விருதுநகரில் காலித்தனம்

 

காங்கிரஸ்  பிரமுகர்கள்  விருதுநகர்  சென்றிருந்த சமயம்  ஊர்வலத்தில்  செருப்பு  வீசி  எறியப்பட்டதாகவும்,  பொதுக்  கூட்டத்தில்  கற்கள்  வீசி  எறியப்பட்டதாகவும் தமிழ்நாடு,  ஜஸ்டிஸ்  முதலிய பத்திரிக்கைகளில்  காணப்பட்டது. இது உண்மையாய்  இருக்குமானால்  அதை ஒரு பக்காகாலித்தனம்  என்றும், இதற்கு ஆதரவாய்  இருந்த விருதுநகர்  தோழர்களுக்கு  இது  ஒரு  பெரிய  அவமானகரமான  காரியமென்றும் வலிமையாய்க்  கூறுகிறோம்.

நம் நாட்டு அரசியல்  வாழ்க்கை  என்பது எவ்வளவு  கேவல மானதாக  இருந்தாலும்  அது  பெரிதும்  வகுப்பு  போராட்டத்தன்மையை  உட்கருத்தாய்க்  கொண்டு  வெளிப்படையான  போட்டி  முறையில்  நடந்து வருகின்றது  என்பதை  எவரும்  மறுக்க  முடியாது.

இந்நிலையில்  இருபுறமும்  போட்டியில்  கலந்து கொள்ள  எவருக்கும்  உரிமை இருக்கின்றது  என்பதை  நாம் மறுக்க வரவில்லை.

அப்போட்டிகளில்  பல  சூட்சிகள்,  பொய்,  புரட்டுகள்  உபகருவிகளாய்  பயன்படுத்தப்பட்டு  வருவதும்  சகஜமான  காரியமாய் இருந்து  வருகிறது.  கால நிலையில்  இவைகள் எல்லாம்  அனுமதிக்கத்தக்கதாக  இருந்து வந்தாலும்  காலித்தனங்கள்  என்பவைகளைக்  கண்டிக்காமல்  இருக்க முடியவில்லை.  கூட்டத்தில்  கல்லெறிவது, செருப்பு எறிவது,  கூச்சல் போட்டுக் குழப்பங்கள்  செய்வது  ஆகிய காரியங்களை  இழிதொழில்  என்றே  சொல்லுவோம்.  இதைப்  பற்றி  பல தடவைகளில் எழுதியும்  வந்திருக்கிறோம்.  அப்படி இருக்க  விருதுநகர்  தோழர்கள்  யாராயிருந்தாலும்  இதைக்   கைக்கொண்டது மிகவும் வருந்தத்தக்க  காரியம்  என்பதோடு,  சுயமரியாதைக்காரர்கள்  யாராவது  இதில்  கலந்திருப்பார்களானால்  அதற்காக மிகுதியும்  வெட்கப்படவேண்டிய    நிலையில்  இருக்கிறோம்.  காங்கிரஸ்காரர்கள்  பல இடங்களில்  இப்படி நடந்திருக்கிறார்கள்  என்பதோடு மாத்திரம்  அல்லாமல்  கூட்டங்களில்  குறிப்பிட்ட  மக்களை  மிக இழிவாகவும்,  கேவலமாகவும்  பேசி வருகிறார்கள் என்பதையும்  அறிவோம்.  அப்படிப்பட்ட  காரியங்களைக்  காங்கிரஸ்  பத்திரிக்கைகள்  பெருமையாய்க் கொண்டாடி  அதிக விளம்பரம் செய்து மகிழ்வதையும்  பார்த்து  இருக்கிறோம்.

ஆனால் காங்கிரஸ்காரர்கள்  அல்லாதவர்கள்  யாராய்  இருந்தாலும்  அவர்களும் இம்மாதிரி காலித்தனத்தில்  பங்கு  கொள்வது   என்றால்  காலித்தனம்  காங்கிரசுக்கே  சொந்தமாயிருந்து  வந்தது  என்பது மாறி,  இப்போது  எல்லோருக்கும்    சொந்தமாய்விட்டது  என்றுதான்  சொல்ல வேண்டியிருக்கிறதுடன்  இம்மாதிரி  காரியம் இழிவு, இழிவு,  மிக இழிவு  ஆனது  என்பதை வலியுறுத்துகிறோம்.

நிற்க  தோழர் சத்தியமூர்த்தி  ஐயர் அவர்கள்  ஒரு  கொள்கையைத்  தாக்கிப் பேசுவதைப்  பற்றியோ,  ஒரு சமூக  அல்லது கட்சி நடப்பைக் கண்டிப்பதைப் பற்றியோ  நாம்   தடுக்க வரவில்லை.  கூடுமானால் தக்க பதில் மரியாதையுடன்  அளிக்கவே  ஆசைப்படுவோம்.

ஆனால்  தோழர்  சத்தியமூர்த்தி  அய்யர்  மேடைகளில்  நின்று பேசும்போது  தனக்குப்  பிடிக்காதவர்களை  மரியாதைக்  கிரமமின்றி  பேசுவதோடு  மாத்திரம்  அல்லாமல்,  அவன் இவன்  என்கின்ற  மதுபானக்கடை பாஷையில்  பேசுவது  என்பது மிகவும்  வெறுக்கத்தக்கதாகும்.

சமீபத்தில்  தோழர்  சத்தியமூர்த்தி அய்யர் அவர்கள்  ஈரோட்டிற்கு  வந்திருந்தபோது  ஒரு பொதுக்  கூட்டத்தில்  பேசுகையில்  தோழர்கள்  ஷண்முகம், பொப்பிலி  ராஜா  ஆகியவர்களை  அவன் இவன்   என்று  ஒறுமையிலேயே  பேசியே  வைதார்.  உடனே சில தோழர்கள்  வந்து  அவருக்கு மரியாதை  கற்பிக்க  அனுமதி கேட்டார்கள்.  அப்பொழுது  சில தோழர்கள்  அதைத் தடுத்து  கூட்டத்தில்  எவ்வித  சிறு  கூச்சலும்  இல்லாமல்  இருக்க ஏற்பாடு  செய்தார்களே  ஒழிய வேறு  ஒன்றும்  செய்யவில்லை.

காலித்தனமோ  கூச்சலோ குழப்பமோ  செய்வது  என்பது மிக  எளிதான காரியம். அதனால்  பலன்  ஒன்றும்  ஏற்படப்  போவதில்லை.  கருப்புக்கொடி  பிடிப்பது  கூட  அவசியமில்லாத  காரியம்  என்றுதான் நமக்கு  இப்போது தோன்றுகின்றது.  அதையும்  சுயமரியாதைக்காரர்கள்  வெறுக்க  வேண்டும்  என்பதுதான் நமது ஆசை.

ஆகையால்  இனி  இப்படிப்பட்ட  காரியம்   எங்கும்  எவராலும்  நடக்காமல்  இருக்கவேண்டும்  என்பதாக  நாம்  ஆசைப்படுகின்றோம்  என்பதோடு, பொருப்புள்ள  தலைவர்களாகவோ,  பத்திரிக்கைகாரர்களாகவோ  இருக்கிறவர்கள்  இதுகளுக்கு ஆதரவோ  உர்சாகமே  அளிக்காமல் தங்கள் வெறுப்புகளை காட்டுவதின்  மூலம்   எங்கும் நடைபெறாமல்  இருக்கும்படி  பார்த்துக் கொள்வார்களாக.

பகுத்தறிவு  கட்டுரை  30.12.1934

You may also like...