பகுத்தறிவு

 

“”பகுத்தறிவு”  பத்திரிகை  தொடங்கி  சற்று  ஏறக்குறைய  ஒரு  மாத  காலமே  ஆகின்றது.  நடந்த  வரை  லாபமும்  இல்லை  நஷ்டமும்  வெகு  சுருக்கமே  ஆகும்.  இந்தச்  சிறிது  காலத்தில்  சொல்ப  நஷ்டத்தில்  மக்களுக்கு  ஏதோ  ஒரு  அளவில் குறிப்பிடத்தக்க  ஒரு  பலனைக்  கொடுத்திருக்கின்றது  என்று  தைரியமாய்  சொல்லலாம்  என்றாலும்,  இனியும்  இது  நடத்தப்பட  வேண்டியது  அவசியமில்லை  என்றே  கருதுகிறோம்.  பத்திரிகைகள்  மனித  சமூகத்திற்கு  அவசியமானது  என்பதில்  நமக்குச்  சிறிதும்  அபிப்பிராய  பேதமில்லை.  ஆனால் அவை  இரண்டு  காரியங்களுக்கே  முக்கியமான  தேவையாகும்.  ஒன்று  உலக  வர்த்தமானங்களை  மக்களுக்கு  அறிவித்து  மக்களது  அறிவை  உலக  இயலை  உணர்ந்து  நடந்து  கொள்ளச்  செய்வது.  இரண்டு  புதிய  அபிப்பிராயங்களை  வெளிப்படுத்தி  மனித  சமூகத்தை  முற்போக்கடையச்  செய்வதாகும்.

ஆனால்  இன்றைய  பத்திரிகை  உலகமானது  இந்த  இரண்டு  காரியங்களின்  பேராலேயே  பெரிதும்  நடத்தப்படுவதாக  சொல்லப்படு மானாலும்,  உண்மையில்  பார்க்கப்  போனால்  வெகு  சில  பத்திரிகைகளே  இக்கொள்கைக்கேற்ப  நடத்தப்படுவதாகக்  காணப்படும்.

பத்திரிகை  நடத்துவது  என்பது ஒன்று  நடத்துபவரின்  ஜீவனோபாயத்தை  முக்கிய குறிக்கோளாகக்  கொண்டது.  இரண்டு,  தனது  சுயநலத்தையும்,  கீர்த்தியையும்  உத்தேசித்து  தம்  தம்  வாழ்க்கைப்  பெருமையையே  குறிக்கோளாகக்  கொண்டு  நடத்தப்படுவது.

இப்பொழுது  நடைபெறும்  பத்திரிகைகளில்  அனேக  பத்திரிகைகளைப்  பின் சொல்லப்பட்ட  இந்த  இரண்டு  தலைப்பு களுக்குள்ளாகவே  சேர்க்கலாம்  என்றாலும்,  முன்  சொல்லப்பட்ட  கருத்துக்களுடன்  நடைபெறும்  பத்திரிகைகள்  இல்லை  என்று  சொல்லிவிட  முடியாது.

பரலோகத்தையும்  சுவர்க்க  லோகத்தையும்  காட்டி  வயிறு  வளர்க்கும்  தொழில்  புரட்டையும்  இழிவையும்  விட  பத்திரிகை  நடத்தி  வயிறு  வளர்க்கும்  தொழில்  கேவலம்  என்று  சொல்லிவிட  முடியாது.

இன்றைய  தினம்  அரசியலில்  தலையிட்டு  சிறிது  நாளாவது  வேலை  செய்து  அதன்  பயனாய்  ஒருவர்  தேசபக்தன்  என்றோ  அல்லது தேசீயத்  தலைவர்  என்றோ  அழைக்கப்பட  நேரிட்டு  அப்படிப்பட்டவருக்கு  தகுதியான  ஜீவனோபாயத்திற்கு  மார்க்கம்  இல்லாதிருக்குமானால்  அவர்கள்  கண் முன்னும்  மனதின் முன்னும்  சதா  இருந்து  கொண்டு  இருப்பது  “”ஒரு  பத்திரிகை  நடத்த  வேண்டும்”  என்கின்ற  ஆசையும்  உற்சாகமுமேயாகும்.  இதைக்  குற்றம்  என்று  நாம்  சொல்ல  வரவில்லை.  இயற்கையின்  ஆட்சி  என்றே  சொல்லுகிறோம்.  சில வன்மனம்  படைத்தவர்கள்  இந்த  இயற்கை  ஆட்சியில்  இருந்து  தப்பி  இருக்கிறார்கள்.  சிலர்  தப்ப  முடியாமல்  இயற்கையை  எய்தி  விடுகிறார்கள்.

இதன்  பயனாகத்தான்  இந்தப்  பத்து  பதினைந்து  வருஷ  காலத்தில்  ஆயிரக்கணக்கான  பத்திரிகைகள்  தோன்றி  மறைய  ஏற்பட்டன.

அதில்  ஒன்று  நமது  பகுத்தறிவாய்  இருக்கலாமா?  என்று  யாராவது  கேட்டால்  இல்லை  என்று  அடியோடு  மறுத்துச்  சொல்வதற்குப்  போதிய  ஆதாரம்  இருப்பதாகச்  சொல்லமுடியாது.

பகுத்தறிவு  டிக்களரேஷன்  ஐந்து  வருஷத்துக்கு  முன்னாலேயே  பெற்றிருந்தது.  தினசரியாக  நடத்துவதற்காக  அல்ல.  அதை  ஒரு  மாத  வெளியீடாகவும்  வருடசந்தா  8  அணாவில்  நடத்துவதாகவும்  உத்தேசித்து  சிறு  புத்தக  அளவில்  கோர்வையாகத்  தொடர்ந்து  நடத்த  உத்தேசப்பட்டு  டிக்களரேஷன்  வாங்கப்பட்டு,  பல  காரணங்களால்  நடத்த  முடியாமல்  போய்விட்டதென்றாலும்  அதை  பகுத்தறிவு  நூற்பதிப்புக்  கழகத்தின்  சார்பாக  ஒரு  மாத  வெளியீடாக  முயற்சி  செய்து  சமீப  காலத்தில்  டிக்களரேஷன்  புதிப்பிக்கப்பட்ட தென்றாலும்  சில  வாலிபர்களின்  உள்ளத்தெழுந்த  அதிருப்தியும்  ஆத்திரமும்  இவ்வளவு சடுதியில்  தினசரியாக  நடத்தச்  செய்து  விட்டது.  அதாவது  சுயமரியாதை  இயக்கத்திற்கு  ஒரு  தினசரி  தேவை  என்றும்  இப்பொழுது  நாட்டில்  நடமாடும்  தினசரிகளில்  பெரும்பான்மையானவை  சுயமரியாதை  இயக்கத்திற்கு  உதவி  செய்யாவிட்டாலும் இடையூறும்  பழியும்  உண்டாகும்படி  செய்யவே  முயற்சிக்கின்றன  என்றும்  நினைத்தது.  ஆதலால்  “”நமக்கென்று  ஒன்று  இருக்க  வேண்டும்”  என்ற கருத்தால்  ஏற்பட  வேண்டியதாயிற்று.  இக்கருத்து  சரியா  தப்பா?  என்பதைப்  பற்றி  இப்போது  நாம்  ஏதும்  சொல்ல  ஆசைப்படவில்லை.  அன்னியர்கள்  அதுவும் நமது  கருத்துக்கு  மாறுபட்டவர்கள்,  அவ்வளவோடு  மாத்திரம்  இல்லாமல்  தங்கள்  தனிப்பட்ட நலனுக்கோ  தங்கள்  சமூகத்திற்கோ  கடும்  விரோதி  என்று  நம்மையும்  நமது  கொள்கைகளையும்  கருதியவர்கள்  நம்மால்  தயவாகவோ  தாக்ஷின்யமாகவோ  நடத்தப்படாதவர்கள்  நமது  கொள்கைகளுக்கும்,    நடவடிக்கைகளுக்கும்    இடந்தராததும் பத்திரிகை  ஒழுங்கு  முறைப்படி  நடந்து  கொள்ளாததும்  குற்றம்  என்று  நாம்  கருதுவோமேயானால்  அது  முட்டாள்தனமும்  சுயமரியாதை  அற்ற  தனமும்  நமது  தோல்வியை  ஒப்புக்கொண்ட  தனமும்  ஆகுமே  தவிர  வேறில்லை.

அன்றியும்  அப்படிப்பட்ட  பத்திரிகைகள்  நமக்கு  எவ்வளவு  கெடுதி  செய்தது  என்றாலும்  அனுகூலம்  செய்யவில்லை  என்றாலும்  நமது  கொள்கைகளோ  இயக்கமோ  ஆரம்பத்திலிருந்து  நாளதுவரை  முற்போக்கிலும்  மேம்பாட்டிலும்  இருந்து  வருகின்றனவே  ஒழிய  பிற்பட்டு  விடவில்லை.  ஆதலால்  அன்னியர்கள்  மீதும்  ஆத்திரம்  கொள்ளவும்  இடமில்லை.  அன்றியும்  அவரவர்கள்  வாழ்க்கைக்குத்  திட்டம்  கோலிக்கொள்ள  தனி  உடமை  உலகத்துக்கு  சுதந்திரமுண்டு.

சுயமரியாதை  இயக்கத்துக்கு  இது  சமயம்  ஒரு  பத்திரிகைக்கு  மேல்  அதுவும்  வாரப் பத்திரிகையாக  அல்லாமல்  மற்றெவ் விதத்திலும்  நடத்த  நாட்டில்  இடம்  இல்லை.  எப்படி  யென்றால்  சுயமரியாதை  இயக்கத்திற்காக  இயக்கச்  சார்பாய்  என்று  இதுவரை  சுமார்  20  பத்திரிகைகள்  வரையில்  தினப்பதிப்பு  வாரப்பதிப்பு  மாதப்பதிப்பு  என்பதாக  ஏற்பட்டு  அவைகள்  பெரிதும்  மறைந்து  போய்  இருக்கின்றன.  அதனால்  இயக்கத்துக்கும்  கெட்டபெயர்  ஏற்பட்டும்  இருக்கிறது.  இந்த  உண்மைகளையும்  அனுபவங்களையும்  கண்டபிறகும்  நாம்  இனியும்  இயக்கத்தின்  பேரால்  பத்திரிகைகளைப்  புதிது  புதிதாய் தொடங்குவது  என்பது  மனதாரத்  தெரிந்த  தப்பான  காரியத்தைச்  செய்கின்றோம்  என்பதாகும்.

அன்றியும்  இது  சமயம்  பத்திரிகை  உலகம்  நெருக்கடியில்  இருக்கிறது.  செல்வாக்குள்ள  பத்திரிகைகள்  கூட  பெரிதும்  பாதிக்கப்பட்டுவிட்டன.  சில  100க்கு  50  வீதம்  சந்தாதாரர்கள்  குறைந்துவிட்டன.  பத்திரிகைகளின்  விலைகளும்  சில  நூற்றுக்கு  ஐம்பது  வீதம்  குறைக்கப்பட்டுவிட்டன.  இந்த  நிலையில்  சில  பத்திரிகைகள்  எவ்வித  உற்சாகமும் அவசியமும்  இல்லாமல்  “”ஆரம்பித்து  விட்டோமே  இனி  நிறுத்தினால்  அவமானமே”  என்கின்ற  தத்துவத்திற்காகவே  நடைபெறுகின்றன.  இந்த  நிலையில்  “”பகுத்தறிவு”  தினசரி  நடத்துவது  என்பது  வேண்டுமென்றே  தொல்லையையும்  நஷ்டத்தையும்  ஏற்றுக்  கொள்வதாகும்  என்று  தோன்றுகிறது.

நிற்க,  இது  சமயம்  தமிழ்நாடு  பத்திரிகை  ஏதோ  ஒரு  அளவுக்காவது  சுயமரியாதை  இயக்கச்  செய்திகளை  பிரசுரித்து  வருவதை  அறிகிறோம்.  அது  மாத்திரமல்லாமலும்  அது  மிகக்  குறைந்த  விலையாகிய  லீ  அணாவுக்கு  இறக்கப்பட்டும்  விட்டது.  கொள்கை  விஷயத்திலும்  சமீப  காலமாக  அதன்  போக்கு  நமக்கு  விரோதமானது  என்று  கருதுவதற்கு  இல்லாமலும்  இருக்கிறது.  ஆதலால்  நமது  கொள்கையைப்  பரப்ப  புரட்சியையே  ஆதாரமாகவும்,  சேதியை  தெரிவிக்க  தமிழ்நாடுவின்  சகாயத்தையே  அனுகூலமாகவும்  கொள்ளலாம்  என்று  நினைக்கிறோம்.

தமிழ்நாடு  பத்திரிக்கை  8  பக்கம்,  10  பக்கம்,  12  பக்கம்  நல்ல  வியாசங்களுடனும்  தக்க  சேதிகளுடனும்  தாராளமாய்  எங்கும்  லீ  அணாவுக்கு  கிடைக்கும்  படியாக  நடைபெறும்  போது  நாம்  லி  அணாவுக்கு  தினசரி  அதில்  4ல்  ஒரு  பாக  அளவு  பத்திரிக்கை  சேதிகள்  அதிகமில்லாமல்  நடத்துவது  என்றால்  எப்படி  நடத்தப்பட  முடியும்  என்கின்ற  பயம்  ஒருபுரம்  இருந்தாலும்,  இந்தியன்  எக்ஸ்பிரஸ்  பத்திரிக்கையானது  லீ  அணாவுக்கு  போடப்பட்டதால்  2  அணா  பத்திரிக்கைகளாகிய  “”மெயிலும்”  “”இந்துவும்”  ஒரு  அணாவாக  விலை  குறைக்கப்பட்டுவிட்டது.  அது  போலவே  காலணா  அரையணாப்  பத்திரிக்கைகளாலேயே  ஒரு  அணாப்  பத்திரிக்கைகளும்  விலை  குறைக்கப்பட  வேண்டியதாகிவிட்டது  என்று  கருத  வேண்டி  இருப்பதால்  அவைகளோடு  போட்டி  போட்டுக்  கொண்டு  நமது  ஊக்கத்தை  வீணாக்குவது  நமக்கு  அவசியமில்லாத  காரியம்  என்று  நினைத்து,  நமக்கு  எதிர்ப்பு  இல்லாததும்  கூடிய வரை  அனுகூலமாயிருப்பதாகக்  கருதுவதுமான  அத்தமிழ்நாடு  பத்திரிக்கையை  நமது  கொள்கைக்காக  இல்லா விட்டாலும்  சேதிக்காகவாவது  அதைப்  பயன்படுத்திக்  கொள்ளலாம்  என்கின்ற  எண்ணத்தின்  மீதே  “”பகுத்தறிவு”  தினசரி  பத்திரிக்கையை  இன்று  முதல்  நிறுத்தி  வைக்கலாம்  என்று  தீர்மானிக்க  வேண்டிய  அவசியத்தில்  இருக்கிறோம்.

இதுவரை  பகுத்தறிவை  ஆதரித்தவர்களுக்கும்  அதற்கு  உதவி  செய்தவர்களுக்கும்  மனமார்ந்த  நன்றியறிதலை  தெரிவித்துக்  கொள்ளுகிறோம்.

புரட்சி  அறிவிப்புக் கட்டுரை  27.05.1934

You may also like...