காங்கரஸ் விஷமப்  பிரசாரத்துக்கு மறுப்பு

 

தலைவரவர்களே! தோழர்களே!

பல சங்கங்களின் சார்பாக எனக்கு அனேக உபசாரப் பத்திரங்கள் படித்துக் கொடுத்திருக்கிறீர்கள். அதற்காக எனது நன்றியை தெரிவித்துக் கொள்ள நான் கடமைப்பட்டிருக்கிறேன். அவைகளில் அளவுக்கு மீறி என்னைப் புகழ்ந்திருக்கிறீர்கள். அவைகள் எனக்கு உரியதல்ல வென்றாலும் என் மீதுள்ள சொந்த அன்பினாலேயே என்னை இவ்வளவு தூரம் அதிகமாக புகழ்ந்திருக்கிறீர்கள். நான் செய்யும் தொண்டைப் பற்றி நானே பல சமயம் மிகவும் கடுமையாக யோசிப்பதுண்டு. நான் செய்யும் தொண்டானது எங்கு நமது நாட்டிற்கு தீமையை விளைவிக்கிறதோ என்கின்ற சந்தேகம் எனக்கு பல சமயங்களில் எழுவதுண்டு. ஆனால் நான் இப்போது இங்கே இவ்வளவு பிரம்மாண்டமான பொதுமக்களின் ஆவலையும் கணக்கற்ற உபசாரங்களையும் பார்க்கும்போது எனது தொண்டானது சரியான வழியில் தான் இருக்கிறது என்றும், இந்த உபசாரப் பத்திரங்களும், வரவேற்புகளும் எனது தொண்டிற்கு மேலும் மேலும் உற்சாகத்தையும் ஊக்கத்தையும் ஊக்குவிப்பதாயிருக்கின்றன என்பதாகவும் கருதி இவைகளை மிக்க மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறேன்.

முதலில் சில விஷயங்களைச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். சமீபத்தில் கும்பகோணத்தில் முஸ்லீம்கள் மகாநாட்டில் பேசினேன். அங்கு காங்கரஸ்காரர்கள், என்னைப்பற்றி தப்பாகவும், தவறாகவும், ஆத்திரமூட்டக் கூடியதாகவும் உள்ளதுமான துண்டுப் பிரசுரங்களை வாரியிறைத்தார்கள். அதுவுமல்லாமல் மகாநாட்டுக் கொட்டகையிலேயே கொண்டு வந்து பிரபல முஸ்லீம் தலைவர்களிடையே ஆத்திரமுண்டாகும்படி வினியோகித் தார்கள். அத்துடன் அவர்கள் அசம்பாவிதமாய் நடந்து கொண்டதினால் பலாத்காரமும் ஏற்பட்டது. இதனால் கொஞ்சம் அடிதடியும் நடைபெறும்படி ஏற்பட்டது. இதேபோல் சமீபத்தில் திருச்சியில் நடைபெற்றத் தமிழர் மகாநாட்டிலும் சில பொறுப்பற்றவர்கள் விஷமத்தனமான நோட்டீஸ்களை கொண்டு வந்து கூட்டத்திலேயே கொடுத்தும் குழப்பத்தையும் விளை வித்தார்கள். அதன் விளைவும் கடைசியில் பலாத்காரத்தில் முடிந்தது. தேசீயப் பத்திரிகைகள் இவைகளைத் திரித்துக் கூறி கற்பனைப் படங்களுடன் பிரசுரித்தன.

மற்றும் காங்கரஸ் கூலிகளும் சில போலித் தலைவர்களும் அநேக இடங்களில் வேண்டுமென்றே என்னைப்பற்றி தப்பபிப்பிராயம் ஏற்படும்படி விஷமப் பிரசாரம் செய்து வருகின்றனர். “ராமசாமி காங்கரசில் இருந்து தள்ளப்பட்டு வெளியே ஓடி வந்துவிட்டவரென்றும், பணம் கேட்டு இல்லையென்றதினாலே காங்கரசை விட்டு வெளியே வந்து எதிர்ப்பிரசாரம் செய்கிறார் என்றும், பொப்பிலி பணம் கொடுப்பதால் கூலிப்பிரசாரம் செய்கிறார் என்றும், இப்போது முஸ்லிம்கள் பணம் கொடுப்பதால் முஸ்லிம்களுக்கு ஹிந்துக்களை காட்டிக் கொடுக்கிறார்” என்பதாக பல தப்புச் செய்திகளும் விஷமப் பிரசாரங்களும் செய்யப்பட்டு வருகிறது.

அப்படி எல்லாம் இருந்தும் நான் போகுமிடங்களிலெல்லாம் எனக்கு ஆடம்பரமான வரவேற்பளித்து நான் பேசுவதை கேட்கவும் பல ஆயிரக்கணக்காக வந்திருக்கும் உங்களுக்கு என்னுடைய வந்தனத்தை மீண்டுமொரு முறை தெரிவித்துக் கொள்கிறேன்.

அநேகமாக நான் போய் பேசிவிட்டு வருகிற இடங்களில் இவ்விடத்திலில்லா விட்டாலும் பெரும்பாலான இடங்களில் மறுநாளே காங்கரஸ்காரர்கள் எனப்படுவோரும், பொறுப்பற்றவர்களும், கூலிகளும், காலிகளும் கூட்டம் போட்டு மேற்சொன்ன மாதிரி பொறுப்பில்லாமல் ராமசாமி அப்படியென்றும், இப்படியென்றும், தேசத்துரோகியென்றும், நாஸ்திகனென்றும், தாடி வைத்திருக்கிறான் என்றும் பெரியார் சிறியார் என்றும் இப்படி பலவாறாய்த்தான் பிரசாரம் செய்கிறார்களே தவிர, ராமசாமி சொன்னதில் இன்னின்ன விஷயம் தப்பு, இன்ன விஷயங்கள் உண்மைக்கு மாறானவை என்று விபரம் சொல்லி, காரண காரியங்களுடன் பதில் சொல்லுவதோ கண்டிப்பதோ யில்லை.

என்னைப் பொறுத்தவரையில் நான் யாருக்கும் ஓட்டு வாங்கிக் கொடுக்க இங்கு வரவில்லை. எப்படிப்பட்ட அபிப்பிராயமாகவிருந்தாலும் ஆளையும், அவர்களின் யோக்கியதையையும் நன்கு கவனியுங்கள். எப்படிப்பட்டவர்களின் அபிப்பிராயமாகவிருந்தாலும் அதை நன்றாய் ஆராய்ச்சி செய்து அது தவறுதலாயிருந்தால் அதை ஒதுக்கித் தள்ளுங்கள் என்றுதான் சொல்லி வருகிறேன்.

~subhead

இது வயிற்றுச்சோற்று பிரசாரமல்ல

~shend

எனக்கு அரை வயிற்றுக்காவது சோற்றுக்கு மார்க்கமிருக்கிறது. காங்கரசுக்கு வரும்போதே பல பதவிகளும் இருந்தன. ஆதலால் தேசீயத் தொண்டினாலோ அல்லது வேறு வாழ்வினாலோதான் வயிற்றைக் கழுவவேண்டிய நிர்ப்பந்தம் எனக்கோ என் குடும்பத்துக்கோ எப்போதுமில்லை. கெளரவத்தை உத்தேசித்தோவென்றால் அதுவும் காங்கரசின் பொது வாழ்விற்கு முன்னரே மக்களால் எவை, எவை உயர்ந்த கெளரவமான ஸ்தானங்களாகக் கருதப்பட்டனவோ, அவைகளிலேயும் ஓரளவு அங்கம் வகித்தும், தலைமை வகித்தும் பதவிப் பெருமைகளை அனுபவித்து வந்திருக்கிறேன். நான் காங்கரஸ் பாரத்தில் கையெழுத்துப் போடும்போது 1. எனது இன்கம்டாக்ஸ் வருஷம் 900 ரூபாய் 2. எனது வீட்டுவரி வருஷம் 2500 ரூபாய்; எனது பொதுநல கவுரவப் பதவியோ முனிசிபல் சேர்மெனாக இருந்தேன். காங்கரசுக்காக சேர்மன் பதவியை ராஜினாமா செய்த பின்பும் சர்க்கார் எனக்கு ஆனரரி இன்கம்டாக்ஸ் கமிஷனர் வேலை கொடுத்தார்கள். அதற்கு தினம் 100 ரூபாய் அலவுன்சும் இரட்டை முதல் வகுப்பு ரயிலில் படியும் உண்டு. இவைகளுக்கு எல்லாம் இப்போதும் சர்க்காரில் ரிகார்டு இருக்கிறது. இவையெல்லாம் பொய்யாக இருக்க முடியாது. ஏன் இவைகளைச் சொல்லுகிறேன் என்றால் என்னைப் பற்றிய விஷமத்தனமான இங்கு விஷயங்கள் விவகாரத்திற்கு வந்ததினால்தான். ஏதோ என்னுடைய வாழ்நாளை வீணாகக் கழிக்காமலிருப்பதற்கே ஒரு பயனுள்ள தொண்டை செய்யலாமென்று கருதி இதில் ஈடுபட்டிருக்கின்றேனே யன்றி பதவிக்கோ பணத்துக்கோ எதற்காகவுமல்ல. இந்த நிலையில் இருந்த காங்கரசில் எவ்வளவு திருட முடியும்? இந்த நிலையில் இருந்த நான் பொது வாழ்வில் எவ்வளவு சம்பாதிக்க முடியும்?

நமது நாட்டில் சரியாகவோ, தப்பாகவோ பல ஜாதி, பல மதம், பல வகுப்பு, பல மக்களிருப்பதையும் அவைகள் நன்றாக வேரூன்றி வேற்றுமையை உண்டாக்கி நாட்டைக் கெடுத்திருக்கிறதென்பதையும் நீங்கள் யாரும் ஆட்சேபிக்க முடியாது. இங்கு இந்து – முஸ்லிம் வேற்றுமை, பார்ப்பனர்-பார்ப்பனரல்லாதார் என்கின்ற நமது சண்டை, உயர்ஜாதி – தாழ்ந்த ஜாதி என்கிற போராட்டம், பணக்காரர் – ஏழை வித்தியாசம், முதலாளி – தொழிலாளி போன்ற பலத்த கொடுமை போன்ற பல குழப்பங்களும் இருப்பதை நீங்கள் யாரும் இல்லை என்று சொல்லமுடியுமா? ஒரு வகுப்பான் மற்றொரு வகுப்பானை நம்புவதில்லை. ஒரு வகுப்பான் மற்றொரு வகுப்பானை அடக்கியாள ஆசைப்படுகிறான். ஒவ்வொரு ஜாதியானும் தாங்கள் மற்றவனை விட உயர்ந்தவன் என்று சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறான். அல்லாவிடில் இருக்கும் நிலையிலிருந்து மேல் ஜாதிஆக ஆசைப்படுகிறான். ஒவ்வொருவனும் மற்றவனை தாழ்ந்தவன் என்று நினைக்கிறானே தவிர மற்றவன் இவனை தாழ்வாய் மட்டமாய் நினைப்பதை இவன் அறியமாட்டேனென்கிறான். ஒவ்வொரு ஜாதிக்காரர்களும் தாங்கள் மேல்ஜாதி ஆவதற்கு ஜாதிச்சங்கங்களை தோற்றுவிக்கிறார்கள். பறையர்கள் ஆதிதிராவிடர் சங்கமென்றும், சக்கிலியர்கள் அருந்ததியர் சங்கமென்றும், பள்ளர்கள் தேவேந்திர குல சங்கமென்றும், ஆசாரிகள் விசுவகுல பிராமண சங்கமென்றும், பட்டு நூல்காரர்கள் செளராஷ்டிரப் பிராமணர்கள் என்றும் நெசவாளர் தேவாங்கப் பிராமணரென்றும், நாயக்கர், நாடார், படையாச்சிகள், நாயுடுகள், க்ஷத்திரியர் என்றும், நாட்டுக்கோட்டையார், வாணியர், வைசியர் சங்கமென்றும் கூட்டி பார்ப்பனர்களுக்குக் கீழ் என்பதை நிலை நிருத்துகிறார்கள்.

காங்கரசிலேயே பாருங்கள். சத்தியமூர்த்தி சாஸ்திரி ராஜ கோபாலாச்சாரியாரை கவிழ்க்கப் பார்க்கிறார். ராஜகோபாலாச்சாரியார் சத்தியமூர்த்தியைக் கவிழ்க்கப் பார்க்கிறார். அங்கும் அய்யர் அய்யங்கார் சண்டை இருக்கத்தான் செய்கிறது. இது போலவே தான் மதங்களின் யோக்கியதைகளும். ஒரு மதம் மற்ற மதத்தைக் கண்டிக்காமல் குறை கூறாமல் திட்டாமல் எதுவுமில்லை.

இந்த விபரங்களை நமது எதிரிகள் எனப்படுவோரும் அல்லது நம்மை எதிரியாக பாவிக்கும் காங்கரஸ்காரர்கள் பார்ப்பனர்கள் என்பவர்களும் உங்கள் முன் பேசும் போது “இந்த விஷயங்கள் எல்லாம் மிகவும் அற்பத்தனமானவையென்றும், வெள்ளைக்காரனால்தான் இப்பிரிவினைகள் இங்கிருக்கிற தென்றும், சுயராஜ்யம் வந்தவுடன் ஒரு நொடியில் இவைகளையொழித்துப் போடலாமென்றும்” தத்துவார்த்தம் பேசுகிறார்கள். இவைகளைக் கேட்டு நீங்களும் ஏமாந்துவிடுகிறீர்கள். நம் நாட்டிலுள்ள எல்லாக் குறைகளுக்கும், கொடுமைகளுக்கும் காரணமான ஒரு கூட்டத்தார் எல்லாவற்றிற்கும் உங்களிடம் வெள்ளைக்காரனைக் குற்றம் சொல்லியே தேசீயத் தியாகிபட்டமும், தலைமைப் பட்டமும் சம்பாதித்து விடுகிறார்கள். அவர்களே நமக்கு பிரதிநிதிகளாகவும், நமக்கு டிரஸ்டிகளாகவும், பாதுகாப்பாளர்களாகவும் ஆகி விடுகிறார்கள். இதை மறுத்து உண்மையை சொன்னால் உடனே எனக்கு தேசீய விரோதி, சுயராஜ்ய தாகமில்லாதவன், நாஸ்திகன், பணம் சம்பாதிக்கிறவன் என்ற பட்டப் பெயர் சூட்டி விடுகிறார்கள். நான் சொல்வதெல்லாம் எனது சொந்த அபிப்பிராயம். என்னுடைய நீண்ட அனுபவத்தினால் ஏற்பட்டதையே சொல்லுகிறேன். நான் சரி என்று பட்டதையே சொல்லுகிறேன். உங்களுக்குப் பகுத்தறிவு இருப்பதால் எது நல்லது, எது கெட்டது என்பதை நீங்களே ஆராய்ச்சி செய்யுங்கள். நான் சொல்வதை அப்படியே கண்மூடித்தனமாக நம்ப வேண்டுவதில்லை.

~subhead

சுயராஜ்யம் என்றால் என்ன?

~shend

நானும் உங்களிடம் தந்திரமாய் உங்களுக்கும் எனக்கும் புரியாத, சுயராஜ்யத்தை, தேசியத்தை, அரசியல் மோகத்தைப் பற்றி நிறைய பேசி, அதாவது “அடுத்த நிமிஷமே வெள்ளைக்காரனை இந்நாட்டை விட்டு துரத்த வேண்டும். வந்தே மாதரம், மகாத்மா காந்திக்கு ஜே! கனவான்களே! வகுப்பை மறந்து விடுங்கள், கதர் உடுத்துங்கள், ராட்டினம் சுற்றுங்கள்” என்றெல்லாம் பேசினால் நீங்களும் என்னைப் பெரிய தேசீய வீரனாக மதிப்பீர்களென்று எனக்குத் தெரியும். என் படத்தை தேரில் கோவிலில் வைத்து பூஜை நிவேதனம் செய்வீர்களென்பதை அறிவேன். ஆனால் சுயராஜ்யமென்றால் என்னவென்பதையாவது நான் தெரிந்துகொள்ள வேண்டாமா? அல்லது நீங்களாவது தெரிந்து கொள்ள வேண்டாமா? இந்தியாவிலுள்ள 35 கோடி மக்களின் பிரதிநிதி ஸ்தாபனம் காங்கிரஸ் என்றும் அது சுயராஜ்யத்துக்குப் பாடுபடுகிறது என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் சுயராஜ்யம் என்றால் என்ன? எல்லா இந்திய காங்கரசுக்குத் தலைமை வகித்து இந்தியாவிலேயே பெரிய அரசியல் ஞானி என்னப்பட்ட இன்றும் தேசீயசிங்கம் என்கின்ற சேலம் சி.விஜயராகவாச்சாரியார் என்ன சொல்லுகிறார் தெரியுமா? “சுயராஜ்யம் என்றால் என்ன என்பதைப் பற்றி இதுவரை ஒரு காங்கரஸ் தலைவராலும் விளக்கப்படவில்லை. காந்திகளும் நேருகளும்கூட விளக்கவில்லை” என்று சொல்லியிருக்கிறார்.

இதை நான் பொறுப்பில்லாமல் சொல்லவில்லை. இதோ தேசீயப் பத்திரிகையான 4.8.36 தேதி தமிழ்நாடு முதலிய பத்திரிகைகளில் இருக்கிறது. வேண்டுமானால் யாரும் பார்த்துக்கொள்ளலாம்.

நமது தேசீயவாதிகளிலோ, ஒருவர் வெள்ளைக்காரர்களை விரட்டி விடுவதுதான் சுயராஜ்யமென்கிறார். மற்றொருவர் வெள்ளைக்காரர்களை விரட்டினால் மாத்திரம் போதாது ஏகாதிபத்தியத்தையே ஒழிக்க வேண்டுமென்கிறார். இன்னொருவரோ ஏகாதிபத்தியம் ஒழிவது மட்டும் போதாது அபேதவாதம் வேண்டுமென்கிறார். வெள்ளைக்காரர்களை விரட்டுவதையே கவனிப்போம். வெள்ளைக்காரர்களை விரட்ட வேண்டுமென்றால் அதில் இரண்டு கேள்வி வருகிறது. 1. எப்படி விரட்டுவது? 2. விரட்டிவிட்டு என்ன செய்வது? வெள்ளைக்காரர்களை விரட்டுவதற்கு காங்கரஸ்காரர்களிடத்தில் என்ன திட்டமிருக்கிறது? பரணிமேலே எறிந்த ராட்டினத்தை எடுத்து வைத்துக்கொண்டு தினமும் சுற்றினால் வெள்ளைக்காரன் இந்த நாட்டை விட்டு ஓடிப்போய்விடுவான் என்று காங்கரஸ்காரர்கள் ஓயாமல் சொன்னார்கள். வருஷம் இருபதாய் ராட்டினம் சுற்றிப் பார்த்தாய் விட்டது. அதற்காக கோடி ரூபாய் செலவும் செய்தாய் விட்டது. படுகர் பொதவர் போல் முரட்டுத் துப்பட்டி போர்த்துப் பார்த்தாய் விட்டது. அவன் ஓடிப்போவதாகக் காணோம். அப்படித்தான் ஓடாவிட்டாலும் முன்னையவிட அதிகாரமாவது குறைந்ததாவென்றால் அதுவுமில்லை. அது ஏறிக் கொண்டேயிருக்கிறது. துப்பாக்கி வெடி குண்டினால் துரத்துவோமென்றாலும் அடி வாங்கிக் கொள்கிறதற்கு எங்களை முன்னே தள்ளிவிட்டு பங்கு வரும்போது மாத்திரம் பார்ப்பான் வந்து அடித்துக் கொண்டு போய் விடுகிறான். அப்படியே விரட்டி விடுவோ மென்றாலும் விரட்டி விட்டு யார் ஆட்சியை இங்கு ஏற்படுத்துவது. நீயாக விரட்ட முடியாவிட்டாலும் வெள்ளைக்காரனாகவாவது ஒரு 10 நாளைக்கு இந்தியாவை விட்டு விட்டு போய் மறைவில் இருந்து வேடிக்கை பார்க்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அப்புறம் நிலைமை என்னவாகும்? சீனா, அபிஸீனியா கதிதானே. அபிஸீனியா மன்னர் மாதிரி “கடவுளே எங்கள் மக்களை காப்பாற்றுவார்” என்று சொல்லி உட்கார்ந்து கொண்டிருப்பதா? அல்லது வெளிநாட்டுக்காரன் யுத்தத்துக்கு வரும்போது நமது காந்தியாரின் ராட்டினத்தை தூக்கிக் கொண்டு போய் எதிரில் நிற்பதா? ஓடிப்போய் வருவதா? அல்லது தர்ப்பைப் புல்லைக் கொண்டுபோய் போட்டால் பயந்து போய் விடுவானா? அல்லது யாகமோ சத்துரு சங்கார மந்திர ஜபமோ செய்தால் அழிந்து விடுவானா? அல்லது பழைய நாயக்கர்மார்கள் எதிரி வந்தபோது துளசியை கொண்டு போய் கொட்டிய மாதிரி ராட்டினங்களை கொண்டு போய் கோட்டை வாசலில் போட்டு விடலாமா? என்ன செய்கிறது? வெள்ளைக்காரன் அரசாங்கத்திலேயே, 100க்கு 3 பேர் இருப்பவர்கள் ஆகிய பார்ப்பனர்கள் 10-க்கு நாலரையே அரைக்கால் மந்திரி பதவியும் 4க்கு 3 தலைவரையும், கழுகு கோழிக் குஞ்சை தூக்குவதுபோலும், பூனை எலியை தூக்குவதுபோலும் அடித்துக் கொண்டு போய்விட்டார்கள். இந்த காங்கிரஸை நாங்கள் எப்படி நம்பமுடியும்? இங்கிலாந்தில் வெள்ளையன்தான் அரசாட்சி செய்கிறான். அங்கு அவ்வெள்ளைக்காரனாகப் பிறந்தவனுக்கு எல்லாம் கஷ்டம் ஒழித்து விட்டதா? அங்கு வேலையில்லாத் திண்டாட்டமில்லையா? பட்டினியில்லையா? என்று கேட்கிறேன். இவைகளுக்கும் அந்நியனை விரட்டுவதற்கும் என்ன சம்பந்தம்?

அங்காகிலும் அரசனிருக்கும் நாடு என்று சொல்லலாம். பிரெஞ்சு தேசம் குடியரசு நாடாச்சே, அங்கு கலகங்களும், தொல்லைகளும், பல பட்டினிகளும், பல வேலையில்லாத் திண்டாட்டங்களும் அடிக்கடி நிகழ்வதில்லையா? இதெல்லாவற்றையும் விட அமெரிக்கா பூரணமான சட்ட திட்டத்துக்குட்பட்ட சமஷ்டி குடியரசு நாடு. அங்கேயிருந்தும் தொழிலாளர்களிடையேயிருந்தும் அவர்களால் நடத்தப்படும் பத்திரிகை எங்கட்கு வருகிறது. அங்கும் சராசரியாக 1லு கோடி பேர் வேலை இல்லாமல் கஷ்டப்படுகிறவர்களாகவும், அரைபட்டினி, கால்பட்டினி, முழுப்பட்டினி கிடப்பவர்களாகவுமிருக்கின்றார்கள். படுப்பதற்கு வீடு இல்லாமல் ரோட்டில் கிடக்கும் குழாயில் படுத்துக் கொள்ளுகிறவர் களாகவுமிருக்கிறார்கள்.

இது ஒரு புறமிருந்தாலும், அரசனை துரத்திவிட்டு சமதர்மம் ஸ்தாபித்து மக்கள் தங்களுக்குள்ள அரசுரிமையை பகிர்ந்துகொண்ட ஸ்பெயின் தேசத்து கதியை பாருங்கள். 1931-ம் வருஷம் ஏப்ரலிலோ, மேயிலோ அரசனை விரட்டியதாக எனக்கு ஞாபகம். அன்றிலிருந்து இன்று வரை அந்நாட்டில் கலகம். அனேகர் தங்கள் செல்வங்களையே இழந்து அயல் நாட்டிற்கு போய் பிச்சையெடுத்து உண்கிறார்கள். நல்ல கட்டடங்கள், கலைகள் பாழாகின்றன. இவைகள் எல்லாம் எது இல்லாததால் இக்கதிக்கு ஆளாயிற்று? சுயராஜ்ஜியம் இல்லாததாலா? “என்னடா ஒரு முடிவுக்கும் வர இடமில்லாமலிருக்கிறதே மனது குழப்பமாய் விட்டதே” யென நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. மனிதனுக்கு மனிதன் மதம், ஜாதி, தொழில், செல்வம் ஆகியவை கொண்ட சமுதாயத் துறையில் வித்தியாசம், உயர்வு தாழ்வு, பேதா பேதங்கள் ஒழியும் வரை ஒரு ஆட்சியும் உருப்படாது. மற்றபடி ஒரு நாட்டைக் கழுதை ஆண்டாலும் சரி, கடவுள் என்பது ஆண்டாலும் சரி, மனிதர்களுக்குள் வாழ்க்கையில் எல்லா விதங்களிலும் சமம், ஒற்றுமையேற்படும் வரை சாந்தி யேற்படுவதில்லை. திருப்தி ஏற்படுவதில்லை. இவை அற்ற இடங்களில் விடுதலை சுதந்தரம் இல்லை. அதற்கு காங்கிரஸ் சம்மதிக்கிறதா?

~subhead

இந்து முஸ்லீம் ஒற்றுமை

~shend

காங்கரசின் மேலும் தோழர் காந்தியாரின் மேலும் ஜனாப் அலி சகோதரர்களுக்கிருந்த மரியாதை அளவற்ற நம்பிக்கை ஆகியவைகள் பற்றி யாவருக்கும் சந்தேகமிருக்காது. அவர்கள் காந்தியாரின் உத்தம சிஷ்யர்களாகக் கருதப்பட்டவர்கள். காந்தியார் அவர்களை சிங்கம் மாதிரி சங்கிலி போட்டுக் கட்டி தன் கையில் இரு சங்கிலியைப் பிடித்துகொண்டு ஒரு சங்கிலியில் முகமது அலியும், மற்றொன்றில் ஷவுகத் அலியும் அப்படியே பிரிட்டிஷார் மீது பாய்கிறது மாதிரியும் அவைகளை காந்தியார் மிகவும் இறுகப் பிடித்துக் கொண்டிருப்பது போலும் படம் போட்டிருந்தார்கள். ஏன்? இவர்களிருவரையும் காந்தியார் விட்டு விட்டால் அப்படியே பிரிட்டிஷார் மேல் பாய்ந்து விடுவார்களென்று முஸ்லீம்கள் இவர்கள் யாரையும் நம்பாமலும் கவலைப்படாமலும் தாங்கள் தனித் தொகுதி கேட்டார்கள். வங்காளப் பிரிவினையை காங்கரஸ்காரர்கள் கண்டித்தபோது இந்துக்கள் என்ன சொன்னார்கள். “ஐயோ! முஸ்லிம் ராஜ்யமாகப் போய்விடுமே, இந்த முஸ்லீம்களை அடக்க வேண்டாமா?” என்றெல்லாம் ஓலமிட்டார்கள். இந்த சமயம் முஸ்லீம்களின் உரிமையை நசுக்க காந்தியார் 21 நாள் பட்டினி கிடந்தார். “நாங்கள் எல்லாம் ஒற்றுமையாய் விட்டோம், நீங்கள் ஆகாரம் உட்கொள்ளுங்கள்” என்று காந்தியாரிடம் அலி சகோதரர்கள் வணங்கி தவமிருந்தார்கள். அவர்களை மேலும் ஏய்க்க கிலாபத்து இயக்கத்தையும் காந்தியார் பைத்தியக்காரத்தனமாக மிகப் பிரமாதமாக்கி இந்துக்கள் எல்லோரையும் பிரசாரம் செய்யச் செய்தார். என்ன செய்தும் ஏய்க்க முடியவில்லை.

காங்கரஸ் 1885-ம் வருஷத்தில் ஏற்பட்டது என்று சொன்னாலும் 1890லேயே காங்கரசால் தங்களுக்கு கேடு என்று கருதி காங்கரசை எதிர்த்து தனி உரிமை கேட்டார்கள். 1906ல் முஸ்லிம்கள் லீக்கை ஸ்தாபித்து சர்க்காரை வகுப்புரிமை தனித் தொகுதி மூலம் பெற்றிருக்கிறார்கள். இந்த தனித்தொகுதி உரிமையை 1916ல் காங்கரசையே ஒப்புக் கொள்ளும்படி செய்து விட்டார்கள்.

ஆகவே இதையெல்லாம் காந்தியாராலும் காங்கரசாலும் எவ்வளவு சூழ்ச்சி செய்தும் ஏய்க்கவோ அழிக்கவோ முடியவில்லை. அதற்கு பதிலாக காங்கரசானது முஸ்லீம்களின் தனித் தொகுதி உரிமையை ஒத்துக்கொண்டு தீர்மானமும் செய்து ராஜி செய்து கொண்டது. இதுதான் லக்னோ பேக்ட் என்பது. இந்தப் பழைய கதையை ஏன் சொல்கிறேன்? நமது சகோதரர்கள் சாயபுமார்கள் தான் வகுப்பு வாரி உரிமை கேட்க நமக்கு வழிகாட்டியவர்கள். இதே சாயபுமார் கற்றுக்கொடுத்த பாடத்தைதான் நமது பார்ப்பனரல்லாத தலைவர்களும் பின்பற்றி தங்கள் பங்கு எங்கே என கேட்க ஆரம்பித்து விட்டார்கள். இதுவரை அதாவது பார்ப்பனரல்லாதார் வகுப்பு வீதாசாரம் கேட்க ஆரம்பிக்கும் வரை காங்கரஸ் என்ன செய்தது? ஒவ்வொரு வருஷமும் அகில இந்திய காங்கரஸ் நடவடிக்கைகளில் முதல் தீர்மானமே “இந்த அரசருக்கும் அவர்களுக்கு இனிமேல் பிறக்கும் பிள்ளைகளுக்கும் நாங்களும் எங்கள் பின் சந்ததியாரும் கட்டுப்பட்டு ராஜ விசுவாசத்துட னிருப்போம்” எனக்கூறி ராஜவிசுவாசத் தீர்மானம் செய்வார்கள். 1914 சென்னையில் நடந்த காங்கரசிலே இந்த தீர்மானம் முதலில் ஆரம்பத்தில் ஒரு தடவை தீர்மானிக்கப்பட்டு விஷயங்கள் நடந்துகொண்டிருக்கையில் மத்தியானம் 2 மணிக்கு கவர்னர் துரை வந்தார். உடனே மறுபடியும் ஒரு தடவை அவருக்கு தெரியும்படியாக எல்லா விஷயங்களையும் அப்படியே நிறுத்திவிட்டு மீண்டுமொரு முறை ராஜவிசுவாச தீர்மானத்தை சுரேந்திரநாத் பானர்ஜியே கொண்டு வந்து 1 மணிநேரம் பேசினார். அது நிறைவேறியவுடன் கவர்னர் எழுந்து தலையை சற்று ஆட்டிக் காண்பித்து விட்டு உடனே போய் விட்டார். இக் காரியங்கள் எல்லாம் 1917 – 1918, 1919 வரை நடந்தன.

லக்னோ பாக்டுக்கு பிறகு சென்னை மாகாணத்தில் பார்ப்பனரல்லாதார் வகுப்பு உரிமை கிளர்ச்சி அதிகமானதால், கண்டிப்பாய் பார்ப்பனரல்லாதாரே சட்ட சபைகளுக்கும், ஜில்லா போர்டுகளுக்கும், தாலூகா போர்டுகளுக்கும், முனிசிபாலிடிகளுக்கும் அதிகாரத்திற்கு வந்து விடுவார்கள் என்று பார்ப்பனர்கள் தெரிந்து கொண்டார்கள். அதுவரையில் காமதேனுவாக இருந்த பிரிட்டிஷ்ஆட்சி முறையும் சட்ட சபைகளும், ஜில்லா போர்டுகளும், காங்கரஸ்காரருக்கு திடீரென்று கசந்தன. ராஜ விசுவாச பிரமாணத்தை நழுவவிட ஆரம்பித்தனர். சீ! இப் பழம் புளிக்கும் என்று இழிவாகப் பேச ஆரம்பித்தார்கள். ஏன்? பார்ப்பனரல்லாதார் பங்கு கேட்க ஆரம்பித்ததால் பார்ப்பன சூழ்ச்சியை வெளியாக்கினதால் தான். இம்மாதிரி கிளர்ச்சியைக் கிளப்பியது யார் என்று நினைக்கிறீர்கள்? காங்கரஸிலிருந்த பார்ப்பனர்களுக்கே, சதா எலக்ஷனில் வேலை செய்த டாக்டர் நாயரும் சர்.பி.தியாகராய செட்டியாருமாவார் என்பதை நீங்களறிய வேண்டும். தியாகராய செட்டியார் எலக்ஷனுக்கு நின்றால் பார்ப்பனச் சூழ்ச்சியினால் அவரை எதிர்த்து டாக்டர் நாயர் ஒரு பார்ப்பனருக்கு வேலை செய்வது வழக்கம். அது போலவே டாக்டர் நாயர் நின்றால் சர்.பி.டி. செட்டியார் எதிராக ஒரு பார்ப்பனருக்கு வேலை செய்வார். ஒரு எலக்ஷனில் தியாகராயர் நின்றபோது டாக்டர் நாயர் இவர் மீது இன்சால்மெண்டு என்று ஆட்சேபணை பெட்டிஷன் கூட கொடுத்தார்.

காங்கரசிலே பார்ப்பன ஆதிக்கம் மிக வலுவாக இருந்தது. எந்த உத்தியோகங்களும், பதவிகளும் கிருஷ்ணசாமி அய்யர், சினிவாச அய்யர், சி.பி. ராமசாமி அய்யர், சினிவாச சாஸ்திரி, பி.ஆர். சுந்தரமய்யர், பி.எஸ். சிவசாமி அய்யர் முதலிய பிரமுகர்களுக்கே வந்து சேர்ந்தன. மக்களுக்கும், கடவுளுக்கும் நடுவில் அடிக்கடி பேசிக்கொண்டு வந்ததாக சொல்லப்பட்ட லோகநாயகியம்மையார், பெசண்டம்மாள் ஆதிக்கத்தினாலும் தயவினாலும் அய்யர் மார்களுக்கும் ஓர் குறைவு மில்லாமலிருந்தது. அதனால் அந்தம்மாள் காங்கரஸ் தலைவராகவும் பார்ப்பனர்களால் ஆக்கப்பட்டார்.

உத்தியோகம், பட்டம், பதவி பூராவும் அந்தம்மாள் தயவில் அய்யர், சாஸ்திரிமார்களுக்கே போய்க்கொண்டிருந்ததால், அய்யங்கார் கூட்டம் இந்த பெசண்டம்மையாரையும் அய்யர் ஆட்சியையும் ஓர் முடிவுக்குக் கொண்டுவர பாடுபட்டார்கள். இதற்கு ஆக சத்தியமூர்த்தியாரை சம்பளத்துக்கு சேர்த்துக் கொண்டார்கள். இந்த சமயத்தில் தான் பார்ப்பனரல்லாதார் தங்களுக்குள் சுயமரியாதை பெற்று கிளர்ச்சி செய்தார்கள்.

(தொடரும்)

குறிப்பு: 19, 20, 21.01.1938 ஆகிய நாள்களில் பொள்ளாச்சி, உதக மண்டலம், குன்னூர் ஆகிய இடங்களில் ஆற்றிய சொற்பொழிவு.

குடி அரசு – சொற்பொழிவு – 23.01.1938

You may also like...