ஏமாற்றுந்  திருவிழா காங்கிரஸ்  கூத்து

 

 

காங்கிரஸ்  கூட்டங்களைப்  பற்றியும்,  அதன்  மகாநாடுகளைப் பற்றியும்  அவையெல்லாம்  ஏமாற்றுத்  திருவிழா  என்று  நாம்  அவ்வப்போது  எழுதி  வந்திருப்பதை  நேயர்கள்  மறந்திருக்க  மாட்டார்கள்.

அது  போலவே  காங்கிரஸ்  நேயர்கள்  பலருக்கும்  இவ்விஷயம்  இப்போது  வரவர  உண்மையாகி  வந்து காங்கிரசின்  பேரால்  தங்கள்  பிழைப்பை  நிர்த்தாரணம்  செய்து  கொண்டவர்கள்  தவிர,  மற்றபடி  தாங்கள்  சொந்தத்தில்  பாடுபடவும்,  வேறுவழியில்  அரை  வயிற்றுக்காவது  சம்பாதித்துக்  கொள்ள  மார்க்கமிருக்கிறதென்று  தைரியம்  கொள்ளவும்  உறுதியும்  ஊக்கமும்  உடையவர்கள்  பெரும்பாலும்  காங்கிரசிலிருந்து  விலகி வந்து  விட்டதும்,  வந்து  கொண்டிருப்பதும்  எவரும்  அறியாததல்ல.  கடைசியாக  பழம்பெரும்  காங்கிரஸ்வாதி  என்றும்,  காங்கிரசிற்கே  தனது  வாழ்நாள்  முழுவதையும்  ஒப்படைத்த  தியாகி  என்றும்  காங்கிரஸ் காரர்களாலும்,  பார்ப்பனர்களாலும்  சொல்லப்பட்டு  வந்த  தோழர்  மாளவியா  அவர்களும்  கூட  காங்கிரஸ்  கொள்கைகள்  தந்திரமானது  என்னும் காரணத்தால்  காங்கிரசோடு போட்டி  போடத்  துணிந்துவிட்டார்.

இது  அவ்வளவு  முக்கிய  விஷயமல்லவென்று  சொல்லி விடலாம்.

என்றாலும்  தோழர்  காந்தியவர்களே  இன்று  காங்கிரசை  விட்டு  விலகி  விட்டார்.

விலகும்போது  அவர்  என்ன  சொல்லிக்  கொண்டு  விலகுகிறார்  என்பதுதான்  இங்கு  முக்கியமாகக்  கவனிக்க  வேண்டிய  விஷயமாகும்.  “”காங்கிரஸ்காரர்கள்  என்று  சொல்லிக்  கொள்ளுகிறவர்கள்  எனது சிஷ்யர்கள் என்று  சொல்லிக்கொள்ளுகிறவர்கள்  பொது  ஜனங்களை  ஏமாற்றுவதோடல்லாமல்  என்னையும்  ஏமாற்றுகிறார்கள். ஆதலால்  நான்  விலகிக்  கொள்ள  வேண்டியதாய்  இருக்கின்றது”  என்று  வெள்ளையாக  அருத்தமாகும்படியே  சொல்லிக்  கொண்டு  விலகிவிட்டார்.

இதிலிருந்தாவது  இதுவரை  காங்கிரஸ்காரர்கள்  நடத்தி  வந்த  நாடகங்களை  நாம்  ஏமாற்றும்  திருவிழா  என்று  சொல்லி  வந்தது  உண்மையா  அல்லவா  என்பதை  யோசித்துப் பார்க்கும்படி  நடுநிலைமை  வாதிகளையும்,  பகுத்தறிவுவாதிகளையும்  வேண்டிக்  கொள்ளுகிறோம்.

தோழர்  காந்தியார்  தான்  விலகிக்  கொள்ளப்  போகும்  காரியத்துக்கு  எவ்வளவு  விளம்பரம்  கொடுத்து  அதை  எவ்வளவு  பிரமாதமாக்க  வேண்டுமோ  அவ்வளவு  பிரமாதமாக்கினார்  என்றாலும்  “காந்திக்கு  ஜே’  என்னும்  பேரால்  வயிறு  வளர்க்கும்  ஒரு கூட்டத்திற்கு,  அவர் விலகி  விட்டால்  தங்களுக்கு  ஆபத்து  என்று  தோன்றியதால்  அவர்கள்  அதை  எவ்வளவு  மறைக்க  வேண்டுமோ  அவ்வளவு  மறைத்துப்  பார்த்தார்கள்.

என்றாலும்  காங்கிரசிலுள்ள  சமதர்மவாதிகள் என்னும்  கூட்டத்தார்கள்  இதை  லக்ஷியம்  செய்யாமல்,  “”இன்று  நாட்டுக்கு வேண்டியது  காந்தியார்  இருப்பதா,  போவதா  என்கின்ற  பிரச்சினையல்ல.  அவர்  இருந்தாலும்  சரி,  போனாலும்  சரி,  அதைப் பற்றி  சிறிதும்  கவலைப்படவேண்டியதில்லை.  கோடிக்கணக்கான  ஏழை  பாமர  மக்களை  ஒரு சில சுயநலக்கார  மூடர்கள்  தாங்கள்  மேல்  ஜாதியாரென்றும்,  பணக்காரர்கள்  என்றும்  சொல்லி  இழிவுபடுத்திக்  கொடுமை  செய்கிறார்களே! அதை  எப்படி  ஒழிப்பது,  எப்படி  அழிப்பது  என்பதுதான்  எங்கள் பிரச்சினை”  என்று  கூறிவிட்டார்கள்.

இதற்கு  எவ்வித  பதிலும்  சொல்லாமல்  அந்தப்  பிரச்சினையை மறக்கடிப்பதற்கு  “”காந்தியார்  போய் விட்டாரே!  காந்தியார்  போய்  விட்டாரே”  என்று  வேஷ  அழுகை  அழுது  நீலிக்  கண்ணீர்  வடித்து  மக்களை  மறுபடியும் ஏய்க்கப்  பார்க்கிறார்கள்.

எனவே  இது  ஏமாற்றுந்  திருவிழாவா  அல்லவா  என்று  கேட்கின்றோம்.

தோழர்  காந்தியார்  தான்  காங்கிரசிலிருந்து  விலகிக்  கொள்வதற்கு  இதற்கு  முன்  சொன்ன  காரணங்களைவிட  காங்கிரஸ் கூட்டத்திலேயே  ஒரு முக்கிய  காரணத்தை  அழுத்தம்  திருத்தமாகச்  சொல்லி இருக்கிறார்.

“”நான்  காங்கிரசிலிருப்பதை  விட  வெளியிலிருப்பதால்  மக்களுக்கு  நன்மையான  காரியங்கள்  அதிகமாகச்  செய்யக்  கூடும்  என்றும்  எண்ணுகிறேன்”  என்றும்

“”காங்கிரசில்  உள்ளவர்கள்  வெளி  வேஷங்களையும்  ஊழல்களையும்,  அகம்பாவங்களையும்  ஒழித்து,  பரிசுத்தர்களாகாத  வரையில்  நான்  காங்கிரசிலிருந்து  விலக  வேண்டி  இருக்குமென்று  வங்காளத்தில்  கூறி  இருக்கிறேன்.  அதற்கு  முன்  கூட  பல  சமயங்களில்  குறிப்புக்  காட்டி இருக்கிறேன்.  நான்  காங்கிரசிலிருந்து  விலகுவதன் இரகசியம்  இதுதான்”

என்றும்  சொல்லி  இருக்கிறார்  என்றால்  காந்தியார்  விலகுவதற்கு  இந்தப்  பார்ப்பனர்களும்,  பார்ப்பனப்  பத்திரிக்கைகளும்  தத்துவார்த்தம்  செய்வது  என்பது  மற்றொரு  ஏமாற்றுந்  திருவிழாவா  அல்லவா  என்று  மறுபடியும்  கேட்கின்றோம்.

அன்றியும்  தோழர் காந்தியார்  ஜெயிலில்  இருந்து  வந்த பிறகும்,  ஜெயிலுக்குப்  போவதற்கு  முன்பு ஒன்று  இரண்டு  தடவையும்  கூட, காங்கிரசில்  இருப்பவர்களின்  அயோக்கியத்தனத்திற்காகவும்,  பித்தலாட்டங்களுக்காகவும்,  அவரது  சிஷ்யர்கள்  என்பவர்களே  செய்த  சூட்சிகளுக்காகவும்  என்று  சொல்லியே  பட்டினி  இருந்து  வந்திருப்பது  எவரும்  அறியாததா  என்றும்  கேட்கின்றோம்.

இவ்வளவும்  ஒரு புறம்  இருந்தாலும்,  உண்மையிலேயே  தோழர்  காந்தியவர்களே  தமது நடவடிக்கையிலும்  பேச்சிலும்  முன்னுக்குப்  பின்  முரணாகவும்  எவ்வளவு தடவை  பேசியும்,  எழுதியும்,  நடந்தும்  வந்திருக்கிறார்  என்பதை  நாம்  ஞாபகமூட்ட  வேண்டியதில்லை.  காந்தியார்  ஓரளவுக்காவது  பரிசுத்தத்  தன்மை  அடைவதையும்,  அவரது  முயற்சி  ஒரு  அளவுக்காவது  வெற்றி  பெறுவதையும்  பாழாக்கி  உலகத்தின்  முன்பு  அறிவாளிகள்  என்போர்களால்  அவரைப்  பற்றி  சிரிக்கும்படி  செய்ததும்,  இந்தப்  பரிகாசங்களையும்  தோல்விகளையும்  தாங்க  முடியாமல்  ஓடும்படி  செய்ததும்  நமது  தென்னாட்டுப்  பார்ப்பனர்கள்!  பார்ப்பனர்கள்!!  பார்ப்பனர்கள்!!!  தான்  என்று  நாம்  உறுதியாகச்  சொல்லுவோம்.

காங்கிரசில்  ஏற்பட்ட  பலன்களையெல்லாம்  பார்ப்பனர்களே  அடையும்படியாகவும்,  தலைமைப்  பதவிகளிளெல்லாம்    பார்ப்பனர்களே  இருக்கும்படியாகவும்,  தியாகத்தின்  மூலமோ,  வீரத்தின்  மூலமோ  ஏற்பட்ட  பெருமைகள்  எல்லாம்  பார்ப்பனர்களுக்கே  இருக்கும்படியாகவும்  இங்குள்ள  பார்ப்பனத்  தலைவர்களும்,  பார்ப்பனப்  பத்திரிகைகளும்  செய்து  வந்த  சூட்சியே  இன்று  காங்சிரசையும்,  காந்தியாரையும்  உலகத்தின்  முன்  சிரிப்புக்கிடமாக்கி  வைத்து  விட்டது  என்பதை  அழுத்தம்  திருத்தமாகச்  சொல்லுவோம்.

நம்  தென்னாட்டுப்  பார்ப்பனர்கள்  இந்தக்  குணங்களை  மாற்றிக்கொள்ளாத  வரை  இன்னமும்  எவ்வளவு  தந்திரம்  செய்தாலும்,  காங்கிரசின்  பேரால்  யார்  வெற்றி  பெற்றாலும்,  காங்கிரஸ்  கவர்ன்மெண்டையே  கைப்பற்றினாலும்  (ஒரு நாளும்  ஆகப்  போவதில்லை)  பார்ப்பனர்களது  நிலைமை  இன்னமும்  மோசம்தான்  ஆகுமே  தவிர  கடுகளாவாவது  முன்னேற்றமடைய  முடியும்  என்பதை  கனவிலும்  கருத  வேண்டாமென்றே  பார்ப்பனத்  தலைவர்களுக்கும்,  பார்ப்பனப்  பத்திரிக்கைகளுக்கும்  எச்சரிக்கை  செய்கின்றோம்.

தோழர்  காந்தியார்  காங்கிரசை  விட்டு  விலகி  விட்டதினாலேயே  அவர்  தந்திரங்களையும்,  சூட்சிகளையும்,  பித்தலாட்டங்களையும்,  அயோக்கியத்தனங் களையும்  வெறுக்கின்றார்  என்று  நாம்  சொல்லிவிட  முடியாது.

அவர், தான்  அயோக்கியத்தனங்களையும்,  ஒழுக்க  ஈனங்களையும்,  ஊழல்களையும்  வெறுப்பதாக  ஜனங்கள்  நினைக்க  வேண்டுமென்றும்,  இதுவரை  நடந்து  வந்த  அப்படிப்பட்ட  காரியங்களுக்கு,  தான்  சம்பந்தப்படவில்லை  என்பதாக  பொது  ஜனங்கள் அறிய  வேண்டு மென்றும்,  தான்  இன்று  காந்தியார்   விலகும்  நாடகம்  நடிக்கப்படுகின்றதே  தவிர  வேறில்லை  என்பதே  நமது  அபிப்பிராயம்  என்பதை  வாசகர்கள்  அறிய  விரும்புகிறோம்.

எப்படியானாலும்  காந்தியார்  விலகிவிட்டாரென்பது  உறுதியாகிவிடு மானால்  சுயமரியாதைக்காரர்கள்  காங்கிரசில்  சேருவதற்குக்  காலம்  வந்துவிட்டது  என்பது  கூட  நமது  அபிப்பிராயமாகும்.

காந்தியார்  இல்லாத  காங்கிரசைக்  கைப்பற்றினால்  பார்ப்பனீயத்தை  ஒரு கை  பார்த்து  விடலாம்  என்கின்ற  எண்ணம்  சரியாகவோ  தப்பாகவோ  சிறிது  காலமாகச்  சிலருக்கு  இருந்து  வருகின்றது  என்றாலும்,  காங்கிரசில்  வடநாட்டுக்காரர்களுக்குள்  காங்கிரஸ்  சமதர்மக்கட்சி  என்று  ஒன்று  இருப்பதுபோல்  தென்னாட்டில்  காங்கிரஸுக்குள்  பார்ப்பனரல்லாதார்  கட்சி  என்பது  ஒன்று  இருக்க  வேண்டியதாகத்தான்  இருக்கும்.

அந்தப்படி  இல்லாமல்  இருக்கும்படி  பார்ப்பனர்கள்  நடந்து  கொள்ளுவார்களானால்  எல்லோருக்கும்  நன்மைதான்.

முடிவாக,  காந்தியாருக்கும்  பார்ப்பனர்களுக்கும்  இருந்த  சம்மந்தம்  எவ்வளவு  காந்தியார்  விலகிவிட்டதற்குப்  பார்ப்பனர்கள்  எதை  உத்தேசித்துத்  துக்கப்பட்டார்கள்  என்பதை  அறிய  ஒரு  விஷயத்தை  ஞாபகப்படுத்தி  இதை  முடிக்கின்றோம்.  அதாவது,  “”காந்தியார்  விலகி  விட்டாரே  தென்னாட்டில்  சட்டசபைத்  தேர்தல்கள்  தோல்வி  ஆகிவிடுமே”  என்றுதான்  இந்தப்  பார்ப்பனர்கள்  ஓலமிட்டார்களே  தவிர  வேறு  ஒன்றுக்கும்  ஓலமிடவில்லை.  இதிலிருந்து நாம்  தெரிந்து  கொள்ளக்கூடியது  என்னவென்றால்  தேர்தல்  முதலிய  காரியங்களில்  பொது  ஜனங்களை  ஏமாற்ற  காந்தியார்  ஒரு  ஆயுதமாக  இருந்தது, இப்போது  இல்லாமல்  போய்விட்டதே  என்கின்ற  விசனம்  தவிர  காந்தியாரிடத்தில்  இப்போது  இந்தப்  பார்ப்பனர்களுக்கு  எவ்வித  உள்  அன்பும்  விசுவாசமும்  பிடித்தமும்  இல்லை  என்பதுதான்.

ஆகவே,  இதுவரையில்  பார்ப்பனர்கள்  நடத்தி  வந்த  ஏமாற்றுந்  திருவிழாவுக்கு  ஒரு அளவுக்கு  சாவுமணி  அடித்தாய்விட்டது.

பகுத்தறிவு  தலையங்கம்  28.10.1934

You may also like...