பார்ப்பன  விஷமம்

 

ஜஸ்டிஸ்  கட்சி மீது மக்களுக்கு  நம்பிக்கை  இல்லையா?

இந்திய  சட்டசபைத் தேர்தலில்  பார்ப்பனர்கள் காங்கிரஸ்,  காந்தி  என்கின்ற  பேர்களால்  செய்யப்பட்ட  ஏமாற்றுப் பிரசாரத்தின்  பயனாயும்,  இந்திய  சட்டசபை  ஸ்தானத்தைப்  பற்றி   ஜஸ்டிஸ்  கக்ஷியார்  தக்கபடி  கவலைப்படாத  காரணத்தாலும்  பார்ப்பனர்கள்  தாங்கள்  வெற்றி  பெற்று விட்டோம்   என்கின்ற ஆணவத்தால்  தலைகால்  தெரியாமல்  குதிக்கிறார்கள்.

தோழர்  சத்தியமூர்த்தி  ஐயர்  அவர்கள் மேடையில்  வாயைத் திறந்தால் யாரையும்  அவன்,இவன், அயோக்கியன் என்று இழி தன்மையாய்ப்  பேசுவதும், ஹோம்  மெம்பரை  ராஜீனாமா  செய்ய  செய்ய வேண்டு மென்றும்,  லாமெம்பரை  ராஜீனாமாச்  செய்யச்  செய்ய  வேண்டுமென்றும்  கவர்னரை  உத்திரவு  போடச்  சொல்லுவதும், சட்டசபைகளைக்  கலைக்க வேண்டுமென்பதும் தோழர்  ராஜகோபாலாச்சாரி கவர்னராகவும்,  தான்  சீப் செகரட்டரியாகவும்  (பிரதானக்   காரியதரிசியாகவும்)  வரப் போகிறோம்  என்பதுமான தலை  கிருகிருத்த  பேச்சுகளாகவே  பேசி  வருகிறார்.

இதற்கும் சில பார்ப்பனக்  கூலிகள்  பின்  பாட்டு  பாடுவதும் கை தாளம்  போடுவதுமான  மானங்கெட்ட  செய்கைகளுக்கு  உட்பட்டு  வயிறு  வளர்க்கிறார்கள்.  பல கூலிப் பத்திரிகைகளும்  இதை விளம்பரப்படுத்திக்  கொண்டு  வாழ்கின்றன.

எப்படி இருந்தாலும்  கூடிய  சீக்கிரத்தில்  இந்த  கிருகிருப்பும்  ஆணவமும்  அடங்கப் போகிறது  என்பதில் நமக்குச் சந்தேகமில்லை.

பலம் குறைந்து விட்டதா?

நிற்க,  சமீபத்தில்  சென்னையிலும்,  திருச்சியிலும்  நடந்த சென்னை  சட்டசபை  உபதேர்தலில்  ஜஸ்டிஸ்  கக்ஷியார்  அபேட்சகர்களை  நிறுத்தாததால்  ஜஸ்டிஸ்  கக்ஷியின்  பலம்  குறைந்து  விட்டதாகவும்   அந்த இரண்டு  தேர்தலிலும்  காங்கிரஸ்  ஜெயித்து விட்டதாகவும்,  ஆதலால்   காங்கிரசுக்கே  நாட்டில் செல்வாக்கு  இருக்கிறதென்றும்  ஆதலால் மந்திரிசபையை  ஒழித்து காலி  செய்து  காங்கிரசின்  வசம்  ஒப்புவிக்க  வேண்டுமென்றும்  பார்ப்பனர்கள் பேசி பாமர மக்களை  ஏமாற்றி  ஆதிக்கம்  செலுத்தப் பார்க்கிறார்கள்.

ஹிந்து,  சுதேசமித்திரன்  முதலிய  எல்லா பத்திரிகைகளும்  இதே  கூப்பாடு போட்டு மக்களை  ஏமாற்றப்  பார்க்கின்றன.

ஆனால்  உண்மையில்  உபதேர்தல்களில்  காங்கிரசு  வெற்றி  பெற்றதா?  நாட்டில்  மற்ற   பாமர  மக்கள்  காங்கிரசையே  எல்லாத்  தேர்தல்களிலும்  ஆதரித்து  இருக்கிறார்களா? என்பவைகளைப் பற்றி  சிறிது  யோசிப்போம்.

ஜஸ்டிஸ்  கக்ஷி  மந்திரிசபை  புதிதாய்  ஏற்பட்ட  இந்த   3, 4  வருஷத்துக்குள்ளும்,  சிறப்பாக  சென்ற  சில மாதங்களுக்குள்ளாகவும்  ஏழு,  எட்டு  ஸ்தானங்கள்  சென்னை  சட்டசபையில்  காலியாகி  மறுதேர்தல்கள்  நடந்திருக்கின்றன.

ஜஸ்டிஸ்  கக்ஷிக்குப்  போட்டியாக  எத்தனையோ  கக்ஷிகள்  இருந்து  வந்திருப்பதோடு  காங்கிரசும்  அவைகளுடன்  போட்டி  போடுவதும்  ஜஸ்டிஸின்  எதிர்க்கக்ஷிகளுக்கு  ஆதரவு  கொடுப்பதுமான  காரியங்கள்  செய்து  கொண்டும்  வந்திருக்கின்றன.  அப்படி யெல்லாம்  இருந்தும்  சகல  தேர்தல்களிலும்   ஜஸ்டிஸ்  கக்ஷியே  அனேகங்களில்  போட்டியே  இல்லாமலும்  வெற்றி  பெற்றிருக்கின்றன.

உதாரணமாக  வடஆற்காட்டில்  தோழர்  குப்புராவ்  ஸ்தானம்  காலியானதும்   தோழர்  ரங்கசாமி  ரெட்டியார்  ஜஸ்டிஸ்  கக்ஷி  சார்பாகவே   நின்று  வெற்றி  பெற்றார்.

சென்னை தோழர்  ஆரோக்கியசாமி முதலியார் ஸ்தானம் காலியானதும் தோழர்  அப்பாதுரை  பிள்ளை  ஜஸ்டிஸ்  கக்ஷியின் பேராலேயே நின்று வெற்றி பெற்றார்.

தஞ்சையில்  தோழர்  பன்னீர்   செல்வம் ஸ்தானம்  காலியானதில்  தோழர்  சந்தனக்  கவுண்டர்  ஜஸ்டிஸ்  கக்ஷியின்  பேராலேயே நின்று  வெற்றி  பெற்றார்.

நெல்லூரில்  தோழர்  யாகியா  ஆலி  சாயபு ஸ்தானம்  காலியானதில்  தோழர்  யாகியா  ஆலி  அவர்களே  ஜஸ்டிஸ்  கக்ஷியின்  பேராலேயே  நின்று  வெற்றி  பெற்றார்.

திருநெல்வேலியில்  தோழர்  எட்டியாபுரம்  ராஜா  ஸ்தானம்  காலியானதும்  தோழர்  ஐ.சி.ஈஸ்வரம்  பிள்ளை  ஜஸ்டிஸ்  கட்சியின்  பேராலேயே  நின்று  வெற்றி  பெற்றார்.

அநந்தபூர்  தோழர்  லட்சுமணரெட்டி  ஸ்தானம்  காலியானதும்  தோழர்  ரங்கைய்யா  ஜஸ்டிஸ்  கட்சியின்  பேராலேயே  நின்று  வெற்றி பெற்றார்.

இந்த  தேர்தல்கள்  சற்றேரக்  குறைய  16  ஜில்லாக்களை  சம்மந்தப்பட்ட  தேர்தல்களாகும்  என்பதோடு  எதிர்கட்சியார்  ஸ்தானம்  இரண்டு  அதிகமாகவே    கைப்பற்றப்பட்டிருக்கின்றது.

இவற்றில்  ஒன்றிலாவது  காங்கிரஸ்காரர்களோ,  பார்ப்பனர்களோ , தலைகாட்டவோ,   உச்சரிக்கவோ, நினைக்கவோ  முடியவில்லை.  வடஆற்காடு,  திருச்சி ஆகிய  இரண்டு   ஜில்லாவில்  இருந்த  பார்ப்பனர்  ஸ்தானங்கள்  பார்ப்பனரல்லாதார்  கைக்கு  வந்துவிட்டன.

நிற்க  சமீபத்தில்  நடந்த இரண்டு  தேர்தல்  அதாவது  சென்னை,  திருச்சி   இரண்டும்  ஜஸ்டிஸ்  கட்சி  ஸ்தானங்கள்  அல்ல  என்பது  யாவரும்  அறிந்ததாகும்.

சென்னை  ஸ்தானம் காங்கிரசின்  ஸ்தானமாகும்.  அதற்கு  காங்கிரஸ்  ஆளே  வந்ததாக  வைத்துக்  கொள்ளலாம்.

திருச்சி  ஸ்தானமும்  காங்கிரசின்  சார்பாக  ஜஸ்டிஸ்  கட்சிக்கு  எதிராக  இருந்த  கட்சியின்  ஸ்தானமாகும்.  அதுவும்  பார்ப்பனர்  ஒருவர்  இருந்த ஸ்தானமாகும்.  அந்த ஸ்தானத்துக்கு  ஜஸ்டிஸ்காரர்  வரவில்லை யானாலும்  தேர்தல்  அபேக்ஷகராகும்  வரை,  ஜஸ்டிஸ்  கட்சிக்காரராய்  ஜனங்கள்  மதித்தவரும்  பார்ப்பனர்களுக்கு  எதிரியாக  இருப்பதாய்  சொல்லிக் கொண்டிருந்தவரும்,  ஜஸ்டிஸ்  கட்சி  சார்பாய்  நிறுத்த  யோசித்துக் கொண்டிருந்தவரும்,  தேர்தலில்  பார்ப்பனத்  தொல்லை  இல்லாமல் இருப்பதற்காக பயந்து  கையெழுத்து  போட்டவரும்தான்  கொள்கையோ,  அரசியல்  காரணங்களோ பிரச்சினையாக   இல்லாமல்  சொந்த  காரணங்களை  முன்னிட்டு  ஏற்பட்ட  மனத்தாங்கலின்  பலனாய்  சுவாதீனம்  செய்து  கொள்ளப்பட்ட ஒரு  பார்ப்பனரல்லாதார்  தான் வெற்றி பெற்றிருக்கிறாரே  ஒழிய,  ஒரு  நிஜமான  காங்கிரஸ்வாதியோ,  அல்லது ஒரு  பார்ப்பனரோ  வந்து   விட்டதாகச்  சொல்ல முடியாது.

அன்றியும்  இந்த  மூன்று  நான்கு  மாதமாய்  நடந்து  வந்த  மற்ற அதாவது  ஜில்லா  போர்ட்,  முனிசிபாலிட்டி,  கிராமப்  பஞ்சாயத்து,  அர்பன்  பாங்கு  முதலிய  பல  தேர்தல்களில்  கூட   அனேகவற்றில்  காங்கிரஸ்காரர்கள்  100 க்கு  100 வீதம்  முறியடிக்கப்பட்டிருப்பதும்  பார்ப்பனர்கள்  வாசனையே  இல்லாமல்  செய்யப்பட்டிருப்பதுமான  பெருவாரியான  தேர்தல்  முடிவுகள்  யாரும்  அறியாததா  என்று  கேழ்க்கின்றோம்.

ஏதோ  உள்சண்டைகளினாலும்  சிலரின்  முக்கியமாக  சுயநலத்துக்காக  செய்யப்பட்ட  துரோகங்களினாலும்,  வஞ்சனை  சூட்சி  ஆகியவைகளி னாலும்  ஒரு  சமயத்தில்  வெற்றி  என்பது  கிடைத்துவிட்டால்  அதற்காக  இவ்வளவு  தலைக்கொழுப்பும்,  ஆணவமும்  காட்டப்படுவது  என்பது  இவ்வித  சிறு  வெற்றிக்கும்  கூட  காங்கிரஸ்காரர்களோ,  பார்ப்பனர்களோ  சிறிதும் யோக்கியதை  உடையவர்கள்  அல்ல  என்பதைக்  காட்டுகிறதே  ஒழிய  வேறு  ஒன்றும்  இல்லை.

இந்த  வெற்றியினால்  பார்ப்பனரல்லாத  சமூகத்துக்குக்  கடுகளவாவது  கெடுதி  ஏற்பட்டு  விடுமென்றோ,  ஜஸ்டிஸ்  கொள்கைக்கு  ஏதாவது  மோசம்  வந்து  விடுமென்றோ  யாரும்  பயப்பட  வேண்டியதில்லை  என்பதோடு  இனி  மேலால்  நடக்க வேண்டிய   காரியங்களுக்கும்  மெத்த  அனுகூலம்  ஏற்பட  வழி  ஏற்பட்டது  என்றே  கூறுவோம்.

பகுத்தறிவு  துணைத் தலையங்கம்  30.12.1934

 

You may also like...