காங்கிரஸ்

 

காங்கிரஸ்  காரியக்கமிட்டியும்  அகில  இந்தியக்  காங்கிரஸ்  கமிட்டியும்  மே  N  18,  19ந்  தேதிகளில்தான்,  பாட்னாவில்  நடைபெறுமாம்.  அதற்கு  முன்பு  2ந்தேதி  ராஞ்சியில்  அகில  இந்திய  சுயராஜ்யக்  கக்ஷி  கூட்டம்  நடைபெறும்  என்று  தெரிகிறது.  இவ்விரண்டு  கூட்டங்களின்  ஆரம்ப  வேகம்  தடைபெற்று  விட்டாலும்  கூட்டங்கள்  என்னமோ,  நடைபெறும்.  காந்தி  சொன்னபடி  சட்டசபை  பிரவேசமும்,  சட்ட  மறுப்பு  நிறுத்தத்தீர்மானமும்  முதலில்  நடைபெறும்.  எதிர்காலத்தில்  இவர்கள்  வேலைதிட்டம்  என்ன  என்பதை  கமிட்டி  முறையே  வெளியிட்டுவிடும்.  கமிட்டி  கூடும்  தேதிகளில்  சில  தலைவர்கள்  அபிப்பிராயப்  பேதப்படுவது  போலவே,  கமிட்டிகளின்  வேலைத்திட்டம்  தயாரிப்பதில்  அபிப்பிராய  பேதமிருக்கிறது.  புது  திட்டம்  என்ன  சொல்லப்போகிறது  என்பதை  பார்ப்போம்.

எப்போ

அடிமையென்றும்  ஆரியனென்றும்  அகல  வைத்து  ஆண்டுவரும்  ஆண்மைகொண்ட  அர்ப்பப்  பயல்களின்  அகம்பாவங்கள்  அடியோடொழியும்  அன்னாள்  வருவதெப்போ?

பெண்களெல்லாம்  பேதையென்றும்,  பிள்ளைபெறும்  பிண்டமென்றும்,  பின்புத்திக்காரரென்றும்,  பிராணன்போக  பித்து  தரும்  பிறவியென்றும்  பிராணிகள்  போல்  பிதற்றிவரும்  பிரகஸ்பதிகளின்  பேடித்தனம்  பிணமாகும்  கால  மெப்போ?

கடவுளென்றும்,  கர்த்தரென்றும்  காரணமற்ற  பெயரைக்காட்டி  கஞ்சிக்குக்  காற்றாய்  பறக்கும்  கபடமற்றவர்களின்  காசைப்பரித்து  காலாட்டி  சோறுதின்னும்  கயவர்களின்  காசில்  இடிகள்  மின்னலோடு  விழ,  காலம்  வருவதெப்போ?

உன்  உடமை  என்னுடமையென்று  கன்னத்திலடித்து  மண்ணில்  பிறந்த  மானிடனை  கண்  தெரியாமல்  சின்னா  பின்னமாகப்  பின்னப்படுத்தி  வரும்  காசுத்  திமிர்  கொண்ட  கடுங்கோலனை  சின்னப்படுத்தி  மண்ணிலுள்ள  எப்பொருளும்  எல்லாருடையதே  என்ற  சப்தம்  எங்கும்  தொனிக்கும்  காலம்  வருவதெப்போ?

புரட்சி  துணுக்குகள்  29.04.1934

You may also like...