நமது  நாகரீகம்

 

உலகில்,  மக்கள்  அடைந்துவரும்  நிலைமையைக்  காட்டு மிராண்டித்  தன்மையென்றும்,  அநாகரீக  வாழ்வென்றும்,  அரை  நாகரீக  நிலைமை  என்றும்,  நாகரீக  நிலைமை  என்றும்  வகுத்து வருகின்றார்கள்.  காட்டு  மிராண்டித்  தன்மையில்  மக்கள்  விலங்கினங்களைப்  போல்,  வீடுவாசலின்றி  நாளைக்கு  வேண்டுமென்ற  பகுத்தறிவின்றி,  மிருகாதிகளைப்  போல்  அங்கும்  இங்கும்  இரை  தேடி  வாழ்ந்து  வந்த  வாழ்க்கையாகும்.  இவ்வாழ்க்கையில்,  இன்றைக்கும்  சில  மக்கள்  வாழ்ந்து  வருகின்றார்கள்.  இலங்கையிலிருக்கும்  வேடர்களும்,  ஆப்பிரிக்காவில்  வாழ்ந்துவரும்  காட்டு  மனிதர்களும்,  பிஜீ தீவில் சில  காலத்திற்கு  முன்  வாழ்ந்து  வந்த  மக்களும்  இன்றைக்கும்  காட்டுமிராண்டித்  தன்மையிலே  இருந்து  வருகின்றனர்.  இந்நிலைமையிலுள்ள  மக்களுக்குக்  கல்யாணமென்ற  கூட்டுறவு  கிடையா.  பெண்களைச்  சட்டி  பானைகளைப்  போல்  ஆண்டு  அனுபவித்து  வருகின்றார்கள்.  இதற்கு  மேற்பட்ட  மக்கள்  நிலைமையில் மனித சமூகம்  சிறுசிறு  கிராமங்களில்  வசித்து  வரத்  தலைப்பட்டனர்.  கிராம  தலைவர்களென்றும் கிராமச்  சங்கங்களென்றும்,  சமூக  வாழ்க்கையை  உண்டாக்கிக் கொண்டு  தத்தம்  கிராமங்களில்  சில  காலம்  தங்கியிருந்து,  வேறு  பிரதேச கிராமங்களைக்  கைக்கொண்டு,  ஏகதேசமாக  நிலங்களையும்  பயிர்  செய்து  வந்த  காலம்  அநாகரீகக்  காலமென்று  சொல்லப்படும்.  ஆண்களையும்  பெண்களையும்  அடிமைப்படுத்தி  வந்த காலமிதுவே.  அடுத்தடுத்து ஒரு  சமூகத்தார்  மற்றொரு  சமூகத்தாரோடு  போர்  புரிந்து  வந்த  காலமுமிதுவே.  இந்த  அநாகரீக  காலத்தில்  அம்பு,  வில்  ஆயுதங்களும்,  எலும்பு,  தோல்  சக்கிமுக்கி  கற்களை  ஆயுதங்களாகவும்  ஆபரணங்களாகவும்  தரித்து  வந்திருக்கின்றனர்.  மனிதர்  இறந்தால்  அவருடைய  ஆன்மா  உலகில்  திரும்ப  உலாவுமென்ற  எண்ணமும்  இக்காலத்தில்  தோன்றியதாக  ஊகிக்கலாம்.  அந்த  வாழ்க்கையில்  பொருளை  வாங்குவதும்  விற்பதும்  கிடையாது.  இவ்வித  வாழ்க்கையில்  அரேபியர்,  நமது  நாட்டில்  குறவர்,  மறவர்  இன்னும்  அனேக  ஆப்பிரிக்க  மக்களும்  வாழ்ந்து  வருகின்றனர்.  அரை  நாகரீக  வாழ்க்கையில்  மக்கள்  நகரங்களிலும்  பட்டினங்களிலும்  சில  ஆயிரம்  பெயர்கள்  தங்கி வாழ  ஆரம்பித்தனர். பயிர்த்  தொழில்  முக்கியமாக  உயிர்  வாழ்விற்கு  அத்தியாவசியமாக  ஏற்பட்டது.  தலைவனை  அரசனென்றும்,  பாதுகாப்பிற்கு  வீரர்களென்றும்,  மந்திரி  பிரதானிகளென்றும்  இந்த  அரை  நாகரீக  காலத்தில்  ஏற்பட்டது.  சொத்துரிமையும்  இந்தக்  காலத்தில்  உண்டாகியது.  போக்குவரத்திற்கு  வண்டிகளும்,  ரதங்களும்  ஏற்பட்டன.  பண்டைக்  காலத்து  பண்ட  மாற்றுக்குப்  பதிலாக  நாணய  செலாவணி  ஏற்பட்டது.  பண்டைக்கால  அடிமைகளும்  இந்த  வாழ்க்கையிலிருந்து  வந்தனர்.  பெண்களுக்குச்  சுதந்திரம்  ஒன்றுமில்லாமலே  புருஷனுக்கு  அடங்கி  நடக்க  வேண்டுமென்ற  மனப்பான்மையும்,  இவ்யுகத்தில்  ஏற்பட்டது.  கல்விக்கும்  கேள்விக்கும்  சிற்சில  ஸ்தாபனங்களும்  உண்டாயின.  காட்டு  மிராண்டித்  தன்மையில்  வீட்டிற்கு  வீடு  கிராமத்திற்குக்  கிராமம்  சண்டை  போட்டுக்  கொண்டு வந்தது  போய்,  தேசத்திற்காக  சண்டை  போடும்  நிலைமை  உதித்தது.  சிற்சில  பண்டங்களில்  வர்த்தகமும்  செய்து வந்தார்கள்.  நாடு  நகரங்களில்  ஆயிரம்  பதினாயிரக்கணக்காக  வாழ  ஆரம்பித்தனர்.  மதங்களும்,  புராணங்களும்  உற்பத்தியாயின.  குற்றவாளிகள்  கொடூரமாக  நடத்தப்பட்டு  வந்தனர்.  ஆடு,  மாடு,  குதிரை  முதலிய  மிருகங்கள்  மனிதனுக்கு  உபயோகப்படும்படியாக  பழக்கப்பட்டும்  வந்தன.  சிற்சில  நீதி  ஸ்தலங்களும்  ஏற்பட்டுள்ளன.  அநாகரீக  காலத்தில்  உண்டான  தலைவன்  இந்த  (செமி)  அரை  நாகரீகத்தில்  அரசனாக  மாறினான்.  அவனுக்கு  தெய்வத்  தன்மையும்  ஏற்பட்டது.  மக்கள்  ஓரிடத்தில்  நிலைத்து  வாழ்ந்து  வர  ஆரம்பித்த  காலமிது.

இந்தக்  காலம்,  பாரத  இராமாயண  வாழ்க்கை  நடந்து  வந்ததாகச்  சொல்லும்  காலமாகும்.  தற்போது  இந்த  அரை  நாகரீகத்தில்  அப்சீனியர்களும்  தென்  அமெரிக்க  வாசிகளும்  சிற்சில  பஸ்பிக்  தீவிலுள்ள மக்களும்  பெரும்பான்மை  இந்திய  மக்களும்  வாழ்ந்து  வருகின்றனர்.  பூர்வ  காலத்தில்  தமிழர்கள்  அடைந்த  நாகரீகமும்  இந்த  அரை  நாகரீகமென்றே  கருதப்படும்.  பண்டைக்  கால  ஈஜிப்ட்  தேச  நாகரீகமும்  அப்சீனியன்,  கார்டியன்,  பபிலோனியன்  நாகரீகங்களும்  இந்த  அரை  நாகரீகத்தைச்  சேர்ந்தவை.  மத்திய  கால  ஐரோப்பிய  நாகரீகமும்  இந்த  அரை  நாகரீகத்திலே  மூழ்கிக்  கிடந்தது.  கிரீஸ்,  ரோமாபுரி  நாகரீகமும்  இந்த  நாகரீக  காலத்தைச்  சேர்ந்தவை.

இந்த  அரை  நாகரீகத்திலிருந்து  பெறப்பட்ட  நாகரீகம்  தற்கால  நாகரீகமாகும்.  இதன்   முக்கிய  இலக்கண  மென்னவெனில்  லட்சக்கணக்காக  மக்கள்  நாடு  நகரங்களில்  வாழ்ந்து வர  ஆரம்பித்தனர்.  ஒருவருக்கொருவர்  சண்டை  செய்து  கொள்ளாமல்,  நியாய  ஸ்தலங்களை  ஏற்படுத்திக்  கொண்டு  தங்கள்  விவாதங்களைத்  தீர்த்துக்  கொள்ள  ஆரம்பித்தனர்.  அவரவர்களின்  அபிப்பிராயங்களை  முறட்டுத்தனத்தில்  அடக்கி  ஆள்வதை  விட்டு  விட்டு விவாத  மூலமாக  பகுத்தறிவைக்  கொண்டு  மாற்றிக்  கொள்ள  ஏற்பட்ட  காலமுமிதுவே.  பொதுஜன  வாக்கென்று  ஏற்பட்ட  காலமுமிதுவே.  அரசுகள்  செய்வதெல்லாம்  ஒத்துக்  கொள்ள  வேண்டுமென்ற  கட்டாய  திட்டத்தை   மாற்ற  ஏற்பட்ட  காலமுமிதுவே.  உலகிலுள்ள  பொருள்கள்  சரிசமத்துவமாக  உலகில்  உழைப்பவர்களுக்கு  உரியது  என்ற  எண்ணம்  முளைத்ததும்  இந்தக்  காலமுமாகும்.  கொடூர  தண்டனைகளால்  அடக்குவது  மிருகத்  தன்மையென்ற  மனப்பான்மை  ஏற்பட்டதும்  இந்தக்  காலத்தில்தான்.  சமத்துவம்,  சகோதரத்துவம்,  சுதந்திரம்  உலக  மக்கள்  யாவருக்கும்  உரியது  என்ற  பேரிறைச்சல்  எழுந்ததும்  இக்காலமே.  பெண்கள்  ஆண்களுடன்  உலக  வாழ்க்கையில்  சரிசமத்துவ  உரிமையுடையவர்கள்  என்ற  மனப்பான்மை  உண்டான  காலமுமிந்த  நாகரீக  காலமே.  ஏக  தேசமாக  சிற்சிலரே  சர்வ  ஞானத்தைப்  பெற்று  வந்த காலம்  போய்,  சர்வ  மக்களும்  பெற  வேண்டுமென்று  வற்புறுத்தப்பட்டு  வரும்  காலம்  இந்த  நாகரீக  காலமே!  எவ்வித  அடிமைத் தனமும்,  மக்கள்  வாழ்க்கையினின்றும்  நீக்க  வேண்டுமென  கட்டாயப்படுத்துவதும்  இந்த  தற்கால  நாகரீக  காலத்தில்தான்.

தற்கால  நாகரீகம்,  பண்டை  கால  காட்டுமிராண்டி,  அநாகரீக  காலங்களிலிருந்து  பெறப்பட்டு  வந்தமையால்,  அந்தந்த  காலத்து  வாழ்க்கை,  தற்கால  நாகரீகத்திலும்  அங்குமிங்கும்  நிறைந்து  கிடக்கின்றன.  அந்தந்தக்   காலத்து  பழக்கவழக்கங்களும்,  நீதி  நெறிகளும்,  நம்பிக்கை களும்  கோட்பாடுகளும்  மாறி  வருகின்றன.  காலதேச  வர்த்தமானப்படி  மேற்கண்ட  சட்டதிட்டங்களும்,  விலக்கு  விதிகளும்  மாறுகின்றன.  ஆனால்  அப்படி  மாறி  வந்தும்,  காலதேச  வர்த்தமானங்களுக்கு உதவாத  உபயோகமற்ற  திட்டங்கள்  அடிபட்டுப்  போகாமல்,  தற்கால  நாகரீகத்தில்  அங்குமிங்கும்  நிலைத்து  வருகின்றன.  தற்கால  நாகரீகத்தில்  உபயோகமற்ற  பலவித  கொள்கைகளும்,  கோட்பாடுகளும்  சிதறுண்டு  வந்த  போதிலும்,  முழுமையும்  நாசமடையவில்லை.  அவைகள்  நாசமடைய  வேண்டில்  அவைகள்  என்னவையென்று  பொது  மக்கள்  தெரிந்து  கொள்ள  வேண்டும்.  முதலாவது  அரசுகளின்  ஏகாதிபத்தியமும்,  காட்டு  மிராண்டியின்  வாழ்க்கையினின்றே  தொடர்ச்சியாக  வந்து  கொண்டிருக்கிறது.  ஆதிகால  காட்டுமிராண்டித்  தலைவன்,  தன்னைச்  சேர்ந்த  குடும்பத்தவர்களையும்,  சுற்றியுள்ள  மக்களையும்“  அடக்கியாண்டு  வந்தான்.  அதைப்  போலவே,  இன்றைக்கும்  ஏகாதிபத்திய  அரசுகளும்  எல்லா  உலக  சுக  போகங்களை  தங்களுடையதென்று  கோடானுகோடி  மக்களை  அடக்கியாண்டு  வருகின்றனர்.

காட்டுமிராண்டி,  புலித்தோலையும்,  கோரப்  பற்களையும்,  எலும்புகளையும்,  மண்டை  ஓடுகளையும்,  அம்பு,  விற்களையும்  கொண்டு  தன்னை  அலங்கரித்துக்  கொண்டு  கிராம  மக்களை  பயப்படுத்தி  வந்ததைப்  போல,  தற்கால  அரசுகளும்  சேவகர்களையும்,  சிப்பந்திகளையும்,  இராணுவத்தையும்,  இராணுவத் தலைவர்களையும்  கொண்டு  பல  கோடி  மக்களை  அடக்கி  ஆண்டு  வருகின்றனர்.  மந்திரங்களையும்,  தந்திரங்களையும்  கொண்டு  காட்டு  மிராண்டித்  தலைவன்  தனது  பிரஜைகளைப் பயமுறுத்தி  வந்ததைப்  போல்  இக்காலத்து  அரசர்களும்  மூட  மதங்களையும்,  புராண  இதிகாசக்  கதைகளையும்  கொண்டு  பலகோடி  மக்களைப்  பயமுறுத்தி  வருகின்றனர்.  பண்டைக்  காலத்தில்  காட்டு மிராண்டிகள்,  பெண்களையும்,  பிள்ளைகளையும்  கொடூரமாக  நடத்தி  வந்ததைப்  போல  இன்றைக்கும்  கோடான  கோடிப்  பெண்களும்  சிறுவர்களும்  கொடூரமாக  நடத்தப்படுகின்றனர்.  அந்தக்  காலத்தில்  உழைப்பவனுடைய  உழைப்பையும்  அதன்  பயன்களையும்,  ஆதிகால  அநாகரீகத்  தலைவன்  தனது  சுகபோகத்திற்கு  விறையமிட்டு  வந்ததைப்  போல்,  இன்றைக்கும்  முதலாளிகளென்றும்,  நிலச்  சுவான்தார்களென்றும் பெயர்  படைத்த  பல்லாயிரம்  பேர்,  பலகோடி  பல்லாயிரம்  மக்களின்  உழைப்பையும்,  அதனாற்  பெரும்  பயனையும்,  அபகரித்துக்  கொண்டு  வருகின்றனர்.  பொது  மக்கள்,  அந்தக்  கால  தந்திரத்தையும்,  சூழ்ச்சியையும்  தெரிந்து  கொண்டால்  தனது  ஆதிக்கத்திற்கு  அபாயம்  வருமென்று  அநாகரீகத் தலைவன்  எண்ணி  வந்ததைப்  போல்  இன்றைக்கும்,  நாகரீகமடைந்தவனெனச்  சொல்லும்  அரசனும்,  பொது  மக்கள்  விஞ்ஞானமடைந்ததால்  தனது  ஆதிக்கத்திற்கே  அபாயம்  வருமென  எண்ணி  வருகின்றான்.  ஆதிகால  அடிமைத்தனம்  தற்காலத்தில்  பல்வேறு  ரூபமாக  சமூக  வாழ்க்கையில்  நிறைந்துள்ளது.  முக்கியமாக  மந்திர  தந்திரங்களால்  கட்டுண்டு  கிடக்கும்  மக்களின்  அடிமைத்தனம்  அறவே  ஒழிய  வேண்டும்.  மதங்களும்,  இதிகாச  புராணங்களும்  மக்களின்  அடிமைத்  தனத்தை  நீடிக்கச்  செய்து  வருவது  தடை  பட  வேண்டும்.  ஏகாதிபத்திய  அரசர்களால்,  அடிமைப்படுத்தப்பட்டிருக்கும்  கோடான  கோடி  மக்கள்  அடிமைத்  தனத்திலிருந்து  விடுபட  வேண்டும்.  பண்டை  கால  துற்பழக்க  வழக்கங்களால்  தாழ்த்தப்பட்ட  பலகோடி  பெண்மக்கள்,  சரி  சமத்துவ  சுதந்திரத்தைப்  பெற வேண்டும்.  சொந்தக்காரர்களாலும்,  நிலச்சுவான்தார்களாலும்  அடிமைப்படுத்தப்பட்ட  கோடான  கோடி  குடிமக்கள்  நிலத்திலும்  நீரிலும்  சரிசமத்துவம்  பெறவேண்டும்.  உழைப்பவனுக்கே  தனது  உழைப்பின்  முழுப்  பயன்  சேர  வேண்டும்.  இதுதான்  தற்கால  நாகரீகத்தின்  சரிசமத்துவ  வாழ்க்கை.  உலக  மக்களில்  எவனுக்காகினும்  இந்த  சரி  சமத்துவ  சமதர்மம்  குறைவுபடுமேயானால்,  அது  காட்டு  மிராண்டி  அநாகரீக  வாழ்க்கையேயொழிய  நமது  நாகரீகமாகா.

புரட்சி  தலையங்கம்  01.04.1934

You may also like...