நிர்வாக  சபையை  ஏன்  கூட்டவில்லை

 

தோழர்  குமாரராஜா  அவர்கள்  மீது  ஜஸ்டிஸ்  கட்சிக்காரர்கள்  கவுன்சில்  பார்ட்டி  மீட்டிங்கில்  கொண்டுவரப்பட்ட  நம்பிக்கை  இல்லாத்  தீர்மான  விஷயமாய்  “”முதலில்  நிர்வாக  சபைக்  கூட்டம்  கூட்டி  அதில்  ஒரு  முடிவு  செய்து  கொண்டு  பின்பு  கவுன்சில்  பார்ட்டி  கூட்டம்  கூட்டலாம்”  என்று  அநேக  தந்திகளும்,  கடிதங்களும்  அனுப்பப்பட்டன.  அவைகள்  எதையும்  கவனிக்காமல்  கவுன்சில்  பார்ட்டியில்  நம்பிக்கை  இல்லாத்  தீர்மானம்  கொண்டு  வரப்பட்டு  விட்டது”  என்பதாகச்  சிலர்  குறை  கூறுகிறார்கள்.  இதற்கு  சமாதானம்  சொல்ல  கட்சி  கடமைப்பட்டிருக்கிறது.

அச்சமாதானம்  என்னவென்றால்  ஜஸ்டிஸ்  கட்சி  நிருவாக  சபைக்கு  அக்கிராசனர்  குமாரராஜா  முத்தய்ய  செட்டியார்  அவர்கள்  அல்ல  என்பதையும்  கவுன்சில்  பார்ட்டி  (சட்டசபைக்  கட்சி  கொரடா)  அறிவிப்புதான்  சேர்மென்  என்பதையும்  ஞாபகப்படுத்திக்  கொள்ள  வேண்டுமாய்  கோருகிறோம்.

ஏனெனில்  தோழர்  குமாரராஜா  அவர்கள்  கவுன்சில்  பார்ட்டி  கொரடா  என்கின்ற  முறையில்  தான்  நிர்வாக  சபைக்கு  தலைமை  வகிக்கின்றார்.  ஆதலால்  நிர்வாக  சபையில்  தோழர்  முத்தைய  செட்டியார்  அவர்களுக்கு  சொந்த  முறையில்  அக்கிராசனர்  பதவி  இல்லை.

அதனால்  அவர்  சொந்த  முறையில்  எந்த  சபையில்  பிராதனப்பட்டவரோ   அந்த  சபை  மூலம்  அவரது  விஷயம்  கவனிக்கப்பட  வேண்டியதாயிற்றே  ஒழிய  அது  தான்  சட்ட  ரீதியான  ஒழுங்கு  முறையான  நியாயமே  ஒழிய  மற்றபடி  நிர்வாக  சபையில்  இத்தீர்மானம்  கொண்டு  வரப்பட்டால்  தோற்றுப்  போகும்  என்றோ  சட்டசபைக்  கமிட்டியில்  சுலபமாய்  பாசாகி  விடலாம்  என்றோ  கருதி  குறுகிய  நோக்கத்துடன்  கொண்டு  வரப்பட்ட  தீர்மானம்  அல்ல  என்பதே  சமாதானமாகும்.

பகுத்தறிவு  செய்தி விளக்கம்  16.12.1934

You may also like...