சரணாகதி மந்திரிகள் மைனர் விளையாட்டு

 

1938-39வது வருஷத்துக்கு பொக்கிஷ மந்திரியும் முதன் மந்திரியுமான கனம் ஆச்சாரியார் “சர்ப்ளஸ்” பட்ஜெட் தயார் செய்து விட்டதை காங்கரஸ் அபிமானிகளெல்லாம் பாராட்டுகிறார்கள். “பட்ஜெட் என்றால் இதுதான் பட்ஜட். இந்த பட்ஜெட்டே காங்கரஸ் பட்ஜெட் என்று சொல்லக்கூடிய அம்சங்கள் வாய்ந்திருக்கிறது” என ஒரு காங்கரஸ் பத்திரிகையும் பரவசத்துடன் கூறுகிறது. புதிய வருஷத்திலும் விவசாயிகள் கடன் பளுவைக் குறைத்தல், கிராமாந்தர ஜல வசதிக்காக தனிநிதி ஏற்படுத்துவதற்காக 15 லட்சம் ஒதுக்கி வைத்தல், விவசாயக் கடன் மசோதாவின்படி குறையக்கூடிய கடன்களைக் கொடுத்துத் தீர்ப்பதற்காக 50 லட்சம் ஒதிக்கிவைத்தல், கால்நடை மேய்ச்சல் கட்டணத்தை சரிபாதியாகக் குறைத்தல், சித்தூர் கடப்பை ஜில்லாக்களில் மதுவிலக்குச் செய்தல் முதலிய புண்ணிய கைங்கரியங்களைச் செய்த பிறகும் புதுவரிகள் போடாமல் மிச்சம் ஏற்படும் முறையில் கனம் ஆச்சாரியார் பட்ஜெட் தயார் செய்திருப்பதைப்பார்த்து சாமானிய மக்கள் மயங்கத்தான் செய்வார்கள். புகழத்தான் செய்வார்கள். ஆனால் பட்ஜெட்டை சிறிது ஊன்றி நோக்கினால் மிச்ச மேற்படும் பட்ஜெட் தயார் செய்த ஆச்சாரியாரின் கைவரிசைகளை கண்டுகொள்ள முடியும். புதுவருஷத்துக்கு சென்னை மாகாணத்துக்கு ஒரு அதிர்ஷ்ட சீட்டு விழுந்திருக்கிறது. நீமெயர் தீர்ப்பின்படி வருமான வரியாக இந்திய சர்க்கார் சென்னை மாகாணத்துக்கு 21 லக்ஷம் ரூபாய் வழங்கப்போகிறார்கள். இது சாசு விதமான வருமானமல்ல. ரயில்வே வருமானம். சுபீக்ஷமாக இருந்தால் தான் வருமான வரிப்பங்கு மேற்கொண்டும் கிடைத்துக் கொண்டிருக்கும். ரயில்வே வருமானம் நிலையற்றது. குறைந்தால் நமக்கும் வருமானவரிப் பங்கு கிடையாது. மற்றும் சேலம் மதுவிலக்கு மூலம் பிரஸ்தாப வருஷத்தில் சுமார் 13 லக்ஷம் நஷ்டம் ஏற்பட்டிருந்தும் மொத்த கலால் வருமானத்தில் 15 லீ லக்ஷம் அதிகம் கிடைத்திருக்கிறது. ஆகவே சேலம் மதுவிலக்கு நஷ்டம் இன்னும் நம்மை பாதிக்கவில்லை. இவ்வளவு அனுகூலங்கள் ஏற்பட்டிருந்தும் ஒன்றே முக்கால் கோடி கடன் வாங்கித்தான் கனம் ஆச்சாரியார் புதுவருஷ பட்ஜெட்டைச் சரிக்கட்டப் போகிறார். எனவே கனம் ஆச்சாரியாரின் “சர்ப்ளஸ்” பட்ஜெட்டுக்கு எவ்வளவு மதிப்பு உண்டென்பதை வாசகர்களே நிதானம் செய்து கொள்ளட்டும்.

மற்றும் சென்னை மாகாணத்துக்கு ஏற்கனவே 1528 கோடி கடன் இருந்து வருகிறது. அதற்காக வருஷா வருஷம் வட்டி இனத்தில் 87.67 லக்ஷம் அழுது வருகிறோம். கனம் ஆச்சாரியார் செங்கோல் தாங்கிய பிறகு சென்னை மாகாணத்தின் தலைமீது ஏற்கனவே 1லீ கோடிக்கடன் சுமத்தப்பட்டிருக்கிறது. அடுத்த வருஷத்துக்கும் 1லு கோடி கடன் வாங்கப்போகிறார். இந்த விகிதப்படி கனம் ஆச்சாரியார் கடன் வாங்கிக் கொண்டே போனால் அவருடைய உத்தியோக காலாவதி 5 வருஷமும் முடிவடையும் போது சுமார் 10 லக்ஷம் புதுக்கடன் ஏறிவிடும்போல் தோன்றுகிறது. தேசீயக் கடன்களை ஒழிக்கப்போவதாகக் கூறிய காங்கரஸ்காரர் மந்திரி பதவி ஏற்றபிறகு தேசத்தின் மீது மீண்டும் மீண்டும் புதுக்கடன்களை ஏற்றும் காட்சியைத் தான் நாம் காண முடிந்திருக்கிறது. விவசாயிகள் முன்னேற்றத்தில் ஆர்வங்கொண்டவர்கள் என கூறப்படும் காங்கரஸ் மந்திரிகள் விவசாயிகளுக்கு சாசுவதமான நன்மைகள் செய்யமுடியவே இல்லை. இடைக்கால மந்திரிகள் விவசாயிகள் வரியில் சாசுவதமாக வருஷா வருஷம் 75 லக்ஷம் வஜா செய்ய ஏற்பாடுகள் செய்தார்கள். காங்கரஸ் மந்திரிகள் அந்த ஏற்பாட்டை ரத்து செய்து இவ்வருஷத்துக்கு 75 லக்ஷம் வஜா செய்து அடுத்த வருஷத்திற்கும் 75 லக்ஷம் வஜா செய்ய முடிவு செய்திருக்கிறார்கள். அப்பால் விவசாயிகள் நிலமை எப்படியிருக்குமோ தெரியவில்லை. காங்கரஸ்காரர் பதவியேற்று விட்டதினால் அவர்கள் வாக்களித்தபடி நிலவரி முறை நியாயமானபடி நிர்ணயம் செய்யப்படும் என்று விவசாயிகள் எதிர்ப்பார்த்தனர். ஆனால் நிலவரியை நிர்ணயம் செய்வது இப்பொழுது சாத்தியமில்லையென கனம் ஆச்சாரியார் கண்டிப்பாகக் கூறிவிட்டார். கிராம சுகாதாரம், வைத்திய உதவி முதலிய பொது ஜனோபகாரமான விஷயங்களுக்குப் போதிய மானியம் அளிக்கப்படவுமில்லை. “சர்ப்ளஸ்” பட்ஜெட் தயார் செய்த பொருளாதார நிபுணரான கனம் ஆச்சாரியாருக்கு பொது ஜனோபகாரமான விஷயங்களுக்கு சுமார் 17 அல்லது 18 லக்ஷத்துக்கு மேல் ஒதுக்கி வைக்க முடியவில்லையென்றால் அவரது சமத்தின் அழகை வர்ணித்துக்கூற வேண்டுமா? கைத்தொழில், விவசாய பொதுமராமத்து, கல்வி இலாகாக்களுக்கு கஞ்சத்தனமாக, கனம் ஆச்சாரியார் மானியங்கள் வழங்கியிருப்பது காங்கரஸ்காரர் ஆர்ப்பாட்டப் பேச்சுக்கு பொருத்தமாகவே இல்லை. தத்தம் இலாகாக்களுக்கு அதிகப்படியான மானியங்கள் வழங்க வேண்டுமென்று மற்ற மந்திரிகள் பொக்கிஷ மந்திரியை ஏன் கேட்கவில்லை. அல்லது கேட்டும் பொக்கிஷ மந்திரி கொடுக்க மறுத்துவிட்டாரா என, தோழர் டி.டி.கிருஷ்ணமாச்சாரியார் கேட்ட கேள்வி நியாயமான கேள்வியாகும். சம்பளங்களைக் குறைத்து விட்டதாக பிரதம மந்திரி பெருமையடிப்பதும் வெறும் பகட்டாகும். சம்பள வெட்டு இனத்தில் சர்க்காருக்குக் கிடைத்த இலாபம் மொத்தம் 41 ஆயிரம் ரூபாய் தான். இந்த சொற்பத் தொகைக்காக கீழ்தர உத்தியோகஸ்தர் உள்ளத்து அதிருப்தி விளையும்படி செய்தது நிர்வாகத்தையே பாதிக்கக்கூடிய செயலாகும். கெளரவ சர்ஜன்கள் நியமனம் மூலம் வைத்திய இலாகாவில் சிக்கனம் செய்வதும் இலாபகரமல்லாத மத்தியதரப்பள்ளிக்கூடங்களை மூடுவதும் எவ்வளவு தேசத்துரோகமான செயல் என நாம் விளக்கிக் கூறத் தேவையில்லை. மதுவிலக்கினால் ஏற்படக்கூடிய நஷ்டத்தை பரிகரிக்க இதுவரை மார்க்கம் காணப்படவுமில்லை. காங்கரஸ் திட்டப்படி பூரண மதுவிலக்கு ஏற்படும்போது 4 கோடி நஷ்டம் ஏற்படுமாம். அந்த நஷ்டத்தைப் பரிகரிக்கும் மார்க்கம் காணாமல் மதுவிலக்கு செய்து கொண்டே போவது மகா ஆபத்தானதல்லவா? பலவழி நோக்கினும் காங்கரஸ் மந்திரிகள் போக்கு மைனர் விளையாட்டாகவே இருக்கிறது. மஞ்சள் பெட்டியை நிரப்பியவர்கள் அவர்கள் கர்ம பலனை அனுபவிக்கவேண்டிய காலம் வெகு சீக்கிரம் வந்துவிடும் போல் இருக்கிறது.

குடி அரசு – துணைத் தலையங்கம் – 06.03.1938

You may also like...