ஜஸ்டிஸ்  கட்சி

 

ஜஸ்டிஸ்  கட்சித்  தலைவர்  தோழர்  பொப்லி  ராஜா  அவர்களும்,  தென்னிந்திய  நல  உரிமைச்  சங்க  அக்கிராசனர்  தோழர்  செட்டி  நாட்டுக்  குமாரராஜா  அவர்களும்  கக்ஷி  சம்மந்தமான  சில  விஷயங்களைப்  பற்றி  யோசிப்பதற்காகவென்று  இம்மாதம்  7,  8  தேதிகளில்  மீட்டிங்குகள்  கூட்ட  ஏற்பாடு  செய்திருப்பதாய்  கட்சி  அங்கத்தினர்களுக்குத்  தனித்தனி  அழைப்பு  அனுப்பி  இருக்கிறார்கள்.

அக்கட்சியானது  அதாவது  தென்னிந்திய  பார்ப்பனரல்லாதார்  கட்சியானது  அரசியலிலும்,  சமூக  இயலிலும்  தாழ்த்தப்பட்ட  மக்களுக்கும்,  பிற்படுத்தப்பட்ட  மக்களுக்கும்,  வாழ்க்கைப்  போட்டியில்  சம  சந்தர்ப்பம்  இல்லாத  மக்களுக்கும்  விடுதலையும்,  சமத்துவமும்  அளிப்பதற்காக  என்று  தோற்றுவிக்கப்பட்டது  என்கின்ற  உண்மை  யாவருமறிந்ததாகும்.  அப்படிப்பட்ட  ஜஸ்டிஸ்  கட்சியானது  இப்போது  நாளடைவில்  செல்வந்தர்களான  முதலாளிமார்கள்,  ஜமீன்தார்கள்  ஆகியவர்கள்  ஆதிக்கத்திற்குள்ளாகி  அவர்களது  நன்மைகளைப்  பாதுகாத்துக்  கொள்ளவும்,  பெருக்கிக்  கொள்ளவுமான  வழிகளுக்கே  பயன்படக்கூடிய  மார்க்கத்தில்  திருப்பப்பட்டு  வருகின்றது  என்கின்ற  விஷயம்  பார்ப்பனரல்லாத மக்களில்  பெரும்பான்மையோர்  அறிந்ததாகும்.

ஆனாலும்  அதை  பழயபடி  தாழ்த்தப்பட்ட  பிற்படுத்தப்பட்ட  மக்கள்  விடுதலைக்கும்,  சமத்துவத்துக்கும்  திருப்ப  முடியாது  என்று  சொல்லிவிடுவதற்கில்லை  என்பது  இன்னமும்  நமது  அபிப்பிராயம்.  பார்ப்பனரல்லாத  சாதாரண  மக்கள்,  அதாவது  ஜமீன்தார்,  பிரபுக்கள்,  முதலாளிகள்  அல்லாத  மக்கள்  ஒரு  கட்டுப்பாடாய்  இருந்து  நெருக்குவார்களானால்  அவர்கள்  வழிக்கு  வந்து  கட்சியின்  உண்மை  நோக்கத்திற்கு  உழைக்க  முன்வந்தாலும்  வரலாம்.  ஆகையால்  கட்சியின்  உண்மைத்  தத்துவத்தில்  அக்கரையுள்ள  தோழர்கள்  அந்தத்  தேதிகளில்  சென்னைக்கு  வந்து  தங்கள்  அபிப்பிராயங்களை  அதன்  தலைவர்கள்  என்போர்கள்  அறியும்படி  செய்ய  வேணுமாய்  வேண்டிக்  கொள்ளுகிறோம்.

இப்போது  கூட்டம்  கூடுவதன்  நோக்கம்  பார்ப்பனர்களைக்  கட்சியில்  சேர்க்கலாமா  வேண்டாமா  என்பதற்காகவும்,  வரப்போகும்  M.ஃ.அ.  எலெக்ஷன்  விஷயத்தைப்  பற்றி  யோசிப்பதற்காகவுமே  முக்கியமாய்  கூட்டப்படுவதாய்  இருந்தாலும்  பார்ப்பனர்களையும்  சேர்த்துக்  கொண்டு  செய்யப்  போகும்  வேலை  என்ன?  இந்திய  சட்டசபையில்  நமது  கொள்கை  என்ன?  இதுவரை  நாம்  என்ன  செய்து  வந்திருக்கிறோம்?  என்பவைகளையும்  தெளிவு  படுத்திக்கொள்ள  வேண்டியது  அவசியமாகும்.  ஆதலால்  அழைக்கப்பட்ட  ஒவ்வொருவரும்  தவறாமல்  சென்று  தைரியமாய்  தங்கள்  அபிப்பிராயம்  தெரிவிக்க  வேண்டியது  அவசியமாகும்.

புரட்சி  துணைத் தலையங்கம்  03.06.1934

You may also like...