சென்னையில்  ஜஸ்டிஸ்  கட்சிக்  கூட்டம்

 

தலைவரவர்களே!  தோழர்களே!!

தலைவரவர்கள்  தெரிவித்த  விஷயங்கள்  இயக்க  நலனைக்  கருதி  அவசியம்  கவனிக்கத்தக்கதாகும்.  எல்லா  விஷயத்தையும்விட  நமது  கொள்கை  என்ன?  திட்டம்  என்ன?  என்பதைப்  பொது  ஜனங்கள்  அறியும்படி  செய்ய  வேண்டும்.  ஜஸ்டிஸ் கட்சி  என்றால்    N 4000  ரூபாய்  சம்பளத்துக்கும்  மந்திரி  பதவிக்கும்  ஊர்  சிரிக்கச்  சண்டை  போட்டுக்  கொண்டிருக்கும்  கூட்டம்  என்று  இனியும்  பாமர  ஜனங்கள்  சொல்லும்படி  நாம்  விட்டுக்  கொண்டிருக்கக்  கூடாது.  காங்கிரசுக்காரர்கள்  என்பவர்களின்  உள்  எண்ணமும்,  நாணையமும்  எப்படி  இருந்தாலும்  அவர்கள்  ஏதோ  இரண்டொரு  கொள்கைகளைச்  சொல்லி,  அதைப்  பெரிதாக்கிக்  காட்டி  அதற்காக  அடியும்  உதையும்,  நஷ்டமும்  கஷ்டமும்  சிறைவாசமும்  பெற்றவர்கள்  என்கின்ற  பெயரைப்  பெற்றிருக்கிறார்கள்.  அவர்களோடு  இப்பொழுது  திடீரென்று  போட்டி  போடுவதென்றால்  அதுவும்  ஒரு  விளக்கமான,  யாவருக்கும்  தெரியும்படியான  ஒரு  கொள்கையும்,  திட்டமும்  இல்லாமல்  போட்டி  போடுவதென்றால்  சுலபமான  காரியமல்ல  என்பதே  எனது  அபிப்பிராயம்.  “”கட்சிக்குக்  கொள்கை  இருந்தாலும்  இல்லாவிட்டாலும்  பணமும்,  அதிகாரமும்,  செல்வாக்கும்  இருந்தால்,  எப்படியும்  தேர்தலில்  வெற்றி  பெற்றுவிடலாம்”  என்கின்ற  தைரியம்  சிலருக்கு  உண்டு  என்பதையும்,  அதுவும்  ஒரு  அளவுக்கு  உண்மையென்பதையும்  நான்  ஒப்புக்  கொள்ளுகிறேன்.  ஆனால்  அந்த  தைரியம்  தனிப்பட்ட வர்களின்  நன்மைக்குப்  பயன்படுமே  தவிர  ஒரு  இயக்கத்துக்கு  பொதுஜன  நன்மைக்குப்  பயன்படாது.  சமீபகாலமாக  ஜஸ்டிஸ்  கட்சியின்  பேரால்  அதிகாரத்திலும்,  பதவியிலும்  இருக்கிறவர்கள்  கட்சி  கொள்கை  விஷயத்தில்  போதிய  லக்ஷியம்  எடுத்துக்  கொள்ளவில்லை யென்றும்,  தங்கள்  சுயநலத்தைவிட  மற்றொன்றையும்  சிறிதும்  கவனிக்கவில்லை  என்றும்,  கட்சிக்  கொள்கைக்கு  விரோதமாகக்கூட  பல  காரியங்கள்  செய்யப்பட்டு  விட்டன  என்றும்,  கட்சி  ஜனங்களுக்குள்ளாகவே  சொல்லிக்  கொள்ளப்படுகிறதுடன்  மற்றும்  பலவிதமான  புகார்களும்  சொல்லிக்  கொள்ளப்படுகின்றன.  ஆனால்  இப்படிச்  சொல்லிக்கொள்ளப்படுவதற்கும்  புகார்களுக்கும்  ஆதாரமில்லை என்று  கூறலாம்.  ஆதாரமில்லை  என்பதைப்  பொது  ஜனங்களுக்கு  மெய்ப்பிக்க  வேண்டாமா?  மற்றும்  நமது  எதிரிகள்  இப்படிப்பட்ட  விஷயங்களைத்  தங்களுக்கு  அனுகூலமாய்  உபயோகித்துக்  கொள்ளாமல்  இருப்பதற்கு  முயற்சி செய்ய  வேண்டாமா?  நமது  சொந்த  செல்வத்தையும்,  செல்வாக்கையுமே  எல்லாவற்றிற்குமே  சமாதானமாக  ஆக்கிக்  கொள்ளலாம்  என்று  சிலர்  நினைத்தால்  கட்சியில்  உள்ள  செல்வமும்,  செல்வாக்கும்  இல்லாத  மக்களின்  கதி  என்ன  ஆகும்  என்பதை  யோசித்துப்  பாருங்கள்.  இவர்களுக்கு  ஒரு  கொள்கையோ,  இவர்கள்  மீது  கூறப்படும்  புகார்களுக்கும்,  குற்றங்களுக்கும்  பதில்  கூறுவதற்கு  தகுந்த  உண்மையான  ஆதாரங்களோ  இல்லாவிட்டால்  இவர்களுக்கெல்லாம்  கட்சியில்  இடமோ  கட்சியின்  பேரால்  வெற்றியோ  எப்படி  கிடைக்கும்?

ஜஸ்டிஸ்  கட்சி  என்றால்  ஜமீன்தார்கள்,  முதலாளிமார்கள்  கட்சியே  தவிர  பொது  மக்கள்  கட்சி  அல்ல  என்று  சொல்லப்படுவது இப்போது  மிக  மிக  சகஜமாகிவிட்டது.  இதை  நாம்  பொய்யாக்கிக்  காட்டாவிட்டால்  கட்சியில்  உள்ள  உண்மை  உழைப்பாளிகளுக்கு  இதைவிட  வேறு  அவமானம்  வேண்டியதில்லை.  ஆதலால்  தகுந்த  வேலைத்  திட்டமுறைகளை  ஏற்படுத்திப்  பாமர  ஜனங்களுக்கு  நன்றாய்  பிரசாரம்  செய்து,  நமது  எதிரிகளின்  விஷமப்  பிரசாரத்தை  தகர்ப்பதுடன்  ஏழைப்  பொது  மக்களுக்கு  பயன்படத்தக்க  முறையில்  உழைத்தாக  வேண்டும்.  வெறும்  ஸ்தாபனங்கள்  அமைப்பதால்  ஒரு  பயனும்  ஏற்பட்டு  விடாது.  ஸ்தாபனங்கள்  பெரிதும்  சுயநலக்காரர்களின்  விளம்பரத்துக்கு  ஒரு  சாதனமாகும்.  உழைப்பும்  வேலை  செய்து  காட்டுவதுமேதான்  நமது  எதிரிகளைத்  தோற்கடித்து  நமக்கு  நல்ல  வெற்றியைக்  கொடுக்கும்.

இந்திய  சட்டசபைத்  தேர்தல்

அடுத்தபடியாக  இந்திய  சட்டசபைத்  தேர்தலைப்  பற்றி  பேசப்பட்டது.  இந்த  சமயத்தில்  இது  ஒரு  முக்கியமான  விஷயம்  என்பதை  நானும்  ஒப்புக்  கொள்ளுகிறேன்.  நமது  கட்சிக்கு  ஒரு  கெட்ட  பெயருண்டு.  அதைப்  பொய்யென்று  மறுக்கவும்  என்னிடம்  போதிய  ஆதாரமில்லை.  என்னவென்றால்  “”ஜஸ்டிஸ்  கக்ஷிக்காரருடைய  நாட்டமெல்லாம்  மாகாண  சட்டசபையிலேயே  ஒழிய,  இந்திய  சட்டசபையைப்  பற்றி  அவர்களுக்குக்  கவலை  இல்லை”  என்று  சொல்லப்படுவதாகும்.  இதற்கு  என்னவிதமான  உள்  எண்ணம்  கற்பிக்கப்படுகின்றதென்றால்  “”மாகாண  கவுன்சிலில்  இருந்தால்  மந்திரி  வேலை  பெறலாம்  அல்லது  மந்திரிகளுக்குத்  துணை  புரிந்து  நமது  வாழ்க்கை  நலத்துக்கு  ஏதாவது  பயன்  அடையலாம்”  என்று  கருதி  இப்படி  அலட்சியமாய்  இருப்பதாக  உள்  எண்ணம்  கற்பிக்கப்படுகிறது.  இந்தப்படி  சொல்லுபவர்களுக்கு  அநுகூலமாகவே  சம்பவங்களும்  இருந்து  வருகின்றன.

இதன்  பயனாகவே  தென்னிந்தியாவைப்  பற்றியும்,  தென்னிந்திய  மக்களைப்  பற்றியும்  வடஇந்தியர்கள்  கேவலமாய்  மதிக்கும்படியும்,  தென்னிந்தியப்  பார்ப்பனர்கள்தான்  தென்னிந்திய  பொதுநல  ஊழியர்கள்  என்றும்  அவர்களே  தேசபக்தர்கள்  என்றும்  கருதும்படி  செய்யப்பட்டதுடன்,  பார்ப்பனரல்லாதார்  என்றால்  தேசத்  துரோகிகள்  என்றும்,  அன்னிய  ஆட்சிக்கும்  அதன்  கொடுங்கோன்  தன்மை  என்பதற்கும்  துணைபுரிந்து  சுய  தன்நலம்  தேடுகிறவர்கள்  என்றும்  கருதும்படியாக  நமது  நாட்டுப்  பார்ப்பனர்கள்  பலரால்  விஷமப்  பிரசாரம்  செய்யப்பட்டுவந்தது.  பல  காரணங்களால்  சிலர்  உழைத்து  வந்ததின்  பயனாக  நம்மவர்களில்  சிலர்  சிறப்பாகவும்,  குறிப்பாகவும்  தோழர்கள்  ஆர்.கே. ஷண்முகம்,  ஏ. இராமசாமி  ஆகியவர்கள்  இந்திய  சட்டசபைக்குப்  போக  நேர்ந்ததில்  அவர்களுக்கும்  மற்றும்  தென்னிந்திய  பார்ப்பனரல்லாத  சமூகத்துக்கும்  எவ்வளவு  அந்தஸ்தும்,  பெருமையும்  ஏற்பட்டது  என்று  யோசித்துப்  பாருங்கள்.  தோற்றுப்  போனவர்கள்  கூப்பாடு  போடுவதைப்  பற்றியும்,  அப்படிப்பட்டவர்கள்  அழுவதைப்  பற்றியும்  நாம்  லட்சியம்  செய்ய  வேண்டியதில்லை.  அது  போலவே  இன்னும்  சிலர்  இந்திய  சட்டசபைக்கு  நம்மவர்கள்  போக  நேர்ந்தால்  தேசத்துரோகிகள்  யார்?  தேசீய  வியாபாரத்தில்  வயிறு  வளர்ப்பவர்கள்  யார்  என்பதை  உலகம்  அறியச்  செய்துவிடலாம்.  தோழர்  ஷண்முகத்தைப்  போலவே  எல்லாத்  தொகுதிக்கும்  ஆள்  கிடைக்குமா  என்று  கேட்பீர்கள்.  அதைப்பற்றி  எனக்கு  லக்ஷியமில்லை.  நமது  நன்மைக்கும்  முன்னேற்றத்துக்கும்  பிறவி  எதிரிகளாய்  இருப்பவர்களை  நமது  பிரதிநிதிகளாய்  தெரிந்தெடுத்து  வருகிறோம்  என்கின்ற  இழிவும்,  முட்டாள்தனமுமாவது  நமக்கு  இல்லாமல்  போகுமல்லவா?  அதோடு  மாத்திரமல்லாமல்,  நமது  எதிரிகள்  இந்திய  சட்டசபைக்குப்  போய்  நமக்குக்  கெடுதி  செய்யும்  காரியமாவது  நிறுத்தப்பட்டதாக  ஆகுமா?  இல்லையா?  தீண்டாமை  விலக்குக்கு  விரோதமாக  இன்று  இந்திய  சட்டசபையில்  இருப்பவர்கள்  யார்  என்று  யோசித்துப்  பாருங்கள்.  பார்ப்பனரல்லாத  கட்சிக்கு  நாங்கள்தான்  தூண்கள்  என்று  பெருமைபேசி  பயன்பெற்று  வரும்  தஞ்சைதிருச்சி  ஜில்லா  தொகுதியில்  வெற்றி  பெற்றுச்  சென்ற  பச்சை  வர்ணாச்சிரம  வாதியா?  அல்லவா?  என்று  கேட்கின்றேன்.  இப்படிப்பட்ட  நிலையில்  இனியும்  நமக்கு  அப்படிப்பட்ட  இழிவும்,  சங்கடமும்  வந்து  சேராமல்  இருப்பதற்கு  நாம்  அந்த  தேர்தலில்  தகுந்த  கவனம்  செலுத்த  வேண்டும்.  அத்தொகுதிக்கு  கட்சியின்  பேரால்  பணம்  வசூலித்துக்  கொடுத்தாவது  தக்க  அபேக்ஷகர்களை  நாம்  தெரிந்தெடுக்கச்  செய்ய  வேண்டும்.  இவ்விஷயத்தில்  முன்  போல்  இனி  அலட்சியமாய்  இருக்கக்  கூடாது  என்பதை  வலியுறுத்திக்  கூற  ஆசைப்படுகிறேன்.

பார்ப்பனர்  சேர்க்கை

அடுத்தபடியாக  இக்கூட்டத்தில்  பேசவேண்டியது,  பார்ப்பனர்களை  தென்இந்திய  நலஉரிமைச்  சங்கத்தில்  சேர்த்துக்  கொள்ளலாமா  என்னும்  பிரச்சினையாகும்.  இதுவே  இக்கூட்டத்திற்கு  முக்கிய  பிரச்சினையாக  கருதப்படுகின்றது  என்று  நினைக்கிறேன்.  இவ்விஷயம்  நமது  கட்சியில்  சுமார்  8,10  வருஷங்களாய்  பேசப்பட்டும்  விவாதிக்கப்பட்டும்  வருவது  யாவரும்  அறிந்ததே.  ஆனால்  என்னைப்  பொருத்தவரை  இந்த  7,8  வருஷகாலமாகவே  நான்  இதை  ஆ÷க்ஷபித்து  வந்திருக்கிறேன்.  எந்த  முறையில்  என்றால்,  பொதுவாழ்வில்  பார்ப்பனர்களுடன்  கலந்து  உழைத்துப்  பார்த்து  அனுபோகம்  பெற்று  வந்தவன்  என்கின்ற  முறையில்  ஆ÷க்ஷபித்து  வந்திருக்கிறேன்.  என்ன  என்ன  காரணங்களைக்  கொண்டு  என்ன  என்ன  ஆதாரங்களைக்  கூறி  ஆ÷க்ஷபித்து  வந்தேனோ  அவற்றில்  ஒரு  சிறிதும்  இன்று  மாற்றமடையவில்லை.  அப்போதைய  அபிப்பிராயங்களை  மாற்றிக்  கொள்ள  இப்போது  பார்ப்பனர்களிடமிருந்து  ஒரு  மாறுதலையும்   நான்  காணமுடியவில்லை.  ஆதலால்  அந்த  அபிப்பிராயம்  இன்னமும்  எனக்கு  பலமாகவே  இருக்கிறது.  ஆனால்  ஒரு  மாறுதல்  மாத்திரம்  ஏற்பட்டுவிட்டதை  நான்  என்  சொந்த  ஹோதாவில்  தெரிவித்துக்  கொள்கிறேன்.  அது  என்  தோழர்களையோ,  எனது  கூட்டு  வேலைக்காரர்களையோ  யாரையும்  கட்டுப்படுத்தாது  என்றும்  சொல்லுகிறேன்.  அஃதென்னவென்றால்,  தென்னிந்திய  நல  உரிமைச்  சங்கத்தின்  முன்னணியில்  இருந்து  அக்கட்சிக்காக  வேலை  செய்யும்  சௌகரியம்  இப்போது  எனக்கு  இல்லை.  கட்சிக்காக  அல்லது  கட்சியின்  பேரால்  கவலை  கொண்டு  இன்று முன்னணியில்  இருந்து  வேலைசெய்யும்  தலைவர்கள்  அல்லது  பிரமுகர்கள்  கட்சி  நன்மையை  உத்தேசித்து  என்று  சொல்லி  ஒரு  காரியத்தைச்  செய்யத்  தொடங்குவார்களானால்  நான்  போய்  குறுக்கிட்டு  அதை  ஆ÷க்ஷபித்துக்  கொண்டிருக்க  வேண்டாம்  என்கின்ற  நிலையில்   இருக்கிறேன்.  ஏனெனில்  ஒவ்வொரு  தடவையும்  என்னாலேயே  ஆ÷க்ஷபிக்கப்பட்டு  அவ்வெண்ணம்  நிறைவேற்றப்பட  முடியாமல்  போய்விட்டது  என்று  சொல்லப்பட்டு  வந்தது.  ஆனால்  ஒரு  அளவுக்கு  அதன்  பலாபலன்களுக்கு  நானும்  பொறுப்பாளியாகவும்  அனுபவிக் கிறவனாகவும்  இருந்தேன்  எனக்  கருதினேன்.  இப்போதைய  எனது  நிலைமை  அப்பயனுக்கும்  அனுபவத்திற்கும்  முழு  பொருப்பாளியாக  இருக்க  முடியாததாய்  இருப்பதால்  பொறுப்பாளியாய்  இருக்கிறவர்களுக்கு  முட்டுக்கட்டையாய்  இருக்க  வேண்டாம்  என்று  எனக்கு  தோன்றிவிட்டது. இது  தவறுதலாய்  இருக்கலாம்.  ஆனபோதிலும்  இதன்  அனுபவமானது  பின்னால்  நமக்கு  ஒரு  பெரிய  நன்மையையும்  படிப்பினையையும்  உண்டாக்கினாலும்  உண்டாக்கலாம்.  சமூக  விஷயங்களை  விட  அரசியல்  காரியங்களையே  பெரியதாகக்  கருதி,  இந்த பார்ப்பனர்களைச்  சேர்க்க  வேண்டுமென்ற  யோசனைகள்  செய்யப்படுவதாகத்  தெரிகின்றது.  எப்படியானாலும்  நாம்  அதை  ஆ÷க்ஷபிக்க  வரவில்லை  என்று  மாத்திரமே  சொல்லுகின்றேன்.

குறிப்பு:            சென்னையில்  07.06.1934இல்  பொப்பிலி  ராசா  அவர்  பங்களாவில்  கூட்டிய  ஜஸ்டிஸ்  கட்சி  தலைவர்கள்  மாநாட்டில்  ஆற்றிய  உரை .

புரட்சி  சொற்பொழிவு  10.06.1934

You may also like...