விவசாயக் கடன் குறைப்பு மசோதாவுக்கு வைஸ்ராய் அனுமதியளிக்கக்கூடாது
காங்கரஸ் மந்திரிகள் என்னும் சரணாகதி புரோகிதக் கூட்ட ஆதிக்க மந்திரிகள் பொதுஜனங்களை ஏமாற்றுவதற்கு ஆகவும் பாமர மக்களிடம் ஓட்டு வேட்டை ஆடுவதற்கு ஆகவும் “விவசாயிகள் கடன் விடுதலை மசோதா” என்னும் பெயரால் இரு சட்டசபைகளிலும் கூலி மெஜாரிட்டியைக் கொண்டும் கட்சி கட்டுப்பாடு என்னும் அடக்குமுறை மெஜாரிட்டியைக் கொண்டும் சர்வாதிகார முறையில் நிறைவேற்றிக் கொண்டு இருக்கும் மசோதாவானது நடுத்தர விவசாயிகளான பெருவாரியான விவசாயிகளுக்கே பெரும் கேட்டைத் தருவதாய் இருப்பதாலும்,
பூமிக்குடையோனுக்கும் பூமியை பயிர் செய்வோனுக்கும், கடன் கொடுத்தவனுக்கும் கடன் வாங்கினவனுக்கும், ஒற்றுமையின்மையும் போராட்டமும் தொல்லையும் பொய் கணக்கும் பொய் ஆதார சிருஷ்டியும் செய்து தீரவேண்டிய நிலையில் கொண்டு வந்து விடக் கூடியதாய் இருப்பதாலும், ஏழை விவசாயிகளுக்கு நாணய செலாவணியே இல்லாமல் போய் அக்கிரமக் கடனுக்கே ஆளாக வேண்டிய நிலைமையைக் கொடுக்கக்கூடியதாய் இருப்பதாலும் மற்றும்
கொஞ்சம் பூமிகளையுடைய சிறுசிறு விவசாயிகளையும், சிறு மிராசுதார்களையும் விவசாயச் செலவுக்கும் எதிர்பாராத திடீர் சம்பவ குடும்பச் செலவுக்கும் கடன் கிடைக்க வகையில்லாமல் பூமியை விற்றுத் தீர வேண்டிய நிர்ப்பந்த நிலையில் வைத்துவிடக் கூடியதாய் இருப்பதாலும் இதன் பயனாய் தானே நேரில் பயிரிடும் சிறு சிறு விவசாயிகளுடைய பூமிகள் எல்லாம் நேரில் உழாமல் குத்தகைக்கு விட்டு லாபம் சம்பாதிக்கவும் விவசாய முறையில் பணம் திரட்டவும் உள்ள பெரும்பெரும் மிராஸ்தார்கள் ஜமீன்தார் (ஆப் சென்டி லேண்ட் லார்ட்)களுக்கே போய்ச் சேரக் கூடியதாய் இருப்பதாலும்,
விவசாயிகளுக்கு வேறு மொத்த லேவா தேவிக்காரனிடம் ஏற்கனவே கடன் வாங்கி கடன் கொடுத்திருக்கும் அதுவரை வட்டி பூராவையும் செலுத்தி இருக்கும் லேவாதேவிக்காரர்களுடைய நஷ்டத்துக்கு சென்னை சர்க்காரார் யாதொருவிதமான பொறுப்பும், பரிகாரமும் ஏற்றுக் கொள்ளாதிருப்பதால் சில்லரை லேவாதேவிக் தொழிலாளிக்கும் பெருவாரியான நடுத்தர லேவாதேவிக்காரர்களை அடியோடு நசுக்கச் செய்து விடும்போல் இருப்பதாலும்,
சட்டத்தை நம்பி நடத்தி வந்த காரியங்களின் கிரமமான பலா பலன்களுக்கு மாறாய் ஒருவர் சொத்தை ஒருவருக்கு எவ்வித பரிகாரமும் இல்லாமல் சட்ட விரோதமாய் பிடுங்கிக் கொடுப்பதாய் இருப்பதாலும்,
பொது தர்ம ஸ்தாபனங்கள் நிலைமையும் மைனர்கள் நிலையும் கிழவன்மார்கள் சம்பாதித்து வயிறு வளர்க்க சக்தியற்றவர்கள் ஆகியவர்களுடைய நிலைமையும் திடீரென்று திக்கற்ற நிலைமைக்கு வந்துவிடக் கூடியதாய் இருப்பதாலும்,
இம் மசோதா உண்மையாக கஷ்டப்பட்டு பயிர் செய்யும் விவசாயிக்கு பலனளிக்காமல் இருப்பதாலும்,
சென்னை அரசியலில் பெரும்பான்மையான மந்திரிகள் கடன்காரர்களாய் இருந்து கனவிலும் வாரண்டையும், சம்மனையும், நோட்டீசையும் எதிர்பார்த்த வண்ணமாய் இருந்து வருவதிலிருந்து தப்பித்துக்கொள்வதற்கு அனுகூலமாய் செய்யப்பட்டு இருக்கிறது என்று எண்ணக்கூடியதாய் இருப்பதாலும்,
காங்கரஸ் தொண்டர்களில் பலருக்கு வாழ்க்கை வசதி அளிக்கக் கூடியதாய் இருப்பதாலும்,
இந்த சட்டத்திற்கு கவர்னரும் வைசிராய் பிரபுவும் அனுமதி அளிக்கக் கூடாது என்று வேண்டிக் கொள்கிறோம். மற்றும்,
இந்த சட்டமானது சர்க்கார் சட்டங்களின் நடைமுறைகளையும் பாதிக்கக்கூடியதாய் இருக்கிறது என்பதையும் எடுத்துக் காட்டக் கடமைப்பட்டிருக்கிறோம்.
அதாவது சிவில் நடைமுறை (சிவில் புரோசிஜார் கோடு) சட்டத்துக்கும் சொத்து மாறுதல் (டிரான்ஸ்பர் ஆப் பிராபர்ட்டி ஆக்ட்) சட்டத்துக்கும் இந்தியா காலகரணம் (லிமிட்டேஷன் ஆக்ட்) சட்டத்துக்கும் விரோதமாய் இருப்பதோடு நிரந்தர நில வரி விதிக்கு முறைக்கும் விரோதமாய் இருக்கிறது.
கடைசியாகச் சொல்ல வேண்டுமானால் ஒரு காலத்தில் காங்கரஸ்காரர்களாலேயே ஆக்ஷேபிக்கப்பட்ட “பரிகாரமில்லாமல் பறிமுதல்” செய்யும் முறையை அடிப்படையாய்க் கொண்டதாகவும் இருக்கிறது.
அதாவது ஜஸ்டிஸ் கட்சியார் இனாம் பூமி மசோதா கொண்டு வந்த காலத்தில் காங்கரஸ்காரர்களும் இனாம்பூமி உடைய பார்ப்பனர்களும் என்ன என்ன காரணம் காட்டி அந்தச் சட்டத்திற்கு வைஸ்ராய் சம்மதம் கொடுக்கக் கூடாது என்று திருப்பித் திருப்பி சட்டசபைக்கு வாப்பீசு செய்யும்படி செய்யப்பட்டதோ அவ்வளவு காரணங்களும் இதற்கும் இருக்கின்றன என்பதையும் வைஸ்ராய் பிரபு அவர்களுக்கு தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
குடி அரசு – தலையங்கம் – 13.02.1938