காங்கரஸ் கண்ணாம்பூச்சி விளையாட்டு
“புதுச் சீர்திருத்தத்தை இந்தியா மறுத்துவிட்டது. பிரதிநிதித்துவ சபை கூட்டி எதிர்கால அரசியல் திட்டத்தை வகுக்க வேண்டும். அதுவே காங்கரஸ் நோக்கம். அதற்காகவே காங்கரஸ் பாடுபடப்போகிறது” என காங்கரஸ்வாதிகள் கூறுகிறார்கள்.
“இந்த அரசியல் சட்டமே இப்போது இந்நாட்டில் அமலில் இருக்கும் சட்டம். அதைப் பற்றி யார் எவ்வளவு குறை கூறினாலும் அது ஒன்றுதான் இப்போது தேசத்தின் முன் இருக்கும் பூரணமான அரசியல் சீர்திருத்தச் சட்டம். அதைவிட முற்போக்கான சட்டம் அமைப்பதற்கு அதை ஏற்று நடத்துவதே சிறந்த வழி. இதைவிட அதிவிரைவில் இந்திய லôயத்தை அடையக்கூடிய பாதை வேறு இல்லவே இல்லை” என வைஸ்ராய் சென்ற 22-ந் தேதி வெளியிட்ட அறிக்கையில் சந்தேகத்துக்கு இடமின்றிக் கண்டிப்பாகத் தெரிவித்து விட்டார்.
இந்நிலையில் காங்கரஸ் செய்யப்போகிறது என்ன? ஒன்றில் தன் லôயத்தை மாற்றிக்கொண்டு புதுச்சீர்திருத்தத்தை ஏற்று நடத்த காங்கரஸ் முன் வரவேண்டும்; அல்லது சட்டசபைப் பதவிகளை ராஜிநாமாச்செய்து விட்டு பிரதிநிதித்துவ சபை கூட்டி எதிர்கால அரசியலை அமைக்கும் வேலையில் காங்கரஸ்காரர் ஈடுபட வேண்டும். இந்த வழிகளைத்தவிர காங்கரசுக்கு மூன்றாவது ஒரு வழி இல்லவே இல்லை. இரண்டில் ஒன்றைப் பின்பற்றாமல் வாக்குறுதிப் புரளியைக் கிளப்பிப் பாமர மக்களையும் உலகத்தையும் ஏமாற்றுவது வடிகட்டின அரசியல் மோசடியாகும். காங்கரஸ் தலைவர் ஜவஹர்லால் “பூரண சுதந்திரமே காங்கரசின் லôயம். அதை மாற்ற முடியாது. புதிய சீர்திருத்தத்தை ஒழிப்பதே காங்கரசின் நோக்கம்” என வாய்ப்பறை சாற்றுகிறார். காங்கரஸ் சர்வாதிகாரியாக மதிக்கப்படும் காந்தி – நாலணா காங்கரஸ் மெம்பராக இல்லாதிருந்தும் காங்கரஸ் கமிட்டிக் கூட்டங்களில் கலந்துகொண்டு கமிட்டி முடிவுகளை உருப்படுத்தும் காந்தி – “புதிய சீர்திருத்தம்” நிறுத்தி வைக்கப்பட்டு அதனால் பிரிட்டனுக்கும் இந்தியாவுக்கும், ஏற்படக்கூடிய துவேஷத்தையும் மனக்கசப்பையும் போக்க என் உயிரை விடவும் தயாராயிருக்கிறேன்” என பகிரங்கமாகக் கூறுகிறார். இந்த இரண்டு தலைவர்களில் யார் கூறுவதை காங்கரஸ்காரர் பின்பற்றப் போகிறார்கள்? இந்தக் கேள்விக்கு விடையளிக்க வேண்டிய காலம் வந்து விட்டது. நொண்டிச்சமாதானங்கள் கூறி நாட்டை ஏய்க்கும் காலம் போய்விட்டது. வீண் விவாதத்தினால் மூன்று மாதகாலம் பாழாகி விட்டது. புதுச்சீர்திருத்தத்தை ஒப்புக்கொள்ள முடியாதென்பது காங்கரசின் கடைசி முடிவானால் அதை முடிவாகக் கூறிவிடட்டும்.
தற்கால நிலைமை
தற்கால காங்கரஸிலே இரண்டுவித மனப்பான்மை கொண்ட தலைவர்கள் இருந்து வருகிறார்கள். ஒரு சாரார் வெறும் லôயவாதிகள். அவர்களுக்குத் தற்கால பலனைப் பற்றிக் கவலையில்லை. ஜெர்மனி, ஸ்பெயின், இத்தாலி சம்பவங்களே அவர்கள் கண்கள் முன் நிற்கின்றன. ஏகாதிபத்தியம், டாக்டர் சி.ஆர். ரெட்டி கூறுவது போல் அவர்களுக்கு ஒரு பெரும் பூதம். அவர்கள் பார்க்குமிடங்களெல்லாம் அந்த பூதமே அவர்களுக்கு காட்சியளிக்கிறது. புரட்சி மூலம் – ஒருகால் அது கத்தி ரத்தமில்லாத புரட்சியாக இருக்கலாம் – இந்திய சுதந்திரத்தை நிலைநாட்டுவதே அவர்கள் நோக்கம். ஹிட்லர், முஸோலினி மாதிரி சர்வாதிகாரிகளாக வேண்டுமென்பதே அவர்களில் சிலரின் அந்தரங்க எண்ணம். அவர்கள் துணிச்சலுடையவர்களாயிருப்பதினால் பாமர மக்களுக்கு அவர்களிடம் ஒரு மாதிரி மதிப்பு இருந்து வருகிறது.
இரண்டாவது சாரார் காங்கரஸ் செல்வாக்கைப் பயன்படுத்திக்கொண்டு பதவி யேற்று சுயலாபத்தை விருத்தி செய்யவிரும்புகிறவர்கள். அவர்களுக்கு திடமான அரசியல் லôயம் கிடையாது. காங்கரஸ் லôயம் பூரண சுயராஜ்யமாயிருந்தாலும் சுயராஜ்ஜியத்தின் சாராம்சமோ, குடியேற்ற நாட்டந்தஸ்தோ கிடைத்தால் திருப்திதான் என்பார்கள். காந்தி, ஆச்சாரியார் அக்கோஷ்டியைச் சேர்ந்தவர்களே. ஒரு காலத்தில் சாத்தான் சர்க்காரை அடியோடு வெறுத்த காந்தி, இப்பொழுது சாத்தான் சர்க்கார் கவிழ்வதைத் தடுப்பதற்கு பிராணத் தியாகம் செய்யத் தயாராயிருப்பதை முக்கியமாக கவனிக்க வேண்டும். சென்ற மூன்று மாத விவாதங்களினால் எவ்வளவோ அரசியல் சந்தேகங்கள் நீங்கிவிட்டதாகவும், அது காங்கரசுக்கு ஒரு பெரிய வெற்றியென்றும் காங்கரஸ் அபிமானிகள் சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால் உண்மை என்ன? சென்ற மூன்று மாத விவாதங்களினால் காங்கரஸ்காரரில் பெரும்பாலார் மிதவாதிகள் ஆகிவிட்டார்கள். இதை மறைக்க காங்கரஸ்காரர் பகீரதப்பிரயத்தனம் செய்து கொண்டிருந்தாலும் அது வெகு சீக்கிரம் பகிரங்கமாகிவிடும். ஜüலை 5-ந் தேதி நடக்கும் காரியக் கமிட்டிக் கூட்டத்தில் ஒரு கால் அது பகிரங்கமானாலும் ஆகலாம். எது எப்படியானாலும் காங்கரஸ் மிரட்டல்களால் பிரிட்டீஸ் சர்க்கார் அஞ்சப்போவதில்லையென்பது வைஸ்ராய் அறிக்கையினால் தெளிவு படுத்தப்பட்டுவிட்டது. வாழைப் பழத்தில் ஊசி இறக்கும் சம்பிரதாயத்தைப் பின்பற்றி மிக லளிதமான பாஷையில் ஸரஸமான முறையில் வைஸ்ராய் பிரிட்டீஷ் சர்க்கார் உறுதியைத் தெரிவித்துவிட்டார். காங்கரஸ் பெருமை குன்றாதிருக்க வேண்டுமானால் வாக்குறுதிப் பேச்சை மூலையில் மூட்டை கட்டி வைத்து விட்டு பதவியேற்க காங்கரஸ் கட்சித் தலைவர்கள் முன் வரவேண்டும். காங்கரஸ்காரர் அபிப்பிராயப்படி பெயரளவிலாவது மாகாணங்களுக்குச் சுய ஆட்சி கிடைத்திருக்கும்போது, மாகாண காங்கரஸ் கமிட்டிகள், காங்கரஸ் காரியக் கமிட்டி அதிகாரத்துக்குக் கீழ்ப்படிய வேண்டியிருப்பது அசம்பாவிதமான நிலையாகும். சென்ற மூன்று மாத விவாதங்களினால் காங்கரஸ்காரருக்கு இருந்து வந்த அநேக சந்தேகங்கள் நீங்கி விட்டதாகவும் அது பெரிய இலாபம் என்றும் காங்கரஸ் பத்திரிகைகளே ஒப்புக் கொள்ளுகின்றன. அப்படியானால் மேலும் தயங்கிக்கொண்டிராமல் பதவி ஏற்க வேண்டியதுதானே நியாயம். ஆனால் பதவி யேற்க முன் வரும்போது காங்கரசிலே பிளவு உண்டாகலாம். அந்தப் பிளவுக்கு பதவி ஏற்க விரும்புவோர் அஞ்சக்கூடாது. எந்நாளாவது ஒரு நாள் பிளவு ஏற்பட்டே தீரும்; ஏற்படத்தான் போகிறது. ஜவஹர் கோஷ்டியாரும், காந்தி கோஷ்டியாரும் எத்தனை நாளைக்கு ஒத்துழைக்க முடியும்? பாமர மக்களை ஏமாற்றும் பொருட்டு லôய வாதியான ஜவஹர்லாலை காங்கிரஸ் தலைவராக்கிய “பாபத்துக்கு” எந்நாளாவது ஒரு நாள் “பரிகாரம்” செய்து கொள்ள வேண்டியதாகத்தானே ஏற்படும். அந்தப் பரிகாரம் செய்து கொள்ள ஜவஹர் கட்சி – காந்தி கட்சி பிளவினால் ஏற்படக்கூடிய பலனை வெகு சுளுவில் சமாளித்துக்கொள்ள இதுதான் ஏற்ற தருணம். எப்படியோ காங்கிரஸ்காரருக்கு 6 மாகாணங்களில் மெஜாரட்டி கிடைத்து விட்டது. எனவே பதவி ஏற்று சாத்தியமான வரை தேச மகா ஜனங்களுக்கு நன்மை செய்தால் – ஜவஹர் கட்சியார் ஆதரவை இழந்தாலும் பொதுஜன ஆதரவைப் பெற காங்கரசுக்கு ஓரளவு வசதி ஏற்படும். இந்தச் சந்தர்ப்பத்தில் காங்கரஸை பலப்படுத்த காரியக்கமிட்டியார் மறந்துவிடக்கூடாதென சமீபத்தில் வெளியிட்ட ஒரு அறிக்கையில் தோழர் சத்தியமூர்த்தி கூறியிருப்பதின் உட்கருத்தும் இதுவேயாகும். ஆகவே ஜüலை 5-ந் தேதி கூட்டத்தில் பதவி ஏற்பதை ஆதரிக்கும் தலைவர்கள் உறுதியாக நடந்துகொள்வார்கள் என்று நம்புகிறோம். அன்றும் காங்கரஸ் தலைவர்கள் வழவழா பல்லவிப் பாடினால் காங்கரசுக்கு சாவுமணி அடித்தாய் விடுமென்றும் எச்சரிக்கை செய்கிறோம்.
குடி அரசு – தலையங்கம் – 27.06.1937