வருணாச்சிரமமும்  சுயமரியாதையும்

 

இந்திய  சட்டசபைத்  தேர்தலில்  வருணாச்சிரமக்காரர்களைச்  சுயமரியாதைக்காரர்கள்  ஆதரித்ததாகவும்  அதனால்  சுயமரியாதைக் காரர்களுக்கு  யாதொரு  கொள்கையும்  இல்லை  என்றும்  சில  பத்திரிக்கைகள்  எழுதி  வருகின்றன.

அது  மாத்திரமல்லாமல்  சில  தோழர்களும்  அந்தப்படியே  பேசி  வருகின்றார்கள்.

இதற்கு  நம்மை  சமாதானம்  சொல்ல வேண்டுமென்று  இரண்டொரு  நண்பர்கள்  எழுதியும்  இருக்கிறார்கள்.

சுயமரியாதைக்காரர்கள்  அந்தப்படி  செய்தார்களா  இல்லையா  என்பது  ஒரு  புறமிருந்தாலும்,  எலக்ஷன்  பிரச்சினை  இன்னதென்றும்  ஒவ்வொருவரும்  என்ன  பிரச்சினையின்  மீது  பிரசாரம் செய்தார்கள்  என்றும்  தெரிந்து கொண்டால்  பிறகு  யார்  யார்   யாருடன்  சேர்ந்து வேலை  செய்ய வேண்டியதென்பதையும்  யார்  யார்  யாருக்கு  உதவி செய்ய வேண்டியது  நியாயம்  என்பதையும்  ஒருவாறு  முடிவு  செய்து  கொள்ளலாம்.

காங்கிரசுக்காரருடைய  பிரச்சினையெல்லாம்  ஜஸ்டிஸ்  கட்சியை  எப்படியாவது   ஒழித்துவிட  வேண்டும்  என்பதும்,  அரசியலில்  பார்ப்பனரல்லாதார்  பெற்றிருக்கும்  வகுப்புவாரிப்  பிரதிநிதித்துவத்தை  அழித்துவிட வேண்டும் என்பதும்,  மற்றும்  பல  துறைகளில்  பார்ப்பனரல்லாதார்   அடைந்திருக்கும்  சிறிது  முன்னேற்றத்தையும்  கெடுத்து  சகல  துறைகளிலும்  பார்ப்பனர்களே  ஆதிக்கம் செலுத்த வேண்டும்  என்பதுமேயாகும்.

இந்தக்  கொள்கைகளை பிரச்சினையாக  வைத்தே  தென்னாட்டில்  உள்ள  சகல  பார்ப்பனரும்  அதாவது  உத்தியோகப்  பார்ப்பனர்,  ஹைக்கோர்ட்  ஜட்ஜி  முதல்  பெஞ்சு  கோர்ட்   வரை  உள்ள  அதிகாரிப்  பார்ப்பனர்கள்,  சகல  வக்கீல்  பார்ப்பனர்கள்,  டாக்டர்  பார்ப்பனர்கள்  உபாதானம்,  சவுண்டி,  புரோகிதம், மாமா  பார்ப்பனர்கள்  எல்லோரும்  மற்றும்  காப்பிக்கடை,  வக்கீல்  குமாஸ்தா ,  ஓட்டல்  பார்ப்பனர்கள்  யாவரும்,  பள்ளிப்  பார்ப்பனர்  உள்பட  ஒன்று சேர்ந்து  ஒரே  மூச்சாக  காங்கிரசை  ஆதரித்து  இருக்கிறார்கள்.  அநேக  பார்ப்பனர்கள்  தங்கள்  வருணாச்சிரமத்தை  அனுசரிக்கின்றவர்களாயிருந்தும், காங்கிரசை    அனுசரிக்காதவர்களாயிருந்தும்  எலக்ஷன்  பிரச்சினையானது  பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார்  என்கிற  பிரச்சினையாகவே  இருக்கின்றது  என்று  தெரிந்ததினாலேயே  காங்கிரஸ்  காங்கிரஸ்  என்று  சொல்லிக்  கொண்டு காங்கிரசில்  கலந்து  வேலை செய்து இருக்கிறார்கள்.  தென்னாட்டு  பார்ப்பனர்கள்  காங்கிரஸ்  போர்வைக்குள்  இருந்திருந்தாலும்  கூட  அவர்களுடைய  கவலை  எல்லாம்  எப்படியாவது  சர்.  ஷண்முகம்     சட்டசபை  மெம்பர்  ஆகக்கூடாது  என்பதும்,  ஒரு  சமயம்  சர்.  ஷண்முகம்  சட்டசபை  மெம்பர்  ஆகிவிட்டாலும் கூட  இந்திய  சட்டசபையில்  அவர்  பிரசிடெண்டாக  ஆகக்கூடாது  என்றும்  கவலை  வைத்தே ஒவ்வொரு  தொகுதிக்கும்  வேலை செய்திருக்கிறார்கள்.

வருணாச்சிரமக்காரர்களோ  காங்கிரசை  எதிர்த்து  காங்கிரசுக்காரரை  தோற்கடிக்க வேண்டும்  என்பதையே  இந்தத்  தேர்தலைப் பொருத்தமட்டில்  முக்கிய  கருத்தாய்க்  கொண்டவர்களே  தவிர  ஜஸ்டிஸ்  கட்சியை  வெட்டிப்  புதைக்க வேண்டும்  என்கின்ற  பிரச்சினையையோ  சர். ஷண்முகம் பிரசிடெண்டு ஆகக் கூடாது என்கின்ற பிரச்சினையையோ தேர்தல்  பிரசாரமாகக்  கொண்டவர்கள்  அல்ல  என்பது  நமதபிப்பிராயம்.

அன்றியும்,  வருணாச்சிரமக்காரர்  இந்திய  சட்டசபையில்  பார்ப்பனரல்லாதாருக்கோ  அல்லது  சீர்திருத்தக்காரருக்கோ, காங்கிரசுக்காரரை  விட  அதிகமான  கெடுதி  ஒன்றும்  செய்து  விடமுடியாது.

ஏனென்றால்  காங்கிரசுக்காரர்  சமூக  சீர்திருத்த  சம்மந்தமான  எவ்வித  மசோதாவையும்  கொண்டு  வருவதில்லை  என்றும்,  வேறு  யாராவது  கொண்டு  வந்தாலும்  அதை  ஆதரிப்பதில்லை  என்றும்  எதிர்ப்பதாகவும்  வாக்கு  கொடுத்திருக்கிறார்கள்.  இந்த  நிலையில்  வருணாச்சிரமக்காரர்கள்  இந்திய  சட்ட சபையில்  என்ன கெடுதி  செய்துவிட முடியும்  என்பது  நமக்கு  விளங்கவில்லை.

அன்றியும்  கொல்லங்கோடு  ராஜா,  ராஜாபகதூர்,  கிருஷ்ணமாச்சாரி  முதலியவர்கள்  தோழர்  ஷண்முகத்தை  ஆதரிப்பதாகவும் ஜஸ்டிஸ்  கட்சியிடம்  தங்களுக்கு  விரோதமோ  துவேஷமோ இல்லையென்றும்  வெளிப்படையாகச் சொல்லி இருப்பதுடன்  சில  சமயங்களில்  சர்.ஷண்முகத்தை  ஆதரித்தும்   இருக்கிறார்கள்.

வருணாச்சிரமம்,  சீர்திருத்தம்  என்பவை  இரண்டும்  ஒன்றுக் கொன்று  முரணான  அபிப்பிராயமானாலும்  இதில்  வஞ்சகம் ,  சூது,  சதி,  மோசம்,  பித்தலாட்டம், ஏமாற்றம்,  நாணையக்  குறைவு  ஏதும்  இல்லை  என்றே  கருதுகிறோம்.

ஆனால்  காங்கிரசின்  போர்வை  போர்த்த  பார்ப்பனர்களே  இவை  சகலத்தையும்  அஸ்திவாரமாக  வைத்தே  ஜஸ்டிஸ்  கட்சியை  வெட்டிப்  புதைப்பது,  பார்ப்பனரல்லாதார்  இயக்கத்தை  ஒழிப்பது,  சர்  ஷண்முகத்தைக்  கவிழ்ப்பது  என்கின்ற  பிரச்சினையை  வைத்து வேலை  செய்திருக்கிறார்கள்.  இந்த நிலையில்  அறிவுள்ள  ஒருவன்  காங்கிரசை  ஆதரிப்பதா  எப்படியாவது காங்கிரசை  எதிர்ப்பதா  என்பதை யோசித்துப் பார்க்க வேண்டுமாய்  வாசகர்களை  வேண்டிக் கொள்ளுகின்றோம்.

காங்கிரசுக்காரர்கள்  வெற்றி பெற்ற பிறகு  அவர்கள்  பேசிய  பேச்சில் இருந்தே  நாம்  கூறுவது  சரி  என்று நன்றாய்  விளங்கி  இருக்கலாம்.  தோழர்கள்  சத்தியமூர்த்தி  அய்யர்,  ராஜகோபாலாச்சாரியார், டாக்டர்.  ராஜம்  அய்யங்கார்  ஆகியவர்கள்  தாங்கள்   வெற்றி  பெற்றதன் மூலம்  ஜஸ்டிஸ்  கட்சி  500 கஜ  ஆளத்தில்  வெட்டிப்  புதைக்கப்பட்டு  விட்டதாகவும்,  வகுப்பு  வாதம்  என்னும்  பார்ப்பனர்   பார்ப்பனரல்லாதார்  என்னும்  விஷயம்  அடியோடு  ஒழிந்துவிட்டது  என்றும் பேசி  மகிழ்ந்து  இருக்கிறார்கள்.

சுயமரியாதைக்காரர்கள்  தாங்கள்  ஜஸ்டிஸ்  கட்சியில்  எவ்வித  சம்மந்தமும்  வைத்துக் கொண்டிருக்கவில்லை  என்றோ  அல்லது  தங்களுக்கு  இப்போது  பார்ப்பனர்   பார்ப்பனரல்லாதார்  என்கின்ற  விஷயமே இல்லை  என்றோ  சொல்லிக்  கொள்ளுவதானால்  அவர்கள்  தங்களைப்  பொருத்தவரை  எலக்ஷனில்  கலந்து  கொள்ளாதிருந்தது   ஞாயம்  என்று  கருதிக் கொள்ளலாம்.

மற்றபடி  சுயமரியாதைக்காரர்கள்  என்பவர்கள்  காங்கிரசுக்கு  எதிராக  இருந்ததோ அல்லது  காங்கிரசுக்கு  எதிராக  இருந்தவர்களை  ஆதரித்ததோ  ஜஸ்டிஸ்  கட்சியை ஆதரித்ததோ  எவ்விதத்திலும் தப்பிதம் என்று  சொல்லிவிட முடியாது.

ஆகவே  சுயமரியாதைக்காரர்கள்  எலக்ஷனில்  நடந்து  கொண்டது  எலக்ஷனில் நின்ற  ஒவ்வொரு  கட்சிக்காரரும்  அவரவர்கள்  என்ன பிரச்சினையின்  மீது  எலக்ஷன்  பிரசாரம்  செய்தார்களோ  அந்தப்  பிரச்சினையைப்  பொருத்ததே  ஒழிய  மற்றபடி  வேறு  விதமான  காரியங்களைக்  குறித்து  அல்ல  என்பதைத்  தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

பகுத்தறிவு  கட்டுரை  02.12.1934

You may also like...