சர்.ஆர்.கே.  ஷண்முகம்

 

தோழர்  ஷண்முகம்  அவர்கள்  சமீபத்தில்  வரப்போகும்  இந்திய  சட்டசபைத்  தேர்தலுக்கு  ஒரு  அபேக்ஷகராக  நிற்கின்றார்.  அவர்  சென்னை  மாகாண  வர்த்தக  தொகுதிக்கு  அபேக்ஷகராய்  நிற்க  உத்தேசித்திருப்பதாய்  தெரிகின்றது.  அவர்  இப்போது  பொது  (கோவை,  சேலம்,  வட  ஆற்காடு  ஜில்லாக்கள்)  தொகுதியின்  பிரதிநிதியாய் இந்திய சட்டசபைக்குச் சென்று அங்கு அவரது மேன்மையாலும் தகுதியாலும்  இந்திய  சட்டசபைக்கே  தலைவராய்,  அதாவது  கௌரதையில்  வைஸ்றாய்  பிரபுவுக்கு  அடுத்தபடியாய்  விளங்குகிறார்.

அவர்  காங்கிரசில்  பலகாலம்  இருந்தவர்.  சமீப  காலத்தில்  அதாவது  1925,  26ம்  வருடங்களில்  தென்னாட்டுப்  பார்ப்பனர்கள்  தமிழ்நாட்டில்  காங்கிரசின்  பேரால்  தனித்து  நின்று  மேடையேறுவதற்கு  தகுதி  இல்லாமல்  முறியடிக்கப்பட்ட  காலத்தில்  (தோழர்கள்  கு. சீனிவாசய்யங்கார்,  சி.ராஜகோபாலாச்சாரியார்,  சத்தியமூர்த்தி  முதலியவர்கள்)  தோழர்  சண்முகம்  அவர்களை  முன்னிலையில்  நிறுத்தி  அவரது  நிழலில்  மறைந்து  கொண்டு  மேடைகளில்  ஆள்  அடையாளம்  தெரியாமல்  உட்கார்ந்திருந்ததை  இதற்குள்  அவர்களும்  மறந்திருக்க  மாட்டார்கள்.  பொது  ஜனங்களும்  மறந்திருக்க  மாட்டார்கள்.  தோழர்  ஷண்முகமும்  மறந்திருக்க  மாட்டார்  என்றே  நம்புகின்றோம்.

மற்றும்  இந்திய  சட்டசபையில்  தோழர்  நேரு,  பட்டேல்  முதலிய  “”மாபெருந் தலைவர்கள்”  இருந்து  வந்த  காலத்திலேயே  தோழர்  ஷண்முகம்  அவர்கள்  இந்திய  சட்டசபை  காங்கிரஸ்  கட்சி  கொறடாவாக  அதாவது கக்ஷியின்  கௌரவத்தைக்  காப்பாற்றும்  பொருப்பாளியாக  இருந்து  வந்ததும்  அது  இன்றைய  காங்கிரஸ்  சரித்திரத்தில்  “”சுந்திர  காண்டமாக”  இருந்து  வருவதும்,  யாவருக்கும்  தெரிந்ததும்  ஒருவராலும்  மறுக்க  முடியாததுமாகும்.

அதே  தகுதியும்,  பெருமையும்,  சாமர்த்தியமும்  அவரை  இன்று  இந்திய  சட்டசபைத்  தலைவராக  ஆக்கிவிட்டதுடன்  இன்னமும்  மேலான  பெரும்பதவியும்  அவரை  மணந்து  மணம்  பெற  காத்திருக்கின்றது.  இப்படிப்பட்ட  நிலைமையில்  தோழர்  ஷண்முகத்தின்  கௌரவமும்  சாமர்த்தியமும்  கீர்த்திப்  பிரதாபமும்  இந்தியாவெங்கும்  பரவி  இருப்பதுடன்  வெளி  தேசங்களில்  தானாக  பரவத்  தலைப்பட்டதில்  அதிசயமொன்றுமில்லை.  இதை  ஒடுக்கவும்,  மறைக்கவும்  தென்னாட்டுப்  பார்ப்பனர்களும்  அவர்களது  பத்திரிக்கைகளும்  மற்றும்  வெளி  மாகாணங்களில்  உள்ள  பார்ப்பனர்களும்  செய்து  வந்த  விஷமப்  பிரசாரங்களும்  திண்ணைப்  பிரசாரங்களும்  கணக்கு  வழக்குக்கு  மீறியதாய்  இருந்து  வந்ததும்  தோழர்  ஷண்முகத்துக்கும்  தோழர்  ஸ்ரீனிவாசய்யங்காருக்கும்  நடந்து  வந்த  வாதப்  பிரதிவாதங்களும்  1926,  27  வருஷத்திய  குடி  அரசைப்  பார்ப்பவர்களுக்கு  கண்ணாடி  போல்  விளங்கும்.

அக்காலங்களில்  காங்கிரசின்  பேரால்  பார்ப்பனர்கள்  பிரசாரங் களுக்கு  வெளியில்  சென்று  மேடையேறினால்  இவர்களது  யோக்கிய தைகளை  உணர்ந்தவர்களான  ஆங்காங்குள்ள  பார்ப்பனரல்லாதார்கள்  இவர்களை  கேழ்விகள்  கேட்டு  திணற  வைத்து  விடுவார்கள்.  இப்படி  இரண்டு  மூன்று  இடத்தில்  நடந்தும்  பிறகு  தோழர்  ஷண்முகத்தை  முன்னால்  நிருத்தி  சரமாறியான  கேள்வி  அம்புகளுக்கெல்லாம்  பதில்  சொல்லும்படி  செய்வார்கள்.  அப் பதில்கள்  எவ்வளவு  மழுப்பலானதாக  இருந்தாலும்  கூட  தோழர்  ஷண்முகம்  பார்ப்பனரல்லாதார்  என்பதற்காக  கவனியாமல்  விட்டு  விடுவார்கள்.  இப்படியே  சுற்றுப்  பிரயாணம்  நடக்கும்.  உண்மைகள்  இப்படி  இருந்த  போதிலும்  பார்ப்பனரல்லாத  பத்திரிகைகளில்  மாத்திரம்  “”சரமாரியான  கேள்விகளுக்கு  ஆணித்தரமான  பதில்களை  தோழர்  சத்தியமூர்த்தி  அய்யர்  கொடுத்து  வாயடக்கி  விட்டார்”  என்று  சிறிது  கூட  மானம்  வெட்கம்   உண்மை  இல்லாத  சேதிகள்  வெளிவரும்.

மற்றும்  தோழர்  சத்தியமூர்த்தி  அவர்கள்  மேடையேறியதும்  பலவித  மரியாதைகள்  நடந்த  உடனே  இறங்கி  விடுவார்.  பிறகு  தோழர்  சண்முகம்  1  மணி  1.30  மணி  நேரம்  பேசுவார்.  ஆனால்  பத்திரிகைகளில்  தோழர்  சத்தியமூர்த்தி  பேசியதாக  3 லீ  கலமும்  தோழர்  ஷண்முகத்துக்கு  2லீ  வரியும்தான்  சேதிகள்  வரும்.  இவைகள்  யெல்லாம்  அப்போதே  எப்போதே?  தோழர்  ஷண்முகம்  தேசபக்தராய்,  காங்கிரஸ்  வாதியாய்  தேசீய  கட்சி  கொறடாவாய்,  பண்டிட்  மோதிலால்  நேரு  அவர்களின்  வலக்கையாய்,  தென்னாட்டு  அரசியல்  பிரசாரப்  பார்ப்பனர்களின்  காப்பாளராய்  இருந்த  காலத்தில்    நடந்த  சங்கதிகள் என்றால்   இப்போது! எப்போது?  தென்னாட்டுப்  பார்ப்பனர்கள்  கண்ணுக்கும்  மனத்திற்கும்  வயிற்றிற்கும்  பெரு  நெருப்பாய்  இருக்கின்ற  காலத்தில்  இந்தப்  பார்ப்பனர்களும்,  அவர்களது  கூலிகளும்,  மற்றும்  பச்சகானாக்களும்,  அரை  டிக்கட்டுகளும்,  பார்ப்பனர்களுக்கு  கவிபாடி  வயிர்  வளர்க்கும்  வயிற்றுப்  பிழைப்புப்  பத்திரிக்கைகளும்  என்னதான்  பேசாது  எதைத்தான்  எழுதாது  என்பதைப்  பற்றி  நாம்  அறிவாளிகளுக்கு  எடுத்துக்காட்ட  வேண்டியதில்லை.

கொஞ்ச  காலத்திற்கு  முன்  ஒரு  பார்ப்பன  போட்டிப்  பரிசுப்  பத்திரிகை  விகட  வேஷம்  போட்டுக்  கொண்டு  ஷண்முகம்  அவர்களின்  ஜாதியைக்  குறிப்பிட்டுப்  போக்கிரித்தனமாகவும்,  விஷமத்தனமாகவும்  படம்  போட்டுக்  கேவலப்படுத்தி  இருந்ததும்,  அதை  சில  பார்ப்பனரல்லாத  பத்திரிகைகள்  கண்டித்துப்  பல  கேள்விகள்  கேட்டதும்,  கேட்ட  கேள்விகளுக்கு  நாளது  வரை  பதில்  சொல்லாமல்  சுய  பாஷியம்  கூற  வந்ததும்  யாவருக்கும்  தெரியும். மற்றும்  பல  பார்ப்பனர்களும்  அதே  முறையில்  அதை  ஒட்டியே  தங்கள்  விஷத்தை  கக்கிக்  கொண்டிருப்பதும்  யாவரும்  அறிந்ததாகும்.

இவை  ஒருபுரமிருக்க  இன்று  தோழர்  ஷண்முகம்  இந்திய  சட்ட  சபைக்கு  அங்கத்தினராய்  மறுபடியும்  நிற்பதைப்  பற்றி  பார்ப்பனர்களும்,  அவர்களது  பத்திரிக்கைகளும்  எறிகின்ற  நெருப்பில்  எண்ணை  விட்டது  போல்  வயற்றெரிச்சல்  படுவது  சகஜமேயாகும்.  ஏனெனில்  தமிழ்நாட்டுப்  பார்ப்பனர்  அல்லாதார்  ஒருவர்  பார்ப்பனர்  எவரும்  அடையாத  பெருமையை  அடைந்து  விட்டார்;  இனியும்  அடையப்  போகிறார்  என்பதை  கண்டவர்களும்,  கேட்டவர்களும்  பார்ப்பனராயிருந்தால்  ஆத்திரப்படாமல்    ஏன்?    தற்கொலை  கூடச்  செய்து  கொள்ள  முயற்சியாமல்  இருக்க  முடியுமா?  ஆனால்  பார்ப்பனரல்லாதார்களுள்  தங்களைப்  பார்ப்பன  கூலிகள்  என்று  சொல்லிக்  கொள்ளவோ  பிறர்  சொல்லுவதைப்  பொருத்துக்  கொள்ளவோ  சகிக்காதார்களும்  ஏன்  ஆத்திரப்படவேண்டும்  என்பது  நமக்கு  விளங்கவில்லை.

அவரது  குற்றம்  என்ன?

தோழர் சண்முகம்  பேரில்  இன்று  பார்ப்பனர்களும்,  அவர்களது  கூலிகளும்  சொல்லும்  குற்றங்கள்  இரண்டே  இரண்டு.  அவைகளில்  ஒன்று  “ஒட்டாவா’  காரியத்தில்  கலந்திருந்தது.  இரண்டு  ஷண்முகம்  தனது  தொகுதியாகிய  கோவை,  சேலம்,  வட  ஆற்காடு  ஜில்லாக்களின்  தொகுதிகளில்  நிற்காதது.

இவற்றில்  “ஒட்டாவா’  விஷயமோ  அது  ஒரு  பாட்டி  கதை.  அது  முடிவு  பெற்று  அமுலுக்கு  வந்து  அவற்றின்  பலனை  ஜனப்பிரதிநிதித்துவ  இந்திய  சட்டசபை  சரி  என்று  ஒப்புக் கொண்டுவிட்டது.  மற்றும்  தோழர்  ஷண்முகம்  அவர்கள்  அந்த  காலங்களிலேயே  அது  சம்பந்தமான  பிரச்சினைகளுக்குத்  தக்க  பதிலும்  அளித்து  இருக்கிறார்.

இன்றும்  அந்தக்  கொள்கை  அதாவது  ஒட்டாவா  விஷயத்தில்  தான்  நடந்து  கொண்டதானது  சரியா,  தப்பா  என்பதைப்  பந்தயம்  போட்டு  நிரூபிப்பதற்காகவே  விவசாயக்காரர்களைப்  பெரும் பகுதியாய்  கொண்ட  தொகுதியை  விட்டுவிட்டு  பொருளாதார  வர்த்தகத்  தொகுதியில்  தைரியமாய்  அபேட்சகராக  நிற்கிறார்.  அந்தக்  கதைகளைப்  பற்றி  இனியும்  பேசுவோமானால்  பழய  குப்பையைக்  கிளருவதாகும்.

“ஒட்டாவா’  ஒப்பந்தம்  என்பது  இந்தியாவின்  பணக்காரர்கள்  வியாபாரிகள்  ஆகியவர்களாகிய  நூற்றுக்குப்  பத்து  பேர்கள்  கூட  அல்லாதாரைப்  பொறுத்த  விஷயமே  தவிர  மனித  சமூகத்தில்  100க்கு  90  பேர்களாகிய  ஏழைகள்  அதாவது  வயற்றுக்கு  பற்றாத  கூலிக்கு  உழைக்கும்  பாட்டாளிகள்,  தீண்டப்படாதவர்கள்,  கீழ்  ஜாதிக்காரர்கள்  என்பவர்கள்  முதலாகிய  கூட்டத்தார்களைப்  பொறுத்ததல்ல.  “ஒட்டாவா’  ஒப்பந்தத்தால்  இந்திய  வியாபாரம்  பாதிக்கப்படுவதாக  வைத்துக்  கொள்ளலாம்.  அதில்  பணக்காரர்களின்  பணம்தான்  கொள்ளை  போகலாமே  தவிர  பணக்காரர்களுக்கு  அவர்களுடைய  ஆடம்பர  அட்டூழியங்களுக்கேற்ற  லாபம்  தான்  கொள்ளை போகலாமே தவிர ஏழைகள் பணம் கொள்ளை போவதில்லை.  அப்படித்தான்  மீறி  இன்றைய  நிலையில்  ஏழைகள்  பணம்  கொள்ளை  போவதாய்  இருந்து,  இன்னமும்  அவர்கள்  பட்டினி  கிடந்து  சாகும்படியான  நிலைமை  வருமானால்  கூட  நாம்  அதற்காக  கலங்க  மாட்டோம்.  ஏன்?  சீக்கிரத்தில்  ஏழைகளுக்குப்  புத்தி  வந்து  அவர்கள்  கஷ்டங்களுக்கு  விமோசனம்  ஏற்படக்  கூடிய  நிலைமை வருமென்று கருதி வரவேற்போம்.  அந்தப்படி  ஏற்பட்ட  நாடுகளில்  தான்  ஏழை  மக்களுக்கு  சீக்கிரம்  விமோசனம்  ஏற்பட்டு  பொருளாதார  விஷயத்தில்  உள்நாட்டான்  அடிக்கும்  கொள்ளையும்  வெளிநாட்டான்  அடிக்கும்  கொள்ளையும்  நின்று  இருக்கின்றது  என்பதை  அறிவோம்.  இன்நிலையில்,  இன்று  இந்நாட்டு  மக்களை  வெளி  நாட்டார்  பட்டினி  போடுவதும்  ஒன்றுதான்,  உள்  நாட்டான்  பட்டினி  போடுவதும்  ஒன்றுதான்.

மற்றபடி  தேசாபிமானத்தைப்  பற்றி  பேசுவதென்றாலோ,  அது  இதை  விட  மோசமான  காரியம்.  அதன்  வண்டவாளங்களைப்  பற்றி,  பின்னால்  மற்றொரு  சமயம்  பேசுவோம்.

நிற்க,  தீண்டாமை  விஷயங்களிலும்  ஜாதி  உயர்வு  தாழ்வு  விஷயங்களிலும்  இன்றைய  மற்ற  அபேக்ஷகர்கள்  காங்கிரஸ்  தலைவர்கள்  என்பவர்கள்  நடந்து  கொண்ட  யோக்கியதையை  விட  தோழர்  ஷண்முகம்  நடந்து  கொண்டது  மேலா  கீழா  என்பதை  யோசித்துப்  பார்க்கும்படி  வாசகர்களை  வேண்டுகிறோம்.

கோடிக்கணக்கான  மக்கள்,  அதுவும்  பாடுபட்டு  உழைக்கும்  மக்கள்  இந்நாட்டில்  தீண்டாதாரைக்  கீழ்  ஜாதியாராய்  பட்டம்  பெற்றிருப்பது கொடுமையா அல்லது பணக்கார  முதலாளிக்கு  லாபம்  குறைந்து  போவது  கொடுமையா  என்பதை  யோசித்தால்  “ஒட்டாவா’  கூப்பாட்டின்  யோக்கியதை  விளங்காமல்  போகாது.

குருகுலப்  போராட்டத்தில்  மக்கள்,  அதுவும் குழந்தைகள்  யாவரும்  சமமாய்  பாவிக்கப்பட  வேண்டும்  என்ற  தீர்மானம்  நிறைவேறியதும்  காங்கிரஸ்  கமிட்டியில்  ராஜினாமா  கொடுத்துவிட்டு  ஓடின  வீரர்கள்  இன்று  தலைவர்களாகவும்,  அபேக்ஷகர்களாகவும்  இல்லையா?  பொட்டுக்  கட்டுவதை   பார்ப்பனரல்லாத  பெண்களில்  ஒரு  சாரார்  மீது  சுமத்தப்பட்ட  விபசாரத்தன்மையை  ஒழிக்கக்   கூடாது  என்ற  வீரர்  ஒருவர்  இன்று  அபேக்ஷகராக  இல்லையா?  ஜாதி  மதங்களை  ஒழிக்கக்  கூடாது  என்று  வாதம்  புரியும்  வீரர்  ஒருவர்  இன்று  அபேக்ஷகராக  இல்லையா?  இப்படிப்பட்ட இவர்கள்  மனித  சமூகத்திற்கே  வேண்டாதவர்களாயிருக்க,  மனிதர்களின்  பிரதிநிதிகளாய்  தலைவர்களாய்  இருக்க  யோக்கியதை  உடையவர்களானால்  தோழர்  ஷண்முகம்  பிரதிநிதியாய்  இருப்பதில்  யாருக்கு  என்ன  முழுகிப்  போகும்?  எந்த  விதத்தில்  இந்  நாட்டு  மக்களுக்கு  கேடோ,  அவமானமோ  ஏற்பட்டு  விடும்?  என்று  கேட்கிறோம்.

இரண்டாவது தோழர் ஷண்முகம் தனது  தொகுதியில்  நிற்கவில்லை  என்பது.

தோழர்  ஷண்முகத்தை  அவரது  தொகுதி  என்பது  இன்றும்  கைகாட்டி  அழைத்துக்கொண்டுதான்  இருக்கின்றது.  ஆனால்  தோழர்  ஷண்முகம்  இதுவரை  அதற்கு  இணங்காததானது  இந்தப்  பார்ப் பனர்களும்  அவர்களது  கூலிகளும்  தன்னைப்  பொருளாதார  விஷயத்தில்  இந்திய  வர்த்தகத்துக்கு  கெடுதி  செய்து  விட்டதாகச்  செய்து  வரும்  விஷமப்  பிரசாரத்தைப்  பொய்ப்பித்து,  அவர்களது  முகத்தில்  கரியைத்  தடவி  அவர்களின்  யோக்கியதையைத்  தமிழ்  மக்களுக்கு  விளக்கிக்  காட்டுவதற்காகவே  வியாபாரிகள்  பொருளாதார  நிபுணர்கள்  ஆகியவர்களுடைய  தொகுதியிலேயே  நிற்க  வேண்டும்  என்கின்ற  ஆசையாலேயே  ஒழிய  வேறில்லை  என்றே  நினைக்கிறோம்.

இன்னும்  நாம்  தோழர்  ஷண்முகத்திற்கு ஒரு யோசனை  சொல்லுவோம்.  அதாவது  சேலம்,  கோயமுத்தூர்,  வட  ஆர்க்காடு  தொகுதியில்  நிற்க  வேண்டுமென்றே  சொல்லுவோம்.  இது  கிராம  வாசிகள்  விவசாயிகள்  ஆகியவர்களையே  பெரிதும்  கொண்ட  தொகுதியானாலும்  அவர்களைக்  கூட இந்தப்  பார்ப்பனர்களும்  அவர்களது  கூலிகளும்  ஏமாற்றி  விடமுடியாது  என்று  நாம்  கோபுரத்தின்  மீதிருந்து  கூவுவோம்.

மேலும்  கோவை,  சேலம்,  வட  ஆர்க்காடு  ஜில்லாக்கள்  சேர்ந்த  இந்திய  சட்டசபைத்  தொகுதியில் இன்னொரு இன்று  இருபதாயிரம்  ஓட்டர்கள்  இருப்பார்களானால்  அதில்  பகுதி  முனிசிபல்  டவுன்  ஓட்டர்கள்  ஆவார்கள்.  அவர்கள்  கிராமவாசிகளை  விட  விஷயங்கள்  தெரிந்தவர் களாயிருப்பார்களே  தவிர  மோசமானவர்களாக  இருக்க  மாட்டார்கள்.  இந்தத்  தொகுதியில்  உள்ள  எல்லா  முனிசிபாலிடிகளும்  தோழர்  ஷண்முகத்துக்கு  வரவேற்பு  கூறி  பாராட்டி  இருப்பது  இரண்டு  கண்ணும்  அற்ற  குருடன்  கூட  அறிவான்.  கோவை  ஜில்லா  போர்டு  தவிர  மற்ற  எல்லா  ஜில்லா  போர்டுகளும்  தோழர்  ஷண்முகத்தை  வரவேற்றுப்  பாராட்டி  இருப்பதும்  யாவரும்  அறிந்ததாகும்.  கோவை  ஜில்லா  போர்டிலும்  கூட  குறுகிய  நோக்கம்  கொண்ட  சிலரின்  பொறாமை  காரணமாகவும்,  பார்ப்பனர்களுக்கு  உள்பட்டிருந்தாலொழிய  தாங்கள்  மேன்மை  பெற  முடியாது  என்று  சந்தேகப்பட்டவர்கள்  காரணமாகவும் அது பாக்கி  இருக்கின்றது  என்று  கொள்ளலாமே  தவிர  வேறு  காரணம்  இல்லை.  அப்படி  இருந்தாலும் கோவை ஜில்லாவில் உள்ள நாயக்கர்மார்கள் 100க்கு  90 பேர்களும்  ஒக்கிலிய  கவுண்டர்கள் 100க்கு 99 பேர்களும்  பட்டக்காரர் போன்ற  தக்க செல்வாக்குள்ள பிரமுகர்களும், மற்றும் ஏழைக் குடியான சகோதரர்களும்  100க்கு  99  வியாபாரிகளும்  தோழர்  ஷண்முகத்தை  தங்கள்  பிரதிநிதியாகக்  கொள்ளும்  கௌரவத்தை  அடைய  ஆசைப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்பதைத் தைரியமாயும்  வலிமையாயும்  சொல்லுவோம்.

இவை  ஒரு  புரமிருந்தாலும்,  சேலம்  கோயமுத்தூர்  வட  ஆற்காடு  தொகுதியில்  இந்திய  சட்டசபைக்கு  தோழர்  ஷண்முகம்  அவர்களிடம்  ஆதரவைப்  பெற்றவர்கள்தான்  இப்போதும்  வெற்றி  பெற  முடியுமே  தவிர  அவரை  வைது  விஷமப்  பிரசாரம்  செய்து  கொண்டிருக்கும்  பார்ப்பனத்  திருக்கூட்டத்தின்  ஆதரவு  பெற்றவர்கள்  வெற்றி  பெறுகின்றார்களா  என்பதை  சற்று  பொருமையாய்  இருந்து  வேடிக்கை  பார்க்கும்படி  வாசகர்களை  வேண்டிக்  கொள்ளுகின்றோம்.

நிற்க,  தேர்தல்  பிரசார  நாடகம்  இங்கனமிருக்க  “”காங்கிரசில்  சேராதவன்,  பாவி,  தேசத் துரோகி”  என்றும்  “”காங்கிரசு  குதிரைக்கு  சமானம்  மற்ற  கக்ஷி  கழுதைக்குச்  சமானம்”  என்றும்  பேசுவதும்  எழுதுவதும்  “”காங்கிரசின்  பேரால்  ஒரு  கழுதை  நின்றாலும்  அதற்குத்தான்  ஓட்டு  செய்ய  வேண்டுமே  ஒழிய  மற்றபடி  யார்  எவ்வளவு  பெரிய  யோக்கியனாகவும்,  சாமார்த்தியசாலியாயும்  இருந்தாலும்  அவர்களுக்கு  ஓட்டுச்  செய்யக்  கூடாது”  என்று  சொல்லுவதும்,  வெளி  நாட்டிலிருந்து  சுய  அறிவும்,  முன்  பின்  யோசனையும்  அற்ற  ஆட்களைக்  கூட்டி  வந்து  அவர்களை  உசுப்படுத்தி  “”ஜஸ்டிஸ்  கக்ஷியும்  சுயமரியாதைக்  கக்ஷியும்  தேசத்துரோகக்  கக்ஷி”  சர்க்காருக்கு  அடிமைக்  கக்ஷி  என்றெல்லாம்  பேசும்படி  செய்வதுமான  இழிவான  காரியங்களைப்  பற்றி  மறு  முறை  எழுதுவோம்.

பகுத்தறிவு  துணைத் தலையங்கம்  26.08.1934

You may also like...