பிரிட்டிஷ் அதிகாரிகளின் நன்றியற்ற தன்மை
பிரிட்டிஷ் அரசாங்கம் உலகிலுள்ள மற்ற அரசாங்கத்தைவிட கட்டுப்பாடும் சட்டரீதியுமானது என்பது நமது அபிப்பிராயம். பிரிட்டிஷ் சமூகத்தாரும் மற்ற தேசத்தாரைவிட நாணையமுள்ளவர்கள் என்பதும் நமதபிப்பிராயம். ஆனால் பிரிட்டிஷ் அதிகாரிகளின் முறையானது “அரசியல் என்பது நாணையமற்றது, நன்றியற்றது, விஸ்வாசமற்றது” என்று ஒரு பெரியார் கூறியது போல் சிறிதும் நன்றி விஸ்வாசமற்றது என்று சொல்லுவோம்.
ஒரு காரியத்துக்கு நன்றி விஸ்வாசம் காட்டுவது என்றால் அது லேசானதல்ல என்பதும் தனது சுயநலத்தை விட்டுக் கொடுக்க வேண்டு மென்பதும் நன்றி விஸ்வாசம் காட்டுவது ஒரு தியாகத்துக்கு ஒப்பான தென்பதும் நமதபிப்பிராயமானாலும் உலகில் நல்ல பெயரோ புகழோ சம்பாதிக்கவும் மற்றவர்கள் வெறுக்காதிருக்கவும் நன்றி விஸ்வாசம் காட்ட வேண்டியது மனிதத்தன்மையின் முதல் காரியமாகும். அந்தக் காரணத்தாலேயே நன்றி விஸ்வாசத்தை அவ்வளவு முக்கியமாகவும் அதில்லாத் தன்மையை அவ்வளவு தாழ்மையாகவும் குறிப்பிடுகின்றோம்.
இந்தியாவில் மாத்திரமல்லாமல் மற்றும் வேறு நாடுகளிலும் பிரிட்டிஷ் ஆட்சிக்கு நெருக்கடி வந்தபோதெல்லாம் இந்தியா உதவி வந்திருக்கிறது. குறிப்பாக இந்தியாவில் அராஜகம் ஏற்பட இருந்த நிலைகளிலெல்லாம் இந்திய மக்கள் உதவி வந்திருக்கிறார்கள்.
காங்கிரஸ் என்பது சில சுயநலக்காரர்களும் சிறப்பாக பார்ப்பனர்களும் சேர்ந்து பாமர மக்களை ஏமாற்றி தங்கள் சமூக ஆதிக்கத்தை பலப்படுத்திக் கொள்ளும் சூழ்ச்சி ஸ்தாபனம் என்பதாக எத்தனையோ முறை எடுத்துக்காட்டி இருக்கிறோம். காங்கிரசிற்கு யோக்கியமான முறையில் பின்பற்றுகிறவர்கள் இல்லையென்றும் புள்ளி விவரங்களைக் காட்டி வந்திருக்கிறோம்.
உதாரணமாக 11 மாகாணத்தில் வங்காளம், பஞ்சாப் உள்பட 5 மாகாணங்களில் காங்கிரசிற்கு வெளிப்படையாகவே மெஜாரிட்டி பலம் இல்லை என்பதோடு மற்ற மாகாணங்களிலும் முஸ்லீம்கள், தாழ்த்தப் பட்டவர்கள், கிறிஸ்தவர்கள் முதலாகிய சமூகத்தாரின் மெஜாரிட்டி பலம் இல்லை என்பதும் இச்சமூகத்தார் சிறிதாவது காங்கிரசில் இருக்கிறார்கள் என்றால் அவர்களும் காங்கிரசின் முழுக் கொள்கைகளையும் ஆதரிக்காதவர்கள் என்றும் சர்க்காருக்கும் பொதுமக்களுக்கும் நாம் எடுத்துக்காட்ட வேண்டியதில்லை.
இப்படிப்பட்ட நிலையில் காங்கிரஸ் நாணையமும் யோக்கியமுமற்ற தன்மையினால் விளம்பரமும் பாமர மக்கள் கவனத்தை இழுக்கும்படியான தன்மையும் அடைந்து வந்திருக்கிறது. இதை எதிர்க்கும் விஷயத்தில் அறிஞர்களும் உண்மையான பொதுநல ஊழியர்களும் எவ்வளவோ கஷ்ட நஷ்டங்களுக்கு ஆளாகி வேலை செய்து வந்திருக்கிறார்கள் என்பது சுயபுத்தி உள்ளவர்களுக்கு சொல்லாமலே விளங்கும்.
இந்நிலையில் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு மனிதத்தன்மையும் முன்னேற்றமும் ஏற்படுத்த என்று இந்நாட்டில் சிறப்பாக சென்னை மாகாணத்தில் பார்ப்பனர் ஒழிந்த மற்ற சமூகத்தார் பிரிட்டிஷ் இந்தியா ஆட்சி முறைக்கு எவ்வளவோ சாதகமாக இருந்து வந்திருப்பது பிரிட்டிஷார் அறியாததல்ல.
நல்லதோ கெட்டதோ எதையுமே காங்கிரஸ்காரர்கள் (பார்ப்பனர்கள்) குறை கூறிவந்து அனாவசிய முட்டுக்கட்டை போட்டு தங்களைத் தவிர மற்ற மக்கள் தலையெடுக்க வொட்டாமல் சூழ்ச்சி செய்து வந்த காலத்திலெல்லாம் பார்ப்பனத் தொல்லையையும் அதனால் விளையக்கூடிய துன்பங்களையும் லòயம் செய்யாமல் ஆட்சியை நடத்தி வந்திருந்தும் அதை பிரிட்டிஷ் ஆட்சியின் பொறுப்பாளிகள் எல்லாம் உணர்ந்து பாராட்டி இருந்தும் இப்போது காங்கிரஸ் தங்களை அடிபணிய வந்துவிட்டது என்கிற தன்மை ஏற்பட்டு விட்டதாகத் தோன்றிய உடன் அல்லது பார்ப்பனர்கள் கை மேலோங்கி விட்டதாகக் காணப்பட்டதுடன் சென்னை கவர்னருக்கு மதிமயக்கம் ஏற்பட்டு உடனே பார்ப்பனர்களுக்கு தாசனாகத் துணிந்து மற்றவர்களை புறக்கணிக்க ஆரம்பித்து விட்டார்.
அதாவது காங்கிரஸ்காரர்கள் கேட்கிறபடியான வாக்குறுதி கொடுப்பது சட்ட விரோதமானது என்று கண்டவுடன் கவர்னர் ஒரு பார்ப்பனரை (மகாகனம் சீனிவாச சாஸ்திரியை) கூப்பிட்டு மந்திரி சபை அமைக்கும்படி கெஞ்சியதானது இம்மாகாணத்தில் பார்ப்பனர் அல்லாத மற்ற எல்லா சமூகத்தாரையும் அவமானப்படுத்தியதாகவே ஆகிவிட்டது. இது நேர்மையற்றதும் – விஸ்வாசமற்றதுமான செய்கை என்று கவர்னர் பிரபுவுக்கு தெரியாமல் இருக்குமென்று யாரும் கருதிவிட முடியாது.
தோழர் சீனிவாச சாஸ்திரியார் இன்று ஒரு தனி மனிதரே ஒழிய அவருக்கு ஒரு கட்சியோ கட்சி பிரதான தன்மையோ ஒன்றும் கிடையாது. எலக்ஷனிலும் தன் சார்பாகவோ ஏதாவது ஒரு கட்சி சார்பாகவோ போட்டி போட்டதாகவோ யாரையாவது நிறுத்தியதாகவோ தகவல் இல்லை. அப்படி இருக்க ஏதோ ஒரு காலத்தில் வெளி தேசங்களுக்குப் போய் பிரிட்டிஷ் ஆட்சி முறையை புகழ்ந்து பேசி பிரிட்டிஷ் பிரசாரகராய் இருந்து பிரசங்கம் செய்துவிட்டு வந்ததும் காந்தியை சிறை செய்யும்படி யோசனை சொன்னதும் சென்றமாத மலாய் நாட்டுக்கு சர்க்கார் தாசராகப் போய் அந்நாட்டு இந்திய மக்களுக்கு விரோதமாய் வெள்ளை தோட்ட முதலாளிகளுக்கு அனுகூலமாய் அறிக்கை விடுத்ததும் தவிர, நாட்டுக்கோ மக்களுக்கோ என்ன செய்தார், அல்லது எத்தனை மக்களை தனக்கு பின்பற்றுவோராய் உடைத்தாய் இருக்கிறார் என்று யாராவது சொல்ல முடியுமா? இப்படிப்பட்டவரை அழைத்து மந்திரிசபை அமைக்கிறாயா என்று கவர்னர் கேட்டிருக்கிறார் என்றால் கவர்னர் பிரபுவின் மனப்பான்மை எப்படிப்பட்டது என்பதும் பார்ப்பன அதிகாரிகள் தேர்தலில் செய்த அக்கிரமங்களுக்கு அஸ்திவாரம் எங்கிருந்திருக்கிறது என்பதும் இப்போது மக்களுக்கு சுலபத்தில் புரிந்திருக்குமென்றே நம்புகிறோம். இப்படிப்பட்ட கவர்னரது ஆட்சியில் இம்மாகாண பார்ப்பனரல்லாத மக்கள் இனி எப்படி நம்பிக்கை வைக்க முடியும் என்பது நமக்கு ஒரு பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது. பார்ப்பனரல்லாத சமூக நன்மைக்கு ஆக – தாழ்த்தப்பட்ட – பிற்படுத்தப்பட்ட மக்கள் நன்மைக்கு ஆக வேண்டி பிரிட்டிஷ் ஆட்சியுடன் ஒத்துழைத்ததின் பயன் பாமர மக்கள் உணர்ந்து கொள்ள முடியாமற்போய் அவர்கள் தப்பான வழியில் நடத்தப்படும்படியாக ஏற்பட்டு விட்டாலும் அரசாங்க ஏஜண்டுக்கு புத்தி வேண்டாமா என்றுதான் வருந்துகிறோம்.
இந்த எலக்ஷனில் பார்ப்பனர்கள் பார்ப்பனரல்லாதார் கட்சிக்கு விரோதமாய் செய்த பிரசாரத்தில் முக்கியமாக எடுத்துச் சொல்லப்பட்ட காரியம் ஜஸ்டிஸ் கட்சியார் சர்க்காருக்கு உதவியாய் இருக்கிறார்கள், சைத்தான் ஆட்சியை நடத்திக்கொடுத்தார்கள் என்று சொன்னதேயாகும்.
அப்படிக் கெட்ட பேரை வாங்கி கஷ்டப்பட்டவர்கள் இருக்க அவர்களை மறந்து என்ன காரியத்துக்கு ஆக கவர்னர் சாஸ்திரியாரைக் கூப்பிட்டு மந்திரி பதவி அமைக்க கேட்டுக்கொள்ள வேண்டும் என்பதை எவ்வளவு யோசித்துப் பார்த்தாலும் நமக்கு விளங்கவில்லை. ஒரு சமயம் இந்த யோசனையானது தோழர் சி.ராஜகோபாலாச்சாரியாரும் கவர்னரும் கூடிக் கலந்ததில் பிறந்த பிள்ளையாக இருந்தாலும் இருக்கலாம் என்று கருத வேண்டியிருக்கிறது. அதாவது தேர்தலில் வெற்றிபெற்றவுடன் ஆச்சாரியாரும் கவர்னரும் ஒருவரை ஒருவர் அளவளாவிக் கொண்டதோடு ஆச்சாரியாரும் தாம் மந்திரி ஆகப்போவதாகவும் இன்ன இன்னபடி நடக்கப்போவதாகவும் மனக்கோட்டை கட்டிக்கொண்டார். கவர்னர் பிரபுவும் தனக்கு இனிமேல் கவலையே இல்லையென்றும் தனது ஆட்சி இனி வாழைப்பழத்தில் ஊசி சொருகுகிற மாதிரி அவ்வளவு சுலபமாக இருக்குமென்றும் கருதி ஆனந்தத்தில் மூழ்கி இருந்தார். எல்லா இந்திய காங்கிரஸ் கமிட்டி தீர்மானத்திற்கு பிறகு கூட இருவரும் அதே அபிப்பிராயத்துடனேயே இருந்து மகிழ்ந்து வந்திருக்கிறார்கள். எல்லா இந்திய காங்கிரஸ்கமிட்டி தீர்மானத்துக்கு தோழர் ஆச்சாரியார் சம்மதித்ததுக்கு காரணமும் கவர்னர் மீது தனக்கு உள்ள நம்பிக்கையேயாகும். இந்த நிலையில் இருவரையும் அதாவது கவர்னரையும் ஆச்சாரியாரையும் ஏமாற்றுவதற்கு ஆக மடிகட்டிக் காத்துக்கொண்டிருந்த அரசியல் சட்டத்தின் கருத்தை அறியாமல் போய்விட்டதானது ஆச்சாரியாரின் சட்டஞானமும் குயுக்தி வாதமுமேயாகும். இம்மாதிரியான தர்மசங்கடம் தோன்றி கவர்னருக்கும் ஆச்சாரியாருக்கும் ஊடல் ஏற்பட்டு விடவே ஆச்சாரியார் உடனே கவர்னருக்கு அபயஸ்தம் கொடுத்து “பயப்படாதே காதலரே, நாம் இருவரும் கலவாமலே தர்ப்பையைக் கிள்ளிப்போட்டு ஒரு குழந்தையை உண்டாக்கி விடலாம்” என்று ஆறுதல் சொல்லி “நிர்வாகத்தை மகாகனம் சீனிவாச சாஸ்திரி கையில் ஒப்புவித்துவிடு, நான் பார்த்துக்கொள்கிறேன் அதாவது முன் ஒரு காலத்தில் இப்படிப்பட்ட நிலை வந்தபோது டாக்டர் சுப்பராயனைப் பெற்றுக்கொடுத்தேன், அதுபோல் இப்போது சாஸ்திரியாரை தருகிறேன்” என்று யோசனை கூறி இருக்கவேண்டும். அதனாலேயே கவர்னர் தோழர் ராஜகோபாலாச்சாரி மாளிகையைவிட்டு வெளி வந்த உடன் சாஸ்திரி விலாசத்தைத் தேடிப்பிடிக்க முயற்சித்திருக்க வேண்டும் என்று கருதுகிறோம். அப்படிக்கில்லா திருந்திருக்குமானால் கவர்னர் யோக்கியமாக செய்திருக்க வேண்டிய காரியம் காங்கிரசுக்கு மந்திரி பதவி இல்லை என்று தெரிந்த உடன் அடுத்த மெஜாரிட்டி கட்சியையோ அல்லது இதுவரை ஆட்சியில் இருந்த கட்சி தலைவரையோ கூப்பிட்டனுப்பி யோசனை கேட்டிருக்க வேண்டும். இரண்டுமில்லாமல் “பூவிலே பூவு என்ன பூவு” என்று ஒரு குழந்தை சவால் போட்டால் மற்றொரு குழந்தை “பூளைப்பூவு” என்று பதில் சொல்லுமாம். அதுபோல் இருந்து இருந்து சாஸ்திரியை கவர்னர் கூப்பிட்டதானது எவ்வளவு நன்றியற்றதும் சிறுபிள்ளைத்தனமான காரியமுமாகும் என்பதை நாம் எடுத்துக்காட்ட வேண்டியதில்லை. மந்திரி வேலை ஆசையாலோ ஜஸ்டிஸ் கட்சித் தலைவரைக் கூப்பிட்டுக்கேட்டால் அவர் ஒப்புக்கொள்ளத் தயாராய் இருந்தார் என்றோ நாம் இதைக் கூறவில்லை. கவர்னரின் மனப்பான்மை எவ்வளவு சாதாரணமானது என்பதையே எடுத்துக்காட்டுகிறோம். இதிலிருந்து என்ன கருதவேண்டியிருக்கிறது என்றால் கவர்னரின் எண்ணமும் புத்தியும் எப்படிப்பட்டது என்பதையும் இவருடைய ஆட்சி இன்னம் கொஞ்சகாலம் உள்ள மிகுதி நாள்களில் பார்ப்பனரல்லாதாருக்கு எப்படி இருக்கும் என்பதையும் முடிவு செய்யக்கூடியதாகவே இருக்கிறது.
மேலும் இந்த அரசாங்க ஆட்சி திட்டத்தில் வைகிறவனுக்கும் தொல்லை கொடுக்கிறவனுக்கும் மிரட்டுகிறவனுக்கும் தான் சலுகை கிடைப்பதாய் இருக்கிறதே ஒழிய நியாயமாக நடக்கிறவனுக்கு நாமத்தைச் சாத்துவதாக இருக்கிறது என்று முடிவு செய்ய வேண்டி இருக்கிறது. ஆகவே இதன் பலனை கவர்னர் சீக்கிரம் அறியும்படி செய்ய வேண்டியது சுயமரியாதையுள்ள மக்கள் கடமையாகும்.
குடி அரசு – துணைத் தலையங்கம் – 11.04.1937