சைவர்களின் மனப்பான்மை
சைவர்கள் என்பவர் சிவனை முழுமுதற் கடவுளாக எண்ணி வழிபடுபவர்களாவார்கள். சிவ என்னும் சொல் மங்களகரம் என்றும் அன்பே உருவாகக் கொண்டது என்பது முதலாக பல பொருள்களையும் குறிக்கத்தக்கதாகும். இப்படிப் பொருள்படும் வாக்கியத்தின் வாச்சியனை வழிபடுபவர்கள்தான் சைவர்கள் என்று கூறுகிறார்கள். இத்தகையோர்களின் இலக்கணங்கள் எப்படியிருக்க வேண்டுமென்பதைக் குறித்து சைவாகமங்களில் விசேடமாகக் கூறப்பட்டிருக்கிறது. அவைகளை விரிக்கிற் பெருகுமென முக்கியமானவற்றை மட்டில் இங்கு குறிப்பிடுகிறோம்.
மன மொழி காயங்களால் தன்னைப் போற் பிறரை நேசித் தொழுகல் என்பன போன்றவைகளாகும். இத்தகைய அரிய குண சமூகத்தோடு கூடிய சைவப் பெரியார்களில் தானும் ஒருவராக எண்ணிக் கொண்டு அநேக சைவக் கூட்டங்களில் சொற்பொழிவாற்றி வரும் கோவை சேக்கிழார் நிலையம் தோழர் சி.கே. சுப்பிரமணிய முதலியார் ஆ.அ. அவர்கள் ஜனவரி மாதம் 18 ˆ “”தமிழ்நாடு” பத்திரிகையில் “”அரை குறை சாஸ்திர ஞானம் கூடாது” “”சோதிட சாஸ்திர ஆராய்ச்சி” “”நவக்கிரகங்களுடன் என்ன சம்பந்தம்” என்கின்ற தலைப்புகளின் கீழ் எழுதிய கட்டுரையின் துவக்கத்தில் “”கிழிந்த பஞ்சாங்கத்தையும் தற்பைப் புல்லையும் நம்பாதே” என்று சொல்லுபவர் சுயமரியாதைக்காரர் என்றும், “”சுயமரியாதைக் கொடியை ஏற்றியிருப்பவர்கள்கூட நல்ல நாளும் இராகு காலமும் பார்த்தே தீருகிறார்கள்” என்றும், அதை நான் பார்த்திருக்கிறேன் என்றும், மற்றும் பல விஷயங்களையும் எழுதி, கடைசியாக திருஞான சம்பந்த நாயனார் சரித்திரத்தைப் பற்றி சொல்லும் போது பெரிய புராணமானது “”அருக்கன் முதற்கோள் அனைத்தும் அழகிய உச்சங்களிலே பெருக்க வலியுடன் நிற்கப் பேணிய நல் ஓரை எழத்திருக்கிளரும் ஆதிரை நாள்” அவர் அவதரித்த காலம் என்று சொல்லுகிறார். அதாவது “”அவர் அவதரித்த காலத்திலே ஒன்பது கிரகங்களும் உச்சம், நல்ல லக்கினம், நக்ஷத்திரம் திருவாதிரை இப்படி ஒரு சாதகம் போட்டுப் பார்த்து சோதிடர்கள் பலன் சொல்லுவார்களேயானால் சுவாமிகள் சரித்திரத்திற்கு ஒத்தே இருக்கும்” என்றும் மேற்படி பத்திரிகையில் காணப்படுகிறது. சோதிட சாஸ்திரமானது வான சாஸ்திர சம்பந்தமுடையது. இது கணிதத்தையே ஆதாரமாகக் கொண்டது என்பது மறுக்கப்படத்தக்கதல்லவென்றாலும் அது தற்போது மக்களிடம் புழங்கி வருகின்ற மாதிரியையும், அதனால் மக்கள் எத்தகைய துன்பத்திற்காளாகி ஏமாற்றமடைந்து துன்புற்று வருகிறார்கள் என்பதையும் கவனிக்கும்போது, மக்களின் வாழ்க்கையில் அது தன்முயற்சிக்கும் தன் மதிப்புக்கும் தன் நம்பிக்கைக்கும் முற்றும் முறண்பட்டதாகவே காணப்படுவதுடன் அதை மக்களுக்குப் போதித்துப் பலன்களைச் சொல்லி ஏமாற்றி சாந்தி, கிரகப் பிழை என்பவைகளால் ஒரு கூட்டத்தினர் காசு பறித்து நோகாமல் வயறு வளர்க்கப் போதிய சாதனங்களாகவிருக்கிறது என்கிற முறையில் அது மிகவும் கண்டிக்கத் தக்கதாகவே இருக்கிறது. தற்கால விஞ்ஞான சாஸ்திர ஆராய்ச்சியாளர்கள் எல்லோரும் எந்த நவக்கிரகங்களின் பலா பலன்களைத் தெரிந்து அவற்றின் மூலமாக உலகுக்கு மிகவும் உபயோகப்படும் படியான சாதனங்களைக் கண்டுபிடித்து உலகுக்கு உதவினார்களென்று தோழர் சி.கே. சுப்பிரமணிய முதலியார் சொல்ல முற்படுவாராவென்று கேட்கின்றோம்.
தவிர, சுயமரியாதைக்காரர்கள் எந்த மகாநாட்டில் எந்தக் கொடியேற்று விழாவில் ராகுகாலம் நல்ல நாள் பார்த்து ஆற்றினார்களென்பதையாவது விளக்குவாரா? எந்தச் சோதிட சாஸ்திரம் தேவை என்கின்றாரோ அதே சாஸ்திரம் சொல்லி வந்த ரிஷிக் கூட்டங்களில் சேர்ந்த “மனோஜயந்து மாண்டவ்ய’ என்ற “”மாண்டவ்யர்” என்பவரின் உறுதி மொழியை தோழர் சி.கே. சுப்பிரமணியம் அறியார் போலும். அதாவது நாள்கள் சமயங்களைப் பார்த்துச் செய்ய வேண்டிய சந்தர்ப்பங்களைக் காட்டிலும் மனமானது திடப்பட்ட காலத்திலேயே செய்தல் நலமென்று சொல்லிய மாண்டவ்ய மகரிஷியின் வாக்கியங்களைக் கவனித்திருப்பாரேயானால், அவலை நினைத்து உரலை இடித்தற்கொப்பாக சோதிடத்தை நினைத்துச் சுயமரியாதைக்காரரை இடித்தெழுதித் தாக்கி இருக்க மாட்டார். மேலும் இவருக்காவது சோதிட ஆராய்ச்சி இருந்திருக்குமானால் திருஞான சம்பந்தர் பிறந்ததைச் சொல்லும் பெரிய புராணச் செய்யுளின் பிரகாரமும் அதன் கீழ் வரைந்துள்ள பொருளின் பிரகாரமும் யோசித்து பார்த்திருந்தால், அரைகுறை சாஸ்திர ஞானம் கூடாதென எழுதியிருக்கமாட்டாரென நினைக்க வேண்டி இருக்கிறது. எப்படி எனில் திருஞான சம்பந்தர் பிறந்த காலம் ஒன்பது கிரகங்களும் உச்சம் என்றும் நல்ல லக்கினம் என்றும் நக்ஷத்திரம் திருவாதிரை என்றும் காணப்படுகிறது. ஒன்பது கிரகங்கள் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, ராகு, கேது ஆகும். சூரியன் உச்சம் பெற்றான் என்றால் அவன் உச்ச வீடாகிய மேட ராசியிலிருக்க வேண்டுமென்பதாகும். அதுபோல் சந்திரன் உச்சம் பெற்றான் என்றால் அவன் இடப ராசியிலிருக்க வேண்டும். சந்திரன் 2லி இரண்டேகால் நக்ஷத்திரத்திற்கு ஒரு ராசி வீதம் அஸ்வனி நக்ஷத்திரம் முதல் கார்த்திகை கால்பாகம் வரை மேஷ ராசி கார்த்திகைபின் முக்காலும் ரோகணியும் மிருகசீர்ஷம் முன்னரையும் சேரும்வரை சந்திரன் இடப ராசியிலிருப்பான். பிறகு மிருகசீர்ஷம் பின்னரையும் திருவாதிரையும் புனர்பூசம் முன்முக்காலும் சேர்ந்து சந்திரன் மிதுன ராசியிலிருப்பான் என்பது சோதிட அரிச்சுவடியின் பாடம். திருவாதிரை நக்ஷத்திரத்தில் திருஞானசம்பந்தர் பிறந்திருப்பாரே யானால் சந்திரனுக்கு உச்சம் எப்படி ஏற்படும்? சந்திரனுக்கு உச்ச வீடு ரிஷப ராசியாயிற்றே! இப்படி இருக்க கிரகம் 9ல் சந்திரனும் ஒருவனாகும்போது அவனுக்கும் உச்சமெங்கே? சோதிட சாஸ்திர ஆராய்ச்சியில் அரைகுறை சாஸ்திர ஞானம் கூடாதென்றால் யாருக்குக் கூடாதென்பதுதான் தெரியவில்லை. ஒருக்கால் திருஞானசம்பந்தர் சரித்திரத்தைச் சொன்ன பெரியபுராண கர்த்தாவுக்கா? அல்லது அதை வசனமாக மொழி பெயர்த்தவருக்கா? அல்லது அவைகளைச் சொல்லி திரிகிற சைவப் பெரியார்களில் ஒருவரெனவும் தமிழ்ப் பண்டிதர்களில் ஒருவரெனவும் நடித்துத் திரியும் தோழர் சி.கே. சுப்பரமண்ய முதலியார் பி.ஏ. அவர்களுக்கா? அல்லது சாஸ்திர ஞானத்தில் அரை குறை கூடாதென இவரெழுதும் வியாசத்தின் காரணமாக வம்புக்கிழுக்கப்பட்ட சுயமரியாதைக்காரருக்கா? என்பதுதான் நமக்குப் புலப்படவில்லை. உலகமானது கிருஸ்துவர், மகம்மதியர், புத்தர், சமணர் முதலிய பல்வேறு மதத்தையும் இயக்கத்தையும் கொண்ட சமூகங்களை அடக்கிக் கொண்டிருக்கும்போது சோதிடத்தை ஒப்புக் கொள்ளாத சுமார் 100க்கு 95க்கு மேல்ப்பட்ட மக்கள் இவ்வுலகப் பரப்பிலிருக்கிறார்கள் என்பதாக ஏற்பட்டிருக்கும் இக்காலத்தில், தன் முயற்சியாலும் தன்னம்பிக்கையாலும், தன் மதிப்பாலும் அனேக நூதன விஷயங்களையும் சாதனங்களையும் விஞ்ஞான சாஸ்திர மூலம் மக்களுக்குப் பயன்படுத்துமாறு கண்டுபிடித்து மக்களுக்கு உதவி வரும் இக்காலத்தில், மதம் மக்களுக்கு அபின் என்று கண்டுகொண்டு அவைகளை உதறித் தள்ளிவரும் இக்காலத்தில், மூடப்பழக்க வழக்கங்களும் ஜாதி சமயங்களும் மக்களுக்கு அடிமைப் புத்தியையும் அறியாமையையும் உண்டாக்கி பாழ்படுத்தி வருகிறதென்றறிந்து அவைகளை வேறுடன் களைந்தெறியும் இக்காலத்தில், மாண்டவர்களை எப்படிப் பிழைப்பிப்பதென ஆராய்ச்சி செய்து அத்துறைகளிலும் வெற்றிகரமான முடிவுகளையும் அநுகூலங்களையும் அடைந்து வரும் இக்காலத்தில், மக்கள் இன்னமும் எப்படி சுகித்துவரச் செய்யலாம் என்று ரஷ்யாவின் தலைவர் யோசித்துத் திட்டங்களைக் கற்பித்து வருமிக்காலத்தில், இதைப்பார்த்து அமெரிக்காவின் தலைவர் தம் நாட்டு மக்களின் பொருளாதார சங்கடத்தையும் மற்ற வேலையில்லாத சங்கடங்களையும் தொலைத்து சுகவாழ்வு ஏற்படுத்த எந்தெந்த திட்டங்களை உபயோகிக்கலாமென யோசித்து வரும் இக்காலத்தில், இதைப் போன்றே மற்ற நாடுகளில் சிலதுகளும் யோசித்து வரும் இக்காலத்தில், இவ்வித சோதிட சாஸ்திர வீண் ஆராய்ச்சிகளுக்கும், புரட்டுகளுக்கும் இடமேயில்லை என்று இங்கே குறிப்பிட விரும்புகிறோம். நமது தோழர் சி.கே. சுப்ரமணிய முதலியார் பி.ஏ. அவர்கள் “”அரைகுறை சாஸ்திர ஞானம் கூடா”தென்னும் கட்டுரை மூலம் சுயமரியாதைக்காரர்களைத் தாக்க நினைத்து எழுதியவற்றை ஆராயும் தோறும் அவர் விஷயத்தில் “”மணற் சோற்றில் கல்லாராய்வது” போன்ற பாமர விஷயங்கள் காணப்படுமாயின் இவரது ஆங்கில பி.ஏ. பட்டத்துக்கும், தமிழ் புலமைக்கும், சமயப் பற்றிற்கும், சாஸ்திர ஞானத்திற்கும் என்ன மதிப்பேற்படும் என்பது நமக்கு விளங்கவில்லை. ஆயினும் இனிமேலாவது நமது இயக்கத்தவர்களை நமது முதலியாரவர்கள் தோழமை கொண்டு அவர்களிடமிருக்கும் உயர்ந்த தன்மைகளாகிற தன்னலங்கருதாமை, பிறருழைப்பில் வாழாமை, மக்கள் நலத்துக்காகவே தங்கள் உடல், பொருள், ஆவிகளைத் தத்தம் செய்துழைத்தல் முதலிய பொதுநலச் சேவைகளையும், தூக்கு மேடையிலும் கூட சுயமரியாதைக்காரர்கள் இல்லாதவைகளைச் சொல்லி இவரைப் போல் தற்பெருமைக்கு இச்சிக்கமாட்டார்கள் என்பவைகளையும் உள்ளபடி அறிந்து தமது பட்டம் பதவிகளுக்குத் தகுதியாகவும் சைவர் என்பதற்குத் தகுதியாகவும் தமது மனப்பான்மைகளை மாற்றிக் கொண்டு ஒழுகுவார் என்னும் நம்பிக்கையில் இதைப்பற்றி விரிக்காமல் இத்துடன் விட்டனம்.
புரட்சி தலையங்கம் 21.01.1934