ஈரோட்டில் பொதுக்கூட்டம்
தலைவரவர்களே! தோழர்களே!
இங்கு மீட்டிங்குபோட நாங்கள் ஆசைபடுவதில்லை. உள்ளுர் தோழர்களுடன் கலகம் செய்துகொள்ளக்கூடாது என்பதற்காக நாங்கள் போடாமல் இருந்தோம். இந்த 10 நாளாய் அர்பன் பாங்கு தேர்தலை முன்னிட்டு சிலர் தினமும் கூட்டம் போட்டு எங்களை கண்டபடி வைவதும் சிறு பிள்ளைகளிடம் கொடியை கொடுத்து எங்கள் வீட்டிற்கு முன்னால் வந்து நின்று கொண்டு கேவலமாக வையச் சொல்வதும் கல்லு போட சொல்லுவதும் வீதிகளில் நடக்கும் போது எங்கள் பெயர்களைச் சொல்லி வெட்கம் வெட்கம் என்று வையச் சொல்லுவதுமான காரியம் தான் இங்கு என்னை உங்கள் முன் பேசச் செய்தது.
இந்த ஊர் அர்பன்பாங்கு ஆரம்பமானது 1911ல் எங்கள் வீட்டு தாழ்வாரத்தில் தான். நான் தான் முன்னின்று ஆரம்பித்தவன். அந்த பாங்கு பங்குதார் பெயரில் என் பேர் தான் முதலில் இருக்கும். போய் பார்த்துக் கொள்ளுங்கள். எனக்குப் பாங்கி நடவடிக்கையில் அக்கரை உண்டு. ஆனால் நான் வேறு பல விஷயங்களில் ஈடுபட்டிருப்பதால் அதைக் கவனிக்க முடிவதில்லை என்றாலும் அதன் ஆரம்பத்தில் நான் முக்கியஸ்தனாய் இருந்தாலும் அந்த பாங்கி ஏற்பட்டது முதல் 1930-ம் வருஷம்வரை அதன் நிர்வாகம் அய்யர்மார்களிடம் வக்கீல்களிடம் தான் இருந்தது.
நானும் அதற்குச் சம்மதித்து உடந்தையாய் இருந்து வந்தேன். கடைசியாக அது பார்ப்பனர்களுக்கே சொந்தம் போலவும் மற்றவர்களுக்கும் அதில் மதிப்பும் செல்வாக்கு இல்லாமல் வேறு பல வகுப்புவாத காரியங்களுக்கு அதை பயன்படுத்திக் கொள்வது போலவும் இருந்ததால் 1930ல் மறுபடி தலையிட்டு அதை அக்கிரார பார்ப்பனர்களிடம் இருந்து எவ்வளவோ கஷ்டத்துடன் கைப்பற்ற வேண்டியதாயிற்று.
இந்த 7,8 வருஷ பார்ப்பனரல்லாதார் ஆட்சியில் பாங்கின் நிர்வாகம் பார்ப்பனரல்லாத மக்களுக்கும் விகிதாச்சாரம் பயன்படும்படியும் பாங்கின் செல்வம், க்ஷேமநிதி பெருகும்படியும் அய்யர்மார்கள் நிர்வாகத்தில் தளுங்கிவிட்ட வாய்தா கடந்த வராக்கடன்கள் 30,40 ஆயிரம் ரூ. வசூலாகும்படியும் செய்யப்பட்டிருக்கிறது.
அதன் டிபாசிட் 170000ல் இருந்து 250000 ஆகி இருக்கிறது. வராக்கடன் 61000ல் இருந்து 25000க்கு இறக்கப்பட்டது. ஏழைகளுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் சுலபத்தில் கடன் கிடைக்கும்படியும் செய்யப்பட்டு வருகிறது.
அதன் சிப்பந்திகளும் இப்போது சிலர் பார்ப்பனரல்லாதாராய் இருக்க முடிந்தது.
பாங்கியின் நிருவாகத்தைப்பற்றி ஆடிட்டர்களும், இலாகா அதிகாரிகளும் புகழ்ந்து கூறிவருகிறார்கள். இதன் தலைவர் தோழர் சிக்கய்ய நாயக்கர் அவர்கள் இந்த ஜில்லா கோவாபரேடிவ் ஆடிட் யூனியனுக்கு தலைவராய் தேர்ந்தெடுக்கப்பட்டு 5,6 வருஷமாய் இருந்து வருகிறார்.
இதைப்பற்றி பாங்கியின் மீது அபிமானமுள்ளவர்கள் பாராட்டாமல் அவரைப் பற்றி விஷமப்பிரசாரம் செய்வது ஒழுங்கா? அவர் மீது இதுவரை குறிப்பிட்டு ஏதாவது ஒரு குற்றம் சொல்லப்பட்டதா? இருந்தால் கொண்டுவாருங்கள். ” பாங்கிக்குள் புகுந்து கலகம் செய்யுங்கள் ” என்று தூண்டிவிடப்படுகிறது. கலகம் செய்து மினிட் புஸ்தகங்களையும் கிழித்து பார்த்தாய் விட்டது.
அவர் வேண்டாமென்றால் தள்ளிவிடுங்கள். ஆனால் இந்த ஊர் வக்கீல் பார்ப்பனர்கள் 4,5 பேர் மாத்திரம் ஏன் இவ்வளவு ஆத்திரப்பட வேண்டும்? அவர்கள் வசம் ஏற்கனவே இருந்த ஸ்தாபனங்கள் என்ன ஆயிற்று? இவர்கள் தாங்கள் தொழிலில் அதிக வரும்படி சம்பாதித்துக் கொள்ள இதை பயன்படுத்தவிடலாமா?
கோவாபரேடிவ் ஸ்டோர் என்ன ஆயிற்று?
சேல்ஸ் லோன் சொசைட்டி என்ன ஆயிற்று?
ஹவுஸ் மார்ட்டிகேஜ் பாங்கி என்ன ஆயிற்று?
லேண்ட் மார்ட்டிகேஜ் பாங்கி என்ன ஆயிற்று?
இவைகள் எல்லாம் பார்ப்பனர்கள் கையில் தானே இன்னமும் இருக்கிறது. இந்த நிர்வாகம் சிலவற்றில் எவ்வளவு ஊழலாகி மூட வேண்டியதாகிவிட்டது. சில மூடும் நிலையில் இருக்கிறது. சில உத்தேசித்த பயனளிக்காமல் நிர்வாகிகள் நன்மைக்கு மாத்திரமிருந்து வருகிறது.
கடைசியாக இந்த அர்பன் பாங்கி ஒன்றுதான் பார்ப்பனரல்லாதார் நிர்வாகத்தில் இருக்கிறது. இதன் தலையிலும் கைவைக்கப் பார்க்கிறார்கள். உங்களுக்கு இஷ்டமிருந்தால் அவர்கள் வசம் ஒப்புவித்து விடுங்கள்.
ஆனால் வையவும், வீட்டின் மீது கல்லு போடவும் பெண்டு பிள்ளைகளை இழிவாய் பேசவும் இடம் கொடுக்காதீர்கள். நாளைக்கு உங்களுக்கும் இந்த கதிதான் நேரிடும்.
இந்த மாதிரி நம்மவர்களுக்குள் கலகம் மூட்டிவிட்டதன் பலன் இன்று இந்த மாகாணத்தில் பார்ப்பனரல்லாத பிரமுகர்கள் மூலையில் உட்கார வைக்கப்பட்டு விட்டார்கள். தோழர்கள் சத்தியவான் உண்மை பரோபகாரி ரத்தின சபாபதி முதலியார் எங்கே? காங்கரசில் சேர்ந்ததால் அவரை காங்கரசுக்காரர்கள் 5 -வருஷம் தண்டித்து விட்டார்கள். நல்ல ஞானமுள்ள ராமலிங்க செட்டியார் எங்கே? அவரை மூலையில் இருக்கச் செய்துவிட்டார்கள். வீரர் திருச்சி தேவர் எங்கே? கைக்கு வளையல் போட்டுக் கொள்ள வேண்டிய நிலைமைக்கு வைத்துவிட்டார்கள்.
தஞ்சைக் குபேரன் நாடிமுத்து எங்கே? ” வைரக்கடுக்கன் ஆட்சியை” ஒழிக்க விரதம் கொண்டு விட்டார்கள்.
எங்கள் போன்றவர்கள் வீடுகள் மீது கல்லுபோடுகிறார்கள். நாங்கள் என்ன அவ்வளவு பாவிகள்? எங்களுக்கு இதுவா ஜீவனம்? போலீஸ் பந்தோபஸ்து கூட சரியாய் கிடையாது. இந்த ஊரில் காலித்தனத்துக்கும் விஷமத்தனத்துக்கும் மதிப்பு அதிகம் ஏற்பட்டுவிட்டது. கவர்னர் கவலையற்று வேடிக்கை பார்க்கிறார். இன்னமும் உங்கள் பிள்ளைகள் படிப்புக்கு ஆபத்து ஏற்படுத்தி விட்டார்கள். ஹிந்தி படிக்க வேண்டுமாம், பள்ளிக்கூடத்தில் சாமான் செய்து விற்று வாத்தியாருக்கு சம்பளம் கொடுக்க வேண்டுமாம். மகாஜன ஹைஸ்கூல் பார்ப்பனரிடமிருந்து நம் கைக்கு வந்த பிறகே நம் பிள்ளைகள் இவ்வளவு படிக்க முடிந்தது. பாஸ் செய்ய முடிந்தது. பள்ளிக்கூடமும் இவ்வளவு யோக்கியதைக்கு வந்தது. அதற்கு இந்தப்பள்ளிக்கூடத்துக்கு எவ்வளவு ஆயிரம் ரூ. கொடுத்தோம். எந்த பார்ப்பனர் யார் இப்படி கொடுத்தார்? எங்களைப்பற்றி உங்களுக்கே தெரியும். பணம் என்றால் நாங்கள் தான் 500, 1000 என்று கொடுக்க வேண்டும். நிர்வாகம் அவர்கள் பார்க்க வேண்டுமா? ஆகையால் ஏமாந்து போகாமல் நன்றாய் ஆலோசித்து எக்காரியமும் செய்யுங்கள். எங்களுக்கு வந்த அவமானம் நாளைக்கு உங்களுக்கும் தான்.
குறிப்பு: 28.01.1938 இல் ஈரோடு காரைவாய்க்கால் மைதானத்தில் ஈரோடு ஆதிதிராவிட நலவுரிமைச்சங்கத்தின் ஆதரவிலும் ஈரோடு பார்ப்பனரல்லாதார் வாலிபர் சங்கத்தின் ஆதரவிலும் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரை.
குடி அரசு – சொற்பொழிவு – 30.01.1938