ஆசிரியர்கள் மகாநாடு
பிள்ளைகளைப்பற்றிய கவலை இல்லை
எங்கு பார்த்தாலும் ஆசிரியர்கள் மகாநாடுகள் கூட்டப்படுவதும், ஆசிரியர்களின் சம்பளங்கள் போதாது என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதும், மந்திரிகள் முதலிய பெரிய சம்பளக்காரர்களும், செல்வவான்களும் ஆசிரியர்களை வாழ்த்தி ஆசீர்வதிப்பதுமாகவே இருந்து வருகின்றதே ஒழிய, பிள்ளைகள் சம்பளம் கொடுக்கச் சக்தி இல்லாமல் பள்ளிக்குப் போக முடியாமல் கல்விப் பட்டினியாய் இருந்து தற்குறிகளாகி 100க்கு 92 பேர் எழுத்து வாசனை அற்ற குருடர்களாக இருந்து இந்திய நாட்டை “”அலங்கரித்து”க் கொண்டிருக்கின்றார்களே என்ற கவலை ஒருவரிடத்திலாவது இருந்ததாகவோ, இதற்காக ஒரு மகாநாடாவது கூட்டப்பட்டதாகவோ, ஒரு மந்திரியாவது, ஒரு பிரபுவாவது, ஒரு ஆச்சாரிய ஸ்வாமிகளாவது கவலைப்பட்டதாகவோ தெரியவேயில்லை. இந்தக் காலம் செல்வவான்கள் காலமானதால் பணம் சம்பாதிப்பதைப் பற்றியே உலக நிகழ்ச்சிகள் நடைபெறுவதும், செலவிடவேண்டியவர்கள் கஷ்டத்தைப் பற்றி கவலைப்படாமல் இருக்கவும் ஆன காரியம் நடக்கின்றது. இதற்காக யார் என்ன செய்யக்கூடும்?
“”எல்லாம் பகவான் செயல்” அல்லவா?
பகுத்தறிவு செய்தி விளக்கம் 23.12.1934