ஜஸ்டிஸ் கட்சிக்கு ஒரு வார்த்தை
இந்திய சட்டசபை தேர்தலில் ஜஸ்டிஸ் கட்சி தோற்றுவிட்டது. தேர்தலில் அதிகாரத்திலிருக்கும் கட்சிக்கு எப்பொழுதும் பலம் குறைவு என்பதையும், எதிர்கட்சியில் இருப்பவர்களுக்கு பலம் அதிகம் என்பதையும், அதிகாரத்தில் இருப்பவர்கள் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். ஆதலால் தேர்தல் வந்தால் எதிரிகளை விட அதிகாரத்தில் இருப்பவர்கள் இரண்டு பங்கு பலமுடையவர்களாக இருக்கக் கணக்குப் போட்டுக் கொண்டால்தான் தேர்தலில் முகம் கொடுக்க முடியும்.
இன்றைய ஜஸ்டிஸ் கட்சியார் தங்கள் கட்சியில் யார் யார் இருக்கிறார்கள் என்று சொல்லுவதற்கே முடியாத நிலையில் இருக்கிறார்கள்.மந்திரிகள் வக்கிரமாகவே இருக்கிறார்கள். ஒரு சமயம் ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்றாலும் அடுத்த மந்திரி பதவியும் தங்களுக்கே வரும் என்றால்தான் ஒற்றுமை என்று காட்டிக் கொள்வார்களே தவிர மற்றபடி ஒருவரை ஒருவர் கவிழ்க்கவே தபஞ் செய்து கொண்டிருப்பார்கள் என்று சொல்ல வேண்டி இருக்கிறதற்கு வருந்துகிறோம்.
வெளியில் ஒவ்வொரு ஜில்லா தாலூக்காக்களில் உள்ள ஜில்லா போர்டு பிரசிடெண்டு சேர்மன் முதலியவர்கள் அடுத்த தடவையும் பிரசிடெண்டு சேர்மன் ஆவதற்கு யாருடைய தயவு வேண்டுமோ அவருடைய கட்சிதானே தவிர மற்றபடி இன்று அவர்களுக்கு அதாவது பிரசிடெண்டுகள் சேர்மன்கள் என்பவர்களுக்கு எந்த கட்சியும் இல்லை எவ்வித அபிமானமும், கொள்கையும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.
மற்றபடி சட்டசபை மெம்பர்கள் யோக்கியதையும் சொல்ல வேண்டியதில்லை. இந்த நிலையில் அடுத்த தேர்தலில் ஜஸ்டிஸ் கட்சி எப்படி ஜெயிக்கும் என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும்.
தோழர் சுப்பராயன் அவர்களுக்கு ஒரு “”கட்சி” இருக்கிறது. அவர்களுடைய கொள்கை எல்லாம் சுப்பராயன் அவர்களுக்குத் தானே எப்படியாவது மறுபடியும் மந்திரியாக வேண்டும் என்பதும், சுப்பராயன் அவர்களைப் பின்பற்றுவோர்களுக்கு அதனால் தாங்கள் ஏதாவது பயன் அடைய வேண்டும் என்பதுமேயாகும். அது போலவே தோழர் முனிசாமி நாயுடு அவர்களுக்கும் ஒரு “”கட்சி” இருக்கிறது. அவர்களது கொள்கையும் மேல் குறிப்பிட்டது போலதான். இதை நாம் இன்று குற்றமாக சொல்லவில்லை. ஏனெனில் காங்கிரசின் யோக்கியதையும் அப்படியே, சுதந்திரக் கட்சியின் யோக்கியதையும் அப்படியே. ஜஸ்டிஸ் கட்சியின் யோக்கியதையும் அப்படித்தான் என்று சொல்ல வேண்டிய நிலைக்கு வந்து கொண்டிருக்கிறது.
ஆகவே மந்திரியாவதற்கும், ஒருவரை மந்திரியாக்கி வைத்து அதனால் ஏதாவது உதவி மற்றவர்கள் பெறுவதற்கும் என்பதாக இன்று அரசியல் உலகத்தில் கட்சிகள் இருப்பது இன்றைய முறையில் குற்றம் என்று நாம் சொல்ல வரவில்லை.
தோழர் சுப்பராயன் மந்திரி தன்மையை கவிழ்த்ததற்கு பார்ப்பனர்கள் அஸ்திவாரமாக இருந்தார்கள் என்றாலும் பார்ப்பன ரல்லாதார்கள் அதற்கு உதவியாய் இருந்து அவரை ஒழித்தது அக்கிரமமேயாகும். அவர் மந்திரி சபை செய்த காரியங்களில் 10ல் ஒரு பாகம் கூட இன்று வந்த மந்திரிகள் சாதித்து விட முடியவில்லை. அதை ஒழித்த தோழர் முனிசாமி நாயுடு மந்திரிசபை சிரிப்புக்கு இடமாய் இருந்தது. அதாவது அவர் காலத்தில்தான் மந்திரிகள் உத்தியோகத்துக்காக எதையும் செய்வார்கள் என்று சொல்லக்கூடியவர்களுக்கு இடம் கொடுக்கப்பட்டது. பிறகு ஏற்பட்ட மந்திரிசபையும் உள்ளுக்குள் கரையான் அரிக்கின்ற மாதிரியாகவே கக்ஷிக் கட்டுப்பாடு இருந்து வந்தாலும் தோழர் பொப்பிலி ராஜா அவர்கள் இல்லாதிருந்தால் என்ன கதி ஆகி இருக்குமென்று சொல்ல முடியாது என்றும் சொல்லுவோம்.
அடுத்த தேர்தலில் பொப்பிலி ஜெயிப்பார் என்று லீ அணா பந்தயம் கட்டச் சொன்னாலும் கட்டுபவர்கள் கிடைப்பது அறிதாகத்தான் காணப்படுகிறது. ஏனெனில் அவ்வளவு பயம் ஏற்பட்டுவிட்டது. அப்படியானால் மற்றவர்களைப் பற்றிக் கேட்கவும் வேண்டுமா?
இந்த நிலையில் ஒரு கட்சியை வைத்திருப்பது என்பது அக்கட்சிக்கு மிகவும் அபாயகரமான காரியமாகும்.
ஆதலால் தோழர் பொப்பிலி ராஜா அவர்கள் இந்த சமயத்தில் துணிவாக ஒரு காரியம் செய்யவேண்டும் என்று ஆசைப் படுகிறோம். அதென்னவென்றால் முதலில் கட்சியை உருப்படுத்திக் கொள்ள வேண்டும்.
தோழர்கள் சுப்பராயனையும் முனிசாமிநாயுடு அவர்களையும் ஜஸ்டிஸ் கட்சிக்குள் ஆக்கிக் கொள்ளவேண்டும். இது விஷயத்தில் கவலை இல்லாமல் இருப்பது புத்திசாலித்தனமாகாது.
அடுத்த சீர்திருத்தத்தில் 7,8 மந்திரி ஸ்தானங்கள் வரப் போகின்றன. ஆளுக்கொரு மந்திரி எடுத்துக் கொண்டு தொலையட்டும் என்று தைரியமாய் இடம் கொடுக்க வேண்டும். சம்பளத்தில் பகுதியைக் கட்சிப் பண்டுக்கு உபயோகிக்க ஏற்பாடு செய்யவேண்டும்.
சீர்திருத்த மந்திரி சம்பளங்களையும் ஒரு அளவுக்காவது குறைக்க ஒப்புக்கொள்ள வேண்டும். இவைகளைச் செய்ய முன்வராமல் அதைவிட்டு விட்டுத் தனி அறைக்குள் இருந்து கொண்டு பொருப்பற்ற ஆட்களுடனும் எப்படியாவது தன் காரியம் ஆனால் போதும் என்று வாழ்கின்ற ஆட்களுடனும் கூடிப் பேசி முடிவு செய்து கொண்டு தைரியமாய் இருந்தால் அடியோடு நசுங்கிப் போக வேண்டிவரும் என்று இப்போதே எச்சரிக்கை செய்கின்றோம்.
பின்னால் வரப்போகும் சென்னை சட்டசபைத் தேர்தல் முடிவைப் பற்றி நாம் எழுத நேரிடும்போது இந்த வியாசத்தை எடுத்துப்போட்டு காட்ட வேண்டிய அவசியம் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதே நமது ஆசையே ஒழிய வேறில்லை.
எனவே அடுத்த மாத முதல் வாரத்தில் ஒரு மீட்டிங்கி போட்டு வேலைத் திட்டங்களைப் பற்றி ஒரு முடிவு செய்து கொண்டு தோழர்கள் சுப்பராயன், முனிசாமி நாயுடு ஆகியவர்களையும் கலந்து ஏதாவது ஒரு கட்டுப்பாடு உண்டாக்கிக் கொள்ள வேண்டியது மிக அவசியம் என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
இந்திய சட்டசபைத் தேர்தல் தோற்றுப்போனது நமக்கு ஒரு பெரும் வெற்றி அளிக்கக் கூடியதாய் முடிய வேண்டுமானால் இதைச் செய்ய வேண்டியது அறிஞர் கடமையாகும்.
பகுத்தறிவு தலையங்கம் 25.11.1934