வகுப்புவாதிகளே  வெற்றியடைந்தார்கள்

 

சென்னை  மாகாணத்தில்  நடந்த இந்திய  சட்டசபைத்  தேர்தலில்  வெற்றி பெற்ற  வீரர்கள்  “”வகுப்பு  வாதம்  தோற்றுவிட்டது”  என்றும்  “”வகுப்பு  வாதத்தை ஜனங்கள்  விரும்பவில்லை”  என்றும் பேசி  மக்களை  மனதார  ஏய்க்கின்றார்கள்.  ஆனால்  உண்மையில் பார்க்கப்  போனால்  கடுகளவு  அறிவுள்ள  எவனும்  வகுப்பு வாதம்  வெற்றி  பெற்றுவிட்டது  என்று  தான்  சொல்ல  வேண்டும்.

இன்று  இந்த  நாட்டில்  உள்ள ஜஸ்டிஸ்  கட்சி  ஆகட்டும்  அல்லது  சுயமரியாதைக்  கட்சி  யாகட்டும்  உண்மையில் வகுப்பு  வித்தியாசங்கள்,  வகுப்பு  உயர்வு  தாழ்வுகள்,  வகுப்புப்  பிரிவுகள்  ஆகியவை  ஒழிய  வேண்டுமென்று  பாடுபடுகின்றனவா  அல்லது  இருக்கவேண்டுமென்று  பாடுபடுகின்றனவா  என்று  கேழ்க்கின்றோம்.  யாரைக்  கேழ்க்கின்றோம்  என்றால்  ஜஸ்டிஸ்  கட்சியும்,  சுயமரியாதைக்  கட்சியும்  வகுப்புவாதக்  கட்சி  என்று  யார்  யார்  சொல்லுகின்றார்களோ அவர்கள்  ஒவ்வொருவரையுமே  கேழ்க்கின்றோம்.

தோழர்  ராஜகோபாலாச்சாரியார்  அவர்கள்  ஆகட்டும்,  தோழர்  சத்தியமூர்த்தி அய்யர்  அவர்கள்தானாகட்டும்  உண்மையில் இந்தியாவில்  மக்களிடையில்  ஜாதியின் பேராலோ,  சமையத்தின் பேராலோ,  உள்வகுப்பின்  பேராலோ  எவ்வித  பாகுபாடு   பிரிவினை  வித்தியாசம்  ஆகியவை இருக்கக்கூடாது  என்பதை  ஒப்புக் கொள்ளுகிறார்களா  என்று  கேழ்க்கின்றோம். இவ்விருவர்களது பூணூல்,  உச்சிக்குடுமி, நாமம்,  விபூதி,  நித்திய  கர்மம்,  ஆகியவைகளின்  பேதங்கள்  மனிதத்  தன்மையில் எவ்வளவு  மாறுதல்களைக்  காட்டுகிறது  என்பதும்,  இதுபோலேவே   மற்ற மக்களுக்கும்  இவர்களுக்கும்  எவ்வளவு  வித்தியாசங்கள்  பேதங்கள்  மாறுதல்கள் இருந்து  வருகின்றன  என்பதையும்  யோசித்துப் பார்க்கும்போது  வகுப்பு  வாதத்துக்கும்  வகுப்புப்  பிரிவினைக்கும் இவர்கள்  உட்பட்டவர்களா  இல்லையா  என்று  கேழ்க்கின்றோம்.

இவற்றை  ஒரு  சமயம்  வெகு  சாதாரணமாய்  கருதிவிடலாம்.  இவற்றால்  எல்லாம்  ஒன்றும்  முழுகிப்  போய்விடவில்லை  என்று  சொல்லி விடலாம்.  ஆனால்  ஒன்று கேழ்க்கின்றோம்.  அதென்ன வென்றால் நாம்  மேலே  குறிப்பிட்ட  வகுப்புவாதமும்,  பேதமும்,  பிரிவினையும்  இந்நாட்டு   மக்களைச்  சமூக  வாழ்விலும்  அரசியலிலும் கூட  பேதப்படுத்தி  பிரித்து  உயர்வு  தாழ்வாக்கி  வைத்திருக்கின்றதா இல்லையா   என்பதுதான்.

வகுப்பு  காரணமாகவே  சமூக  வாழ்வில்  வித்தியாசம் ஏற்படுவதும்,  சமூக  வாழ்வில் உயர்வு  தாழ்வு  வித்தியாசம் ஏற்பட்டதின்  காரணமாகவே  அரசியலிலும், அரசியல்  பிரதிநிதித்துவத்திலும்,  அரசியல்  உத்தியோகத்திலும்,   பதவியிலும்,  பொருளாதாரத்திலும் கூட  அது  பிரதிபலித்து  மக்களைப்  பாதிக்கின்றதா  இல்லையா  என்றும்  கேழ்க்கின்றோம்.

அவ்வித  வித்தியாசங்களைப்  போக்குவதற்கும்,  போக்குவதற்கு  அனுகூலமாக  வகுப்புகளின்  நிலைமைகளை  அனுசரித்து  வகுப்புகளுக்கு  தக்கபடி  கவனிப்பதற்கும்,  வகுப்பு வாதம்  என்று  சொல்லுவதா அல்லது  அந்தப்படி  எதையும்  செய்யவொட்டாமல்  தடுத்து முட்டுக் கட்டை  போட்டுக்  கொண்டு  “”இருக்கிறபடி  இருக்கவேண்டும்” என்பதற்கு  வகுப்பு  வாதம்  என்று  சொல்லுவதா  என்றுதான்  கேழ்க்கின்றோம்.

மற்றும்  ஒரு  வகுப்புக்கும்,  மற்றொரு  வகுப்புக்கும்  வித்தியாசமும்  உயர்வு  தாழ்வு  தன்மைகளும்  நிலைத்து இருக்கும்படி  செய்வதும்,  இப்போது இருப்பதை  ஆதரிப்பதும்   வகுப்புவாதமா  அல்லது  வகுப்புக்கு  வகுப்பு  எவ்வித  வித்தியாசமும்  கூடாது  என்பதும்,  அது  எந்த  ரூபத்திலும்  இருக்கக்  கூடாது  என்று  சொல்லுவதும்  வகுப்புவாதமா  என்று  கேழ்க்கின்றோம்.

பாமர  மக்கள் பெரும்பாலும்  மூடர்களாய்  மடையர்களாய்  இருக்கும்  காரணத்தைப் பயன்படுத்திக் கொண்டு  நமது  பார்ப்பனர்கள், வெகு  தைரியமாக  ஜஸ்டிஸ்  கட்சியையும்  சுயமரியாதைக்  கட்சியையும்,  அவை  வகுப்புப்  பிரிவும்,  வகுப்பு  வித்தியாசமும்  கண்டிப்பாய்  கூடவே  கூடாது  என்பதற்காக அவைகளை  வகுப்பு வாதக்கட்சிகள்  என்று சொல்லுவதும்  தாங்கள்  வகுப்பு  வித்தியாசமும்  பிரிவும்  இருந்தே ஆகவேண்டும்  என்றும்  அவைகளை சிறிதுகூட அழிக்கக்கூடாது  என்றும் சொல்லும்  வகுப்பு  வாதத்தை  வகுப்புவாதமில்லாத  கட்சி  என்றும் சொல்லி  மக்களை  நம்பச்  செய்வது  என்றால் அதை  நம்பும்  மக்கள் மடையர்களா  அல்லது  அந்தப்படி  நம்பச் செய்யும்  ஆட்கள்  அபார  தந்திரக்காரர்களா என்று  கேட்கின்றோம்.

வகுப்பு  பேதம்  இருக்கக் கூடாது  என்பவர்கள்  தோற்றுப்  போய் வகுப்பு பேதம் இருக்க வேண்டும்  என்பவர்கள் வெற்றி  பெற்றால்  வகுப்பு  வாதம்  தோற்றதா  அல்லது வகுப்பு வாதம்   வெற்றி பெற்றதா  என்றுதான்  கேட்கின்றோம்.

சுமார்  இந்த  10  வருஷ  காலமாகக்  காங்கிரசின்  பேராலும் பல  மகாநாடுகள்  நடைபெற்றிருக்கின்றன.  சுயமரியாதை  இயக்கத்தின்  பேராலும்,  பார்ப்பனரல்லாதார்  இயக்கத்தின் பேராலும்  பல  மகாநாடுகள்  நடைபெற்று  இருக்கின்றன.  இருகட்சி  மகாநாடுகளிலும்  நூறுபேர்கள்  முதல் கொண்டு  பதினாயிரம் பேர்கள்  வரை  கூடி  சாப்பிட்டும்  இருக்கலாம்.

காங்கிரஸ்  சம்மந்தமான  கூட்டங்களில்  எல்லாம்  பார்ப்பனர்களே  சமைத்து இருப்பார்கள் அல்லது  பார்ப்பனருக்கு   வேறு  சமையல்  மற்றவர்களுக்கு  வேறு  சமையல்கள்தான்  நடந்திருக்கும்.  அது  மாத்திரமல்லாமல்  பார்ப்பனர்களுக்கு  வேறு  சாப்பாட்டு  இடமும்  பார்ப்பனரல்லாதாருக்கு  வேறு  சாப்பாட்டு இடமும்  பார்ப்பனர்களே  பரிமாறுகின்றது என்கின்ற  முறையும்தான்  நடந்திருக்கும்.

ஆனால்  சுயமரியாதை  மகாநாடோ,  பார்ப்பனரல்லாதார்  மகாநாடோ  ஆகியவைகளில் பார்ப்பனர்  தவிர  மற்ற ஏனைய  பல  பிரிவுக்காரர்கள்  சைவர்கள்  முதல்  எத்தனையோ  பிரிவுக்காரர்கள் இருந்த   போதிலும்,  தாழ்த்தப்பட்ட  மக்கள்  என்று  யார்  யாரைக்  கருதுகின்றோமோ அவர்கள்  முதல்  பல  வகுப்புக்காரர்களும்  சேர்ந்தே  ஒரே சமையல் செய்வதும்,  ஒரே பந்தியில்  யாவரும்  உட்கார்ந்து  உண்பதும்,  சகல  வகுப்பாரும்  சகல  சமையஸ்தர்களும்  பரிமாறுவதுமான  காரியங்கள்தான்  இன்றும்  நடந்து  வருகின்றன.

இப்படியெல்லாம்  இருந்தும்  சுயமரியாதைக்காரர்களும்,  பார்ப்பனரல்லாத  கட்சியார்களும்  தான் வகுப்புவாதிகளாம்.  காங்கிரஸ்காரர்கள்  வகுப்புவாதிகள்  அல்லவாம்.

எனவே  இது  கேட்பவர்களின்  முட்டாள்தனமா, அல்லது இந்தப்படி  சொல்லுகின்றவர்களின்  அயோக்கியத்தனமா  என்று  கேட்க  வேண்டியிருப்பதற்கு  வருந்துகின்றோம்.

இன்று  ஓட்டல்  தெருக்கள் வழி நடந்தால்  பிராமணாள்  ஓட்டல்  என்றும்,  அதற்குள்  பிராமணர்களுக்கு  வேறு  இடம்  என்றும்,  பிராமணர்கள்  அல்லாதாருக்கு  வேறு  இடம்  என்றும்,  கிறிஸ்தவர்,  முகமதியர்,  பஞ்சமர்  ஆகியவர்களுக்கு  இடமில்லை  என்றும்  எழுதி  வைத்திருக்கும்  காப்பி  ஓட்டல்காரப்  பார்ப்பனர்  தங்களை  வகுப்பு  வாதிகள்  அல்லவென்றும்,  இந்தப்படி  உள்ள முறையை  ஒழிக்க வேண்டும்  என்று  சொல்லுபவர்களை  வகுப்பு  வாதிகள்  என்றும் சொல்வது  என்றால்,  இதைக்கேட்டுக்  கொள்ளுகின்றவர்கள்  முட்டாள்தனமா  அல்லது  சொல்லுகின்றவர்கள்  அயோக்கியத்தனமா  என்று  கேட்கின்றோம்.

சாப்பாட்டு  ஓட்டல்களில்  “”பிராமணர்களுக்கு மாத்திரம்  சாப்பாடு  போடப்படும்”  என்று போர்டுகள்  வெளிப்படையாய்  எழுதிக்  தொங்க  விட்டுக்  கொண்டு  மற்றவர்களைத் தெருத்  திண்ணை மீதுகூட  இருக்க வொட்டாமல்  விரட்டி  அடித்துக் கொண்டிருக்கும் பார்ப்பனர்கள்,  தங்களை  வகுப்பு  வாதிகள்  அல்லவென்று  சொல்லுவதும்,  இந்த  முறை  இருக்கக்  கூடாது  என்று  பாடுபடுகின்றவர்களை  வகுப்புவாதிகள்  என்று சொல்லுவதுமாய் இருந்தால்  இதைக்  கேட்டுக்  கொள்ளுகின்றவர்கள்  முட்டாள்களா  அல்லது  சொல்லுகின்றவர்கள்  அயோக்கியர்களா  என்று  மறுபடியும்  கேட்கின்றோம்.

நடை, உடை,  பாவனை,  மற்றவர்களை  நடத்துதல்  ஆகிய  சகல  காரியங்களிலும் ,  கோவில்,  சத்திரம்,  சாவடி  முதலிய  சகல  இடங்களிலும்  பேதமும்,  பிரிவினையும்  வைத்து  அதன்  மூலமே  மக்களின்  இழிவையும்  சிறுமையையும்  நிலைநிறுத்தி  ஒருவனுக்கு  ஒருவனை  கீழ்மைப்படுத்தி  வைத்திருக்கும்  முறைகளை  அடியோடு  ஒழிக்க வேண்டும்  என்றும்,  அதற்கு  ஆதரவளிப்பவர்களை  அடக்க வேண்டும்  என்றும்,  சொன்னால் அதை  வகுப்புவாதம்  என்று  சொல்லுவதும்,  அந்தப்படியான  பேதத்தையும்  இழிவையும்  சிறுமைகளையும்  நிலைநிறுத்த   வேண்டுமென்று  சொல்லுவதையும்  வகுப்புவாதம்  அல்ல  என்றும்  சொல்லப்படுமானால்  சொல்லுகின்றவர்கள் அயோக்கியர்களா  அல்லது கேட்டுக் கொண்டிருக்கிறவர்கள்  முட்டாள்களா  என்று  கேட்கின்றோம்.

வகுப்புவாதம்  என்பது  வகுப்பு  பேதத்தில்  இருந்தும்,  வகுப்புப்  பிரிவினையில்  இருந்தும்தான்  உண்டானதே  தவிர  மற்றபடி அது  ஆகாயத்தில் இருந்து தொப்பென்று குதித்தது என்று யாரும் சொல்ல முடியாது.  எப்படி இருந்த  போதிலும்  வகுப்பு வாதிகள்  என்று  சொல்லப்படுகிறவர்கள்  வகுப்பு  பேதமும்  வகுப்பு  பிரிவும்  கூடாது  என்று  சொல்லுகின்றார்களா  அல்லது  வகுப்பு  பிரிவும்  பேதமும்  இருக்கவேண்டும்  என்று  சொல்லுகின்றார்களா  என்பதைத்தான்  மக்கள்  கவனித்துப் பார்க்க  வேண்டுமென்று  ஆசைப்படுகின்றோமே  ஒழிய  வேறில்லை.

அதுபோலவே  தங்களை  வகுப்பு வாதிகள் அல்ல  என்று  சொல்லிக் கொள்ளும்  பார்ப்பனர்கள்,  வகுப்பு  உயர்வு  தாழ்வு  பேதமும்  பிரிவும்  இருக்க  வேண்டும்  என்கின்ற  எண்ணத்தின்  மீது  இவ்வளவு  பாடுபடுகின்றார்களா  அல்லது அவைகள்  ஒழிந்து போக  சம்மதித்து  இவ்வளவு  பாடும்  படுகின்றார்களா  என்பதையும்  நடுநிலையில்  இருந்து  சுய  அறிவோடு  யோசனை  செய்து  பார்க்க வேண்டும்  என்று  ஆசைப்படுகின்றோம்.

இந்தப்  படியான  நடுநிலை  ஆராய்ச்சியின்  மீது உண்மை  கண்டுபிடிக்கப்பட்டால்  அவ்வுண்மையை  வைத்துக்கொண்டு  இன்றைய  இந்திய  சட்டசபைத்  தேர்தலில்  வகுப்புவாதிகள் வெற்றி  பெற்றார்களா அது  இல்லாதவர்கள்  வெற்றி பெற்றார்களா  என்றால் வகுப்புவாதிகள்  வெற்றி  பெற்றார்கள்  என்கின்ற  முடிவைத்தான்  அடையக்கூடும்.

பகுத்தறிவு  தலையங்கம்  02.12.1934

You may also like...