ஈரோடு  முனிசிபாலிட்டிக்குப்  பாராட்டு

 

ஈரோடு  முனிசிபாலிட்டியானது  ஒரு  பத்து  வருஷ  காலம்  பொருப்பும்,  நாணையமும்  இல்லாமல்  லஞ்சம்,  திருட்டு,  புரட்டு,  பொய்,  போர்ஜரி  முதலிய  குணங்களை  அணிகலமாகக்  கொண்டு  நடந்து வந்ததும்,  அதன்  பயனாக  நிர்வாகமும்,  செல்வ  நிலையும்  மிகக்  கேவலமாய்  இருந்து  வந்ததும்,  அவ்வப்போது,  வெளியான  விஷயங்களில்  இருந்தும்,  சர்க்கார்  கணக்குப்  பரிசோதகர்கள்  அறிக்கைகளில்  இருந்தும்,  அரசாங்கத்தார்  நிர்வாக  அறிக்கைக்  குறிப்புகளிலிருந்தும்,  பொது  ஜனங்களும்  சிறப்பாக  ஈரோடு  வாசிகளும்  உணர்ந்திருக்கலாம்.

சுருக்கமாகச்  சொல்ல  வேண்டுமானால்  இந்த  10,  15  வருஷ  காலமாய்  அரசாங்கத்தார்  முனிசிபாலிட்டிக்குள்ள  அதிகாரங்களையும்,  கவுன்சிலர்களுக்கும்,  சேர்மென்களுக்கும்  உள்ள  அதிகாரங்களையும்  நாளுக்கு  நாள்  குறைத்து  வந்ததோடு,  சில  அதிகாரங்களை  அடியோடு  பறித்துக்  கொண்டதற்கும்  முக்கியமாக  ஈரோடு  முனிசிபாலிட்டியின்  நடத்தையே  காரணமென்று  சொல்லலாம்.

அவை  மாத்திரல்லாமல்  முனிசிபல்  ஆபிஸ்  நிர்வாகங்கள்  சேர்மென்கள்  கையிலிருந்தவைகளையும்  பிடுங்கிக்  கொண்டு  அவற்றை  நிர்வகிப்பதற்கு  மாதம்  60,  70,  100,  150  ரூபாய்  சம்பளமுள்ள  சாதாரண  சிப்பந்திகளை  நிர்வாக  உத்தியோகஸ்தர்களாக  நியமித்து,  அவர்கள்  வசம்  நிர்வாகங்களை  ஒப்படைக்க  நேர்ந்ததற்கும்  ஈரோடு  முனிசிபாலிட்டியின்  நடத்தையே  முதல்  காரணம்  என்றும்  சொல்லலாம்.

இவை  மாத்திரமல்லாமல்  ஈரோடு  டவுனுக்கு  மின்சார  விசை  விளக்கு  சப்ளை  திட்டத்தை  ஈரோடு  முனிசிபாலிட்டிக்கு  கொடுக்காமல்  சர்க்காரார்  ஒரு  பிரைவேட்  வியாபாரக்  கம்பெனிக்கு  லைசென்சு  கொடுக்க  நேர்ந்ததும்  “”ஈரோடு  முனிசிபாலிட்டியாரின்  நடத்தையே  காரணம்”  என்று  சுமார்  3  வருஷங்களுக்கு  முன்  முதல்  மந்திரி  ஈரோட்டிற்கு  வந்திருந்தபோது  சொன்னதும்  யாவரும்  அறிந்திருக்கலாம்.

இவ்வளவு  கேவல  நிலையிலும்  இழிவான  நிலையிலும்  இருந்து  வந்த  முனிசிபாலிட்டியானது  கொஞ்சகாலமாய்,  சிறப்பாய்  தோழர்  ஓ.அ. ஷேக்  தாவுத்  சாயபு  அவர்களை  சேர்மெனாக  அமைத்த  காலம்  முதல்  கொண்டு  அதன்  மோசமான  நிலைகள்  எல்லாம்  மாறி  நாளுக்கு  நாள்  கௌன்சிலில்  ஒற்றுமையும்,  கூட்டுறவும்  ஏற்பட்டு  எல்லாத்  துறைகளிலும்  முன்னேற்றம்  அடைந்து  இன்றைய  தினம்  சென்னை  மாகாணத்திலேயே  சிறப்பாகவும்,  முதன்மையாகவும்,  திறமையாகவும்  இருந்து  வரும்  வெகுசில  அதாவது  ஒரு  நாலைந்து  முனிசிபாலிட்டிகளில்  ஒன்றாக  இருந்து  வருவது  அரசாங்க  நிர்வாக  அறிக்கையிலிருந்து  அறியலாம்.

இந்த  3,  4  வருஷங்களாகவே  அரசாங்கத்தார்  ஈரோடு  முனிசிபல்  நிர்வாக  அறிக்கையின்  மீது  தங்கள்  அபிப்பிராயங்களை  எழுதி  வருவதில்  ஒவ்வொரு  வருஷமும்  “”முன்னேற்றம்  அடைந்து  வருகின்றது”  என்றும்  “”வெகு  திருப்தியாய்  இருக்கின்றது”  என்றும்  “”மகிழ்ச்சி  அடையத்தக்க  நல்ல  நிர்வாகம்”  என்றும்  எழுதி  வந்திருப்பதுடன்  கடைசியாக  சென்ற  வருஷத்ய  மாகாண  எல்லா  முனிசிபாலிட்டிகளின்  நிர்வாகங்களைப்  பற்றியும்,  அரசாங்கத்தார்  எழுதிய  பொது  நிர்வாக  அறிக்கை  மீதும்  ஒவ்வொரு  முனிசிபாலிட்டியைப்  பற்றியும்  குறிப்பிடுகையில்  கோயமுத்தூர்,  கொடைக்கானல்,  குன்னூர்,  ஒட்டகமண்ட்  ஆகிய  4  முனிசிபாலிட்டிகள்தான்  இந்த  மாகாணத்தில்  பாராட்டுதற்குரிய  விதமாய்  எல்லாத்  துறையிலும்  முன்னணியில்  இருந்து  வந்திருக்கிறது.  ஆனால்  இந்த  வருஷத்தில்  மேற்கூறிய  நான்கு  முனிசிபாலிட்டிகளுடன்  ஈரோடும்  சேர்ந்திருப்ப தானது,  அதாவது  எல்லாத்  துறைகளிலும்,  மேன்மையாயும்,  திறமையாயும்  ஈரோடு  முனிசிபல்  நிர்வாகம்  நடந்து  அவைகளோடு  சேர்க்கத்  தகுதி  பெற்றிருப்பதானது  அரசாங்கத்தாருக்கு  மிகுதியும்  மகிழ்ச்சியளிக்கின்றது  என்பதாக  குறிப்பிடப்பட்டிருக்கிறது.

எவ்வளவோ  மோசமாகவும்,  கெட்ட  பெயருடனும்  இருந்து  வந்த  முனிசிபாலிட்டியானது  இவ்வளவு  மேன்மையும்,  நல்ல  பெயரும்  அடைந்திருப்பதற்குக்  காரணம்,  அதற்குக்  கிடைக்கப்  பெற்ற  தலைவர்  தோழர்  ஓ.அ. ஷேக் தாவுத் சாயபு   அவர்களின்  ராஜதந்திர  புத்தியும்,  நிர்வாகத்  திறமையும்  காரணம்  என்று  சொல்வதோடு,  இவர்  காலத்தில்  முனிசிபாலிட்டிக்குக்  கிடைத்த  கவுன்சிலர்களுடைய  மதிக்கத்  தகுந்த  கூட்டுறவும்,  ஆலோசனையும்,  ஒத்துழைப்பும்  காரணம்  என்பதையும்  குறிப்பிடாமல்  இருக்க  முடியவில்லை.

இந்த  முனிசிபாலிட்டியில்  தாழ்த்தப்பட்ட  வகுப்பார்  விஷயத்தில்  கூடுமானவரை  சலுகை  காட்டிவரப்பட்டிருப்பதுடன்,  பெண்கள்  விஷயத்திலும்  கவனம்  செலுத்தப்பட்டிருக்கிறது  என்பதையும்  நாம்  குறிப்பிடாமல்  இருக்க  முடியவில்லை.

தாழ்த்தப்பட்ட  சமூகம்  என்று  சொல்லப்படும்  வகுப்பைச்  சேர்ந்திருந்த  ஒரு  பெண்ணுக்கு  வாக்ஸ்  நேட்டர்  (அம்மை  குத்தும்)  வேலை  கொடுக்கப்பட்டிருக்கின்ற  காரியமானது  இம்மாகாண  முனிசிபாலிட்டிகள்  எதிலும்  செய்யாத  காரியம்  என்றே  சொல்லலாம்.

முடிவாக  இவற்றோடு  ஒரு  நல்ல  முனிசிபாலிட்டி  செய்ய  வேண்டிய  எல்லா  வேலைகளும்  செய்யப்பட்டுவிட்டதாக  நாம்  சொல்லிவிட  முடியாது.  இன்னமும்  செய்ய  வேண்டிய  வேலைகள்  எவ்வளவோ  இருந்து  வருகின்றன.  முக்கியமாய்  சுகாதார  விஷயமும்,  தாழ்த்தப்பட்ட  மக்களாகிய  தீண்டப்படாதார்,  பெண்கள்,  குழந்தைகள்  ஆகியவர்களின்  வைத்தியம்,  மருத்துவம்,  பிள்ளை  வளர்ப்பு  முதலாகிய  துறைகளில்  செலுத்தப்படவேண்டிய  கவனம்  இன்னும்  அதிகம்  பாக்கி  இருக்கின்றது  என்பதை  குறிப்பிடாமல்  இருக்க  முடியவில்லை.

கவுன்சிலர்களுடைய  கூட்டுறவும்,  உறுதியான  எண்ணமுமிருந்தால்  இன்னும்  அநேக  காரியங்கள்  செய்து  இந்த  மாகாண  முனிசிபாலிட்டி களுக்கும்,  ஜில்லா  போர்டுகளுக்கும்  வழிகாட்டியாக  நமது  ஈரோடு  முனிசிபாலிட்டி  இருந்து  வரக்கூடும்  என்பதில்  நமக்குச்  சந்தேகமில்லை.

பகுத்தறிவு  கட்டுரை  09.09.1934

You may also like...