பார்ப்பன பத்திரிகைகளும்
சர். ஷண்முகமும்
தோழர் ஆர்.கே. ஷண்முகம் இந்தியா முழுவதுக்கும் தெரிந்த ஒரு முக்கியஸ்தர். அவருடைய நடவடிக்கைகளும், பேச்சுக்களும் மக்கள் கவனிக்கப்படத்தக்கது என்பதில் யாருக்கும் ஆ÷க்ஷபனை இருக்காது. பலர் எதிர்பார்க்கவும் கூடும். இந்நிலையில் தேசியப் பத்திரிகைகள் என்று சொல்லிக் கொள்ளும் பார்ப்பனப் பத்திரிகைகள் அவரது நடவடிக்கைகளை யோக்கியமாய் பிரசுரிக்காமலும், பிரசங்கங்களையும் கேள்விகளையும், பதில்களையும் சிறிது கூட பிரசுரிக்காமலும் இருந்து வருகின்றன. சர். ஷண்முகம் அவர்கள் இந்திய சட்ட சபையில் ராணுவ சம்மந்தமான பிரச்சினையில் கொடுத்த ஒரு தீர்ப்பு விஷயமாய் பார்ப்பனப் பத்திரிகைகள் பாராட்டாவிட்டாலும், விஷமத்தனமான பரிகாசங்களைச் செய்தன.
தோழர்கள் ராஜகோபாலாச்சாரியார், சத்தியமூர்த்தி அய்யர், ஜம்பை வைத்தியனாத பாகவதர், ரமண ரிஷி போன்றவர்கள் விஷயங்களைப் பெருக்கி கண்ணு, மூக்கு வைத்து கலம் கலமாய் அலங்கரிக்கின்றன.
இந்த மாதிரியான காரியங்களால் பார்ப்பனர்களுக்குக் கீர்த்தியும், மேன்மையும் ஏற்பட்டு விட்டதாகவோ, பார்ப்பனரல்லாதாருக்கு அபகீர்த்தியும், தாழ்மையும் ஏற்பட்டு விட்டதாகவோ நாம் சொல்ல வரவில்லை. இந்த மாதிரியான நிலையில் பார்ப்பனர் இருக்கின்ற வரையில் சித்திரத்தில் மாதிரி பார்த்து எழுதக் கூட ஒரு பார்ப்பனர் கிடைக்காமல் பூண்டற்று போகக் கூடிய காலம் வரும் என்கின்ற தைரியம் நமக்கு உண்டு. அந்த தைரியம் இல்லாவிட்டால் இத்தொண்டை நாம் மேற்கொண்டிருக்க மாட்டோம்.
ஆனால் எதற்காக இதை எழுதுகின்றோம் என்றால், பார்ப்பனப் பத்திரிகைகள் தேசியப் பத்திரிகைகள் என்றும், பல பார்ப்பனர்கள் பார்ப்பனத் தன்மை இல்லாமல் நடு நிலைமை வாய்ந்தவர்கள் என்றும் கருதிக் கொண்டு பார்ப்பன சிஷ்யர்களாகவும், பார்ப்பன கூலிகளாகவும், பார்ப்பனர்களுக்கும், பார்ப்பன பத்திரிகைகளுக்கும் ஆதரவளிப்பவர் களாகவும் இருக்கும் முட்டாள் தனத்தையும், சுயமரியாதை அற்ற தன்மையையும் வெளிப்படுத்தவே இதை எழுதுகிறோம்.
விகடப் பத்திரிகை என்று வேஷம் போட்டுக் கொண்டு சில பத்திரிகைகள் பார்ப்பனீயத்தைப் பிரசாரம் செய்துகொண்டு பார்ப்பனரல்லாத பிரமுகர்களை இழிவுபடுத்திக் கொண்டு வருகின்றன. அவைகளுக்கும் சுத்த ரத்த ஓட்டமில்லாத சுயமரியாதை அற்ற பணமே பிரதானமே தவிர வேறொன்றும் இல்லை என்று கருதுகின்ற சில பார்ப்பனரல்லாதார் ஆதரவளிக்கின்றதையும் பார்த்து வெட்கப்படுகின்றோம் என்பதோடு “”10 பணத்துக்கு மிஞ்சிய பதிவிரதை இல்லை” என்று கற்பின் பித்தலாட்டத்துக்கு ஒரு பழமொழி சொல்வது போல் பணத்தைவிட தங்கள் சுயநல வாழ்க்கையை விட, மானம் பெரிதல்ல என்று எண்ணி வாழ்க்கை நடத்தும் பார்ப்பனரல்லாதாரைக் கண்டு இரங்குகின்றோம்.
பார்ப்பனரைப் பார்த்து பாரதியார் “”நாயும் பிழைக்கு மிந்தப் பிழைப்பு” என்று சொன்னது போல், ஒரு மனிதனின் பிழைப்பிற்காக மானத்தை தனது சமூகத்தை விற்று ஜீவிக்க வேண்டியதில்லை என்றுதான் பரிதாபத்துடன் கண்ணீர் விட்டுக் கொண்டு இதை எழுதுகிறோம்.
பகுத்தறிவு கட்டுரை 30.09.1934