தோழர் சத்தியமூர்த்தி அய்யர்
“”யாருக்காவது பயித்தியம் பிடிக்கச் செய்ய வேண்டுமானால் அவருடைய யோக்கியதைக்கு மீறிய பவுசு வரும்படி செய்து விட்டால் போதும்” என்று ஒரு பழமொழி உண்டு.
அதுபோல் தோழர் சத்தியமூர்த்தி அய்யர் அவர்களுக்கு அவர் யோக்கியதைக்கு மீறின (அதாவது 8பங்கு 10பங்கு அதிகமான) பவுசு ஏற்பட்டவுடன் இப்போது அவர் பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் வைக்கப்பட வேண்டிய அளவுக்கு வந்து விட்டார். தலைகால் தெரியாமல் தாண்டவமாடுகிறார்.
இந்திய சட்டசபைக்கு சத்தியமூர்த்தி அய்யர் அவர்கள் மெம்பராய் விட்டார் என்று சொல்லப்பட்டவுடன் அவர் பேச வாயைத் திறந்ததும் சென்னை கவர்னர் பிரபுவுக்கு ஒரு உத்திரவு போட்டார்.
அதாவது “”இந்திய சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ்காரர்கள் வெற்றி பெற்று விட்டதால் கவர்னர் மாகாண சட்டசபையை கலைத்து மந்திரிகளை வீட்டுக்கு ஓட்டி விடவேண்டும்” என்று சொல்லி விட்டார்.
இந்திய சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ்காரர் ஜெயித்ததற்கும், மாகாண சட்டசபைக்கும், என்ன சம்மந்தம் என்பது தோழர் சத்தியமூர்த்திக்கு சுய அறிவு இருந்தால் புரியாமல் இருக்குமா என்று கேட்கின்றோம்,
இந்திய சட்டசபைக்கு இதற்கு முன்பும்கூட வெகுகாலமாக பார்ப்பனர்களாகவே தான் வெற்றி பெற்று வந்திருக்கிறார்கள். அங்கு எல்லோரும் பார்ப்பனர்களாக இருந்த அந்தக் காலத்தில் தான் ஜஸ்டிஸ் மந்திரிகள் உச்சஸ்தானத்தில் இருந்தார்கள். அப்போதெல்லாம் சென்னை சட்டசபை கலைக்கப்பட ஏற்படாத அவசியம் இப்போது என்ன ஏற்பட்டு விட்டது என்பது நமக்குப் புரியவில்லை.
ஆவணியாவிட்டத்திற்கும் அப்துல் காதர் சாயபுக்கும் பொருத்தம் வைப்பது போல இந்திய சட்டசபைத் தேர்தலுக்கும் மாகாண சட்டசபை மந்திரிகளுக்கும் பொருத்தம் வைத்து அர்த்தராத்திரியில் குடை பிடிக்கிறார் நமது சத்தியமூர்த்தி அய்யர்.
அதோடு நிற்காமல் அதற்கு அடுத்த இரண்டொரு நாளைக்குள் சர்.கே.வி. ரெட்டி நாயுடு அவர்களை சட்ட மெம்பர் வேலையை ராஜினாமாச் செய்து காலி செய்யும்படி கேழ்க்கச் சொல்லி கவர்னருக்கு மற்றொரு உத்திரவு போட்டிருக்கின்றார். இதிலிருந்து தோழர் சத்தியமூர்த்தி அய்யருக்கு தலைதிருகிப் போய்விட்டது என்பது நன்றாய் தெரிகின்றது. இனி 2,3 நாளையில் ஹோம் மெம்பரைப் பற்றியும் ஒரு உத்திரவு போட்டுவிடுவார்.
தோழர்கள் சி.பி.ராமசாமிஅய்யர், கே.சீனிவாசய்யங்கார் முதலிய பார்ப்பனர்கள் இந்த உத்தியோகங்களில் இருந்து போது சர்.கே.வி.ரெட்டி நாயுடு அவர்கள் பேசியதையும், செய்ததையும் போல் பல பங்கு அதிகமாய் பேசியும் செய்தும் இருக்கிறார். அப்பொழுது தோழர் சத்தியமூர்த்திக்காவது, வேறு பார்ப்பனர்களுக்காவது இந்த யோசனைகள் தோன்றவில்லை.
தோழர் சத்தியமூர்த்தி அய்யர் அவர்கள் கவர்னருக்கு உத்திரவு போட்ட விஷயங்களில் நியாயம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இதில் அறிவுடைமை இருந்தாலும், முட்டாள்தனம் இருந்தாலும் அவற்றிலிருந்து ஒரு காரியம் மாத்திரம் நன்றாய் விளங்குகின்றது.
அதென்னவென்றால் சத்தியமூர்த்தி அய்யருடைய ஞாபகமும், அவர் ஜாதியாருடைய ஞாபகமும் சதாகாலம் பார்ப்பனரல்லாத மந்திரிகள் மீதும், பார்ப்பனரல்லாத நிர்வாகசபை மெம்பர்கள் மீதும் இருந்து கொண்டு இவர்களை எப்பொழுது ஒழிப்பது என்கின்ற கவலையிலேயே இருந்து வந்திருக்கின்றது என்பதேயாகும். இந்த ஒரு முக்கியமான எண்ணமும், கவலையும் தான் இந்திய சட்டசபை எலக்ஷனில் எல்லாப் பார்ப்பனர்களையும் ஒன்று சேர்த்து ஒரே மூச்சாய் பாடுபட்டு ஒரு கை பார்த்து விடும்படியாகச் செய்து விட்டது என்பது இப்போதாவது நமது மக்களுக்கு விளங்கி இருக்கும் என்று நினைக்கின்றோம்.
தோழர் சர்.சி.பி.ராமசாமி அய்யர், ஜி.ஏ.நடேசன் ஆகியவர்கள் மிதவாதிகள் என்று பெயர். கனம் சீனிவாச சாஸ்திரி என்பவர் சர்க்கார் தாசர் என்று பெயர். மற்றும் பல பார்ப்பனர்கள் ஐக்கோர்ட்டு ஜட்ஜி, ஐ.சி.எஸ்.ஆபீசர், போலீஸ் இன்ஸ்பெக்டர் முதலிய பார்ப்பனர்களுக்கும் சர்க்கார் ஊழியர்கள் என்று பெயர். இப்படி எல்லாம் இருந்தும் அவர்கள் எல்லோரும் உயிரைக் கொடுத்து சத்தியமூர்த்தி ஜெயிக்கும்படி பாடுபட்டு அவருக்கு வாழ்த்தும் கூறி இருக்கிறார்கள் என்றால் மந்திரி பதவியும் சட்டமெம்பர், போலீசு மெம்பர் பதவியும் பார்ப்பனர்களுக்கு எவ்வளவு கண் உருத்தலாய் இருந்திருக்கும் என்பது தானாகவே விளங்கவில்லையா?
தோழர் சத்தியமூர்த்திக்கோ அல்லது அவருடைய ஜாதியாருக்கோ ஒரு சமயம் இன்று சென்னை கவர்னர் வேலை கிடைத்திருக்குமேயானால் அவர் பதவிக்கு வந்தவுடன் சட்டசபையைக் கலைத்து மந்திரிகளை வீட்டுக்கு அனுப்பி சட்டமெம்பரையும், ஹோம் மெம்பரையும் டிஸ்மிஸ் செய்துவிட்டுத்தானே மலஜலம் கழிப்பார்கள் என்பதும் இதிலிருந்து விளங்குகின்றதா இல்லையா? என்று கேட்கின்றோம்.
தோழர் சத்தியமூர்த்தி அய்யர் அவர்கள் பேச்சு எவ்வளவு முட்டாள் தனமானதாயிருந்தாலும், குரோத எண்ணம் கொண்டதாயிருந்தாலும் இந்திய சட்டசபைத் தேர்தல் போலவே சென்னை மாகாண சட்டசபைத் தேர்தலும் முடியுமானால் இன்று உத்தியோகங்களில் உள்ள பார்ப்பனரல்லாத மக்களின் நிலைமை என்ன ஆவது என்பதையும் உணர்ந்து பார்க்கும்படி வேண்டுகிறோம்.
தோழர் சத்தியமூர்த்தி அய்யர் ஒரு வெறும் புரோகித சாஸ்திரி என்கின்ற முறையில் அவர் அப்படிப் பேசியதாக யாரும் நினைத்து விடக்கூடாது. இந்த நாட்டுப் பார்ப்பனர்களின் பிரதிநிதியாய் மாத்திரம் இருந்து பேசினார் என்றும் நினைத்துவிடக்கூடாது. இந்திய தேசியக் காங்கிரசின் தலைவர்களில் ஒரு முக்கிய தலைவராயும், சட்டசபை, பஞ்சாயத்து போர்டு காரியதரிசி என்கின்ற பதவியிலிருந்து கொண்டும், சென்னை மாகாண காங்கிரஸ் சர்வாதிகாரி என்கின்ற முறையிலும் காந்தியாரால் புகழ்ந்து கொண்டாடப்பட்ட தூய்மையான தேசபக்தர் என்கின்ற முறையிலும் தான் பேசியிருக்கிறார் என்பதை சுயமரியாதை உள்ள ஒவ்வொரு பார்ப்பனரல்லாத மக்களும் உணரவேண்டும் என்று ஆசைப்படுகின்றோம்.
இந்த நாட்டு மக்கள் சிறப்பாக சென்னை மாகாண மக்கள் இப்படிப்பட்ட தோழர் சத்தியமூர்த்தி அய்யர் அவர்களைத் தங்கள் மாகாண பிரதிநிதியாகவும், இந்திய மக்களின் தலைவர்களில் முக்கியமானவராகவும் கொள்ளத் தக்க நிலைமை இன்று இருக்குமானால் இந்திய மக்களின் யோக்கியதைக்கும் காங்கிரசின் தேசியத்துக்கும் பிரதிநிதித்துவத்தின் நாணையத்துக்கும், மேன்மைக்கும் எதை ஒப்பிடுவது என்பது நமக்கு விளங்கவில்லை.
காங்கிரஸ் சார்பாய் பார்ப்பனர்களின் தேசியம் என்ன என்பது பற்றி நாம் இந்த பத்து வருஷகாலமாய் கூப்பாடு போட்டு வந்ததானது, தோழர் சத்தியமுர்த்தி அய்யர் அவர்கள் இந்திய சட்டசபை மெம்பரான எட்டு நாளையில் உண்மையாக ஆகிவிட்டதா? இல்லையா? என்று யோசித்துப் பார்க்கும்படி வாசகர்களை வேண்டிக் கொள்ளுகிறோம்.
இந்திய சட்டசபைத்தேர்தல்கள் முடிந்தவுடன் தோழர் சி.ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் கவர்னர் பிரபுவைப் போய் பார்த்து விட்டு வந்திருக்கிறார்.
அவரும் சட்டசபையைக் கலைக்க வேண்டிய அவசியத்தைப் பற்றி கவர்னருக்கு சட்டம் எடுத்துக்காட்டி இருக்கலாம். அதுமாத்திரமல்லாமல் சென்னை மாகாண உத்தியோகத்தில் இருந்து வரும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ உரிமைக்கு உலை வைக்க சூட்சி செய்துவிட்டு வந்திருக்கலாம்.
இவை எப்படியோ இருக்கட்டும். மற்றொரு முக்கியமான விஷயமென்ன வென்றால் இந்திய சட்டசபையின் பரிதாபகரமான நிலையைப் பற்றி சிறிது கவனிப்போம்.
தோழர்கள் சி.ஆர். தாஸ் என்ன, பண்டித மோதிலால் நேரு என்ன இப்படிப்பட்டவர்கள் காங்கிரசின் சார்பாய் இருந்து வந்த ஸ்தானத்தில் தோழர் சத்தியமூர்த்தி அய்யர் அவர்கள் போய் கட்சிப் பிரமுகராக இருக்கப் போகிறார் என்றால் அது மாத்திரமல்லாமல் இன்றைய இந்திய மக்களின் பிரதிநிதியாகப் போய் உட்காரப் போகின்றார் என்றால் இந்திய சட்டசபையின் கஷ்டகாலத்துக்கும் இவரைப் பிரதிநிதியாகக் கொண்ட மக்களின் சுயமரியாதைக்கும் எதை உதாரணம் காட்டுவது என்பது நமக்கு விளங்கவில்லை.
இந்த லக்ஷணத்தில் தோழர் சத்தியமூர்த்தி அய்யர் ஜாதியைச் சேர்ந்த பத்திரிக்கைகளும் ஆசாமிகளும் தோழர் ஷண்முகமவர்கள் சட்டசபையில் இருந்ததை குறை கூறி “”பட்டேல் என்கின்ற சிங்கம் இருந்த இடத்தில் ஷண்முகம் என்கின்ற………….. இருக்கிறது நியாயமா” என்று எழுதியும், பேசியும் இருக்கிறார்கள்.
ஆனால் தாஸ், நேரு என்கின்ற மேதாவிகள் மாதம் 40ஆயிரம் 50ஆயிரம் வரும்படியைத் துறந்து விட்டுவந்த தியாகமூர்த்திகள் என்று சொல்லப்பட்ட சிங்கங்கள் இருந்து வந்த இடத்தில் சத்தியமூர்த்தி அய்யர் என்கின்ற……………… இருப்பது நியாயமா? என்று எழுதினால் அந்தப் பார்ப்பனர்கள் இந்த காலி இடத்தில் என்ன எழுதி பூர்த்தி செய்து என்ன பதில் சொல்லுவார்கள் என்று கேட்கின்றோம்.
ஆகவே இப்படிப்பட்ட இவரைக் கொண்ட இந்திய சட்டசபை எப்படிப் பரிமளிக்கப் போகிறது என்பதும், எப்படி மதிக்கப்படப்போகிறது என்பதும், மானமுள்ள சுயமரியாதையுள்ள மக்கள் அவரது தலைமையில் எப்படி வீற்றிருக்கப் போகின்றார்கள் என்பதும் நமக்கே பெரிய பிரச்சினையாகத்தான் இருக்கின்றது.
இன்றைய இந்திய சட்டசபைக்குக் காங்கிரஸ் சார்பாகவே யாரைத் தலைவராகப் போடுவது என்பது காங்கிரஸ்காரர்களுக்கே ஒரு பெரிய பிரச்சினையாகி விட்டதாகத் தெரிகின்றது. ஏனெனில் தோழர் காந்தியாரே இந்தப் பிரச்சினையில் கவலை செலுத்திப் பார்த்து அவரது நண்பர்களுடன் கலந்த பிறகுதான் தோழர் பண்டிதர் மாளவியா அவர்களை எப்படியாவது இந்திய சட்டசபைக்குக் கொண்டுவர வேண்டும் என்கின்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.
இதிலிருந்தே இன்றைய காங்கிரசில் பொருப்பும் யோக்கியமுமான ஆட்கள் இல்லை என்றும் இருப்பவர்களுக்குள் சத்தியமூர்த்தியை மேலானவர் என்று மதிக்க வேண்டியதாகி விட்டதென்றும் விளங்கிவிட்டது.
அதனாலேயே தோழர் மாளவியா காங்கிரசின் இன்றைய முக்கிய கொள்கையாகிய வகுப்புத் திட்டத்தில் எதிரான அபிப்பிராயமுடையவரா யிருந்தாலும் இந்திய சட்டசபையின் கௌரவத்தைக் காப்பாற்ற (யாருடைய கௌரவத்தை? பார்ப்பனர்களின் கௌரவத்தைக் காப்பாற்ற) வேண்டுமே என்கின்ற கவலை கொண்டு கொள்கையைகூட கவனியாமல் மாளவியாஜியைக் கூப்பிடுகிறார்கள். இதிலிருந்து காங்கிரசின் வகுப்புத் தீர்ப்பின் சம்மந்தமாக நாணையம் என்ன என்பதையும்கூட ஒருபுறம் அறிந்து கொள்ளலாம்.
இன்று இந்தியா முழுவதற்கும் இந்திய சட்டசபைக்குக் காங்கிரஸ்காரரே வெற்றி பெற்றுவிட்டார்களானாலும் இந்திய சட்டசபையில் அரசாங்கம் மதிக்கக் கூடிய நபரோ, பொதுஜனங்கள் மதிப்பு வைத்து கவனிக்கக்கூடிய நபரோ இல்லை என்று காந்தியாரும், ராஜகோபாலாச்சாரியாருமே உணரும்படி ஆகிவிட்டதென்றால் வெற்றியின் யோக்கியதை வெட்கப்படவேண்டியதாக ஆகி விட்டது என்பது விளங்கவில்லையா என்று கேட்கின்றோம்.
பகுத்தறிவு தலையங்கம் 09.12.1934