து மன்னிப்புக் கேட்டுக்கொள்ளுவதாகவும் தெரிவித்தார். அதையும் சுருக்கெழுத்து இன்ஸ்பெக்டர் எழுதிக்கொண்டதாக நினைக்கிறேன். சப்இன்ஸ்பெக்டர் தலை அசைத்ததையும் அவர் பார்த்து இருக்கக்கூடும். கடைசியாக அங்கு பேச முடியாமலே போய்விட்டது. இந்த நிலை போலீசாரால் ஏற்பட்டதாகும். இந்த மாதிரி போலீசார் நடந்து கொண்டது மிகவும் அநீதியாகும். போலீசாருக்கு நாங்கள் எப்போதும் அடங்கி நடப்பவர்கள். அவர்கள் மதிப்பும் அதிகாரமும் செல்வாக்கும் குறையக் கூடாது என்பது எப்போதுமே எங்கள் கவலை. காங்கரசைப் போல் நாங்கள் போலீசை நாய்கள் என்றும் நாய் குட்டிகள் என்றும் பணிய வைப்போம் என்றும் குனிந்து சலாம் போடச் செய்வோம் என்றும் ஒருபோதும் சொன்னதில்லை. ஆனால் போலீசு யோக்கியமாகவும் நாணையமாகவும் நடக்கவேண்டும் என்பதில் கவலை எடுத்துக்கொண்டதுண்டு.

காங்கரஸ் ஆட்சியில் போலீஸ் தர்பார்

காங்கரஸ் ஆட்சியில் போலீஸ் யோக்கியமாய் நடைபெறுமென்று எதிர்பார்த்தவர்களில் நான் ஒருவன். ஆனால் காங்கரசுக்குப் பிறகு வரவர போலீஸ் அக்கிரம தர்பார் ஆகிவிட்டது.

வெள்ளைக்கார மேலதிகாரிகளுக்கு பயந்து சில போலீசார் யோக்கியமாய் நடக்கிறார்கள். பார்ப்பனரல்லாத இந்து முஸ்லீம் போலீசார் சற்று யோக்கியமாய் நடக்கிறார்கள். பார்ப்பனப் போலீசார் தாங்களே பிரதம மந்திரி என்று கருதிக் கொள்ளுகிறார்கள். எப்போதும் அவர்கள் தகுதிக்கு மேற்பட்ட பேச்சுப் பேசுகிறார்கள். காங்கரஸ் கூட்டத்தில் ஒருவிதமும் மற்றவர்கள் கூட்டத்தில் ஒருவிதமுமாய் நாணையக் குறைவாய் நடக்க அவர்கள் கையும் வாயும் சிறிதும் அஞ்சுவதில்லை. வன்னெஞ்சோடு பொய் பேசுகிறார்கள். ஒரு சாதாரண குறை கூறப்பட்ட போலீஸ் கான்ஸ்டபிள் யோக்கியதையைவிட சில இன்ஸ்பெக்டர் அந்தஸ்திலிருப்பவர்கள் நடந்து கொள்கிறார்கள். இந்த இழிவும் அவமானமும் வெள்ளைக்கார அதிகாரிகளுக்கு குறிப்பாக இன்ஸ்பெக்டர் ஜெனரலுக்கும் கவர்னருக்கும்தான் போய்ச்சேரும். மந்திரி வாழ்க்கை நீர்மேல் குமிழி. அவர்களைப் பற்றி மக்கள் நினைப்பதும் வெகு அற்பம். ஆதலால் ஜில்லா சூப்பரண்டெண்டும், ஐ.ஜீ.யும், கவர்னரும் இவ்வக்கிரமங்களைக் கவனிப்பார்களா? அல்லது அவர்களது கோழைத்தனமும் தகுதியற்ற தனமும் வெளியாகும்படியான நிலையில் பலாத்காரம் கொலை முதலியவைகள் நடக்க இடங்கொடுப்பார்களா? என்பதே நமது கேள்வி.

குறிப்பு: ஈரோட்டில் 02.10.1938 ஆம் நாள் நடைபெற்ற கோவை ஜில்லா தமிழர் படை வரவேற்புக் கூட்டத்தில் ஆற்றிய சொற்பொழிவு.

குடி அரசு – சொற்பொழிவு – 09.10.1938

You may also like...