ஒழுக்கம்
உலகில் கற்பு, காதல் என்பன போன்ற வார்த்தைகள் எப்படி பெண்மக்களை அடிமைப்படுத்தி அடக்கி ஆளவென்று ஏற்படுத்திப் பயன்படுத்தப்பட்டு வருகின்றனவோ, அது போலவேதான் ஒழுக்கம் என்னும் வார்த்தையும் எளியோரையும் பாமர மக்களையும் ஏமாற்றி மற்றவர்கள் வாழ பயன்படுத்திவரும் ஒரு சூழ்ச்சி ஆயுதமே யல்லாமல், அதில் உண்மையோ, சத்தோ ஒன்றுமே கிடையாது. கற்பு, காதல், சத்தியம், நீதி, ஒழுக்கம் என்பனவெல்லாம் ஒரே தாயின் பிள்ளைகள். அதாவது குழந்தைகளைப் பயமுறுத்த பெரியவர்கள் “பூச்சாண்டி” “பூச்சாண்டி” என்பதுபோல் இவை எளியோரையும் பாமர மக்களையும் வலுத்தவர்களும், தந்திரக்காரர்களும் ஏமாற்றச்செய்த ஒரு பெரும் சூழ்ச்சியேயாகும்.
எப்படி குழந்தைப்பருவம் உள்ளவரை பூச்சாண்டிக்கு மக்கள் பயப்பட வேண்டியிருக்கிறதோ, அதுபோலவேதான் அறிவும், சக்தியும் மக்களுக்கு ஏற்படும்வரை மேற்கண்ட ஒழுக்கம் முதலிய பூச்சாண்டிகளுக்கு அவர்கள் பயப்பட்டுத் தீரவேண்டியிருக்கிறது.
உலகில் ஒழுக்கமான காரியம் அல்லது ஒழுக்க ஈனமான காரியம் என்பனவெல்லாம் அவைகளைச் செய்கிற ஆட்களின் வலிமையையும், அறிவையும்கொண்டு மதிக்கப்படுகிறதே யல்லாமல், வெறும் காரியத்தைப்பற்றி மாத்திரம் முடிவு செய்யப்படுவதில்லை.
சாதாரணமாக உலகில் “விபசாரம்” “பொய்” “களவு” “ஏமாற்றம்” முதலிய காரியங்களை ஒழுக்கங்கெட்ட காரியங்கள் என்று சொல்லப்படுகிற தென்றாலும், இந்தக் காரியங்கள் யாவையுமோ அல்லது ஏதாவது ஒன்றையோ இல்லாத மனிதர் எவரையும் இதுவரையில் உலகத்தில் காண முடியவே இல்லை.
ஒரு சமயம் நமது கண்ணுக்குத் தென்படவில்லை என்று சொல்லுவதானால் அப்படிச்சொல்லும் மக்கள் ஒவ்வொருவரும் முதலில் தங்களைப்பற்றியே நினைத்துப்பார்த்து தங்களுடைய சிறு பிராயம் முதல் இன்றையவரையில் உள்ள பல பக்குவ வாழ்நாளில் மேற்கண்ட “ஒழுக்கங்கெட்ட” காரியங்கள் என்பவைகளில் எதையாவதொன்றை மனோவாக்கு காயங்களால் செய்யாமல் இருந்திருக்க முடிந்ததா, அல்லது செய்யாமல் இருக்கின்றார்களா என்று நினைத்துப் பார்த்தால் உண்மை விளங்கிவிடும். (N.ஆ. மற்றும் தங்களுடைய சுற்றத்தார், நண்பர், சுற்றிலுள்ள அறிமுகமான ஜனங்கள் நன்றாய்த் தெரிந்த அந்நியர் முதலாகியவர்களில் யாராவது ஒழுக்கத்துடன் நடந்து வந்ததுண்டா என்று சிந்தித்துப் பாருங்கள். இந்த இருவித முடிவைக் கண்டுகொண்ட பிறகு உலகத்தை நினைத்துப் பாருங்கள்.)
மற்றும் உலகில் மக்கள் வாழ்க்கைக்கென்று இருந்து வருகிற தொழில்களில் முக்கியமானவைகளாகக் காணப்படுவது விவசாயம், வியாபாரம், கைத்தொழில், கூலி, வக்கீல், உத்தியோகம், வைத்தியம், விலை மாதர் தொழில் ஆகியவைகள் முதல், குருத்துவம், சன்னியாசம், துரைத்தனம், தேசீயம், ஈறாகவுள்ள அனேக துறைகள் ஆகும். இவற்றின் மூலமே மக்கள் பெரும்பாலும் வாழுகின்றார்கள் என்பதை நாம் பிரத்தியட்சத்தில் பார்க்கின்றோம். இந்த மக்களில் யாராவது ஒருவர் ஒழுக்கமாக நடந்துகொள்ளுவதை நாம் பார்க்கின்றோமா? ஒழுக்கம் என்றால் என்ன? அது எது என்கின்ற விஷயத்தில் நாம் இப்போது பிரவேசிக்கவில்லை. அதற்கு இந்த வியாசத்தில் இடம் வைக்கவுமில்லை. மற்றப்படி நாம் ஒழுக்கம் என்பதாக உலக வழக்கில் எதை எடுத்துக்கொண்டு பேசுகின்றோமோ, மேற்கண்ட வாழ்க்கைத் துறைகளில் ஈடுபட்டிருப்பவர்கள் அந்தந்த துறைக்கும் எதை யெதை ஒழுக்கம் என்று அவர்களாகவே சொல்லிக்கொள்ளுகிறார்களோ அதையும், அவரவர்கள் மற்றவர்களைப் பார்த்து எதை யெதை ஒழுக்கம் கெட்ட காரியம் என்று சொல்லுகிறார்களோ அதையும் மாத்திரமே இங்கு ஒழுக்கம் என்பதாக வைத்துக்கொண்டு யாரிடமாவது இந்த ஒழுக்கத்தைக் கண்டுபிடிக்க முடிகின்றதா என்றுதான் கேட்கின்றோம்.
ஒரு வேலைக்காரன் செய்யும் ஒழுக்கங்கெட்ட காரியத்தை அந்த வேலைக்காரன் முன்னிலையிலேயே எஜமான் செய்துவிட்டு வேலைக்காரனை மாத்திரம் ஒழுக்கங்கெட்டவன் என்று சொல்லுகிறான்.
ஒரு குமாஸ்தா செய்யும் ஒழுக்கங்கெட்ட காரியத்தை மேல் அதிகாரி அந்தக் குமாஸ்தா முன்னிலையிலேயே பல தடவை செய்துவிட்டு குமாஸ்தாவை ஒழுக்கங்கெட்டவன் என்று கூறுகிறான். (N.ஆ. ஒரு மகன் செய்யும் ஒழுக்கங்கெட்ட காரியத்தை தகப்பன் செய்துவிட்டு மகனை ஒழுக்கங்கெட்டவன் என்று சொல்லுகிறான்).
இதுபோலவே, எல்லாத்தொழில் துறையிலுமுள்ள மக்களும் அவரவர்கள் வாழ் நாட்களில் ஒழுக்க யீனமாக நடந்து கொண்டே மற்றவர்களை ஒழுக்க யீனர்கள் என்று சொல்லி வருகிறார்கள். இவை நாம் குறிப்பிட்ட ஒரு சிலரிடம் மாத்திரம் இருப்பதாய்ச் சொல்ல வரவில்லை. “ஒழுக்கமாய்” மக்கள் யாராலும் நடக்க முடியாது என்றும், ஒழுக்கம் என்பதாக ஒரு குறிப்பிட்ட குணமோ, செயலோ இல்லை என்றும், ஒழுக்கம் என்று சொல்லி வருவதெல்லாம் எளியோரையும் பாமர மக்களையும் அடிமைத்தனத்தில் இருத்திவரப் பயன்படுத்தக்கூடிய சூழ்ச்சி ஆயுதமே தவிர, மற்றபடி அது மக்கள் சமதர்மத்துக்கு பயன் படக்கூடியது அல்லவென்றும் சொல்லுவதற்காகவே எடுத்துக்காட்டுகிறோம்.
உண்மையிலேயே ஒழுக்க ஈனம் என்பது ஒன்று உண்டென்றும், அது திருட்டு, பொய், ஏமாற்றம் போன்றதாகிய குணங்கள்தான் என்றும் சொல்லுவதாய் இருந்தால் அந்தக் குணங்கள் பெரிதும் நிலையாய் குடிகொண்டு இருக்கும் இடங்கள், அரசர்கள், குருமார்கள், வியாபாரிகள், வக்கீல்கள், தேசீயவாதிகள் போன்ற கூட்டத்தார்களிடமே ஆகும்.
மனிதர்களுக்கு துன்பமிழைத்து அவர்களது அமரிக்கையைக் கெடுத்து ஏமாற்றி வஞ்சித்துவாழும் கூட்டங்கள் மேற்கண்ட கூட்டங்களே யாகும்.
இது அந்தந்த துறையைக் கைக்கொண்ட ஆட்களை மாத்திரமல்லாமல், அந்தத் துறைகளுக்கே ரத்தமும், சதையும், எலும்பும் போலக் கலந்திருக்கும் காரியங்களுமாகும்.
இந்தக் கூட்டத்தாரைக் கண்டு எந்த மகனும் அசூயைப்படுவதே யில்லை. இவர்களிடத்தில் மக்கள் வெறுப்புக் காட்டுவதுமில்லை. அதற்குப்பதிலாக, இந்தக் கூட்டத்தாருக்குத் தான் நாட்டிலே மக்களிடம் செல்வாக்கும் மதிப்பும், இருந்து வருகின்றது. மனித சமூகத்திற்கு எலும்புருக்கி வியாதிபோன்ற இந்தக் கூட்டம் மக்களிடம் ஆதிக்கம் செலுத்திவருவது என்பது மக்களின் அறிவீனத்தையும் பலமற்ற தன்மையையும் காட்டுவதல்லாமல் வேறில்லை.
வாழ்க்கைத் துறையின் ஒழுக்கம்தான் இம்மாதிரி இருக்கின்றதென்றால் மற்றபடி, பக்தி, பரமார்த்திகம், ஆத்மார்த்தம், ஆசாரத்துவம், மகாத்மாத்துவம் என்பவை முதலான துறைகளிலாவது ஒழுக்கம் என்பதை காணமுடிகின்றதா என்பதை சிந்தித்துப்பாருங்கள்.
அவையும் இப்படித்தான் இருக்கின்றன என்பதே நமது அபிப்பிராயம்.
பகுத்தறிவு (மா.இ) – கட்டுரை – ஜனவரி 1938