புது காங்கரஸ் தலைவர் யோக்கியதை
சுபாஷ் சந்திரபோசுக்கு பார்ப்பனர்களின் (ஆனந்தவிகடனின்) சர்ட்டிபிகேட்
“சுபாஷ் போஸúக்கு ஒரே ஒரு குறை மட்டும் உண்டு. சுபாஷ் போசுக்கு மற்ற தேசத்தலைவர்களுடன் ஒத்து உழைக்கும் இயல்பு அவ்வளவு போதாது. தேசபந்து காலஞ்சென்றதும், உடனே தாம் வங்காளத்தின் தலைவராக வரவேண்டுமென்பதில் கொஞ்சம் அவசர புத்தி காட்டினார். இதன் பயனாக, உரிய காலத்தில் வங்காளத்தின் ஒப்பற்ற தலைவராக வரவேண்டியவர் ஒரு கும்பலின் தலைவர் ஆனார். வங்காளத்தில் காங்கரஸ்காரர்கள் பிளவுபட்டு, காங்கரஸ் வேலைகள் ரொம்பவும் சீரழிந்து போயிருந்ததற்கு ஸ்ரீ சுபாஷ் போஸ் பெரிதும் பொறுப்பாளி என்பதை தேசம் மறந்துவிடமுடியாது” ஜவஹர்லாலுக்கு இதே பார்ப்பனர்கள் (சுதேசமித்திரன்) கொடுத்த நற்சாட்சி பத்திரம் முன்னமே எடுத்துக்காட்டப்பட்டிருக்கிறது. எனவே எந்தத் தலைவரானாலும் சரி, பார்ப்பன அடிமையாய் இருந்தால் விளம்பரப்படுத்தி மகாத்மா வாக்குவதும் சுதந்தர புத்தி கடுகளவாவது இருந்தால் அவர் எப்படிப்பட்ட தியாகியானாலும் இழிவுபடுத்தி ஒழிப்பதும் பார்ப்பன இயற்கை – ஆரிய தர்மம் என்பதை உணர்வோமாக.
குடி அரசு – செய்தி விளக்கக் குறிப்பு – 23.01.1938