பொது தொகுதியின் யோக்கியதை
இந்திய சட்டசபைப் பொதுத் தொகுதியின் பொது ஓட்டர் தொகுதியில் ஒரு கிருஸ்தவர் வெற்றி பெற்றுவிட்டதற்காகப் பார்ப்பனர்கள் வகுப்புவாரி ஓட்டர் தொகுதி இனி வேண்டியதில்லை என்றும், பொதுத் தொகுதியே போதும் என்றும், அதிலும் கிருஸ்தவர்களுக்கு என்று ஸ்தானம் ஒதுக்கி வைக்கக்கூட வேண்டியதில்லை என்றும் இப்போது முன்னிலும் அதிகமாக கூப்பாடு போடுகிறார்கள்.
ஆனால் எப்படிப்பட்ட கிருஸ்தவர் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்றால் அவர்கள் சமூக முடிவுக்கு விரோதமான கருத்துடைய கிருஸ்தவர்தான் பொதுத்தொகுதியில் வெற்றி பெற்றிருக்கிறாரே தவிர, கிருஸ்தவ சமூக நலனுக்கு ஏற்பட்ட கருத்தை நிலைநிறுத்தப் பாடுபடும் கிருஸ்தவர் வெற்றி பெறவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வேண்டாம் என்பதும், வெள்ளை அறிக்கையை பகிஷ்கரிக்க வேண்டும் என்பதும், காங்கிரசினுடன் கூட்டுறவு கொள்ளவேண்டும் என்பதும், காங்கிரசு கிருஸ்தவ சமூகத்துக்கும் பிரதிநிதித்துவம் உடையது என்பதும், பெரும்பான்மையான அல்லது 100 க்கு 99 பேர்களான கிருஸ்தவர் களுடைய எண்ணமா? அவர்களுடைய சமூக சங்கத்தினுடைய முடிவா? என்பதை உணர்ந்து பார்த்தால் தங்கள் சமூக மக்களில் 100 க்கு 99 பேர்களுக்கு விரோதமான அபிப்பிராயம் உடையவரும், சமூக சங்க முடிவுக்கு எதிரிடையான அபிப்பிராயம் உடையவருமான ஒருவர் எதிரிகளின் கையாளாகி அவர்களுடைய இஷ்டப்படி சம்மதித்த ஒருவர்தான் அல்லது தமது சமூக உரிமைகள் கோரிக்கைகள் என்பதற்கு துரோகம் செய்ய சக்தி வாய்ந்த ஒருவர்தான் பொதுத்தொகுதியில் தெரிந்தெடுக்கப்பட முடிகின்றது. ஆகவே இதுதான் இன்று பொதுத் தொகுதியாய் கருதப்படுகின்றது.
எனவே இந்த பொதுத் தொகுதியை கிருஸ்தவ சமூகம் ஒப்புக் கொள்ளுகின்றதா என்று கேட்கின்றோம்.
பகுத்தறிவு கட்டுரை 02.12.1934