கோவை  முனிசிபாலிட்டி

 

கோயமுத்தூர்  முனிசிபாலிட்டியில்  திவான்பகதூர்  இ.கு. ரத்தினசபாபதி  முதலியார்  அவர்கள்  சுமார்  15  வருஷ  காலமாக  சேர்மனாக  இருந்து  வந்ததும், கோவை  முனிசிபல்  நிருவாகம்  சென்னை   மாகாண  முனிசிபாலிட்டிகளில்  எல்லாம்  தலைசிறந்து  விளங்கியதும்,  அந்த  நிர்வாகத்தைப்  பற்றி  அரசாங்க  யாதாஸ்தில்  கோயமுத்தூர்  முனிசிபல்  நிர்வாகம் முதல்தர  நிர்வாகத்தில்  முதன்மையானதாக  கருதப்படக்  கூடியது  என்று  பல  வருஷங்களாகக்  குறித்து  வந்ததும்  யாவரும்  அறிந்ததாகும்.

அப்படிப்பட்ட  தோழர்  இ.கு.கீ.  அவர்கள்  சென்ற  மூன்று  வருஷத்திய  நிருவாகத்தின்  கடைசி  மீட்டிங்கில்  கவுன்சிலர்கள் அவரைப்  பாராட்டிப்  பேசியதற்குப்  பதிலளிக்கையில், தான்  இதுவரை  சேர்மன்  அலுவல்  பார்த்ததற்கும், அதற்காக  தன்னை  கவுன்சிலர்கள்  பாராட்டியதற்கும்  எல்லாம்  கவுன்சிலர்களுடைய  ஒத்துழைப்பே  காரணம்  என்று  சொன்னதோடு  தான் இனி சேர்மென்  பதவியில்  இருந்து  விலகி  விடுவதற்கு  கவுன்சிலர்கள்  அனுமதிக்க  வேண்டும்  என்றும், வேறு  தக்கவரை  தெரிந்தெடுத்துக்  கொள்ள வேண்டும் என்றும்  தானும்  ஒத்துழைத்து  தன்னால் கூடியதை  கவுன்சிலர்  என்கின்ற  முறையிலேயே  செய்து  வருவதாயும்  தெரிவித்துக்  கொண்டார்.

கவுன்சிலில் இருந்த  காங்கிரசுக்காரர்கள்  என்று  தங்களைச் சொல்லிக் கொள்ளும்  இரண்டொருவர்  இந்த  சங்கதியை  தங்களுக்கு  ஒரு   ஆதாரமாய்  வைத்துக் கொண்டு  கலகத்தை மற்ற  கவுன்சிலர்களுக்குள்  உண்டாக்க முயற்சித்தார்கள்.  என்னவென்றால்  வேறு  யார் வந்தாலும்  வரட்டும்,  தோழர்  றாவ்சாசிப்  கு.N. பொன்னைய  கவுண்டர்   மாத்திரம்  சேர்மனாய்  வரக்கூடாது  என்றும்  அதற்குக்  காரணம்  என்னவென்றால்  தோழர்  பொன்னைய  கவுண்டர்  அவர்கள்  பேருக்கு  பல  சாராயக்  கடைகள்  கள்ளுக்கடைகள்  இருக்கின்றதென்றும்,  அவர்கள்  காங்கிரசை  எப்போதும்  தூஷித்து  எதிர்பிரசாரம்  செய்கின்றவர்  என்றும்,  அவர்  வைஸ் சேர்மெனாய்  வருவது  கூட  தங்களுக்கு  அவமானம்  என்றும்  வீரம்  பேசி  அதன்  மூலமாய்  ஜஸ்டிஸ்  கட்சியில்  உள்ள  ஒவ்வொருவரையும்  போய்  நீங்கள்  சேர்மெனாய்  இருங்கள்  நீங்கள்  சேர்மனாய் இருங்கள்  என்று  கோள்களும் குண்டுணிகளும்  செய்து  பார்த்தார்கள்.  இதைக்  கண்ட  தோழர்  இ.கு.  ரத்தினசபாபதி  முதலியார்  அவர்கள் இவ்வளவு  ஆன  பிறகு  தோழர்  பொன்னையா அவர்களே  சேர்மெனாய்  வர வேண்டும்  என்றும்  காங்கிரஸ்காரர்கள்  தங்களால்  கூறியதை  செய்து  பார்த்துக்கொள்ளலாம்  என்றும், அவர்களுடைய  கோள்களுக்கும்  குண்டுணித்தனத்துக்கும்  அடிமைப்பட்ட  சிலர்  தமது  கட்சியில்  இருந்து  விலகிவிட்டாலும் சரி  என்றும்  சொல்லி  ஒரே  பிடிவாதமாய்  தோழர்  பொன்னையா  அவர்களையே  சேர்மன்  பதவிக்கு  நிறுத்தினார்.

காங்கிரசுக்காரர்களுடைய  விஷமம்  பலிக்காமல் போகவே  கடைசியாக  தாங்கள்  தோழர்  பொன்னையா  அவர்களைப்  பற்றி  பேசியது  தவறு  என்பதை  உணர்ந்து,  அவர்களாகவே  பொன்னையா அவர்களை  ஆதரிப்பதாகவும்   அவரோடு  ஒத்துழைப்பதாகவும்  அதற்கு  கூலியாக  தங்களுக்கு வைஸ்  சேர்மென்  வேலை  கொடுக்க வேண்டும்  என்றும் கெஞ்ச  ஆரம்பித்தார்கள்.  ஜஸ்டிஸ்  கட்சியில்  உள்ள சிலருக்கு  இந்த  மாதிரி  நடவடிக்கை  பிடிக்கவில்லை யானாலும் தோழர்  பொன்னையா  எப்படியானாலும்  வரக்கூடாது  என்றும், அவர்  உள்ள கவுன்சிலில்  தாங்கள்  இருப்பது  அவமானம்  என்றும்  பேசிய  வீரர்கள்  அவர்  தலைமையின்  கீழ்  அவருக்கு  உபமாக  இருப்பதற்கு  ஒப்புக்  கொண்டால்  அவர்களுடைய  யோக்கியதையை  வெளியார்   அறிவதற்கு  இது  ஒரு  சந்தர்ப்பமாய் இருக்கட்டும்  என்று  மற்ற  கவுன்சிலர்களுக்கு  சமாதானம்  சொன்னார்.  அந்தப்படியே  முன்  வீரம்  பேசிய  காங்கிரஸ்காரர்  என்பவர்கள் பேசாமல் மூச்சுவிடாமல்  மரியாதையாக  தாங்களாகவே  தோழர்  பொன்னையா அவர்களை  ஆதரித்தார்கள்.  தங்களுக்கு  ஒரு ஸ்தானம்  எறியப்பட்டவுடன்  கள்ளுக்கடை  சாராயக்கடை  வியாபாரம்  எங்கேயோ  பறந்து  போய் விட்டது போலும்.

இதன்  பயனாய்  ஒரு  பார்ப்பனர்தான்  வைஸ்  சேர்மனாய்  வரக்கூடும்  என்பதாகவும்  தெரிகிறது.  ஆகவே  காங்கிரஸ்காரர்கள்  என்பவர்களின்  யோக்கியதையும்  அவர்களுடைய  திட்டங்களும்   அவர்கள்  அதை  எதற்கு  உபயோகிக்கிறார்கள்  என்பதும்  கடைசியாகக்  காங்கிரஸ்  வெற்றி  என்பதெல்லாம்  எப்படி  பார்ப்பனர்களையே  போய்ச் சேருகிறது  என்பதும்  இதிலிருந்தாவது  கோவைவாசிகளும்,  மற்ற  ஊர்  வாசிகளும்  உணர்வார்களென்று  கருதுகிறோம்.

 

பகுத்தறிவு  துணைத் தலையங்கம்  25.11.1934

You may also like...