ஜஸ்டிஸ்  கட்சி  தலைவர்களுக்கு  ஒரே  வார்த்தை

 

ஜஸ்டிஸ்  கட்சி  இந்திய  சட்டசபை  தேர்தல்  அடைந்த  தோல்வியால்  “”குதிரை  கீழே  தள்ளியது  மல்லாமல்  குளியும்  பரித்தது”  என்று  சொல்லும்  பழமொழி  போல்  தோல்வி  அடைந்ததோடு  கட்சிக்கே  ஆட்டம்  வரும்  நிலைமையையும்  ஏற்படுத்திக்  கொண்டது.

அதாவது  கட்சிக்கு  உள்ளுக்குள்ளாகவே  மகத்தான  எதிர்ப்பு  ஏற்பட்டு  விட்டது.  தக்கதொரு  பணக்காரரை  கட்சியில்  இருந்து  விரட்டிவிட்டதால்  பணக்காரர்களை  நம்பி  வாழும்  தொண்டர்களையும்  கட்சியில்  இருந்து  விரட்டிவிட்டதாகத்தான்  அருத்தம்.

“”கொள்கை”  “”கொள்கை”  என்று  மாத்திரம்  கூப்பாடு  போடுவது  பயனற்ற  பேச்சாகும்.  பணமும்,  பிரசாரமும்,  தந்திரமும்  உள்ளவர்கள்  தான்  வெற்றி  பெருவார்களே  தவிர  வெறும்  கொள்கைகளே  வெற்றி  யளித்து  விடாது.

ஆகவே  இனி  நடக்கப்போகும்  காரியத்துக்கு  நல்லதொரு  கொள்கையும்,  அதற்குத்  தகுந்த  பணமும்,  பிரசாரமும்  இல்லாமல்  ராஜா  சர்  அண்ணாமலையாரையும்  குமாரராஜாவையும்  விரட்டியடித்து  விட்ட  பெருமையை  நினைத்து  மகிழ்ந்து  கொண்டே  இருப்போமானால்  அழிப்பாரில்லாமல்  கட்சி  அழிந்து  போகும்  என்பது  உறுதி.

இன்று  சென்னை  சட்டசபைத்  தேர்தலுக்கு  காங்கிரஸ்காரர்களுடன்  போட்டிபோட  ஒரு  ஆளை  நிருத்த  ஜஸ்டிஸ்  கட்சிக்கு  யோக்கியதை  இல்லாமல்  போய்  விட்டது  என்றால்  கட்சியின்  எதிர்கால  நிலைமைக்கு  யாரையாவது  ஜோசியம்  கேட்க  வேண்டுமா  என்று  கட்சித்தலைவரை  கேட்கின்றோம்.

தோழர்  ஈ.வெ.ராமசாமியால்  கட்சிக்கு  சமர்ப்பிக்கப்பட்ட  திட்டங்கள்  4, 5  மாத  காலமாக  தள்ளி  வைத்துக்  கொண்டே  வரப்படுகிறது.  இன்னமும்  தேதி  போடாமலும்  தள்ளி  வைத்து  விடலாம்.  இதனால்  ஈ.வெ.  ராமசாமியை  ஏமாற்றலாம்.  ஆனால்  உலகத்தை  ஏமாற்றி  விட  முடியாது.

இன்றைய  தினம்  ஜஸ்டிஸ்  கட்சியின்  தேர்தலுக்கு  பிரச்சினை  இல்லை  என்று  சொல்லுவதை  மறுக்க  முடியவில்லை.

இதுவரையில்  ஜஸ்டிஸ்  கட்சி  பார்ப்பனரல்லாதார்  கட்சியாய்  இருந்தது.  இப்போது  அந்தக்  “”கெட்ட”  பெயரையும்  நீக்கிக்  கொண்டது.  இனிமேல்  ஓட்டர்களிடம்  என்ன  சொல்லி  ஓட்டுக்  கேட்பது  என்பதை  உணர  வேண்டாமா?  பணம்  ஜஸ்டிஸ்  காரரிடம்  எவ்வளவு  இருக்கின்றதோ  அவ்வளவு  எதிரிகளிடமும்,  காங்கிரசினிடமும்  இருக்கிறது.

பிரசாரம்  ஜஸ்டிஸ்காரரிடம்  கிடையவே  கிடையாது.  காங்கிரசுக்காரரிடமும்,  எதிரிகளிடமும்  ஏராளமாய்  இருக்கிறது.  தந்திரங்களுக்கு  சொல்ல  வேண்டியதில்லை.

டிசம்பர்  மாதம்  30ந்  தேதிக்குள்  தோழர்  ஈ.வெ.ராமசாமியின்  திட்டங்களைப்  பற்றி  ஒரு  முடிவு  ஏற்படவில்லையானால்  தோழர்  ராமசாமி  ஜஸ்டிஸ்  கட்சியில்  இருப்பது  அவருக்கே  வெட்கக்கேடான  காரியமாகும்.  அவர்களது  தோழர்களும்  இவரை இனி  மதிக்கவும்  மாட்டார்கள்  என்பதை  ஜஸ்டிஸ்  கட்சித்  தலைவர்கள்  உணர்வார்களாக.  ஆகவே  ஜஸ்டிஸ்  கட்சியின்  வீரமும்,  வாழ்வும்  செட்டிநாட்டை  முறியடித்து  விட்டோம்  என்பது  அல்லவே  அல்ல.  அது  இனியும்  மக்களுக்கு  என்ன  செய்யப்  போகின்றது  என்பதையே  பொருத்திருக்கிறது  என்பதையும்  தெரிவித்துக்  கொள்கிறோம்.

பகுத்தறிவு  துணைத் தலையங்கம்  16.12.1934

You may also like...